ambedkar 291'1956 நவம்பர் 17ல் நடைபெறவுள்ள உலக புத்தமத மகாநாட்டில் கலந்து கொள்ள திரு.பி.எச்.வராலே மற்றும் டாக்டர் மாவ்லங்கருடன் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும் திருமதி சவிதா அம்பேத்கரும் நேபாளம் சென்றனர். நேபாளத்துக்குப் புறப்படுகையில் 1956 நவம்பர் 13ல் டில்லி விமான நிலையத்தில் வைத்து திரு.ஒய்.சி. சங்கராநந்த சாஸ்திரி மிகவும் பணிவுடன் டாக்டர் அம்பேத்கரிடம் பின்வருமாறு கேட்டார்: "பாபா சாகேப், உங்களுடைய உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கிற நிலையில் இந்தியாவில் தம்மாவை எவ்வளவு தூரம் பரப்ப முடியும்?".

பாபா சாகிப்பிற்கு சிறிது எரிச்சலாக இருந்தாலும் "புத்த மதத்தை பரப்புவது போன்ற பணிகளைப் பொறுத்தவரையில் எனக்கு உடல்நிலை மோசமாக இல்லை" என்று வலியுறுத்திக் கூறினார். எனது எஞ்சிய வாழ்நாளில் ஒவ்வொரு நொடியையும் புத்தரின் தம்மாவை பாரதத்தில் பரப்பும் பணிக்குச் செலவிடத் தயாராக உள்ளேன்" என்றார் அவர்.

டிசம்பர் மாதத்தில் பம்பாயிலுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு 'தீக்க்ஷை' அளிக்கப் போகிறேன். 1956 அக்டோபர் 14ல் நாகபுரியில் நடைபெற்ற மறுமலர்ச்சிக் கூட்டத்தைப் போன்று பம்பாயிலும் ஏற்பாடு செய்யப்படும். இலட்சக்கணக்கான மக்கள் புத்த மதத்தில் சேருவார்கள். நாகபுரியில் நடைபெற்ற மதமாற்ற கூட்டத்தைப் போன்று இந்தியாவின் மற்ற நகரங்களிலும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் மக்கள் மட்டுமின்றி புத்தரின் கொள்கைகளில் நம்பிக்கையுள்ள சாதிமத வேறுபாடின்றி எல்லா மக்களும் இந்த தீக்ஷை சடங்கில் கலந்து கொண்டு புத்த மதத்தைத் தழுவ வேண்டும்.

அங்கு குழுமியிருந்த மக்களிடம் பேசுகையில் பாபாசாகேப் வலியுறுத்திக் கூறியதாவது: புத்தர் விஷ்ணுவின் மறு அவதாரம் என்று கூறுவது பெரும் தவறு. இது ஒரு தவறான விஷமத்தனமான பிரசாரம். இந்தக் கொடுமையான கருத்தைப் பரப்புபவர்கள் பிராமணியத்தைப் பின்பற்றுபவர்களைத் தவிர வேறு யாருமில்லை. சமூகத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள பரஸ்பர பகைமையும் சமத்துவமற்ற சமுதாயப் படிநிலைகளை தொடர்ந்து வைத்துக் கொள்வதே அவர்களின் முக்கிய நோக்கம். சாதி மற்றும் பரஸ்பர பகைமை என்ற அடிப்படையிலான இந்த தீய சமுதாய நிலையை ஒழிக்க என் வாழ்க்கை முழுவதும் போராடி வருகிறேன். உண்மையில், இந்தியாவில் புத்தமதத்தின் மறுமலர்ச்சியை காலந்தாழ்ந்து ஆரம்பித்து விட்டேன் என்ற குற்ற உணர்வுள்ளது. இருப்பினும் தங்கள் சொந்த வசதிகளைத் தியாகம் செய்து நம்பிக்கையுடன் என் பின்னே நம் மக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் புத்த தம்மத்தைப் பரப்புவதற்கு உண்மையுடன் தொடர்ந்து போராடுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

தொகுப்பு: முனைவர் எ.பாவலன்

Pin It