மனித சமூகத்திற்கு இயற்கை வழங்கிய மிகப் பெரிய கொடை காதல் ஆகும்.  தனக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துக் காதலிப் பவர்கள் தான் விரும்பிய துறைகளில் பெரிய சாதனையாளராக மாறுகிறார்கள். அதேபோல் இந்த மனித சமூகத்தைக் காதலித்தவர்கள் சமுதாய வழிகாட்டியாக மாறுகிறார்கள். அப்படிச் சமூகத்தை நேசித்த தலைவர்களே சமூக மாற்றத்திற்கு வித்திடுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில் சமூகத்தின் மீது கொண்ட தீராத காதலால் மக்களிடையே மாற்றங்களை உருவாக்கிய தலைவர் களில் முக்கியமானவராகிய தோழர் அம்பேத்கர் அவர்களின் காதல் பற்றித் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய நூலே “டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்” ஆகும். தோழர் அம்பேத்கர் அவர்கள் ஏன் புத்தத்தைக் காதலித்தார், ஏன் புத்தகத்தைக் காதலித்தார் என்பதை ஆதாரத்துடன் மிக எளிமையாக புரியும்படி எழுதியுள்ளார். அழகிய அட்டை வடிவமைப்புடன் மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் ஸின் சூழ்ச்சி

ambedkar and buddhaஇந்தியாவின் அதிகார வர்க்கமாகிய பார்ப்பனர்களின் நலனைப் பாதுகாக்க உருவாக்கப் பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, தனக்கு எதிராகப் போராடுபவர்களை எதிர்த்து அழிப்பார்கள். முடிய வில்லை என்றால் ஆதரித்து அழிப்பார்கள். அப்படிப் பார்ப்பனர்களுக்கு எதிராகப் போராடிய பல சீர்திருத்தவாதிகளை தனதாக்கிக் கொண்டனர். கேரளாவில் நாராயணகுரு, தமிழகத்தில் வள்ளலார் எனப் பலபேரை ஆக்கிரமித்து விட்டார்கள். இந்தியாவின் வரலாற்றில் ஆரியத்தை மிகப் பெரிய ஆட்டங்காண வைத்த புத்தரைக் கிருஷ்ணனின் ஒன்பதாவது அவதாரம் எனக் கூறி அவருடைய முற்போக்குக் கருத்துக்களை அழித்து கடவுளாக மாற்றிவிட்டனர். அந்த நிலை அம்பேத்கருக்கு வந்துவிடக்கூடாது என நூலாசிரியர் எச்சரிக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் 9 வது பக்கத்தில்  “அண்ணல் அம்பேத்கரை அவரது 125ஆவது பிறந்த நாளில் படத்திற்கு பூசை, பெருத்த நாமாவளி-புகழுரை என்ற கண்ணி வெடிகளை வைத்து அணைத்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை எச்சரிக்கையுடன் இளைஞர்கள் அதிலும் அம்பேத்கரின் கொள்கை வழி நிற்போர் மிகுந்த கவனத்துடன் கண்காணிப்பது அவசியம்.” என்கிறார். பார்ப்பனியம் பயந்து நடுங்கக்கூடிய தலைவனாகிய தோழர் பெரியார் அவர்களாலே பகுத்தறிவுவாதி என்றும் பகுத்தறிவு மார்க்கம் என்றும் பாராட்டப்பட்ட புத்தரை, புத்த மார்க்கத்தை எளிதில் தனதாக்கி அதில் பல்வேறு சடங்குகளைத் திணித்து விட்டனர். அந்த ஆபத்து இந்து மதத்தின் வேத இதிகாசங்களை, புராணங்களை ஆய்வு செய்து வரிக்கு வரி அம்பலப்படுத்திய தலைவர் அம்பேத்கருக்கு வந்துவிடக் கூடா தென இந்நூலாசிரியர் நம்மை எச்சரிக்கிறார்.

பெரியாரும் அம்பேத்கரும்

உலகம் முழுவதும் மக்களை அடிமைப்படுத்த அதிகார வர்க்கம் வன்முறையைப் பயன்படுத்தும். ஆனால் இந்தியாவில் பார்ப்பனியம் சடங்கு, சம்பிரதாயம், மூடநம்பிக்கை ஆகியவற்றை வைத்தே அடிமைத்தனத்தை மக்களே விரும்பி ஏற்றுக் கொள்ள வைத்தனர். அப்படி கிரிமினல் புத்தி கொண்ட ஆரியர்களை ஆட்டம் காண வைத்தவர் புத்தர் ஆவார். அவருக்குப் பின்பு பெரியார், அம்பேத்கர் ஆவார்கள். அவர்களை எதிர்த்து அழிக்க முடியாத ஆரியம் அவர்களின் தொண்டர்களிடையே மோதலை உருவாக்க சில முயற்சிகள் செய்தது.

ஆரியத்திற்கு விலைபோன சிலரை தயார் படுத்திப் பெரியாருக்கு எதிராக பேச, எழுதத் தயாரித்தனர். அவர்களின் பொய்யுரைகளில் மிக முக்கியமான ஒரு செய்தியை நூலாசிரியர் அம்பலப்படுத்துகிறார். இந்த நூலின் 13 ஆம் பக்கத்தில் அம்பேத்கர் தன்னுடைய மகத் குளப் போராட்டத்திற்கு ஈ.வெ.ராமசாமியின் வைக்கம் போராட்டம் உந்துசக்தியாக இருந்தது என்று தான் நடத்திய ‘மூக் நாய்க்’ (ஊமைகளின் குரல்) ‘குரலற்றவர்களின் குரல்’ ஏட்டில் பதிவு செய்ததை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்ஜே கீர் அவர்கள் பதிவு செய்துள்ளதை ஆதாரத்துடன் விளக்குகிறார்.

இந்து மதத்தின் பெரும்பான்மை மக்களைச் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் பிரித்து வைத்து அவர்களைப் பார்க்கக் கூடாதவர்களாகவும், தீண்டக் கூடாதவர்களாகவும், அண்டக் கூடாதவர் களாகவும் மாற்றி அடிமை விலங்கை விரும்பி ஏற்றுக்கொள்ள வைத்த இந்து மதத்தையும், அதற்கு எதிராகச் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் பவுத்தத்தையும் அலசி ஆராய்ந்து புத்தர் சொன்ன மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு அது ஒரு சமத்துவ மார்க்கமாகவும் எதையும் பகுத்தறிவு கொண்டு பார்க்கும் சிந்தனையை வளர்க்கும் தத்துவமாக இருந்ததால் புத்தத்தைக் காதலித்தார். இந்த நூலின் 7ஆம் பக்கத்தில் நான் ஏன் பவுத்தத்தை விரும்புகிறேன் என்பதற்குக் காரணம் கூறகிறார்

1.` ‘பவுத்தம்’ ‘பிரஜனர்’ (பகுத்தறிவு) – மூடநம்பிக்கைகள், மனித சக்திக்கும் அப்பாற் பட்ட சக்தி என்பது போன்றவற்றை வெறுக்கும் பகுத்தறிவைப் போதிக்கிறது

2‘பவுத்தம்’ கருணையையும் போதிக்கிறது

3. ‘பவுத்தம்’ சமத்துவத்தை வலியுறுத்துகிறது

“ஒரு நல்ல வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கும் மனிதனுக்கு இவைதான் தேவை. கடவுளோ, ஆத்மாவோ சமூகத்தை ஒரு போதும் காப்பாற்றாது.”

எனத் தோழர் அம்பேத்கர் மிகத் தெளிவாகக் கூறியதை நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். ஆனால் அம்பேத்கர் பெயரைச் சொல்லி பவுத்தத்தை ஏற்பதாகச் சொல்லும் சிலர் புத்தரை இன்னுமொரு இந்துக் கடவுளாக மாற்றும் விதமாக அகல் விளக்கு வைப்பது, காதணி விழா நடத்துவது போன்றவற்றைச் செய்கின்றனர். மேலும் அம்பேத்கரின் மீதுள்ள பற்றால் அவர் கொள்கைக்கு எதிராக கோவில் திருவிழா விளம்பங்ரகளில், இந்துமதப் பண்டிகை விளம்பரங்களில் அவர் படத்தைப் பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட செயல்களை நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

அம்பேத்கரின் புத்தகக் காதல்

சமூகத்தை நேசிப்பவர்கள் அனைவருமே வாசிப்பை நேசிப்பவர்களாகவே இருந்துள்ளனர். பல தலைவர்கள் சமூகத்தின் அடிமைத்தன்மைக்கு என்ன காரணம் என்பதையும் அதற்கான தீர்வையும் தேடும் போது யதார்த்த வாழ்க்கைக்கும் தத்துவத்திற்கும் உள்ள தொடர்புகளை வாசிப்பு மூலம் ஆய்ந்து அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லி யுள்ளனர். இன்றும் கூட வாசிப்பு இல்லாத தலைவர்கள் ஊடகங்கள் முன்பு என்ன திணறு திணறுகின்றனர் என்பதை நாம் நேரடியாகப் பார்க்கின்றோம்.

தோழர் அம்பேத்கரின் புத்தகக் காதல் பற்றி நூலாசிரியர் 65 ஆம் பக்கத்தில் தெளிவுபடுத்துகிறார். “எனது இந்த நூலகத்தை கிடைத்தற்கரிய நூல்களையெல்லாம் நான் சேகரித்து வைத்துள்ள இந்த நூலகத்தினை தனியார் யாருக்காவது கொடுத்தால் 5 லட்சம் ரூபாய். (அப்போது அது பெரிய தொகை என்பதை நினைவுப் படுத்திக் கொள்வோம்) ஆனால் அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை. நான் இந்த நூலகத்தை (டாக்டர் துவக்கிய கல்லூரி) சித்தார்த்தா கல்லூரிக்கு அளித்திட முடிவு செய்து விட்டேன்” என்று பதிவு செய்துள்ளார்.

தோழர் அம்பேத்கர் தனது வறுமையிலும் நூல்கள் வாங்குவதை நிறுத்தவில்லை. தனது சொந்த நூலகத்தில் இறக்கும் போது இடம் பெற்ற நூல்கள் 69,000 ஆகும். சமூகம், அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் அம்பேத்கர் சிறந்து விளங்கியதற்குக் காரணம் அவரின் தீவிர வாசிப்பின் மீதுள்ள காதலே ஆகும். அம்பேத்கர், பெரியார் பற்றிய நிறையத் தகவல்கள் நூலின் அனைத்துப் பக்கங்களிலும் நிறைந்துள்ளன. அம்பேத்கரிய, பெரியாரியத் தோழர்கள் மட்டுமல்லாது அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் ஆகும்.

வெளியீடு- திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல்,

84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை- 600 007 விலை - ரூ.50

Pin It