இரவுத்தூக்கம் உடல் நலத்தை உறுதிப்படுத்துகிறது என்பதை விளக்குகிறது இந்த ஆய்வுநூல். பழைய மருத்துவச் சிந்தனை மரபிலிருந்தும் நவீன அறிவியல் ஆய்வுத் தரவுகளிலிருந்தும் சங்கதிகளைத் தொகுத்து எளிய மொழிநடையில் விளக்குகிறார் நூலாசிரியர். உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட மருத்துவ ஆய்வுகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் அறிவுரைக் கோட்பாடுகளும் இயல்பான இயற்கைநிலை விதிகளும் சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிக்கப்படுகின்றன. நேர்த்தியான மனித வாழ்வுக்கும் உடலியல் வளர்ச்சிக்கும் இரவுத் தூக்கம் அவசியம் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது இந்த நூல்.
உடல் இரண்டு வடிவநிலைகளைக் கொண்டது. ஒன்று வெளிப்புற உறுப்புகளின் சேர்மானம்; இரண்டு உள் உறுப்புகளின் இருப்புநிலை. உள் உறுப்புகள் பன்னிரண்டு இருக்கின்றன. அவை இயல்பாக இயங்கினால்தான் புற உடல் நோயற்ற வாழ்வின் களமாக இருக்கும். உள் உறுப்புகள் 12. அவை மூளை (1), இதயம் (1), இரைப்பை (1), நுரையீரல்கள் (2), குடல்கள் (2), சிறுநீரகங்கள் (2), கல்லீரல் (1), மண்ணீரல் (1), கணையம் (1) மற்றும் பித்தப்பை (1). இவை தவிர இயக்கங்களால் மட்டுமே இருத்தல் நிலை கொண்டவை மனமும் உயிரும். (இந்த இரண்டையும் பற்றி சமீபத்தில் வெளியிட்ட “மிர்சாதின் சிறிய புத்தகம்” என்ற நாவலில் விரிவாக விளக்கியிருக்கிறார் உமர் ஃபாரூக்.) இவை அனைத்துமே இயற்கை விதிக்குட்பட்டு இயங்கிக் கொண்டும் வளர்சிதை மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டும் இருக்கின்றன. அக-புற உறுப்புகளின் சேர்மானம் உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்றால் முக்கியத் தேவை தூக்கம். அதாவது இரவுத் தூக்கம்.
பகல் பொழுதில் பொருள் உற்பத்தியையும் பண்பாட்டு உற்பத்தியையும் செய்வதற்குப் புற உறுப்புகளின் இயக்கம் காரணமாகின்றன. கைகால்கள் உள்ளிட்ட ஐம்பொறிகள் இயங்கிப் புறவாழ்வின் உற்பத்தி நிலையை உறுதிப்படுத்துகின்றன. அதற்கு உள் உறுப்புகளின் இயக்கம் உதவி செய்கின்றன.
புற உறுப்புகள் இயங்கினால் எப்படி வியர்வையாகவும் காற்றாகவும் திடப் பொருளாகவும் கழிவுகளாகி வெளியேறுகின்றதோ அதுபோல் அக உறுப்புகள் இயங்கும்போதும் கண்ணுக்குத் தெரியாத கழிவுகளின் வெளியேற்றம் நடக்கிறது. வளர்சிதை மாற்றம் என்பது அக உறுப்புகளின் நிகழ்த்து கலைகள். இந்த எல்லா இயக்கங்களுக்கும் இரவுத் தூக்கம் அடிகோலிடுகின்றது.
பழந்தமிழ்ப் புலவர்கள் இலக்கியமாகவும் மருத்துவமாகவும் கவிதைகள் எழுதி வைத்துள்ளனர். குறிப்பாகச் சித்தர்கள் உடலின் சகல நோய்களுக்கும் சகல உறுப்புகளின் இயக்கமே காரணமும் மருந்தும் ஆகும் என்கின்றனர்.
”இரவில் துயில் பயின்றால் எண்ணிறந்த வாயு திரணமதாய் ஓடிவிடும்; தீ பதனமும் உண்டாம். வரமுறு நல் உடல் வளரும்; ஆரோக்கியமும் மேவும்; சரம் அறும்; பாருலகில் சொல்.
வரமுறு நல் உடல்” என்கிறார் சித்தர் தேரர். வரமிருந்து பெற்ற இந்த உடலைப் பாதுகாக்க வேறு எதுவும் செய்ய வேண்டாம்; இரவில் தூங்கினால் போதும் என்கிறார். தமிழர்கள் வளமான வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதை அவர்கள் எழுதி வைத்த மருத்துவக் குறிப்புகள் பறைசாற்றுகின்றன.
இன்றைய வணிக உலகம் லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்குகிறது. லாபம் பெறுவோர், லாபத்துக்காக உழைப்போர் என்ற பாகுபாட்டு வாழ்க்கைமுறை வழியாகப் பிளவுண்டு கிடக்கிறது சமுதாயம். உழைப்பாளிகளின் வாழ்க்கைமுறை தூக்கம் கெட்டதாய் இருக்கிறது. தூக்க நேரத்தில் உழைப்பதன் மூலம் உடல் வளர்ச்சிக்கு உதவாத நொறுக்குத் தீனிகளையும் பானங்களையும் உட்கொள்கின்றனர். அதன் மூலம் மேலும் மேலும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். அந்நோய்களைத் தீர்க்கிறோம் என்ற பெயரில் மருத்துவக் கார்ப்பரேட்டிஸமும் சமூக உளவியலில் நங்கூரமிட்டு நிற்கிறது. அதாவது தூக்கமற்ற அவர்களின் வாழ்வியல் நிலையில் ஏற்படும் நோய்களை முன்வைத்தே லாபவேட்டை ஆடுகிறது.
ஒரு காலத்தில் சுரண்டுவோர், சுரண்டப்படுவோர் என்றிருந்த சமூகச் சூழல் அதனினும் பெரிதாகி “லாபநோக்கச் சிந்தனையாளர்கள், உழைப்புநோக்கப் பணியாளர்கள்” என்று புதிய பரிமாணம் கண்டு வலுவடைந்திருக்கிறது.
கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் ஷிஃப்ட் முறைப் பாகுபாடு என்ற உள்ளடக்கதை உருவாக்கி “ரெண்டு ஷிஃப்ட் வேலை செய்தால் அதிக ஊதியம்” என்று பம்மாத்துக் காட்டி உழைப்பாளிகளைச் சுரண்டுகிறார்கள். கட்டாயமில்லை; ஆனால் ரெண்டு ஷிஃப்ட் வேலை செய்தால்தான் குடும்பத்தை ஓட்ட முடியும். லாப நோக்கச் சிந்தனையாளர்களின் ஜனநாயக அணுகுமுறை இது.
எதிர்கால சமுதாயம் “இரவுத் தூக்கம் உள்ளவர்கள், இரவுத் தூக்கம் இல்லாதவர்கள்” என்ற வரையறைக்குள் வரப் போகிறது என்று எச்சரிக்கிறது இந்த நூல். பல லட்சம் சம்பாத்தியத்தைவிட சில நூறு சம்பாத்தியம் போதும் என்ற நிலைக்கு மனிதர்கள் வர வேண்டும் என்றும் கோருகிறது. ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற நமது முதுமொழி நிஜமாக மாட்டாமல் காலாவதியாகி விடுமோ என்று கவலைப்படுகிறது.
இதையும் தாண்டி ஒன்றிரண்டு சங்கதிகள். பிறந்த குழந்தை பால் குடிக்கும் நேரம் தவிர எல்லா நேரமும் உறங்குகிறது; ஏறத்தாழ 22 மணிநேரம். எழுபதைத் தாண்டிய முதியவர்கள் தூங்குவதற்கு 15 மணிநேரம் எடுத்துக் கொள்கிறார்கள். இவை உடலின் வளர்ச்சிநிலையில் நிகழும் யதார்த்தச் சூழல்கள். இந்த நிலை பற்றியும் விவரித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
நம் உடலை நாமே நோயில்லாக் கூடாரமாக வடிவமைக்கத் தேவையான செய்திகளைக் கொண்ட மருத்துவ நூல். செலவே இல்லாமல் நம் உடலை நோயிடமிருந்து காப்பாற்ற வழிசொல்லும் முக்கிய நூல் “தூக்கம்”.
நவீன ஆய்வுகளின் வழிப்பட்ட கலைச்சொற்கள் ஏராளம் இருக்கின்றன; அது நூலாசிரியரின் வாசிப்பு மற்றும் ஞானச் செறிவைப் பதியமிட்டுக் காட்டுகிறது. சாதாரண வாசகனுக்கு அது இடஞ்சல் தராமல் வேகமாய் நகர்கிறது என்பதை வாசிக்கும்போது புரிய முடியும்.
அக்குஹீலர் அ. உமர் ஃபாரூக் தமிழர்தம் வாழ்க்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ள இன்னொரு மருத்துவ ஆவணம் “தூக்கம்” என்ற இந்தப் படைப்பு.
தூக்கம்
உடலியல் மருத்துவ நூல்.
ஆசிரியர்: அக்குஹீலர் உமர் ஃபாரூக்.
எதிர் வெளியீடு.
பக்கம் 72. விலை 100/
- தேனி சீருடையான்