“மிர்சாத்தின் சொற்கள் சும்மா இருப்பதில்லை அவை எப்போதும் தொடர்ந்து வினையாற்றும் சாபத்தைப் பெற்றிருக்கின்றன.“

கவிஞர் புவியரசு மொழி பெயர்த்த உலகப் புகழ் பெற்ற கவிஞர் மிகெய்ல் நைமியின் புத்தகமான “மிர்தாதின் புத்தகம்” என்ற உலகப் புகழ் பெற்ற ஞானப் பொக்கிஷத்தின் நீட்சியாக, தோழர் சி. உமர்பாரூக் அவர்கள் ‘மிர்சாத்தின் சிறிய புத்தகம்’ என்ற இந்தச் சிறிய புத்தகத்தை (நாவல்) படைத்துள்ளார். எழுத்தாளரே சொல்வது போல “லெபனானில் பிறந்த மிர்தாத் அரேபியப் பின்புலத்திலான தன் தத்துவத்தினை முன்வைத்தார். சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த புதிய மிர்சாத் தமிழ் மண்ணின் தத்துவப் புரிதலைத் தம் வாசகர்களுக்காக மிக எளிய மொழியில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.“

Mirsaathin Siriya Puththagam“மிர்தாதின் புத்தகத்தில்” அதன் ஆசிரியர் ‘மிகெய்ல் நைமி’ மிர்தாதின் குரலாகப் பேசுகிறார் என்றால், ‘மிர்சாத்தின் சிறிய புத்தகத்தில்’ மிர்சாத்தாக ‘தோழர் உமர் பாருக்’ தான் புதிய வடிவம் எடுத்துப் பேசுகிறார் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மறுபடியும் மறுபடியும் மிர்தாதுகளும், மிர்சாதுகளும் வெவ்வேறு பெயர்களோடு பிறந்து கொண்டேயிருப்பது, இந்தத் தத்துவ உலகில் நிகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும்” என்பது அவரின் ஆசை போலும். அது தான் இன்றைய தேவையும் கூட. நூற்றுக்கணக்கான புனைவு நூல்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் தமிழ் இலக்கியச் சூழலில் இது போல் தத்துவம் சார்ந்து உன்னதங்களைத் தேடும் ஒரு நாவல் தோன்றுவது அவசியத்திலும் அவசியமானதாகும்.

கதை என்று பார்த்தால் ஒரு பத்தியில் எழுதிவிடக்கூடிய சம்பவங்கள் தான் உள்ளே உள்ளன. ஆனால் உண்மையில் இந்த நாவலை வளர்த்தெடுத்துச் செல்வது மலை போல் வளர்ந்து கொண்டிருக்கும் தத்துவார்த்தமான கேள்விகளும், பதில்களும், சிந்தனைகளும் தான் என்பதை முதல் வாசிப்பிலேயே யாரும் புரிந்து கொள்ள இயலும்.

கர்து மலைக்குக் கீழே இருக்கும் பெத்தார் கிராமத்தில் மீரு தன் தாத்தாவுடன் வசித்து வருகிறான். மிகான், நிகால், மற்றும் கர்வான் ஆகியோர் அவனது உற்ற நண்பர்கள். மீருவின் தாத்தாவிடம் மிர்சாத் தந்த ஞானப் புத்தகத்தின் கடைசிப் பக்கம் மட்டும் உள்ளது. அந்தப் புத்தகத்தின் அத்தனை பக்கங்களும் காற்றோடு போய் விட்டன. யார் யாரிடம் அவைகள் இருக்கின்றனவோ யாருக்கும் தெரியாது. மிர்சாத்தின் முழுப்புத்தகத்தையும் வாசித்து, ஞானத்தைச் செழுமைப்படுத்தவும், வறண்டு போன அந்த ஊரின் வளத்தை மேம்படுத்தவும், மனிதர்களிடம் தொலைந்து போன நேசத்தை மீட்டுக் கொண்டு வரவும், மீரு அந்தப் புத்தகத்தை முழுமையாகப் பெற்றுவிட, கர்து மலையின் சிகரத்தை நோக்கி நண்பர்களுடன் பயணிக்கிறான். அங்கே தான் மிர்சாத்தின் மடாலயம் அமைந்திருக்கிறது. நோவாவின் கப்பல் இறங்கிய இடம் அது தான். அந்தக் கர்துமலையின் சிகரம். அதன் தொடர்ச்சியாக நோவாவின் மகன் சேத் ஆரம்பித்த மடாலயம் தான் அங்கேயிருக்கிறது. அங்கேயிருந்து தான் மிர்சாத் தன் ஞான உபதேசங்களைச் சீடர்களுக்கு வழங்க ஆரம்பித்தார். அதன் உச்சமாக மடத்திற்குச் சொந்தமான விவசாய நிலங்களை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டு, அவர் மக்களுடன் நேரடியாகப் பேசுவதற்காக, சீடர்களுடன் மலையை விட்டுக் கீழே இறங்கிச் சென்று விட்டார். அன்று சென்றவர் இன்னும் திரும்பவில்லை.

மிர்சாத் இல்லாத இடத்தில் மக்கள் அறத்தை மறந்து ஒருவர் நிலத்தை ஒருவர் அபகரித்துக் கொள்ளத் துவங்கியிருந்தனர். ஒருவர் உணவை மற்றவர் பறித்துக் கொண்டனர். ஒருவர் நோக மற்றவர் பார்த்துக் கொண்டிருந்தனர். சுருக்கமாகச் சொல்வதானால் நாம் வாழும் சம கால சமூகம் போல ஆகி விட்டது அந்தப் பெத்தார் கிராமம். இதையெல்லாம் கண்டு துயருற்ற மீரு, இந்தத் துன்பத்தை மாற்ற வேண்டுமென்று நினைக்கிறான். அதற்கு முழுவதும் ஞானம் பெற வேண்டும். அது அந்தப் புத்தகம் கிடைக்கப் பெற்றால் தான் முடியும் என்று தாத்தா சொல்கிறார். மீரு தன் நண்பர்களுடன் மலையின் உச்சிக்குப் பயணத்தை ஆரம்பிக்கிறான். உண்மையில் நமக்குள்ளும் அப்போது ஒரு பயணம் தொடங்கி விடுகிறது நாம் அறியாமலேயே.

பல்வேறு தடைகளைத் தாண்டி, நண்பர்களுடன் சிகரத்தின் உச்சிக்குப் பயணிக்கிறான் மீரு. (அவனது முழுப்பெயரும் மிர்சாத்தான்.) உண்மையில் அந்த மடாலயத்தின் குகையை மீருவால் மட்டுமே அடைய முடிகிறது. அங்கே அவனுக்காகவே நைமி காத்துக்கொண்டிருக்கிறார். அவனுக்கு மிர்சாத்தின் சிறிய புத்தகத்தைக் கையளிக்கிறார். முழுப்புத்தகத்தை அவன் எதிர்பார்க்க, அவரோ அந்தச் சிறிய புத்தகத்தைத் தருகிறார். அதைப் புரட்ட ஆரம்பித்ததும், உள்ளே தத்துவச் சாளரம் திறந்து கொள்கிறது.

காலம் பின்னோக்கிப் போகிறது. மிர்சாத்திடம் அவரது சீடர் அசேரா தத்துவங்கள் பற்றிய பல கேள்விகளைக் கேட்கிறார். மிர்சாத் அவைகளுக்கு உண்மையாகத் தெளிவாகப் பதிலளிக்கிறார். உடனிருந்த இன்னொரு துறவி நரேண்டா அவற்றைக் குறித்துக் கொண்டு புத்தகமாகத் தொகுத்திருக்கிறார். புரிதலின் போதாமையால் அசேரா மிர்சாத்திடம், மேலும் பூட்டைத் திறக்கும் திறவுகோல்களையும் தனக்குத் தர வேண்டுமென்று கேட்கிறார். அதற்குப் பத்து தத்துவங்களை, பத்துத் திறவுகோல்களாக்கி, மிர்சாத் அவருக்குத் தருகிறார். கடைசியில் மிர்சாத்தின் இறுதி எச்சரிக்கையுடன் இந்தச் சிறிய புத்தகம் முடிவுறுகிறது. ஆனால் இது எழுப்பும் எளிய உண்மைகளும், முன் வைக்கும் சில ஆணித்தரமான கேள்விகளும் என்றுமே முடிந்து விடாதென்றுதான் தோன்றுகிறது.

நாம் பார்க்கும் உலகத்தைத் தான் தோழர் உமரும் பார்க்கிறார். ஆனால் அவருக்கு மட்டும் தென்படும் எளிய கேள்விகளும் பதில்களும் நமக்குக் கண்ணில் படுவதில்லை என்பது ஆச்சரியமான ஒன்று தான். இதில் நான் கண்டு கொண்ட சில வாசகங்களைக் கல்லில் செதுக்கப்படும் சிற்பங்களைப் போல இதயத்தில் செதுக்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். தத்துவ வரிகள் என்பதையும் தாண்டி கவிதைக்கு மிக அருகில் நெருக்கமாக வரும் வரிகள் இவைகள் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

“பறவை பறப்பதற்குச் சிறகுகள் மட்டும் போதாது ஆகாயத்தின் மீது நம்பிக்கையும் வேண்டும். மனிதர்கள் தங்களின் அகக் கூண்டுகளைத் தாங்களாகவே உடைக்காத வரை, எந்தவொரு மனிதனாலும் அவர்களை இரட்சிக்க முடியாது – “

இதில் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டாலும் ஒரு நவீன கவிதையைப் போல ஆரம்பித்து எல்லையற்று விரிந்து கொண்டே செல்லும் அழகு, உண்மையில் வானத்தில் பறக்கும் ஒரு சுதந்திரப் பறவையை நினைவூட்டுவதை யாரும் மறக்க முடியாது.”

அது போலவே தாத்தா மீருவிடம் கூறும் சில வாசகங்கள் தேர்ந்த கவித்துவ சிந்தனைகள் கொண்டவையாகும்

“மிர்சாத்தின் சொற்கள் மட்டுமல்ல, நன்மைக்கான சொற்கள் என்றும் அழிவதில்லை. அவை காற்றில் மிதந்து கொண்டேதானிருக்கின்றன. ஆனால் அதை உள்வாங்கிக் கொள்ளும் தகுதியை மனிதர்கள் இழந்து விட்டார்கள்“

சாதாரண மனிதர்களுக்கும் தத்துவங்கள் ஏன் தேவைப்படுகின்றன - ? மகிழ்ச்சியாக வாழ்வதற்குத்தானே? வாழ்க்கையை விட்டு விட்டு ஓடி ஒளிவதற்கு அல்லவே தத்துவங்கள்? இல்லாத இருண்மையை நினைத்துக் குழம்பிக் கொண்டு மற்றவர்களையும் குழப்புவதற்கு அல்லவே தத்துவங்கள்?

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் .....என்று வள்ளுவர் அன்றே எழுதிவைத்து விட்டார். இது நம் பண்பாட்டிலேயே கலந்துள்ளது. சமத்துவ சமுதாயத்தைச் சமைக்க வேண்டுமென்ற கனவு கண்ட மாமேதை மார்க்ஸ் அதையே தான் மார்க்சிய தத்துவமாகச் சொல்லியிருக்கிறார். குருவிகளுக்குக் கூட வீட்டின் முற்றத்தில் இரவானம் கட்டி விட்டு, அதில் சிறிது தானியங்களைப் போட்டு வாழ வைத்து அழகு பார்த்தது இந்த மண்ணின் மரபாகும். ஆனால் சக மனிதர்கள் பட்டினியால் வாட, பசியால் துடிக்க, உதவியின்மையால் அல்லலுற, அவர்களை அணுகுவதற்குக் கூட இன்று கூசி நிற்கும் கூட்டமாகி விட்டது மனித இனம். உலகளாவிய கார்ப்பரேட் தத்துவங்கள், பங்குச்சந்தையின் நிலவரங்கள், இனங்கள், நிறங்கள், மதங்கள், சாதிகள் எனப் பல பேதங்களைப் பார்த்துக் கொண்டு ஈவு இரக்கமற்றுப் போய்க் கொண்டிருக்கிறது மனித இனம். ஆனாலும் நாம் மனச் சோர்வு கொள்வதற்கு அவசியமில்லை. மீருவைப்போல சில நல்ல திட சிந்தையுள்ள உள்ளங்களும் இங்கே தான் இருக்கின்றன.

“சாத்தியங்கள் அனைத்தும் சிந்தனையின் வழியாகத்தான் தொடங்கும் அது செயல்களிலே முடிவுறும்“

இந்தச் சிறிய புத்தகத்தின் சாரம் என்று நான் இதைத்தான் சொல்லுவேன்.

“மனம் தான் உன் பேரரசி. நீ அவளைப் பிச்சைக்காரி போல நடத்தாதே. அந்த மனமென்னும் பேரரசிக்கு உதவுவதற்குத்தான், இந்த ஆன்மா என்று சொல்லப்படுகிற உயிரும், பருப் பொருளான உடலும் உனக்கு கிடைத்துள்ளன. ஏதேதோ வெட்டி வேதாந்தங்களும் இருண்மை வாதங்களையும் பேசி, மனமென்னும் பேரரசியை மறந்து விடாதே. மனம் தான் நிகழ்காலத்தின் அரசி. அந்த மனத்தின் ஒரு மூலையில் எட்டிப்பார்க்கும் கடந்த காலத்தின் எண்ணங்கள். உனக்குத் தேவை என்றால், அந்த எண்ணங்களை எடுத்து நிகழ்காலத்தில் ஆக்கப்பூர்வமான சிந்தனை செய்வதற்குப் பயன்படுத்து. இல்லையென்றால் அதற்கு மேல் அந்த எண்ணங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காதே“

“. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தான் அதன் அடுத்த கட்டமான செம்மையான செயல்களை நோக்கி நம்மைக் கொண்டு செல்லும்.“ இதுவே தோழர் உமர் பாருக் அவர்கள் மிர்சாத்தின் வழியாக, நமக்குக் காட்டும் துடிப்பான தத்துவமாகும். இதை விட்டு விட்டுப் பல்வேறு மத தத்துவங்களையும், மாயைகளையும், வெட்டி வேதாந்தங்களையும் பேசி, வீணாக மனதைக் குழப்ப வேண்டாமென்பதே இந்தப் புத்தகத்தில் எழுதப்படாமல் ஒளிந்திருக்கும் மறைமுகச் சாரமாகும்.

அசேரா மிர்சாத்திடம் இவ்வாறு கேள்விகளைக் கேட்கிறார்

கேள்வி – மிர்சாத் தத்துவங்களில் ஏன் இத்தனை குழப்பம்? பதில் – உண்மை எப்போதும் ஒன்று தான் அதை நீ எங்கிருந்து பார்க்கிறாய் என்பதைப் பொறுத்தது. தத்துவங்கள் சொற்களாகின்ற போது நிறங்கள் வந்து சேர்கின்றன – மனதின் நிறமும் சேர்ந்து கொள்கிறது. இதற்கு மேற்கண்ட பதில் கிடைக்கிறது. அது உண்மை என்பது போல இந்த வாதம் முன் வைக்கப்படுகிறது. “ஓடுகின்ற நதியில் ஒருவர் இரு முறை குளிக்க முடியாது என்றார் ஒரு தத்துவவாதி. – ’ஓடுகின்ற நதியில் ஒருவர் ஒரு முறை கூட குளிக்க முடியாது – என்றார் அடுத்து வந்த தத்துவவாதி. ஓடும் நதியில் அனைவரும் குளிக்கலாம் என்கிறார் ஒரு புதிய தத்துவவாதி“ ஒவ்வொருவர் சொன்னதிலும் ஓரோர் உண்மையும், நிதர்சனமான தர்க்கமும் உள்ளது என்பது உண்மை தான். அதனால் தான் மிர்சாத் “நீ யார் என்பதும், நீ யார் பக்கம் நிற்கிறாய் என்பதும் உன் தத்துவப் பார்வையைத் தீர்மானிக்கிறது“ என்று சொல்கிறார்.

இன்னும் சில வாசகங்களை அவர் போகிற போக்கில் சொல்லிப் போனாலும் பொட்டில் அறைந்தார் போல் அவைகள் அங்கேயே நிற்கின்றன. உதாரணமாகப் பல்வேறு கேள்விகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள மிர்சாத்தின் பதில்களைப் பாருங்கள்.

கேள்வி – மனிதர்களின் மனசாட்சியாக நின்று வழிகாட்டுவது ஆன்மாவல்லவா? பதில் – ஆன்மா ஒரு வேலையும் செய்யாது. ஆன்மா என்பது உயிர் ஆற்றல் அவ்வளவு தான் அதற்குச் சிந்தனை கிடையாது.

கேள்வி சொர்க்கம் பற்றி சொல்லப்பட்டவைகள் கற்பனைகளா? பதில் – ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பதில் சொல்கிறார்கள். ஆதி சொர்க்கங்கள் ஆறுதலுக்காக உருவாக்கப்பட்டன. கேள்வி - சொர்க்கம் நரகம் மறுபிறவி இவையெல்லாம் எதற்காக உருவாக்கப்பட்டன? பதில் – மனச்சிக்கலை நீக்குவதற்கு இவை தேவைப்பட்டன.

கேள்வி - பிரார்த்தனைகள் ஏன் அனைவருக்கும் நிறைவேறுவதில்லை?

பதில் – மூன்று வகைப் பிரார்த்தனைகள் உள்ளன

  1. செயல் தூண்டும் பிரார்த்தனை 2. – செயல் விளைவுப் பிரார்த்தனை – 3. செயல் முடக்கப் பிரார்த்தனை உண்மையில் போலியான பிரார்த்தனை என்பது கடவுளின் ஆளுமையை மறுப்பது போன்றது தான். உன்னைப் படைத்தவருக்கு உனக்கு என்ன வேண்டுமென்று தெரியாதா என்ன? உன் பிரார்த்தனை உன் செயல்களுக்கு ஊக்கமளித்தால் தொடர்க அல்லது அதை விட்டு விடுக.

கேள்வி - சரணாகதியின் மூலம் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள இயலுமா? பதில் – உயிர்ப்புள்ள மனதை வைத்துக் கொண்டு சமாதியில் இருக்கும் பிணம் போல் இருக்க ஏன் ஆசைப்படுகிறாய்? நீ நம்பும் கடவுள் படைத்த மனிதர்களுக்குத் தேவையான எந்தச் செயலிலும் ஈடுபடாமல், இந்த உலகின் மூலதனமான உழைப்பை நிராகரித்து விட்டு, நீ கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு சும்மா இருப்பது நிச்சயமாக உன் கடவுளுக்குப் பிடிக்காது அசேரா ,,

கேள்வி - அப்படியானால் வழிபாடு என்பது என்ன மிர்சாத்? பதில் – வழிபாடு என்பது சடங்குகள் சாத்திரங்களில் இல்லை. அது அடுத்தவரின் இருப்பை சிக்கலாக்கக் கூடாது. உண்மையில் செயல்பாடற்ற வழிபாடு போலியானது தான் -

இதற்கு மேல் வாழ்க்கையைச் செம்மையாக வாழ வேறு தத்துவங்களைத் தேட வேண்டியதில்லை என்பதை ஒரு முறை இந்தப் புத்தகத்தை வாசிக்கும் யாரும் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

உண்மையில் இலக்கு என்ற கேள்விக்கும் மிர்சாத் இவ்விதம் தான் பதிலளிக்கிறார்.

கேள்வி – வாழ்க்கையின் இலக்கு என்பது என்ன? பதில் – உண்மையில் இலக்குகள் அகம் சார்ந்தவை. புறம் சார்ந்தவை அல்ல என்பதைப் புரிந்து கொள். பொருட் சார்ந்த இலக்குகள் முழுமை பெறாது. பெரிய இலக்குகள் என்பவை உண்மையில் தன்னலமற்றவை என்பதை நீ உணர்ந்து கொள்ள வேண்டும். நீ சாப்பிடுவது தான் இலக்கு என்றால், மகிழ்ச்சி தான். உன் குடும்பத்திலுள்ளவர்கள் எல்லோரும் சாப்பிட வேண்டுமென்பது உன் இலக்கென்றால், அது இன்னும் மகிழ்ச்சி தரக்கூடிய இலக்காகும். ஆனால் அதுவே இந்த உலகமே சாப்பிடவேண்டும் என்று மாறும் போது, பேரின்பமும் பெரும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய பெரும் இலக்காக மாறுகிறது என்பதைப் புரிந்து கொள். அது நிறைவேறும் அல்லது நிறைவேறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். ஆனால் அந்த இலக்கில் நீ பயணிக்கிறாய் என்பதே உனக்கு வாய்த்த பெரும் பேறாகும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சியையும் பொருளையும் பிரித்துப் பார்க்கும் நுட்பம் வேண்டும். சில மனிதர்களுக்குக் கடவுள் கூட இலக்கு தான்.

வாழ்க்கை பற்றிய கேள்விக்கு மிர்சாத் தரும் பதில் தான் உலகத்திலேயே நேர்மையான பதிலாக இருக்க முடியும்

கேள்வி – வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் மிர்சாத்? பதில் – வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு மைதானமல்ல, போர்க்களமல்ல என்பதைப் புரிந்து கொள் அசேரா. வாழ்வின் இறுதி என்பதை வெற்றியாகக் கொண்டால், இறப்பைத்தான் வெற்றி என்று சொல்ல முடியும்.. உண்மையில் வாழ்விற்கு எந்த அர்த்தமும் இல்லை. நாமாக வைத்துக் கொள்வது தான் அர்த்தம். உண்மையில் வாழ்வின் நிறைவு செயல்களிலும், அதற்கு ஆற்றல் தரும் சிந்தனைகளிலும் தான் ஒளிந்திருக்கிறது. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே.“

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம் தான். இப்படியே சொல்லிக் கொண்டே போனால், இந்தப் புத்தகத்தின் அத்தனை கேள்வி பதில்களையுமே இங்கே தர வேண்டியதிருக்குமென்று நினைக்கிறேன்.

இது போல தான் இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள பத்துத் திறவுகோல்களையும் நாம் ஞானத்தின் திறவுகோலாகத்தான் பார்க்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் தத்துவத்தின் சாரத்திலிருந்து தன்னம்பிக்கை தரும் ஊக்க உரைக்குத் தாவி விடக்கூடிய தலைப்புகள் அத்தனையும். அதைத் தத்துவத்தின் பார்வையிலிருந்து துளி விலகாமல் கொண்டு சென்றிருப்பது தான் தோழர் உமர் அவர்களின் சிறப்பு என்று சொல்ல வேண்டும். உதாரணமாகத் திறவுகோல் பகுதியில் முதல் திறவுகோல் வினைக் கோட்பாடு என்பதாகும். அதன் சாரம் இது தான்.

1 எதையும் ஏற்றுக் கொள்ளாதே ...... “இந்த உலகம் வினையாலும் எதிர் வினையாலும் ஆக்கப்பட்டிருக்கிறது. உன் வேலை வினையாற்றுவது மட்டும் தான். எதிர்வினையாற்றுவதல்ல. கவனமாக இருக்க வேண்டுமென்பது எதிர் வினை. அது தானே நிகழ வேண்டிய ஒன்றாகும். அது தானே நிகழ வேண்டுமென்றால் அதனுடைய நேர் வினையான செயல் செம்மையாக இருக்க வேண்டுமென்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.’ அது போலவே இரண்டாவது திறவுகோலும் அதன் சாரமும் ஒவ்வொரு மனிதரும் எந்தப் பாகுபாடுமின்றிப் படித்து நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டிய தத்துவமாகும்.

  1. எதிர் நிலைக் கோட்பாடு (முரணைப் புரிந்து கொள்) இதன் சாரம் இவ்விதம் சொல்லப்படுகிறது.

“நீ வாழ்கிற பூமி ஆகாயத்தில் எப்படித் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று பார். தள்ளும் விசை, கொள்ளும் விசை அதாவது ஈர்ப்பு மற்றும் எதிர்ப்பு இரண்டும் சேர்ந்தது தான் வாழ்வு- எதிர் திசையில் நீந்தும் மீன் தான் பருத்து வலுவாகும். எதிர்க் கருத்து உள்ளவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படித்தான் பத்துத் திறவுகோல்களும் மானுடத்திற்குத் தேவையான தத்துவத் திறவுகோல்களாகவே தரப்பட்டுள்ளன.

“நன்றியுணர்வுக் கோட்பாடு, முதன்மைக் கோட்பாடு, பரவல் கோட்பாடு, முன் முடிவின் விதி, மன்னிப்பின் விதி, வாய்ப்புகளின் விதி, தேவையற்றவைகளின் விதி, சுயவளத்தின் விதி“ என இவைகள் அனைத்துமே தனித்தன்மையுடன், அடர்த்தியாக அதே நேரம் மிகவும் எளிமையாக எடுத்துக் கொள்ளத் தக்க விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தேவையற்றவைகளின் விதி என்ற கோட்பாட்டை மட்டும் சொல்லாமல் என்னால் எளிதில் கடந்து போய் விட இயலாது. “சிந்தனை என்பது செயலின் மூலதனம் அதனைத் தேவையற்றவைக்குச் செலவிட்டு உன் ஆற்றலை விரயமாக்கிக் கொள்ளாதே அசேரா.. முடிவினை நோக்கிச் செல்லலாத தொடர் சிந்தனைகள் ஆற்றலை விரயமாக்குகின்றன. இதைப் போலவே, செயல்களே இல்லாத முடிவும் இல்லாத தேவையற்ற சிந்தனைகளும் ஆற்றலையே வீணடிக்கின்றன.”

மிர்சாத்திடம் நீங்கள் வாழ்க்கைக்கான திறவுகோலைத் தருமாறு கேட்டால், அவர் இதைத்தான் உங்களிடம் தருகிறார். “வரலாற்றுத் தொடர்ச்சியுடைய இயல்பான ஆரோக்கியமான மனதுடைய மனிதன் சக மனிதர்களின் துன்பம் கண்டு துயருருகிறான். உன்னுடைய நலத்திற்காகச் செய்யும் செயல் நல்லது. அச் செயலில் பிறர் நலமும் கலந்திருந்தால், அது நல்லதிலும் நல்லது. முற்றிலும் தன்னலமற்றுப் பிறர் நலத்திற்காகச் செய்யும் செயலே சிறந்ததிலும் சிறந்தது“

இந்தச் சிறிய புத்தகத்தில் இறுதி எச்சரிக்கையாக இந்தச் செய்தியைத்தான் வாசகர்களுக்கு மிர்தாத் தருகிறார். இதற்கு மேல் தருவதற்கும் பெறுவதற்கும் எதுவுமில்லை என்ற நிலையில் தான் இந்த இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை “எந்த உணர்ச்சி அதிகமானாலும் ஏற்படும் ஆபத்து மகிழ்ச்சியிலும் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மனதின் உண்மையான உச்சமென்பது நிறைவில் தான் நிறைந்திருக்கிறது.”

இறுதி எச்சரிக்கை “நீங்கள் ஒவ்வொருவரும் இயற்கை எனும் பரிணாமத்தின் தொடர்ச்சியாவீர்கள். ஓரறிவில் தொடங்கி ஆறறிவு வரைக்குமான பயணத்தின் உச்சம் நீங்கள்.. ஒவ்வோர் உயிரணுவும் தனது தலைமுறைகளை உருவாக்கும் போது அதன் வரலாற்றையும் கோட்பாட்டையும் பிரதியெடுத்துப் புதிய அணுக்களுக்குள்ளும் புதைத்து வைக்கின்றன.” என்பதை மறந்து விடாதீர்கள்.

“பகிர்தல் உயிரணுக்களின் குணம். நுரையீரல் பெறும் காற்றை ரத்த அணுக்களோடு பகிர்ந்துகொள்கிறது. ரத்த அணுக்கள் உடல் முழுவதும் பகிர்ந்தளிக்கின்றன. அதனாலேயே உங்கள் உடல் நலமுடன் வாழ்கிறது.“

“இனி மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றும் நோவாவின் புதிய கப்பல்களாக உங்கள் மனங்களே செயல்படும். உயிரணுவின் பகிர்தல் அறத்தை யார் இயல்பாகக் கொள்கிறார்களோ அவர்களே கப்பலில் ஏறிக்கொள்ளும் தகுதி படைத்தவர்கள்.

“கப்பலில் சந்திப்போம் ... காத்திருக்கிறேன் மனிதர்களே“ என்று முடிக்கிறார்...

மிர்சாத் இன்னும் கப்பலில் காத்துக் கொண்டிருக்கிறார். வாசகர்களே நீங்கள் மிர்சாத்தின் இந்த மிகச் சிறிய புத்தகத்தோடு கப்பலுக்குள் சென்று அவர் அருகில் அமர்ந்து கொள்ளுங்கள். ஞானப் பயணம் இனி ஆரம்பமாகட்டும்.

மிர்சாத்தின் சிறிய புத்தகம் (சி. உமர்பாரூக்), டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ். விலை ரூ 250/-

- தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.