(டாக்டர் உ.வே.சாமிநாதையர் நினைவு இல்லம் - உத்தமதானபுரம்)
உ.வே. சாமிநாதையரின் வரலாற்று வழியே நோக்குகின்றபொழுது 1925ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் மற்றவர் எழுதிய, பதிப்பித்த நூலுக்கு அணிந்துரை, வாழ்த்துரை முதலியன எழுதும் வழக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. 1925 முதல் 1941ஆம் ஆண்டு கால இடைவெளியில் அவர் பல நூல்களுக்கு அணிந்துரை, வாழ்த்துரைகள் வழங்கியிருக்கிறார். சாமிநாதையரின் வாழ்க்கை வரலாற்றில், கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றும், பல பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டு முடித்தும் இருந்த காலப்பகுதியாக இக்காலப்பகுதி இருந்தது. சங்க இலக்கியம், சமய இலக்கியம், நாவல், நாடகம் என்று சாமிநாதையர் அணிந்துரை வழங்கிய நூல்வகைகள் அமைந்துகிடக்கின்றன.
சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த இ.வை. அனந்தராமையர் கலித்தொகை நச்சினார்க்கினியர் உரைச் சுவடியை மூன்று பகுதிகளாகப் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். 1925ஆம் ஆண்டு பாலைக்கலி குறிஞ்சிக்கலியை ஒரு பகுதியாகவும், மருதக்கலி முல்லைக்கலியை ஒரு பகுதியாகவும் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். 1931ஆம் ஆண்டு நெய்தற்கலியை மட்டும் மூன்றாம் பகுதியாக அவர் பதிப்பித்து வெளியிட்டு முடித்திருந்தார். சாமிநாதையர் முதல் இரண்டு பகுதிகளுக்கும் கருத்துரை (அபிப்பிராயம்) வழங்கிக் கலித்தொகைப் பதிப்பைப் பாராட்டியிருக்கிறார். இரண்டு கருத்துரைகளும் இரண்டாம் பகுதியில் ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளன.
சாமிநாதையர் எழுதியுள்ள அணிந்துரை, கருத்துரை, வாழ்த்துரைகளைத் திரட்டித் தொகுத்துப் பார்க்கையில் அனந்தராமையரின் கலித்தொகை பதிப்பிற்கு வழங்கிய கருத்துரைதான் முதல் கருத்துரையாகக் காணக் கிடைக்கின்றது. முதல் கருத்துரை வழங்கிய காலத்தில், சாமிநாதையர் சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து வந்திருக்கிறார்.
மயிலாப்பூர் பி. எஸ். உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அனந்தராமையரைத் தமது ஓய்விற்குப் (1919) பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியமர்த்தியவர் சாமிநாதையர். பேராசிரியர் பொறுப்பை ஏற்ற சிறிது காலத்திலேயே கலித்தொகை பதிப்பை அனந்தராமையர் வெளியிட்டிருக்கிறார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.
அனந்தராமையர், பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் முதற்கொண்டு சாமிநாதையரின் நட்பைப் பெற்று, அவரின் பதிப்புப் பணிகளுக்கு அவ்வப்போது உதவி புரிந்து வந்திருக்கிறார். கல்லூரிப் பணியை ஏற்ற பின்னர் முன்னினும் பல வகை உதவிகளைச் சாமிநாதையருக்கு அவர் செய்திருக்கிறார். 1920ஆம் ஆண்டு சாமிநாதையர் பதிப்பித்த சிலப்பதிகார இரண்டாம் பதிப்பிற்கும், 1924இல் வெளிவந்த பெருங்கதை முதல் பதிப்பிற்கும் அவர் உடனிருந்து உதவியிருப்பது சில சான்றுகளாகும்.
பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் தமிழ்மொழிப் புலமைக்கு இணையாக வடமொழிப் புலமையும் பெற்று திகழ்ந்தவர். செட்டியாரின் இருமொழிப் புலமையின் விளைவால் பல வடமொழி நூல்கள் தமிழில் கிடைக்கப் பெற்றன. சுக்கிரநீதி, சுலோசனை, உதயண சரிதம், கௌடில்யம், மண்ணியல் சிறுதேர் என்பன அவர் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து அளித்த நூல்களுள் முக்கியமானவைகளாகும்.
1925ஆம் ஆண்டு கதிரேசச் செட்டியார் வடமொழியில் வழங்கிய உதயணன் கதையை ‘உதயணன் சரிதம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். மேலைச் சிவபுரி சன்மார்க்க சபைவழி வெளிவந்த இந்த வசன நூலுக்குச் சாமிநாதையர் ஒரு முகவுரை எழுதியிருக்கிறார். சாமிநாதையர் பிற நூலுக்கு எழுதிய முகவுரையில் இது முதலாவதாகக் காணக் கிடைக்கின்றது.
சாமிநாதையர், மேலைச் சிவபுரியில் கதிரேசச் செட்டியார் தொடங்கியிருந்த ‘சன்மார்க்க சபை’க்குச் சென்று பல சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார் என்பதை அவரின் வரலாற்றில் பார்க்கமுடிகிறது. சன்மார்க்க சபை ஒருசமயம் கதிரேசச் செட்டியாருக்குப் ‘பண்டிதமணி’ என்னும் பட்டத்தை வழங்க அறிஞர் குழு ஒன்றை அமைத்தது; அக்குழுவிற்கு உ.வே. சாமிநாதையர்தான் தலைமை வகித்திருக்கிறார் என்பது இங்கே நினைத்தற்குரியது.
சாமிநாதையர், கதிரேசச் செட்டியாருடனும் அவர் தொடங்கியிருந்த சன்மார்க்க சபையுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார் என்பதற்கு இருவரின் வரலாற்றிலும் பல சான்றுகள் உள்ளன. 1934, மே, 9, சன்மார்க்க சபையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் சாமிநாதையர் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றியிருக்கிறார். அந்த வெள்ளிவிழா நிகழ்வில் சாமிநாதையருடன் பழமலைப் பெரியசாமி பிள்ளை, நீ. கந்தசாமி பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, வேங்கடாசலம் பிள்ளை ஆகிய அறிஞர் பலரும் உரையாற்றியிருக்கின்றனர். சாமிநாதையர் விழா முடிந்தவுடன் மே, 10, 11 ஆகிய இருநாட்கள் மேலைச்சிவபுரியிலேயே தங்கியிருந்துவிட்டுப் பிறகு சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்.
1929இல் திருச்சி, குளித்தலை தாலுக்கா மருங்காபுரி ஜமின்தாரிணி கி.சு.வி. இலட்சுமி அம்மணி என்பவர் எழுதிய ‘திருக்குறள் தீபாலங்காரம்’ என்ற வசன நூலுக்குச் சாமிநாதையர் ஒரு முகவுரை எழுதியிருக்கிறார். அவற்றுள் திருக்குறளை
திருக்குறளுக்குச் சமானமான நீதி நூல் வேறு இல்லையென்பது ஆன்றோர் கருத்து. அது பலவேறு பாஷைகளிலும் பல பலவாறாக மொழிபெயர்க்கப் பெற்றிருத்தலே அதன் பெருமையை நன்கு தெரிவிக்கும். திருக்குறளையே ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ள செய்யுள் நூல்களும் வசன நூல்களும் பல இக்காலத்தில் வழங்கி வருகின்றன.
என்று எழுதி மகிழ்ந்திருக்கிறார். இந்நூலுக்குச் சாமிநாதையருடன் எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை, கோ. வடிவேலு செட்டியார், த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், பா.வே. மாணிக்கம் நாயக்கர், ச.பவானந்தம் பிள்ளை உள்ளிட்ட 29 பேர் கருத்துரை வழங்கியிருக்கின்றனர்.
1929இல் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமசிவன் பிள்ளை என்பவர் திருக்குறள் பரிமேலழகர் உரையைத் தழுவி ‘திருக்குறட் சாரம்’ என்றொரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். பரமசிவன் பிள்ளை இந்நூலிற்குச் சாமிநாதையரிடம் பெரிதும் விரும்பி அணிந்துரை ஒன்றைப் பெற்றிருக்கிறார். சாமிநாதையர் அந்த அணிந்துரையில்,
திருக்குறளின் வசனமாகப் பல நூல்கள் இக்காலத்தில் வெளிப்போந்து உலாவி வரினும் இப்புத்தகம் ஒரு புதிய அமைப்பைப் பெற்று விளங்குகின்றதென்று சொல்லலாம். ஒவ்வோர் அதிகாரத்தும் உள்ள சிறந்த குறள் ஒன்றை எடுத்துக் காட்டி அதன் பொருளையும் தெளிவாக எழுதி அவ்வதிகாரத்திலுள்ள ஏனைப்பாக்களின் கருத்துக்களையும் தொடர்புபடுத்தி நல்ல நடையிற் செவ்வனே விளக்கி உரிய இடங்களிற் சிறந்த சைவநூற் கருத்துக்களை இதன் ஆசிரியர் பிரமாணங்களாகக் கொடுத்திருப்பது யாவராலும் பாராட்டத்தக்கது. இதனைப் படிப்பவர்கள் திருக்குறளிற் கூறப்பட்ட நீதிகளையும் சிவபக்தி மார்க்கத்தையும் எளிதில் அறிந்து கொள்வார்களென்பது என் கருத்து.’
என்று திருக்குறளை மதிப்பிட்டு நோக்கியிருக்கிறார். சாமிநாதையருடன், சென்னை வேதாந்த சங்கத் தலைவரும் திருக்குறள் தெளிபொருள் விளக்க உரையாசிரியருமாகிய கோ. வடிவேலு செட்டியார், திருக்குறள் விளக்க ஆசிரியர் கி. குப்புசாமி முதலியார், பாலவிநோதினி பத்திரிகையின் ஆசிரியர் வரகவி திரு. அ. சுப்ரமண்ய பாரதி, இந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.ஏ. சுப்ரமண்ய ஐயர் ஆகியோரும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கின்றனர்.
சாமிநாதையர், 1929ஆம் ஆண்டு ச. சோமசுந்தர பாரதியார் எழுதிய ‘திருவள்ளுவர்’ என்ற வசனநூலுக்கு ஒரு மதிப்புரை எழுதி வாழ்த்தியிருக்கிறார். 1929ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11ஆம் தேதி சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் திருவள்ளுவரைப் பற்றி சோமசுந்தர பாரதியார் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமாக இந்நூல் இருந்தது. தமிழில் மட்டுமின்றி ஆங்கில மொழியிலும் ‘திருவள்ளுவர்’ நூல் வெளியிடப் பெற்றிருக்கிறது என்பது அறிந்து கொள்ளத்தக்கது. 1926, ஜனவரி 25ஆம் நாள் மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபக் கிறித்தவர் சங்கம் சார்பில் ‘திருவள்ளுவர்’ ஆராய்ச்சிச் சொற்பொழிவைச் சோமசுந்தர பாரதியார் ஆற்றியிருக்கிறர். 1929இல் வெளிவந்த ‘திருவள்ளுவர்’ நூலை 1934ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
சோமசுந்தர பாரதியார் ‘திருவள்ளுவர்’ என்ற இந்த நூலை எழுதி வெளியிட்ட காலத்தில் வழக்கறிஞர் தொழில் புரிந்துவந்திருக்கிறார். பின்னர் 1933ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அதுமுதல் 1938ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரையில் ஐந்தாண்டு காலம் துறைத் தலைவர் பொறுப்பையும் அவர் வகித்திருக்கிறார். சோமசுந்தர பாரதியார் துறைத் தலைவராக இருந்த காலத்தில் சாமிநாதையர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத்திட்டக்குழுக் கூட்டம் சம்பந்தமாகப் பலமுறை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்குச் சென்று வந்திருக்கிறார்; சோமசுந்தர பாரதியாருடன் நட்பு பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.
சாமிநாதையர், 1936ஆம் ஆண்டு அக்டோபர், 30ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத்திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதாகக் கி.வ. ஜகந்நாதனுடன் சிதம்பரம் புறப்பட்டுச் சென்று அக்டோபர், 31ஆம் தேதி சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற தமிழ்ப் பாடத் திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார் என்பது நினைத்தற்குரியது.
1934, மார்ச் 17, 18ஆம் நாட்களில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 23ஆம் ஆண்டு விழா, சாமிநாதையரின் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. அந்த விழாவில் சோமசுந்தர பாரதியாரும் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். அவருடன் சதாசிவபண்டாரத்தார், வேங்கடாசலம் பிள்ளை, ரா. வாசுதேவசர்மா, பி.ஸ்ரீ. ஆசாரியார் முதலியோரும் உரையாற்றியிருக்கின்றனர். சோமசுந்தர பாரதியார், 1935, மார்ச்சு, 6ஆம் நாள் நடைபெற்ற சாமிநாதையரின் சதாபிஷேக விழாவிற்குப் பாராட்டுக் கட்டுரை ஒன்றை எழுதியும் (கலைமகள், 14-3-1935) தந்திமூலமாக ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பியும் மகிழ்ந்திருக்கிறார். சாமிநாதையர் அன்பர்களின் வரிசையில் சோமசுந்தர பாரதியாருக்கு எப்போதும் தனியிடம் இருந்து வந்திருக்கிறது என்பதற்குப் பல சான்றுகள் காணக் கிடைக்கின்றன.
வ.உ. சிதம்பரம்பிள்ளை கோவை சிறையிலிருந்து வெளிவரும் பொருட்டு அவருக்காக வாதாடியவர் கோவை வழக்கறிஞர் சி.ரி. சுப்பிரமணிய முதலியார் என்பது பலருக்கும் தெரியும். ஆறுமுக நாவலரின் மாணவரான இவர் பெரிய புராணத்திற்கு உரையெழுதி பெருமை பெற்றவர். சைவ சமயம் சார்ந்த பல உரைநடை நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் 1930இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பாகச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ‘சேக்கிழார்’பற்றி மூன்றுநாட்களில் மூன்று சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார்.
1930இல் ஆற்றிய மூன்று சொற்பொழிவுகளையும் சற்று விரிவாக்கம் செய்து 1933இல் ‘சேக்கிழார்’ என்ற தலைப்பில் தனி நூலாக அவர் வெளியிட்டிருக்கிறார். இது சி.ரி. சுப்பிரமணிய முதலியாரின் முதல் நூலாகக் காணக்கிடைக்கின்றது. சாமிநாதையர் இந்த நூலிற்கு மதிப்புரை எழுதி முதலியாரின் பணியைப் பெரிதும் பாராட்டியிருக்கிறார். சுப்பிரமணிய முதலியார் பிற்காலத்தில் பெரியபுராணத்திற்கு ஆகச்சிறந்த உரை எழுத ‘சேக்கிழார்’ என்ற இந்த நூல் காரணமாக இருந்திருக்கிறது. இவரின் பெரியபுராண உரை ஏழு தொகுதிகளாக (1937- 1954) வெளிவந்து பெருமைபெற்றது என்பது வரலாறாகும்.
சி.வை. தாமோதரம் பிள்ளை வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் 1934ஆம் ஆண்டு T. A. Rajarathnam Pillai எழுதிய The life of Rao Bahadur C. W. Thamotharam Pillai என்ற நூலும் ஒன்றாகும். இந்த நூலுக்குச் சாமிநாதையர் முன்னுரை எழுதி தாமோதரம் பிள்ளையின் தமிழ்ப் பணியைப் பெரிதும் பாராட்டியிருக்கிறார். முன்னுரையின் ஓரிடத்தில் தாமோதரம் பிள்ளையைப் பற்றி இவ்வாறு பாராட்டி எழுதியிருக்கிறார் சாமிநாதையர்.
தாமோதரம் பிள்ளையைப்போல் ஆங்கில பாஷையில் விசேஷமான பாண்டித்தியமடைந்து தமிழிலும் நல்ல பயிற்சியைப் பெற்றிருப்போர் இக்காலத்தில் மிகச் சிலரேயாவர். இவருடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். தமது ஓய்வு நேரத்தைத் தமிழாராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், இறையனாரகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை என்பவற்றின் மூலங்களையும் உரைகளையும், திருத்தணிகைப் புராணம், சூளாமணி என்பவற்றின் மூலங்களையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன்முறை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே.
சாமிநாதையர், தாமோதரம் பிள்ளையைப் பற்றித் தாம் பதிப்பித்து வெளியிட்ட சில நூல்களின் முகவுரைகளிலும், என் சரித்திரத்திலும் பலவாறு பாராட்டி எழுதியிருப்பது இங்கே நினைத்தற்குரியன. தாமோதரம் பிள்ளை - சாமிநாதையர் இருவரின் நட்பு தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் தனித்த அடையாளத்தைப் பெற்றவையாகும்.
1935ஆம் ஆண்டில் சேலம் ஜில்லா, நாமக்கல் தாலுகா, சேந்தமங்கலத்தில் தத்தகிரி குகாலயத்தில் எழுந்தருளியிருந்த பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகளவர்களின் சரித்திரம், இவர்களுடைய நல்லுபதேசங்கள் அடங்கிய “ஸ்வயம்ப்ரகாச விஜயம்” என்னும் தமிழ் வசன நூலொன்றை வரகவி அ. சுப்ரமண்ய பாரதி எழுதி வெளியிட்டிருந்தார். இந்த நூலுக்குச் சாமிநாதையர் ஒரு சிறப்புரை எழுதியளித்திருக்கிறார். சாமிநாதையரின் சமயப் பார்வையை வெளிப்படுத்தும் முகமாக இந்தச் சிறப்புரை அமைந்திருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கால்நடை மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த பெருமை வெ.ப. சுப்பிரமணிய முதலியாருக்கு உண்டு. வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றுக் கால்நடை மருத்துவத் துறையில் பல பொறுப்புகளை வகித்த சுப்பிரமணிய முதலியார், தமிழ் இலக்கியத்தில் பேரீடுபாடு கொண்டவர். இந்த ஈடுபாட்டின் காரணமாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவர் கம்பராமாயணத்தில் பெரும் ஈடுபாடு கொண்டு அதனை வசனநடையில் ‘கம்பராமாயண சாரம்’ எனும் தலைப்பில் எழுதி வெளியிட்டு வந்திருக்கிறார்.
1936ஆம் ஆண்டு வெளிவந்த பாலகாண்டத்திலிருந்து தேர்ந்தெடுத்த இனிய கவிகளும் விளக்கவுரையும் கதைத் தொடர்ச்சியும் அடங்கிய “கம்பராமாயண சாரம்: பாலகாண்டம்” நூலிற்குச் சாமிநாதையர் ஒரு முகவுரை எழுதி அளித்திருக்கிறார். அந்த முகவுரையின் ஓரிடத்தில் முதலியாரைப் பற்றி சாமிநாதையர் இப்படிப் பாராட்டி எழுதியிருக்கிறார்.
முதலியாரவர்களை நான் பல வருஷங்களாக அறிவேன். தமிழ்க் காப்பியங்களிலும் பிரபந்தங்களிலும் ஆங்கில நூல்களிலும் இவர்கள் சிறந்த பயிற்சியுள்ளவர்கள். தமிழில் இனிய வசன நூல்களும் அழகிய கவிகளும் இயற்றும் ஆற்றலுடையவர்கள். பழங்காலத்தில் இவர்களுடைய சம்பாஷணைகளினால் எனக்கு உண்டாகும் இன்பம் ஒரு தனி இயல்புடையதாக இருக்கும். தமிழ் நூல்களையும் ஆங்கில நூல்களையும் இடைவிடாமற் படித்துப் படித்து அவற்றிலுள்ள சாரத்தை அறிந்து தெளிவாக்கி இவர்கள் சொல்வதைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும், நூல்களில் பேரார்வமும் சுவை கண்டின்புறும் ஆற்றலும் இவர்களுக்கு மிகவுண்டென்பது நன்றாகப் புலப்படும்.
வெ.ப. சுப்பிரமணிய முதலியாருக்கும் சாமிநாதையருக்கும் நீண்ட நாட்களாக நட்பு நிலவி வந்திருக்கிறது. சுப்பிரமணிய முதலியார் 1890களில் கும்பகோணத்தில் கால்நடை மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார். 1893ஆம் ஆண்டு புறநானூற்றை ஆராய்ந்து அச்சிடும் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் சுப்பிரமணிய முதலியாரைச் சாமிநாதையர் சந்தித்து உரையாடியிருக்கிறார். சுப்பிரமணிய முதலியாரைச் சந்தித்து உரையாடியது குறித்துச் சாமிநாதையர் என் சரித்திரத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.
கும்பகோணத்திற்கு வந்து புறநானூற்று அகராதியை முடித்தேன். அக்காலத்தில் ஸ்ரீமான் ராவ்சாகிப் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அப்பக்கத்தில் மிருக வைத்திய ஸ¨பரிண்டெண்டெண்டாக இருந்தார். அவருடைய பழக்கம் எனக்கு உண்டாயிற்று. அவருடைய தமிழன்பும் கம்பராமாயணப் பற்றும் எங்களுடைய நட்பை வன்மை பெறச் செய்தன. கும்பகோணத்துக்கு அருகில் அவர் முகாம் போடும் பொழுதெல்லாம் அவரைக் கண்டு பேசிச் சல்லாபம் செய்து வருவேன். தாம் இயற்றும் செய்யுட்களை எனக்குச் சொல்லிக் காட்டி வருவார். ஆங்கிலம் படித்துத் தக்க உத்தியோகத்திலிருக்கும் ஒருவருக்குத் தமிழில் அவ்வளவு ஆழ்ந்த அன்பு இருந்தமை முதலில் எனக்கு வியப்பை உண்டாக்கியது (என் சரித்திரம், 2008, ப.731)
1937, ஜூலை, 16இல் நடைபெற்ற வெ.ப. சுப்பிரமணிய முதலியாரின் 80-ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்குச் சாமிநாதையர் தலைமை தாங்கிச் சிறப்பித்திருக்கிறார் என்பதும் இங்கு நினைத்துப் பார்த்தற்குரியது.
1925ஆம் ஆண்டு அறிஞர் அ.கி. பரந்தாமனாருடன் இணைந்து சென்னையில் “தென்னிந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம்” என்ற அமைப்பை நிறுவியவர் பெருந்தகையாளர் சா.த. சற்குணர். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்து விளங்கிய சற்குணர் பன்மொழிப் புலமை பெற்றவராகத் திகழ்ந்திருக்கிறார் என்பதை அவர் வரலாற்றுவழி அறியமுடிகிறது. சற்குணரின் மணிவிழா அவரது மாணவரான அ.கி. பரந்தாமனாரின் முயற்சியால் சென்னையில் 1937ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கிறது. இவ்விழாவிற்குச் சாமிநாதையர்தான் தலைமை தாங்கியிருக்கிறார். அந்த விழாவில் சற்குணரை வாழ்த்திப் பேசியதன் எழுத்துவடிவம் 18.9.1937இல் நவசக்தி இதழில் வெளிவந்திருக்கிறது. சாமிநாதையர் ஆக்கங்களுள் பிறந்தநாள் வாழ்த்துரை வடிவமாகக் கிடைக்கப்பெறுவது இது ஒன்றுமட்டுமேயாகும். இந்த ஆக்கம் 29.10.1937இல் வெளிவந்த “சற்குணர் மலரும் சற்குணீயமும்” என்ற மலரிலும் இடம்பெற்றிருக்கிறது.
1937ஆம் ஆண்டு, வானமாமலை மடம் ஆஸ்தான வித்வான், தென்திருப்பேரை அபிநவ காளமேகம் அபிநவ பிள்ளைப்பெருமாளையங்கார் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீமத் அனந்தகிருஷ்ணையங்கார் இயற்றிய திருப்பேரைக் கலம்பகத்திற்குச் சாமிநாதையர் ஒரு மதிப்புரை வழங்கியிருக்கிறார்.
1936இல் அனந்தகிருஷணையங்கார் இயற்றிய திருவரங்கச் சிலேடை மாலை என்ற நூலை விருதுநகர், நாடார் டவுன் உயர்நிலைப் பள்ளித் தலைமை தமிழாசிரியராக இருந்த இராஜகோட்டியப்ப பிள்ளையவர்கள் எழுதிய குறிப்புரையுடன் சாமிநாதையர் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார் என்பது இங்கு நினைத்தற்குரியது. சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்திலேயே அனந்தகிருஷ்ணையங்கார் சென்று சந்தித்திருக்கிறார் என்பதும் இங்கே நினைத்துப் பார்த்தந்குரியது.
சென்னை, கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்து விளங்கிய வித்துவான் அ. குமரகுருபர ஆதித்தர் எழுதிய ‘சகுந்தலா’ என்னும் நாடக நூலிற்குச் சாமிநாதையர் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். இந்நாடகம் வடமொழியிலுள்ள சாகுந்தலத்தைப் பின்பற்றி எழுதப்பட்டதாக அமைந்திருந்தது. முன்னுரையில் குமரகுருபர ஆதித்தரின் பணியை வெகுவாகப் பாராட்டி வரும் சாமிநாதையர், வசனநடை தமிழில் வளர்ந்து வரும் நிலைகுறித்து இவ்வாறு ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.
தமிழில் பல வகையான நூல்கள் வெளிவர வேண்டுமென்னும் விருப்பம் இக்காலத்தில் மிகுதியாக இருக்கிறது. அவற்றிலும் வசனநடை நூல்களை மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். கதைகள் நாடகங்கள் என்பவை அவற்றுள்ளும் சிறப்பாகப் படிக்கப் பெறுகின்றன. இதனை உணர்ந்தே இந்நாடகத்தை இவர் எழுதி நன்றாக அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கிறாரென்று நினைக்கிறேன்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்ற தேசபக்தரும், தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் தலைவராக இருந்தவருமான மு.யூ, நவாபு சாகிபு மரைக்காயர் அவர்களுடைய பேத்தியாகிய நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்பவர் 2.2.1928இல் ‘காதலா? கடமையா?’ என்றவொரு நாவலை எழுதி வெளியிட்டிருந்தார். இந்த நாவலின் வழியாகத் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமை ஜுனைதா பேகத்திற்கு அமைந்தது. இந்த நாவலுக்குச் சாமிநாதையர் மார்ச்சு, 8, 1938இல் ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறார். சாமிநாதையர் நாவலுக்கு எழுதிய முதல் மதிப்புரை இதுவேயாகும். இந்த மதிப்புரையில் இசுலாமிய பெண் இலக்கிய ஆளுமைகள் குறித்த தன் பார்வையைக் கீழ்வருமாறு அவர் பதிவு செய்திருக்கிறார்.
சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய “காதலா கடமையா” என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களை பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது.
1939இல் அரவிந்தரது வாழ்க்கை வரலாறு, அவரது யோகமுறை, அவருடைய முயற்சிகளால் உலகத்துக்கு உண்டாகும் பயன்கள் குறித்து ‘ஸ்ரீஅரவிந்தரும் அவரது யோகமும்’ என்ற உரைநடை நூலொன்றைப் பி. கோதண்டராமையர் என்பவர் எழுதி வெளியிட்டிருந்தார். கோதண்டராமையர் சாமிநாதையரிடம் ‘நூன்முகம்’ ஒன்றை எழுதிப் பெற்று இந்த நூலில் அமைத்திருக்கிறார். அரவிந்தர் குறித்துச் சாமிநாதையரின் பார்வை இந்த நூன்முகம் வழியாகத் தெரியவருகின்றது. அரவிந்தரைப் போன்ற மகான்களின் தோற்றத்தின் வழியாக ஏற்படும் நன்மைகள் குறித்து இவ்வாறு எழுதியிருக்கிறார் சாமிநாதையர்.
நம் நாட்டில் எந்தக் காலத்தும் மஹான்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். பரம்பொருளின் உண்மையை உணர்ந்து முத்தியை அடையும் சாதனங்களை உயிர்கள் மேற்கொள்ள வேண்டுமென்னும் கருணையினால் அவ்வப்போது பல பெரியோர்கள் தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்தியும் பலருக்கு உபதேசம் செய்து திருவருட்பேறடையச் செய்தும் வருகிறார்கள். அத்தகைய பெரியார்களுடைய சரித்திரம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும் நம்முடைய தலைமையான கடமை இன்னதென்பதை அறிந்து கொள்வதற்கும் தூண்டுகோலாக உதவும்.
கி.வா. ஜகந்நாதையர், 1934ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்து காப்பியங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்திருக்கிறார். இந்த ஆய்வு ‘தமிழ்க் காப்பியங்கள்’ என்ற பெயரில் 1940ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிடப்பெற்றிருக்கிறது. இதற்குச் சாமிநாதையர் ஒரு முன்னுரை எழுதித் தந்திருக்கிறார். பல்கலைக்கழக நிதியுதவியில் கி.வா.ஜ. மேற்கொண்ட மூன்றாண்டுகால ஆராய்ச்சிக்குச் சாமிநாதையர்தான் மேற்பார்வையாளராக இருந்து விளங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக ஆராய்ச்சிக் காலத்தில் சாமிநாதையரின் வழிகாட்டுதல் குறித்து ஓரிடத்தில் கி.வா.ஜ. இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
மாணவனுக்குரிய ஊதியத்தைப் பல்கலைக்கழகத்தில் பெற்றேனேயன்றி என் ஆராய்ச்சி முற்றும் என் ஆசிரியப்பிரான் அவர்களிடமே அமைந்தது. எனக்கு வழிகாட்டும் பேராசிரியராக அவர்கள் இருந்தார்கள். எப்போதுமே அவர்கள் அடிபற்றி ஒழுகினாலும், நான் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணாக்கன் ஆனபோது சம்பிரதாயப்படி ஒரு பேராசிரியரிடம் இருந்து ஆராய்ச்சி செய்ய வேண்டுமாதலால் அந்தப் பொறுப்பை ஸ்ரீமத் ஐயரவர்களே ஏற்றுக் கொண்டார்கள். அந்த மூன்று வருஷங்களும் ஆராய்ந்து தெளிந்து எழுதிய ஆராய்ச்சி என்று இதனைச் சொல்ல இயலாது. ஐயரவர்களுடைய ஆராய்ச்சிக்குரிய ஏவல்களையும் செய்துகொண்டு இதனையும் ஆராய்ந்தேன் (தமிழ்க் காப்பியங்கள், இரண்டாம் பதிப்பின், நூன்முகம்)
முன்னுரையின் ஓரிடத்தில் ‘தமிழ்க் காப்பியங்கள்’ நூல் குறித்துச் சாமிநாதையர் இப்படி மதிப்பிடுகிறார். அவற்றுள் தமிழ்க் காப்பிய ஆய்வு வரலாற்றில் கி.வா.ஜ. அவர்களின் பங்களிப்பு குறித்த மதிப்பீடு வெளிப்படுகிறது.
அவ்வப்போது விஷயங்களைக் கேட்டுவந்த எனக்கு எல்லாவற்றையும் ஒருங்கே இவ்வடிவத்திற் பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. வடமொழி அலங்கார சாஸ்திரங்களிலும் ஆங்கில நூல்களிலும் உள்ள அருமையான விஷயங்கள் இந்நூலில் ஆங்காங்கு ஒப்புமையாகக் காட்டப்பட்டுள்ளன. தொல்காப்பியம், யாப்பருங்கல விருத்தி, வீரசோழியம் முதலிய அநேக நூல்களில் காப்பிய இலக்கணங்களைப் பற்றி ஒவ்வோரிடத்தில் காணப்படும் விஷயங்களையெல்லாம் நன்கு ஆராய்ந்து ஒழுங்குபடுத்தி இக்கட்டுரையில் தொகுத்தமைத்திருப்பது புலவர் பெருமக்களால் மிகவும் பாராட்டத்தக்கது.
கா.ர.கோவிந்தராஜ முதலியாரின் மாணாக்கராக இருந்து விளங்கிய ஆ. வீ. கன்னையநாயுடு அவர்கள் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிப் பெருமை பெற்றவர். இவர் 1941ஆம் ஆண்டு கலிங்கத்துப் பரணிக்குப் பதவுரை, விளக்கவுரை எழுதியமைத்துப் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். சாமிநாதையர் இந்தப் பதிப்பிற்குச் சிறு மதிப்புரை எழுதித் தந்திருக்கிறார். சாமிநாதையர் எழுதிய மதிப்புரையில் மிகச் சிறிய அளவு கொண்டது இது ஒன்று மட்டுமேயாகும்.
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் புலமை பெற்று விளங்கியவர் உ.வே. அண்ணங்கராசாரியர். இவர் பல நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். ‘திவ்யபிரபந்த திவ்யார்த்த தீபிகை’ என்ற பெயரில் ஆழ்வார் பாடல்களுக்கு உரையெழுதி வெளியிட்டப் பெருமை இவருக்கு உண்டு. இவர் வடமொழியில் வழங்கும் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் ‘வால்மீகி ராமாயண வசனம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். 1941ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ராமாயண வசன நூலுக்குச் சாமிநாதையர் ஒரு மதிப்புரை எழுதியளித்திருக்கிறார். மதிப்புரையின் ஓரிடத்தில் வசனநூல் குறித்து இவ்வாறு எழுதியிருக்கிறார்.
சமீபத்தில் காஞ்சீபுரம் உபய வேதாந்த மகாவித்துவான் ஸ்ரீமத் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய ஸ்வாமிகளவர்கள் இவ்வரிய காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். இராமாயணத்தைப் பலவாறு ஆராய்ச்சி செய்திருக்கும் அவர்களுடைய இம்மொழிபெயர்ப்பு எல்லா வகையிலும் மிகச் சிறப்புற்று விளங்குகிறதென்பதை நான் சொல்வது மிகையாகும்.
வடமொழியில் வழங்கும் வால்மீகி இராமாயணத்தை (ஆரணிய காண்டம்) பண்டித நடேச சாஸ்திரியார் 1905ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தும், 1926ஆம் ஆண்டு ஆ. வி. நரஷிம்ஹாசாரியர் வசனநடையாக எழுதியும் வெளியிட்டிருக்கிறார்கள் என்பது இங்கு நினைவுகொள்ளத்தக்கது.
ஆசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், நூலாசிரியர் என்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர் உ.வே.சாமிநாதையர். இவர் பலரின் புதிய உரை, பதிப்பாக்க முயற்சிகளுக்கு ஊக்கமளித்துப் பாராட்டும் நல்லறிஞராகவும் இருந்து விளங்கியிருக்கிறார் என்பதை மேற்கண்ட முகவுரை, மதிப்புரைகள் வழியாக அறியக் கிடக்கின்றன.
துறைசார்ந்த நல்லறிஞர் ஒருவரிடம் வாழ்த்துரை பெற்று, நூலில் அமைத்து வெளியிடும் மரபு தமிழில் உண்டு. சிறப்புப்பாயிரங்களாகவும், சாற்றுக்கவிகளாகவும், அணிந்துரை, வாழ்த்துரை, மதிப்புரை, கருத்துரை என்னும் பல்வேறு வடிவங்களில் அவை அமைந்துகிடக்கின்றன.
நூலின் மதிப்பு வாழ்த்துரை வழங்குபவர்களாலும் சிறந்த இடத்தைப் பெற்று விளங்குவதுண்டு. இந்த மரபை உணர்ந்த பலரும் தாம் எழுதிய நூலிற்குச் சாமிநாதையரிடம் வாழ்த்துரை, கருத்துரை, மதிப்புரை பெற்றிருக்கின்றனர். கல்லூரி ஆசிரியர் பணிக்கிடையில் பெருமைமிகு பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வந்து, ஓய்விற்குப் பின்னர் மேலும் பதிப்பிக்கக் கருதியிருந்த நூல்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பதில் முழுகவனம் செலுத்திவந்த சாமிநாதையர் பிறரின் நன்முயற்சிக்கும் ஊக்கமளித்துப் பாராட்டியிருக்கிறார் என்பதை இந்த அணிந்துரைகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. நூற்றிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டுள்ள சாமிநாதையர், தாம் எழுதிய, பதிப்பித்த எந்தவொரு நூலிற்கும் யாரொருவரிடமும் அணிந்துரை, வாழ்த்துரை, மதிப்புரை பெற்று அமைத்திருக்கவில்லை என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
உ.வே. சாமிநாதையர் வாழ்த்துரை, முன்னுரை, மதிப்புரை, அணிந்துரை அளித்த நூல்களின் விவரம் (கால வரிசை)
கலித்தொகை (பாலை, குறிஞ்சி) மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், இ. வை. அநந்தராமையர் பதிப்பு, நோபில் அச்சுக்கூடம், 1925
கலித்தொகை (மருதம், முல்லை) மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், இ. வை. அநந்தராமையர் பதிப்பு, நோபில் அச்சுக்கூடம், 1925
உதயண சரிதம், மகிபாலன்பட்டி வித்வான்
மு.கதிரேசச் செட்டியார் மொழி பெயர்த்தியற்றியது, மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபையாரால் பதிப்பிக்கப்பெற்றது, பூர்ணாநந்த அச்சுக்கூடம், 2-ஆம் பதிப்பு, 1925
திருக்குறள் தீபாலங்காரம், திரிச்சிறாப்பள்ளி ஜில்லா குளித்தலை தாலுக்கா மருங்காபுரி ஜமின்தாரிணி கி. சு. வி. இலட்சுமி அம்மணி அவர்களால் இயற்றப்பட்டது. சென்னை, சாது அச்சுக்கூடம், 1929
திருவள்ளுவர், இது ச. சோமசுந்தரபாரதியார் எழுதியது, மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, 1929
திருக்குறட்சாரம், திருநெல்வேலி பரமசிவன் பிள்ளை எழுதியது, சென்னை: திரிபுரசுந்தரி அச்சியந்திரசாலை, 1929
சேக்கிழார்: படங்களுடன், ஆசிரியர் கோவை வழக்கறிஞர் சி.ரி. சுப்பிரமணிய முதலியார், சென்னை: சாது அச்சுக்கூடம், 1933
The life of Rao Bahadur C. W. Thamotharam Pillai (in Tamil), by T. A. Rajarathnam Pillai, Madras: N. Muniswamy Mudaliar, 1934
ஸ்வயம்ப்ரகாச விஜயம், வரகவி அ. சுப்ரமண்ய பாரதி எழுதியது, Madras: B. N. Press, 1935
கம்பராமாயண சாரம்: பாலகாண்டம், தேர்ந்தெடுத்த இனிய கவிகளும் விளக்கவுரையும் கதைத் தொடர்ச்சியும் அடங்கியது, ராவ் ஸாஹிப் வெ.பா.சுப்ரமண்ய முதலியார், தமிழ் முகவுரை ஆசிரியர் மஹா மஹோபாத்யா தாஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர், ஆங்கில முகவுரை ஆசிரியர் சுவாமி விபுலானந்தஜி மஹராஜ்; பதிப்பாசிரியர் M.P.S. துரைசாமி முதலியார், திருநெல்வேலி: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1936
ஸ்ரீமான் ச. த. சற்குணர் அறுபதாவது ஆண்டு விழாவிற்கு எழுதிய வாழ்த்துரை, நவ சக்தி, 18.9.1936
ஸ்ரீவானமாமலை மடம் ஆஸ்தான வித்வான், தென்திருப்பேரை அபிநவ காளமேகம் அபிநவ பிள்ளைப்பெருமாளையங்கார் அவர்களியற்றிய திருப்பேரைக் கலம்பகம், மஹாமஹோபாத்யாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் வே. சாமிநாதையர் அவர்கள் மதிப்புரையுடன் கூடியது; நூலாசிரியரின் இளைய சகோதரர் ஸ்ரீ நம்பி ஐயங்கார் அவர்கள் இயற்றிய அரும்பொருள் விளக்கத்துடன் திருநெல்வேலி, அட்வகேட் கி. ழி. மகரபூஷணையங்காரவர்களால் அச்சிடப்பெற்றது, விருதுநகர்: எஸ். பி. பிரஸ், 1937
சகுந்தலா நாடகம், சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூல் தமிழாசிரியர் வித்வான் அ. கு.ஆதித்தர் எழுதியது, Madras: Vidwa Peedam [distributor], 1938
காதலா? கடமையா?, நாகூர் சித்தி ஜுனைதா பேகம், மார்ச்சு, 1938
ஸ்ரீஅரவிந்தரும் அவரது யோகமும், பி. கோதண்டராமன், சென்னை, பி. ஜி. பால் அண்டு கம்பெனி, 1939
தமிழ்க் காப்பியங்கள்: இலக்கணமும் இலக்கியமும், வித்வான் கி.வா. ஜகந்நாதன் எழுதியது, சென்னை: சென்னை ஸர்வகலாசாலை, 1940
கவிச்சக்கரவர்த்தி சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி மூலமும் ஆ.வீ. கன்னைய நாயுடு இயற்றிய உரையும், சென்னை: டெக்கான் அச்சுக்கூடம், 1941
வால்மீகி ராமாயண வசனம், காஞ்சிபுரம் உபய வேதாந்த மஹாவித்வான் ஸ்ரீஜகதாச்சாரிய ஸம்ஹாஸநாதிபதி ஸ்ரீமத் பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரிய ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணத்தை மொழிபெயர்த்தது, 1941.
- முனைவர் இரா.வெங்கடேசன்