2020 நவம்பர் 25 ஆம் தேதி துவங்கிய விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போர் ஓராண்டைத்தாண்டி நீடித்து இந்திய உழைக்கும் மக்களின் வரலாற்றில் ஒரு முத்திரை பதித்து வெற்றி கண்டது. விவசாயிகளின் இந்த வீரம் மிக்க எழுச்சி குறித்துத் தமிழில் எண்ணற்ற கவிதைகள் வெளிவந்து விட்டன. இப்போது முதன் முதலாக அப்போராட்டமும் இந்தியாவின் விவசாயச் சிக்கல்களும் நெருக்கடிகளும் ஒரு நாவலின் பேசுபொருளாக ஆகியிருக்கின்றன.

சிறுகதை எழுத்தாளராகத் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய தோழர் வல்லபாயின் முதல் நாவலான “யுத்தம் என்பது. . ” ஜெயந்த் என்கிற ராணுவ அதிகாரியைக் கதாநாயகனாகக் கொண்டு நகர்கிறது. ராணுவத்திலிருந்து திரும்பி வந்து தன் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபடும் கனவுடன் திட்டத்துடன் இருக்கும் ஒரு கட்டத்தில் நாவல் துவங்குகிறது.

vallabai yutham enbathuஜெயந்த்தின் இணையரான சுமதிக்கு இதுபற்றிக் கேள்விகள் உண்டு. லாபமே இல்லாத, போட்ட முதலைக்கூட எடுக்க முடியாத இந்த விவசாயத்தைத் தன் அப்பா தொடர்வது ஏன் என்கிற கேள்வி அவளுக்கு உண்டு. கௌரவத்துக்காகத்தான் இதைத் தொடர்கிறாரா? இந்தக் கௌரவம் என்பது நில உடமை உறவுகளின் பிரிக்க முடியாத ஜபர்தஸ்தா? அதையே தன் இணையர் ஜெயந்த்தும் நாடுகிறாரே?

அவளுடைய அப்பாவே ஒருநாள் பதில் சொல்கிறார்: “ ஓடிக்கிட்டே இருக்கணும் தாயி. அப்பத்தான் சோறும் தூக்கமும் ரசிக்கும். இல்லேன்னா சீக்காயிரும். நெசம்தான். இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் ஒரு சுகம்தான். உழவை எல்லோரும் சுமையா நெனச்சிட்டா ஊர் முச்சூடும்சோத்துக்கு என்ன பண்ணும் தாயி”

ஜெயந்த்தின் குடும்பம் ஊரில் பெரிய பண்ணையார் குடும்பம் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தில் ஊறிய குடும்பம். ஜெயந்த்தின் பெரியப்பாதான் நடுவூர்ப் பெரிய பண்ணை. பண்ணையில் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர்களின் எல்லாப் பஞ்சாயத்துக்களையும் நடத்தித் தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருக்கிறார். கல்வி கேள்விகளால் ஜனநாயக யுகத்தின் மனிதனாக வளர்ந்திருக்கும் ஜெயந்த் இதை ஏற்க முடியாமல் கேள்வி கேட்கிறான். தாத்தா காலத்தில் இந்த நாற்காலிக்குப் பக்கத்தில் ஒரு பிரம்பும் இருந்தது. தன் காலத்தில் பிரம்பு போய்விட்டது. நாற்காலி மட்டும் மிஞ்சி இருக்கிறது. உன் காலத்தில் இந்த நாற்காலியும் இருக்காது. பதினஞ்சு பேர் வேலை பார்த்த இடத்தில் இப்ப ஒரே ஒரு ட்ராக்டர் மட்டும் நிக்குது. இந்தத்தொழிலாளிகளின் அடுத்த தலைமுறை சேத்துக்கு வராது. வேற வேலைகளுக்குப் போயிரும். என்று தன் பஞ்சாயத்தை நியாயப்படுத்தவும் செய்கிறார். அது முடிவுக்கு வரப்போகிறது என்பதையும் சொல்கிறார்.

காலமாற்றத்தைப் பதிவு செய்கிற நாவலாக இந்நூல் அமைகிறது. இதே போன்ற விவசாயக்குடும்பத்தில் பிறந்த ஜெயந்த்தின் இணையர் சுமதி தான் தன் பாட்டி, அம்மாக்களைப்போல ஒரு ‘சமைத்துப் போடும் மனைவியாக’ வாழ்ந்து முடிந்துபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள். நாவல் முழுக்க அவள் தனக்கான அடையாளத்தைத் தேடுபவளாகவும், ஜெயந்த் அவளுடைய கனவுகளுக்கு ஆதரவாக நிற்பவனாகவும் படைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. சுமதியைப் படிக்க வைக்க பாட்டி நடத்தும் போராட்டம் மனம் கொள்ளத்தக்கதாக விரிகிறது. நாவலின் சுருக்கமான அளவு இப்பெண்களின் மன உலகத்தை விரிவாகப் பேச இடம் தராமல்போனது ஏமாற்றமே.

ஜெயந்த்தின் விவசாயக்க்கனவை முன் வைத்து இந்திய விவசாயம் சதிக்கும் நெருக்கடிகள் அலசப்படுவதும், நீர் மேலாண்மை உள்ளிட்ட சில விவசாய முறைகளின் மாற்றம் குறித்து விவாதிக்கும் இடங்கள் நாவலின் மையமான பகுதியாக அமைகின்றன. உலக அளவில் இஸ்ரேலின் நீர் மேலாண்மை, நைல் நதியைப் பதினேழு நாடுகள் பங்கிட்டுக் கொண்டுள்ள உண்மை போலப் பலவும் விவாதிக்கப்படுகின்றன. அதே சமயம் ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிடுகிற ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடாமல் ஆர்கானிக் ஓடுகளுக்குள் தலையைப் புதைப்பது சரியா என்று நவீன முறைகளுக்கு ஆதரவான குரலையும் எழுப்புகிறார். இந்தப்பகுதி, இன்றைய சூழலில், விமர்சிக்கவும் விவாதிக்கவும் இடம் தருகிறது.

பயிர் வளர்க்கும் அன்றாடப் போராட்டத்தில் நிற்கும் விவசாயிக்கும் எல்லையில் என்றைக்கோ வரப்போகும் எதிரிக்காக விழிப்புடன் காத்திருக்கும் ராணுவ வீரனுக்கும் பணியில் அதிக வித்தியாசமில்லை என உணர்கிறான் ஜெயந்த். ”போர் முனையின் வெற்றிக்கு உத்தரவாதமான ஏர் முனையின் பங்களிப்பு எவ்வளவு அவசியமோ, அதே அளவு வளம் கொழிக்கும் விவசாயத்தின் உத்தரவாதத்திற்கு அமைதியுமான எல்லையுமாய் ஒன்றுக்கொன்று ஒன்றை ஒன்று சார்ந்த விஷயங்கள்தான்” என்கிற புரிதல் அவனுக்கு இருக்கிறது. எனவே, சீருடையைக் கழட்டியபின் வயல்வெளியில் இறங்குவது இயல்பானதாகவே இருக்கும் என நம்புகிறான்.

விவசாயத்தின் மீது நம்பிக்கை வைக்கும் ஒரு கதாபாத்திரத்தைக் கதையின் நாயகனாகப் படைத்து, அவநம்பிக்கை அலையடிக்கும் இந்த நாட்களில் ஒரு நம்பிக்கை விதையைத் தூவுகிறார் நாவலின் ஆசிரியர். டெல்லியில் முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகள் பற்றியும் ஏனென்று கேட்க மறுக்கும் மோடி அரசு பற்றியும் நடுவூர் விவசாயிகள் விவாதிக்கிறார்கள்.

போர்க்களத்தில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சையில் எல்லையில் இருக்கும் ஜெயந்த்தை கவனித்துக் கொள்ள சுமதியும் குழந்தை வசந்த்தும் சென்று இணையும் காட்சிகள் நாவலில் நம்மை நெகிழ வைக்கும் பகுதியாகும்.

நாவலின் துவக்கத்திலிருந்தே போருக்கு எதிரான வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. உறுத்தாமல், நெருடல் இல்லாமல் வாதங்களை வைத்திட நாவலாசிரியர் எடுத்துக் கொண்டுள்ள அக்கறை பாராட்டத்தக்கது. இது போன்ற விவாதத்தைத் தூண்டும் நோக்குடன் எழுதப்படும் படைப்புகள் அழகியலைக் கோட்டை விடுவிட்டுச் சரிந்து போவதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த விபத்து நேராவண்ணம் நாவலை வல்லபாய் கொண்டு சென்றிருக்கிறார்.

சமூக வெளியிலும் யுத்தம் தொடரும் ராணுவ தளபதியாக ஜெயந்த் வெளிப்படுவதோடு நாவல் முடிவது நம்பிக்கை அளிப்பதுடன், வேளாண் சட்டங்களுக்கு எதிராக வீரச்சமர் புரியும் இந்திய விவசாயிகளுக்கு மரியாதைசெய்து ஒரு சல்யூட் அடிப்பதாகவும் அமைகிறது.

- ச. தமிழ்ச்செல்வன்

நாவல் கிடைக்கும் இடம்:

பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
044 24332424

Pin It