கவிதையில் புதிது, பழையது என்று இல்லை என்று கவிஞர் மு.மேத்தா குறிப்பிட்டதாக கவிஞர் வதிலை பிரபா எழுதிய பதிப்புரையுடன் வந்திருக்கும் தொகுப்பு ‘மழையில் நனையும் மனசு.’ கவிதையில் புதிது, பழையது இல்லாதது போல் கவிதை எழுதுபவருக்கும் வயது அளவில்லை. இளம் வயதிலும் எழுதலாம். முதும் வயதிலும் எழுதலாம். முதும் வயதில் கவிதைத் துறைக்கு வருபவர்கள் குறைவு. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் கவிதைப் பணிக்கு வந்திருப்பவர் கவிஞர் பொன். சந்திரன். இந்நூல் அவரின் முதல் தொகுப்பாகவே வந்துள்ளது.

pon chandran bookகவிதை எழுதுபவருக்கு வயதில்லாதது போல் காதல் செய்வதற்கும் வயதில்லை. காதல் என்பது உள்ளம் சார்ந்தது. அன்பின் வெளிப்பாடு.

வாலிபரையெல்லாம்

பைத்தியமாக்கும்

வல்லமை படைத்தது.

வயோதிகரையும்

வாலிபனாக்கும்

வலிமை மிகுந்தது

என்று தெரிவித்து கவிஞர் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்கிறார். வயோதிகர் என்னும் போது ‘ர்’ விகுதியையும் வாலிபன் என்னும் போது ‘ன்’ விகுதியையும் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதல் என்பது கவிதைக்கு புதிதல்ல. சங்க காலத்திலிருந்தே தொடர்கிறது. அகநானூறும் ஒரு சான்று. கவிஞரும் காதல் செய்யக் கூறியுள்ளார். ‘அது நிலாக் காலம்’ கவிதையும் காதல் சார்ந்ததாகவே உள்ளது. காதலைச் சாதி வாழ விடாது என்றும் ‘மீண்டும் சந்திப்போம்’ கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பர். ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வதற்கும் கெட்டவனாக வாழ்வதற்கும் அவன் மனைவியே முக்கிய காரணம். அவ்வாறு அமையவில்லை எனில் அவன் வாழ்வு சீரழிந்து விடும். ‘எது கௌரவம்?’ என்னும் கவிதையில் மனைவியின் பேராசையால் கணவன் கையூட்டு வாங்கி கைது செய்யப்படுவதைக் குறித்து எழுதியுள்ளார். போலி கௌரவத்திற்காக பொய் வாழ்க்கை வாழக் கூடாது என்கிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் தாயே முதல் உறவு. கண் கண்ட தெய்வம். தாய் என்பவள் உதிரம் தந்து உரு தந்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவள். தாய்க்கும் மகனுக்குமான உறவு என்பதே உன்னதமானது. உருக்கமானது. தாயின் கருவறை போல் தரணியில் வேறெங்கும் கிடைக்காது.

ஊண் கொடுத்தாய்

உயிர் கொடுத்தாய்

ஊர் உலகிற்கு

அறிமுகம் செய்து வைத்தாய்.

வயிறு காய்ந்தாலும்

வாய்விட்டு அழுதாலும்

ஊர் கூடி திரிந்தாலும்

உள் மனதைக் குளிர வைப்பாய்

தாயின் பெருமையையும் அருமையையும் பேசிய கவிஞர் மண்ணில் படும் பாடுகளை வைத்து ‘இன்னொரு கருவறை’ தேவை என்கிறார். தாயின் கருவறைக்குள் மீண்டும் கவிஞர் செல்ல விரும்புவதற்கு நாட்டில் நிலவும் அநியாயங்களும் ஒரு காரணம் என்கிறார். அனைவருக்கும் ஓர் ஏக்கத்தை உண்டாக்கியுள்ளார். ஆண்டவன் படைப்பில் அதிசயம் என்று ‘தாய்மை’க்கு வேறொரு கவிதையில் விளக்கம் தந்துள்ளார் கவிஞர். ‘இல்லையிங்க இப்ப நீ...’ கவிதை அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பொதுவானதாகவே உள்ளது. இல்லை என்றாலும் தீபமாய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

‘வளையல்’ கவிதை வித்தியாசமானது. நல்ல முயற்சி. வளையல் குறித்து வளைத்து வளைத்து எழுதியுள்ளார். கவிதையும் வளைய வளைய வருகிறது.

பெண்டிர்க்கு வளையல்

பெருமை சேர்க்கும்

என்னும் வரி கவிஞருக்கு பெருமை சேர்க்கிறது. ஆனால் ஆடவரில் சில பேர் அணிவதுண்டு/ அவருக்கு பெயரோ வேறொன்றும் உண்டு என்பது நெருடலாக உள்ளது. தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அப்படி ஆனது அவர்கள் குற்றமல்ல.

பெண்களைப் பாடியவர்களில் பாரதி முதன்மையானவர் ஆவார். பெண்களைப் போற்றியதுடன் பெண்களைத் தூண்டியும் விட்டவர். பெண்களை நிமிர்ந்து நடக்கச் சொன்னவர். நிலம் பார்த்த பெண்களை நிலா பார்க்க வைத்தவர். அவரின் வழியில் கவிஞரும் ‘பெண்ணியம்’ பேசியுள்ளார்.

நீ யாரென்று

உலகுக்கு உணர்த்த வேண்டும்.

புறப்படு மகளே புறப்படு

புதிய பாதை உன் எதிரில்...

நவீன பாரதியாக பெண்களை புதிய பாதையில் செல்ல அறிவுறுத்தியுள்ளார்.

மழை மண்ணுக்குக் கொடை என்பர். மழையின்றி மண் செழிப்பதில்லை. மனிதர் வாழ வழியில்லை. மழை என்பது தேவையானது என்றாலும் பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்தால்தான் மழைக்கும் மரியாதை. மண்ணுக்கும் சிறப்பு. ஆத்தாவிற்குக் கொள்ளி வைக்கும் போது மழை வந்தால் எப்படிஇருக்கும்?

இப்ப...

மழை பெய்யணுமா வேண்டாமா

மனசே நீ சொல்லு

என்கிறார். மனசிடம் மட்டுமல்ல மற்றவர்களிடமும் வினா எழுப்பியுள்ளார். சிக்கலான கேள்வியே. ஆத்தா உடலும் சாம்பலாக வேண்டும். ஆவணியில் மழை பெய்தாலே விதை விதைக்க முடியும். பதில் சொல்ல எவராலும் முடியாது. மனசுக்குள் நடந்த போராட்டமாகவே ‘மழையும் மனசும்’ கவிதையும் உள்ளது. ‘கோடை மழை’யிலும் குழப்பம் தொடர்கிறது.

‘நரை’ குறித்த கவிதை நன்றாக உள்ளது. நரையைக் காலனின் கடிதம் என்பர். கவிஞர் நரை எவ்வாறெல்லாம் காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். நரையை வைத்து வயதை எடை போடக் கூடாது என்று எச்சரித்துள்ளார். கவிஞரிடம் நரையும் இல்லை. நரை குறித்த கவலையும் இல்லை.

கவிக்கோ அப்துல் ரகுமானிடம் ஒரு மாற்று சிந்தனையைக் காண முடியும். இருட்டை நேசிப்பார். அந்தியை வரவேற்பார். வீழ்ச்சியை வளர்ச்சி என்பார். கவிஞரும் இழப்பதும் சுகமே என்கிறார். இழப்பை சுகம் என்று ஏற்கும் மனம் வாய்ப்பது அரிது. வாசிப்பவரையும் சிந்திக்கச் செய்துள்ளார். ‘மழையில் நனையும் மனசு’ தொகுப்பை வாசிக்கும் கணத்தை இழந்திருப்பதால் அதை சுமையென்று கூற முடியாது.

‘கோபங் கொள்’ போன்ற கவிதைகள் அறிவுரைக்கும் பாணியில் உள்ளது. கவிதை என்பது மறைமுகமாக, அறிவுரைப்பதாக, உணர்த்துவதாக இருக்க வேண்டும். அறிவுரையை எவரும் விரும்புவதில்லை. கவிஞர் அறிவுரையை விரும்புவார் என்று நம்பலாம். ‘நாய்க்குட்டி’ கவிதை குழந்தைப் பாடலாக உள்ளது.

விழுதுகள் மரத்தின் தாடி என்பர். மரம் மண்ணை விசாரிக்க அனுப்பிய தூது என விழுதுகள் குறித்துப் பலரும் எழுதியதுண்டு. கவிஞரின் ‘விழுதுகள்’ வித்தியாசமானவை. வம்சத்தின் வழித் தோன்றல் என்கிறார். விழுதுகளாக கவிதை வரிகள் கவிஞரின் மனத்தில் இருந்து விழுகின்றன என்பதற்குச் சான்றாக உள்ளன தொகுப்பில் பல கவிதைகள்.

பருக்கை, வாழ்க்கை, பந்தயம், ஊர்வலம், விடுதலை என்பது, சந்தம், காடு ஆகிய கவிதைகளும் தொகுப்பில் கவனத்தை ஈர்த்துள்ளன. கவிஞரிடம் கவிதை புனையும் ஆற்றல் அற்புதமாக உள்ளது. கவிதைப் பொருளும் தேவையான ஒன்றாக உள்ளது. வரிகளும் எடுத்தாளும் வண்ணம் உள்ளது. தொன்ம உத்தியைத் தவிர வேறு உத்திகளைக் கவிஞர் கையாளவில்லை. கவிதைகளில் கவியரங்கத் தொனி தூக்கலாக உள்ளது. கவிஞர் தாராள மனம் படைத்தவர் என்பதாக கவிதைகளிலும் ஏராளச் சொற்கள். இதனால் இறுக்கம் குறைவு. ‘மழையில் நனையும் மனசு’ கவிஞரின் முதல் முயற்சி. முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவது முற்போக்குத்தனமல்ல. அடுத்தத் தொகுப்பை ஆவலாக எதிர் பார்க்கச் செய்துள்ளார். கவிதையில் மனதை நனையச் செய்துள்ளார். சற்றே மனம் கனக்கிறது. ‘யார் கவிஞன்’ என்னும் கவிதையில் ஒரு கவிஞன் என்பவன் எப்படி இருப்பான் என்று எழுதி தன்னை ஒரு கவிஞராக முன்னிறுத்தியுள்ளார்.

மழையில் நனையும் மனசு

ஆசிரியர்: பொன்.சந்திரன்

வெளியீடு: ஓவியா பதிப்பகம்

17-16-5A, கே.கே.நகர் வத்தலக் குண்டு 642 202

விலை: ரூ. 70/-

Pin It