மணிமேகலை, கோவலன் - மாதவி இணையரின் மகள். சிலப்பதிகாரத்தில் அறிமுகமாகி மணிமேகலைக் காப்பியத்தில் கதைத் தலைவியாய்ப் பரிணமித்தவள்;. பிறப்பால் கணிகையர் குலத்தில் தோன்றினும் அறஞ்சார்ந்த வாழ்வியலால் காமன் கடந்த வாய்மையளாக உயர்ந்து நின்றவள். மணிமேகலையின் துறவுப் பயணத்தை மையமாகக் கொண்ட தமிழின் ஆகச் சிறந்த காப்பியமே மணிமேகலை ஆகும். இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரண்டு காப்பியங்களில் சிலப்பதிகாரம் வாசிக்கப்பட்ட அளவிற்குத் தமிழ்ச் சமூகத்தால் மணிமேகலை வாசிக்கப்படவில்லை. மணிமேகலை என்ற காப்பிய நாயகியின் வரலாற்றைப் பேசும் நூலாக இக்காப்பியத்தைச் சீத்தலைச் சாத்தனார் உருவாக்கி இருந்தாலும். காப்பியத் தலைவி கதையின் ஊடாகப் பௌத்தத் தத்துவங்களை விவரித்துச் செல்லும் ஒரு புதுமைப் போக்கும் இக்காப்பியத்தில் உண்டு. தத்துவ விளக்கங்களைச் சுபக்கமாகவும் (தம் கொள்கை விளக்கம்) தத்துவ விவாதங்களைப் பரபக்கமாகவும் (பிறர் கொள்கை மறுப்பு) ஆசிரியர் அமைத்துள்ள முறைமையினால் இக்காப்பியம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது.
சிலப்பதிகாரம் புகார், மதுரை, வஞ்சி எனும் தமிழகத்தின் அன்றைய மூன்று முக்கிய நகரங்களைக் கதைக் களனாகக் கொண்டதோடு சேரன் செங்குட்டுவன் படையெடுப்பின் ஊடாக வட இந்தியப் பகுதிகளையும் இணைத்துக் கொண்டு பரந்த இந்தியக் கதையாகச் சொல்லப்பட்டது. ஆனால் மணிமேகலைக் காப்பியமோ புகார், வஞ்சி, காஞ்சி நகரங்களுக்குள் இயங்கினாலும் மணிமேகலா தெய்வத்தின் துணையோடு கதைக் களங்கள் மணிபல்லவம், சாவகம் முதலான பகுதிகளுக்கும் விரிவுபட்டுத் தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் கதையாகச் சிறப்பு பெறுகின்றது.
மணிமேகலைக் காப்பியத்தின் மீது எப்பொழுதுமே எனக்குத் தனிஈர்ப்பு உண்டு. அதற்குக் காரணம் காப்பிய ஆசிரியர் சாத்தனார் மையக் கதையின் ஊடாக விவரிக்கும் துணைக் கதைகளின் விவரணைகளே ஆகும். கதைக்குள் கதைகளாக சாத்தனார் விவரிக்கும் பதினாறு துணைக் கதைகளும் காப்பியக் கட்டுமானத்தைச் சிதைக்காமல் காப்பிய ஆசிரியனின் வைதீகத்திற்கு எதிரான சமய அரசியலை மிக நுட்பமாகப் பதிவு செய்கிறது. சான்றாக ஆபுத்திரன் கதையை இங்கே குறிப்பிடலாம்.
அனைத்து உயிர்களும் பசியற்று உயிர் வாழ்தல் வேண்டும் என்ற மாபெரும் இலட்சியத்தின் ஒளியாக மணிமேகலை திகழ்கிறாள். உலகக் காப்பியங்களில் எத்தனை எத்தனையோ இயற்கை இகந்த கற்பனைகள் உண்டு, அதிசயங்கள் உண்டு மாய மந்திரங்கள் உண்டு ஆனால் அவற்றுள் எதுவும் சாத்தனார் படைத்த அமுதசுரபிக்கு நிகராகாது. பசியற்ற உலகைக் கனவுகண்ட சாத்தனாரின் அற்புதக் கண்டுபிடிப்பு அமுதசுரபி.
மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார் ஒரு புரட்சிப்பெண்ணாகவே படைத்திருக்கிறார். தந்தைவழிச் சமூகம் பெண்களுக்குப் பூட்டியிருந்த காதல், கற்பு, திருமணம் முதலான அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து அறிவுத் தளத்தில் காப்பியத் தலைவியைப் பீடுநடை போட வைத்திருக்கின்றார். மணிமேகலைக் காப்பியத்தின் இத்தகு செய்ந்நேர்த்திகளே என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன.
கௌதம புத்தர் தோன்றிச் சுமார் 700 ஆண்டுகளுக்குப்பின் மணிமேகலைக் காப்பியம் தோன்றியது. புத்தர் காலத்தில் புத்தர் மட்டுமல்லாது மகாவீரர் (சமணம்), மற்கலி (ஆசீவகம்) முதலான சிந்தனையாளர்கள் வைதீகத்திற்கு எதிராக மிகப்பெரும் விவாதங்களைத் தொடங்கி வைத்தனர். மணிமேகலையும் தன் காலத்தில் இந்திய வைதீக, அவைதீகச் சமயத் தத்துவங்களுக்கு எதிரான விசாரணைகளைத் தொடங்கி வைக்கிறாள், விவாதிக்கிறாள், வெற்றிக்கொடி நாட்டுகிறாள். காப்பியம் அப்படித்தான் நிறைவு பெறுகிறது.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் புதுச்சேரிக் கவிஞர் வை.இராமதாசு காந்தி அவர்களும் மணிமேகலைக் காப்பியத்தை மறுஆக்கம் செய்வதன் மூலமாக மீண்டும் மணிமேகலையின் தேவையைத் தமிழ்ச் சமூகம் உணரச் செய்கிறார். இப்பொழுதும் வைதீகத்திற்கு எதிரான விசாரணைகள் தேவைப்படுகின்றன. என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவரின் நோக்கம் வேறொன்றாகக் கூட இருக்கலாம். அவர் பெரிதும் மதித்துப் போற்றும் ,அருட்பிரகாச வள்ளலாரின் சீவகாருண்ய ஒழுக்கத்தின் வித்தாக மணிமேகலையை அடையாளப்படுத்தும் முயற்சியாகக் கூட இப்படைப்பை உருவாகி இருக்கலாம். எப்படி இருந்தாலும் மணிமேகலை இன்றைக்கும் - சமகாலத்திற்கும் பெரிதும் தேவைப்படுகிறாள்.
கவிஞர் வை. இராமதாசு காந்தி ஒரு மரபுக் கவிஞர். ஆசுகவி போல் கவிதைகளை எழுதக்கூடியவர். இலக்கிய இயக்கமாகவே தமது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் பல்வேறு கவிஞர்களோடும், இலக்கிய வாணர்களோடும் இணைந்து இயங்கிக் கொண்டிருக்கக் கூடியவர். சமரச சுத்த சன்மார்க்கப் பணிகளில் உள்ளம் தோய்ந்தவர். வடலூர் சன்மார்க்கத் தலைமைச் சங்கத்தின் துணைத் தலைவராகவும், புதுச்சேரி, அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் துணைச் செயலாராகவும் பணியாற்றி வருபவர். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுச்சேரிக் கிளையின் துணைத் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். பல்வேறு இலக்கிய, ஆன்மீக அமைப்புகள் வழங்கிய விருதுகள் பலவற்றுக்குச் சொந்தக்காரர். பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ள பெருமையும் அவருக்குண்டு. 'ஞானச்சுடர் மணிமேகலை' என்ற இந்நூலுக்கு முன்பாக சிலப்பதிகாரக் காப்பியத்தை முழுமையாக விருத்தப் பாக்களில் இயற்றி அளித்துள்ளார். அந்நூல் தமிழ் அறிஞர்கள் பலரின் பாராட்டுதல்களைப் பெற்று நூலாசிரியருக்குப் பெருமை சேர்த்துள்ளது.
கவிஞர் இராமதாசு காந்தி மணிமேகலைக் காப்பியத்தை 'ஞானச்சுடர் மணிமேகலை' என்னும் பெயரில் மறுஆக்கம் செய்த நூலே இப்பொழுது உங்கள் கைகளில் தவழ்கின்றது. இதற்கு முன்பாக எனக்குத் தெரிந்தவரையில் மணிமேகலைக் காப்பியத்தைப் பாவேந்தர் பாரதிதாசன் மணிமேகலை வெண்பா என்ற பெயரில் காவியமாகவும், கவிஞர் கோ.மா.கோதண்டம் மணிமேகலை நாடகம் என்ற பெயரில் நாடகமாகவும், மணிமேகலை என்ற பெயரிலேயே புதுக்கவிதைக் காவியமாகவும் மறுஆக்கம் செய்துள்ளனர். மணிமேகலைக் காப்பியத்தை மறுஆக்கம் செய்வது அத்துணை எளிதான செயலன்று. மணிமேகலைக் காப்பியம் ஒரு இலக்கிய நூல் மட்டுமன்று. ஒரு தத்துவ நூலும் கூட. இந்தியத் தத்துவ ஞானத்தின் அடிப்படைகளை அறிந்தவர்களால் மட்டுமே இது சாத்தியமாகும். இராமதாசு காந்தி அரிதின் முயன்று இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்த முயற்சிக்காகவே அவர் பாராட்டப்பட வேண்டியவர். “கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது" என்பார் திருவள்ளுவர். நூலாசிரியர் யானை எய்த வேட்டையில் வெற்றியும் பெற்றுள்ளார்.
நூலாசிரியர் இராமதாசு காந்தி முப்பது காதைகளில் அமைந்த மூல நூலாகிய மணிமேகலைக் காப்பியத்தின் 4758 அகவல் அடிகளையும் 234 விருத்தங்களில் சுருக்கமாகக் காப்பியப் படுத்தியுள்ளார். சுருக்கத்தின் காரணமாகப் பல இடங்களில் இவரின் கவிதைகள் ”சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்ற உத்தியைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனாலும் காப்பியத்தின் கதைக் கதைக்களங்களும் கவிதை அழகுகளும் முழுமையாக அப்படியே இப்படைப்பிலும் இடம்பிடித்துள்ளமை கண்கூடு.
ஆசிரியப் பாக்களில் சீத்தலைச் சாத்தனார் படைத்தளித்த மூலநூலின் கவிதைகளை ஆழ்ந்து கற்றுணர்ந்து கதைப்போக்கிலும் கவிதையழகிலும் முழுமையாக ஈடுபட்டுக் காப்பியத்தின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கவிதைகளைப் படைத்து மணிமேகலைக்குப் புதுவடிவம் கொடுத்துள்ளார் இராமதாசு காந்தி. சொல்லழகும் பொருளழகும் மிளரக் கவிதைகள் படைப்பதில் தனிச்சிறப்பு வாய்ந்தவராக நூலாசிரியர் பக்கங்கள் தோறும் மிளிர்கிறார்.
புகழ்பெற்ற மணிமேகலைக் காப்பியத்தின் மறுஆக்கம் என்பதாலும் தத்துவ விசாரணைகளைக் கொண்ட நூல் என்பதாலும் கவிஞர் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடுதான் கவிதைகளை யாத்துள்ளார். குன்றக்கூறலோ, மிகைபடக் கூறலோ வந்துவிடக் கூடாது என்பதிலும் மற்றொன்று விரித்தல் என்ற பிழை நேர்ந்துவிடக் கூடாது என்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார் கவிஞர் இராமதாசு காந்தியின் கவிதை அழகுக்கு நூலின் பக்கங்கள் தோறும் சான்றுகள் உண்டெனினும் ஒரு சோற்றுப் பதமாக மலர்வனம் புக்க காதையில், கல்லாக் களிமகன் ஒருவன் சமணத் துறவிகளை வழிமறித்துக் கள் உண்ணுமாறு வேண்டுகோள் விடுக்கும் பகுதியை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மணிமேகலைக் காப்பியம்
வந்தீர் அடிகள்!நும் மலர்அடி தொழுதேன்
எம்தம் அடிகள்! எம்உரை கேண்மோ
அழுக்குஉடை யாக்கையில் புகுந்த நும்உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும்
தன்வயின் தரூஉம்என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின்
விளைபூந் தேறலில் மெய்த்தவத் தீரே!
உண்டு தெளிந்துஇவ் யோகத்து உறுபயன்
கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம்என
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
'உண்ம்'என இரக்கும்ஓர் களிமகன் பின்னரும் - சீத்தலைச் சாத்தனார்
விளக்கம் - வீதியில் வந்துகொண்டிருந்த சமணத்துறவியை ஒரு கள்ளுண்ட மனிதன் எதிர்கொண்டான். எள்ளல் குறிப்புடன், அடிகளே, வாருங்கள். என்னுடைய வணக்கங்கள். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். ‘இந்த உயிர் உடலில் புகுந்து எத்தனை அவதிப்படுகிறது? அப்படிப்பட்ட உயிர் புழுக்கமான அறையில் அடைபட்டு அவதிப்படாத வண்ணம் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் மேலான இன்பத்தையும், பிறப்பற்ற முக்தி நிலையினையும் தரவல்லது இந்தக் கலயத்தில் இருக்கும் கள், என்று என்னுடைய தலைவன் ஒருவன் கூறினான். தென்னம் பாளையின் மடலைக் கீறியதால் சொட்டும் இந்தத் தேறலைப் பருகுவதால் கொலைப்பாதகம் வந்துசேருமா, என்ன? நீங்கள் சொல்லுங்கள், அரிய தவமுடைய சான்றோரே! இந்தக் கலயத்திலுள்ள கள்ளைப் பருகி, உண்மையைக் கண்டு, எனக்கு உரையுங்கள். நான் சொல்வது தவறென்றால் என்னையும், கள்ளையும் புறந்தள்ளுங்கள். இந்தாருங்கள், குடியுங்கள்.! என்று அந்தக் குடிகாரன் சமணத் துறவியை வழிமறித்தான்.
ஞானச்சுடர் மணிமேகலை
குடிவெறியில் திளைத்தவொரு மனிதன் வந்தான்
கோதின்றிச் செல்பவனைத் தடுத்தே நின்றான்
அடிகள்போற் றிநின்றான் அடிகாள் என்றான்
அணிசேர்ந்த நல்லுயிரும் அழுக்காம் தேகம்
விடிவில்லாப் புழுக்கத்தில் கிடக்கும் போக்கு
வீணான ஓர்நிலையும் அறிவீர் நீயும்
நெடிதான தென்னைவளர் பாலு முண்டு
நின்னுடைய நோன்பதனை முடிப்பீர் என்றான் - இராமதாசு காந்தி
மூலநூலாகிய மணிமேகலைக் காப்பியத்தின் கருத்தோட்டத்திற்கும் சொல்லழகு பொருளழகிற்கும் ஊறு நேராவண்ணம் அதனினும் சுருக்கமாகக் கவிஞர் மறுஆக்கம் செய்துள்ள முறைமையை இரண்டு பகுதிகளையும் ஒப்பிட்டுப்பார்த்து உணர்ந்து கொள்வீர்.
மணிமேகலைக் காப்பியத்தை மறுஆக்கம் செய்வதில் சவாலான பகுதிகள் சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை என்ற இரண்டு காதைகளும்தாம். கவிஞர் இராமதாசு காந்தியின் ஞானச்சுடர் மணிமேகலை என்ற இந்நூலை மிகுந்த ஆர்வத்தோடு வாசித்துக் கொண்டே வருகையில் அந்த இரண்டு காதைகளையும் வாசிக்கையில் என்னுடைய வாசிப்பின் வேகம் குறைந்தது. கவிதைகளை எழுத்தெண்ணி வாசிக்கலானேன். மயிலம் தமிழ்க் கல்லூரியில் படித்த சமய சாத்திர வகுப்புகளும் பேராசிரியர் க.நாராயணன் அவர்களின் அளவையியல் பேருரைகளும் நினைவுக்கு வந்தன. இந்தியத் தத்துவ ஞானம் என்ற பெருங்கடலை நூலாசிரியர் வெற்றிகரமாக் கடந்துவிட்டார் என நிறைவடைந்தேன். இதுவே நூலாசிரியருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
கவிஞர் இராமதாசு காந்தி எளிய சொற்களிலும் எளிய நடையிலும், அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய இக்காலத் தமிழ்நடையில் அனைத்து மக்களுக்கும் நன்கு விளங்கும்படியான காவியம் ஒன்றனைச் செய்து தந்துள்ளார். தமிழுலகம் கவிஞரின் தமிழ்ப்பணியினை என்றென்றும் போற்றிப் பாராட்டி மகிழும் என நான் நம்புகிறேன்.
- முனைவர் நா.இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி