ஒரு நூற்றாண்டு சரித்திரம் கொண்டது சிறுகதைக்களம். சொன்னதற்கு அப்பாலும் ஏதோ இருக்கிறதென்பதை வாசகர்களுக்குக் கடத்தும் வல்லமையோடு வாழ்க்கையை இயல்போடும் நுட்பமும் செறிவுமாக சிறுகதை இலக்கியத்துக்கான மரபை ஏற்படுத்தித் தந்தார்கள் தொடக்க கால எழுத்தாளர்கள். காலம் என்பது இலக்கியத்தில் எல்லாக் காலமும்தான். இந்தத் தொகுப்பில் 1930களில் பிறந்த பல எழுத்தாளர்கள் 40களில் பிறந்தவர்கள் என அவர்களின் எழுத்தையும் அதன்வழி வாழ்வின் அந்தந்த காலகட்டத்துக்கான உருவையும் தாங்கி வந்துள்ளதைக் காணமுடிகிறது. 

naveena tamil sirukadhaikalஅந்த வகையில் சா.கந்தசாமி தொகுத்து வழங்கியுள்ள "நவீன தமிழ்ச் சிறுகதைகள்" தொகுப்பில் 35 எழுத்தாளர்களின் 35 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார். 1960 லிருந்து 1995 வரை வெளியான சிறுகதைகள் எனும்போதே படிப்படியாக அவற்றின் காலகட்டத்தின் மொழிநடையும் வாழ்வியலும் உணர முடியும்...

இதில் இந்தக் கதைகளை மீச்சிறு சுருக்கமாய்த் தந்திருக்கிறேன். கதாசிரியர்களின் சொல்லாடலையோ கதாசிரியர்கள் எடுத்தாண்ட விதத்தை அலசும் வித்தையோ அறியேன். இத்தனை கதைகளா? இத்தனை பெரிய்ய புத்தகமா என வாசிக்க மலைக்கும் அன்பர்களுக்காக ஓரிரு வரிகளில் சொல்லி வாசிக்க வசப்படுத்த எடுத்த எனது சிறு முயற்சி.

இனி கதைகள் பற்றி......

 1. அப்பாவிடம் என்ன சொல்வது? - அசோகமித்திரன்

வறுமை காரணமாய் பெங்களூரிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயிலேறும் பாட்டியை ரயிலேற்றிவிட தனியாக வந்த பேத்தி... பாசமும் தனியாக வீடு திரும்ப வேண்டிய பதைப்புமான கதைநகர்வில் ரயில் கிளம்பிய பின் பிளாட்பாரத்துக்கு வெளியே தகப்பனின் , 'பாட்டி போயாச்சா?' குரலுக்குப் பின்பான வரிகளின் வலியைப் படித்துணருங்கள்.....

 1. சீசர் - ஜெயகாந்தன்

சீதாராமய்யர்..."எவன் தன் பெண்டாட்டியை நம்பறானோ அவனாலேதான் ஊர்ல இருக்கறவன் பெண்டாட்டியையும் நம்ப முடியும், அவனவன் அவனவன் பெண்டாட்டியை நம்பினால் போறும்" என்பார்.

சீசரின் மனைவி சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவள் சீதாராமய்யர் சீசர்தான் என்பதே கதையின் உயிர்ப்பு....புரிந்திருக்குமே....

 1. ஒரு நாள் - நகுலன்

பரமஹம்ஸரிடம் மூன்றாண்டுகளாக கற்றும் கிடைக்கப்பெறாத பாடத்தை தோதாபுரி (மகான் தோதாபுரியல்ல)க்கு சாதாரண லோகாயத கோடீஸ்வரர் ராய் மஹாசயர் மூன்றே மணி நேரத்தில் கற்றுக்கொடுத்த லாவகம்....அற்புதம். சமயத்தில் இப்படித்தான் யார்யாரோ போகிற போக்கில் கற்பித்துத் தொலைத்து விடுகிறார்கள் (இந்த வார்த்தைப் பிரயோகம் ஏனெனக் கதை படித்தால் தெரியும்).

 1. ஜன்னல் - சுஜாதா

வங்கியில் காம்ப்ட்டா மீட்டர் எனும் கூட்டல் எந்திரத்தைக் கையாண்டு தினந்தோறும் எண்களோடு வாழும் திருமணமாகிப் பத்தாண்டுகளாகியும் குழந்தையில்லாத ஒருவனின் தற்கொலை எண்ணம் தலைதூக்கும் பிரச்சனையை வங்கியின் ஜன்னல் வழிக் கண்ட மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் பேசித்தீர்க்க வந்த கதை....தீர்வது எது என சுஜாதா வின் வார்த்தை ஜாலமே ஜன்னல்...

 1. பக்கத்தில் வந்த அப்பா - சுந்தர ராமசாமி

அன்றைய அப்பாக்களின் அதட்டல் உருட்டலோடு கூடிய பாங்கை கதைசொல்லியான ஆசிரியர் தானே சிறுபிள்ளையாய் நாயகனாய், பெருங்குடும்பஸ்தரான ராஜூ பெரியப்பாவின் மரணச் செய்தியை தொலைபேசிகள் பிரபலமாகாத காலத்தில் தொலைபேசி நிலையத்திற்குச் சென்று தன் அப்பாவின் சார்பாய் பேசி அவரது ஆசுவாசத்துக்கு ஆளாகிப் போன கதையை உடன்பிறந்த சகோதரி ரமணியிடம் பிரஸ்தாபிக்கிறான். சகஜ நிலைக்குத் திரும்பிய அப்பா பழைய அப்பாவாகவும், ரமணியின் வழக்கமான சீண்டலும் தொடர அடுத்த பெரியப்பாவின் மரணச் செய்திக்காய் காத்திருக்கும் சிறுவனாய் ....

 1. கடிகாரம் - நீல. பத்மநாபன்

தனக்குள்ளான வாதையை இருந்தும் இல்லையென்று உரைத்திடும் மருத்துவப் பரிசோதனையின் ஊடாக ஓடாத கடிகாரத்தின் வாயிலாக தனக்குள்ளான மனப்பிறழ்வை நமக்குக் கடத்தும் போதே கடைசி வரிகள் உணர்த்தும் செய்தியின் கனம் அழுத்தம்.

 1. தீராக்குறை - ஜி. நாகராஜன்

மூன்று ஆணும் ரெண்டு பெண்ணுமாக கடைக்குட்டிக்குத் திருமணமாகாத நிலையில் சோறு தண்ணி இறங்காத கடைசிமூச்சுக்காய் காத்திருந்த சோமுப்பிள்ளையின் தீராக்குறை தன் மனைவி பார்வதியை நிராதரவாய் விட்டுச் செல்வதென்பதே கதை. ஆனாலும் பெண்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாய் நினைக்காது செய்ததெல்லாம் தன் பொருட்டு தானே என சாதாணமாக கடந்து செல்பவர்களே...பார்வதியும் இவ்வாறே..

 1. காவல் - . மாதவன்

கூர்க்காவின் அதிவீர பராக்கிரமமும் நகைச்சுவையும் கலந்த சுவாரஸ்யக் கதை.

 1. சட்டை - கிருஷ்ணன் நம்பி

நண்பன் ராஜாராமின் திருமணத்திற்கு போட ஒரு சட்டையில்லாத ஏழ்மை நிலையிலுள்ள முத்துச்சாமி, என்றோ தன் தங்கையின் திருமணத்திற்கு அப்பா தைத்துத் தந்த, பிரச்சனையை உண்டாக்கிய, சேராமல் போன சட்டையை மகன் நினைவூட்டி போடவைக்க பசி பட்டினி வறுமையால் துயரத்தால் மெலிந்துவிட்ட முத்துச்சாமிக்கு கச்சிதமாய்ப் பொருந்திப் போக, கல்யாணத்துக்குப் போட சட்டை கிடைத்த மகிழ்ச்சியில் கும்மாளமிடும் மனம் தான் கதை.

 1. அப்பாவின் பள்ளிக்கூடம் - . முத்துச்சாமி

தகப்பனை இழந்த பிள்ளைகள் அவர் பணி செய்த பள்ளியிலேயே படிக்கும் நிலையில் தனது ஆசிரியரே முகம் மறந்து போன தன் தகப்பனின் பூதாகர உருவமாய் உருவகப்படுதலில் மிரண்டு போகிறான் குழந்தை. மரணமும் மரணித்த இடமும் துரத்தும் துயரம்....அப்பாவின் பள்ளிக்கூடம்

 1. பயணம் - வாஸந்தி

"இரும்புன்னா உன் மனசு? ராஜா மாதிரி இருந்த பிள்ளை போய், மாப்பிள்ளை போய் பின்னாலேயே பொண்ணு பேரன் பேத்தி இப்ப கொள்ளுப் பேத்தி எல்லாரும் கிளம்பிப் போறத ஜெரிச்சுண்டு நீ உட்கார்ந்துருக்கியே, நீ மனுஷி தானா?" இது மாமியார் நாகு பாட்டியைப் பார்த்து மருமகள் பார்வதியின் விஷக்குத்தலின் சிறுகுத்து ..... மரணமாகிய பயணம் வராதது பாட்டியின் குற்றமா? இருப்பினும் பயணத்தின் முடிவு பாரம்...

 1. மூன்றாவது பிரார்த்தனை - சா.கந்தசாமி

மகனுக்கு ஒரு ஆண்குழந்தை வேண்டி மகாமகத்துக்கு முதலமைச்சர் வருகையின்போது கும்பகோணம் செல்லும் முருகபூபதி பத்தரின் முடிவு. மாமனார் மருமகள் பாசப்பிணைப்பு கரிசல்காட்டில் வெயிலிறங்கிய பொழுது பெய்யும் சிலீர் மழைகொணரும் குளிர்ச்சி.

 1. அம்பலக்காரர் வீடு - பா. செயப்பிரகாசம்

அம்பலக்காரரின் சாவுக்குப் பின் ஐந்தாண்டு காசியாத்திரை சென்று வந்த மாரியம்மன் கொண்டாடி உடுக்கையோடு சரித்திரத்தின் கடைசிப் பகுதி போலிருந்த மேலவீட்டின் வாசலில் நின்று நீண்டநேரம் அருள்கொண்டு ஆடியபின் மாரியாத்தாளுக்குப் படி கேட்கிறான். அங்கே பெரியம்மணியும் அம்பலக்காரரும் உலவிய முற்றத்தில் நடந்தேறும் கொடிய சம்பவங்களின் திகைப்பில், அவனுக்குக் கிடைத்த சின்ன அம்மணி தந்த காணிக்கையின் வேதனையில் அவன் விட்டுச் செல்லும் யதார்த்தம் நெஞ்சை உலுக்கும் நேர்த்தி....

 1. பலாப்பழம் - வண்ணநிலவன்

பக்கத்து வீட்ல புள்ளதாச்சி இருக்காளேன்ற அதுவும் வறுமைல இருக்காளேன்ற போது ஒரு நாலு சுளை பலாப்பழம் கொடுத்திருக்கக் கூடாதான்னு தோண வைக்கிற லாவகம்.

 1. மீன் - பிரபஞ்சன்

ஒரே விஷயம் எப்போதும் கிடைத்தால் சிலருக்கு சலிப்பேற்படும். அதே போல எப்போதாவது இல்லையென்றாலும் சிலருக்குத் தலையே வெடித்து விடும். கிராமிணிக்கும் ஆனந்தாயிக்குமான மீன் தேவையைப் பூர்த்தி செய்யும் நாணயஸ்தி செம்படச்சி பவுனு பவுனு தான். ஆனந்தாயி கிராமிணியின் பிள்ளை நடராஜன் இவர்களுக்கு நேர்மாறானவன். திருமணமான முதலிரவில் அவன் மனைவியிடம் கேட்கும் முதல் கேள்வியே 'ஒனக்கு மீன் புடிக்குமா?' மீன் ருசிக்கலாம் .

 1. ம்ருத்யு - அம்பை

ம்ருத்யஞ்ச ஹோமம் - "சாவு" அதனை விரட்ட, எதிர்கொள்ள, ஒத்திப்போட, மிச்சமுள்ள வாழ்வை பயமின்றிக் கழிக்க, என்ற அப்பாவுக்கான ஹோமம் பற்றிய சிந்தையில் வாழ்வின் அதியற்புத சாளரங்களைத் தரிசிக்க....ம்ருத்யு.

 1. மைலாப்பூர் - மா. அரங்கநாதன்

ஒரு பேரிடர் காலத்துக்குப் பின்பான மீள்தலில் மிச்சப்பட்ட இரண்டு ஜீவன்களின் உரையாடலும் மீள்வாழ்தலுமாய்....இப்போதைய கொரோனோ காலத்துக்குப் பொருந்திவிடக்கூடாத கற்பனைச் சித்தரிப்பு. 

 1. மன்னி - ஐராவதம்

பணம் ஒன்றே குறிக்கோளாய்ப் போன அண்ணன் நரசிம்மனுக்கு மனைவியான மன்னியோடு பாச்சாவுக்கான உறவு பக்தி பாசம் வேடிக்கையானது மட்டுமே. மச்சினன் மன்னியின் அற்புத உறவை அற்பமாக்க அக்கம் பக்கத்தார் போதாதா? விளைவு பாரதிகண்ட புதுமைப் பெண்ணாகிறாள் மன்னி.

 1. சின்னவாடு - விட்டல்ராவ்

 பால்யகால நண்பன் சின்னவாடுவின் சௌஜன்ய பாஷையில் காதோரம் கிசுகிசுத்த "இப்படி ஸ்பிரிட்சுவல்லே போயிட்டேன்" என்பதான உரையாடலில் தொடங்கி பின் பள்ளி நாட்களை அசை போட்டபடி அவனைப் பார்க்கச் சென்று அவனுக்காய் குற்றேவல்புரியும் தெருமக்களைப் பார்த்துத் திரும்புவதே....சின்னவாடு

 1. வருகை - வண்ணதாசன்

 பக்கா என்கிற பகவதி, குஞ்சு உடன்பயின்ற இந்த இரு பெண்களின் ஸ்நேகம். பக்காவின் மன இயல்பு. அதைச்சொல்லும் பாங்கு. ஒரு பூ கிளையிலிருந்து மெல்லமெல்ல காற்றில் அசைந்தாடி கிளைவிட்டுதிர்ந்து அடுத்தடுத்த கிளைதாண்டி தாழத்தரைதொடும் கணம்வரை அத்தனை நுணுக்க அவதானிப்புதான் வருகையின் நடை.

 1. கிழிசல் - நாஞ்சில்நாடன்

 மாணிக்கத்தின் அப்பா போட்ட நிபந்தனைக்கெல்லாம் ஒத்துக் கொண்டு திருவிழாவிற்குப் போன பிள்ளை எதற்காக ஒரு திருவிழா விடாமல் கச்சேரி கேட்க வருகிறார் எனத் தெரிந்த நொடி இனி இவரோடு திருவிழாவுக்கு வரக்கூடாது எனத் தீர்மானிக்கும் திண்ணம்.

 1. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் - திலகவதி

ஆசையும் லட்சியமுமே தான் ஒரு பெண்ணை இயக்கும் சக்தி என்பதை தவமணி தன் அம்மாவீட்டில் தான் ஆசைப்பட்டு தனது முதல் சம்பளத்தில் வாங்கிய சோபாவின் 20 ஆண்டுக்குப் பின்பான பழுதுநீக்க பளபளப்பிலும் தன் பேத்தி (4-வது தலைமுறை)யின் வார்த்தைகளில் மீண்டும் பூக்கும் நம்பிக்கைப்பூ.

 1. சாசனம் - கந்தர்வன்

மஹாராஜாக்களின் சமஸ்தான காலத்தில் தாத்தாவுக்குப் பட்டயமாக்கப்பட்ட நிலங்கள் இந்தியப் பிரஜையான அப்பா காலத்தைய பதட்டமே சாசனம். படித்தால் புரியும் பாமரஜனங்களின் சாஸ்வத வலி.

 1. சிலிர்ப்புகள் - சி.ஆர். ரவீந்திரன்

குட்டப்பனின் டீக்கடையைச் சுற்றித் திரியும் வேவ்வேறு வகைமைக்குள்ளான தொழில் படிநிலைகள். இவற்றினூடே தண்ணி, பீடி, பொண்ணு என சரமாரியாக அத்தனை கேடுகளுக்கும் ஆளாகிப்போன சம்பு.இவனுக்குப் பொண்ணு தர்றதுக்குக் கெணெத்துல புடிச்சுத் தள்ளலாம் என்கிற அளவுக்கான தரம். எப்படியெப்படியோ வாழ்க்கை நடத்தும் தங்கம்மா இந்த நிழல்கூடப் படியாத அவளது மகளை ஒருநாளுக்கு ஆசைப்படும் சம்புவுக்கு விழும் சவுக்கடி வார்த்தை சிலிர்ப்புகள்.

 1. சிறுமி கொண்டு வந்த மலர் - விமலாதித்த மாமல்லன்

 வட்டிக்கடை சுகன் சந்த் ஜெய்ன். ஒரு சிறுமி அவள் கையிலிருந்த தங்க மலர். அது சுகன் சந்த் கைக்கு கை மாறி சிறுமி பணமும் பெற்றுச் சென்ற பின் தங்கமலர் வெறும் மலராகிப் போகிறது. நொந்துபோன சுகன் சந்த்தின் தொழில் சாமர்த்திய விவரணையை சொல்லும் கதை.

 1. கடிதம் - திலீப்குமார்

கடிதப் போக்குவரத்து அருகிவிட்ட இந்தக் காலத்தில் கடிதம் எழுதிய ஒரு கதையே கதையாக. கன்ஷியாம் மாமாவுக்கு கிட்டு மாமா சார்பாக அவருக்காக தான் எழுதிய கடிதங்களை உருக்கமாகச் சொல்கிறார் கதைசொல்லியாக ஆசிரியர். முதுமையில் மரணத்தை எதிர்நோக்கும் நோய்மையும் நோய்மையற்ற தன்மையுமாக தன் இயலாமையைக் கழிவிரக்கம் கொள்ளச் செய்யும் நடை கடிதத்தில்.

 1. தனுஷ்கோடி - கோணங்கி

 தனுஷ்கோடி பற்றி எத்தனை கதை, எத்தனை கதாசிரியர் எழுதினாலும் அத்தனையும் சோகம் சுமக்கும் கடலும் கரையும். அதிலும் ஆசிரியர் கோணங்கி ...சொல்லவா வேண்டும்?

 1. காலத்தின் ஆவர்த்தனம் - தோப்பில் முகம்மது மீரான்

கல்லூரி இறுதியாண்டு பரீட்சைக்கான 725 ரூபாய் கட்ட வேண்டிய நஜீப்பின் தந்தை கதைநாயகன். நன்றாக வாழ்ந்த காலத்தில் மருமகனுக்கு கல்லூரிப் படிப்புக்கு அவ்வப்போது பணம் கொடுத்து ஒவ்வொரு பெருநாளுக்கும் புத்தாடை வாங்கிக் கொடுத்து வேலையின்றி அலைந்தபோது உதவி புரிந்து பஹ்ரைன் செல்ல NOC க்கு ஏற்பாடு செய்ததெல்லாம் நினைவில் வந்து செல்கிறது. தங்கையைக் கண்ணின் மணியாகப் பார்த்துக் கொண்ட அண்ணனுக்கு அவள் தன் மகனிடம் பேசும் சங்கேத மொழி பேசித் தடை போடும் கண்கள் புதிது. என்ன உலகம் ஏழைக்கு நரகம் தன்னலப் பேய்களுக்குத் தங்கச் சுரங்கம். ..அந்தோ பரிதாபம்...

 1. நாதம் - சுப்ரபாரதி மணியன்

சிரமப்படுத்தும் வாழ்க்கையின் ஊடாக மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி சக்கையாகிப் போன சாந்தி. தனியார் கம்பெனிச் சம்பளம் போதாமையால் ஏதோ எழுதப்படிக்க மட்டுமே தெரிந்த வளமையான உடல்வாகற்றவளுக்கு கூட்டிப் பெருக்கும் வேலையே கிடைக்கிறது. அதுவொரு இசைப்பள்ளி. அதுவே அவளின் கவலைகளை மறக்கச் செய்யும் மாயவித்தையாய் அவளின் முகப்பிரகாசத்திற்கான அடிநாதமாய் இருப்பது அவளது கணவனுக்கு மீச்சிறு பொறாமையையும் ஏற்படுத்துகிறது. 

 1. மரங்களின் கதை - பாவண்ணன்

கண்ணுக்குத் தெரியும் உருவங்கள் தானே மதிப்பிடப்படுகின்றன. மரங்கள் வித்தியாசப் படுகின்றன. இனரீதியாக வகைப்படுத்தப்படுகின்றன. எல்லா உறுப்புகள் ரீதியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. வகைப்படுத்தப்பட்ட மரங்களிலும்கூட ஏற்றஇரக்கம். இந்தத் தோப்பு மரங்கள் உயர்வு. இந்தத் தோப்பு மரங்கள் தாழ்வு. அதிலேயே தோப்பில் சேராத சின்னச் சின்ன மரங்கள். தனிமரங்கள். பகுப்புகள். மரங்களின் ஆற்றல் மலினப்படுவதே இந்தப் பகுப்பால்தான். நஷ்டங்களை ஏனோ மரங்கள் உணர்வதில்லை. சுவாசிக்கக் காற்றும் நிற்க மண்ணும் இருக்கிற ஆறுதலில் எந்த நஷ்டமும் பொருட்படுத்தத் தகாததாக ஆகிவிடுகிறது. 

இந்த வரிகளெல்லாம் வெறும் மரங்களைப் பற்றி மட்டுமா? இல்லையே இதன் மெய்மைப் படிவம்.... எத்தனை ஆழப் பொருந்துகிறது...

 1. நதி - ஜெயமோகன்

 நதி சொல்லும் கதைகள் நதிக்குள் ஒளிந்துள்ள கதைகள் ஏதுமறியாதது போல நதியோடும் ஓட்டத்தில் அதன் மௌனமே உணர்த்தும். நதியோடும் ஊரில் வாழ்ந்தவனுக்குத் தான் தெரியும் நதியின் மொழி. தண்ணீர்க்குடத்தில் பிறக்கிறோம், தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம் . ஆனாலும் நதி தன் வழியில்...

 1. காலாட்படை பற்றிய குற்றப்பத்திரிக்கை - எஸ். ராமகிருஷ்ணன்.

1956ம் ஆண்டு ஆவண காப்பக சேமிப்பு அறை உதவியாளரின் மனப்பிறழ்வின் கற்பனைத்திறம். ஆவணக் காப்பகத்தில் பணிக்குச் சேர்ந்த சில மாதங்களில் திருமணமாகிறது. மனைவி வாசிக்க புத்தகங்கள் கேட்க இவனோ சில ஆவணங்களைப் படிக்கத் தருகிறான். அதன்பிறகு அவளின் அலட்சியப்போக்கு, இவனது மூதாதையர்கள் ராணிக்கு வெந்நீர் போட்டுக் கொடுத்த ரகசியம் இவனின் அவமானமாய்.... ஆவணங்களின் எழுத்துக்களெல்லாம் காலாட்படை வீரர்களாகி லில்லிபுட் கதை குள்ள மனிதர்கள்போல் இவனின் சாப்பாட்டுக் கேரியரில் ஒட்டிக் கொண்டு வீடுவரை வந்து அலமாரி புத்தகங்களில் எல்லாம் ஒளிந்துகொண்டு இவனைப் பாடாய்ப்படுத்துகிறர்கள். மெல்லமெல்ல ஆவணகள் காணாமல் போவது...(இப்போதும்கூட நிகழ்வதுதானோ?) இதற்காக குற்றப்பத்திரிக்கை எழுதப்போய் அந்தப்பேனா முனையிலும் இரண்டு வீரர்கள் நின்று எழுத்தை எட்டிப்பார்ப்பது இதெல்லாம் நவீனத்துக்கும் ஒத்துப்போகிறதே!

 1. சருகுகள் - சோ. தர்மன்

வேலவெட்டி இல்லன்னா யார்தான் என்னதான் செய்யமுடியும்? புள்ளக பட்டினியாக் கெடக்கறது எனக்குத் தெரியாமலா இருக்கு. பசி எனக்குந்தா ஈரக்கொலயக் கவ்து, எனும் இயலாமையோடு மனைவி சுப்புத்தாயிடம் மல்லுக்கட்டிவிட்டு வெளிச்செல்லும் வழியில் வண்டிகட்டி மண்ணடிப்புக்குச் செல்லும் தெரிந்த ஊர்க்கார ஆட்களோடு வேலைக்குச் செல்கிறான் சங்கன். வேலையெல்லாம் முடிந்து கூலியெல்லம் வாங்கியபின் காலத்துக்குப் பெய்த மழை காலனையுமா கூட்டிவரணும்?

 1. திருட்டு - . ராஜேந்திரன்

காணாமல் போன கோழியைக் கண்டுபிடிக்கும் கிராமத்து உத்தி. அதன்பிறகு அது கிடைத்தால் தெரியாமல் செய்கிற வேலையே திருட்டு.

 1. சிதறல்கள்விழி பா. இதயவேந்தன்

          மாட்டு வண்டிகள் அருகிப்போன இந்தக் காலத்தில் லாடம்கட்டும் தொழில் செய்பவர்களின் வாழ்வியல் துயரம். லாடம் கட்டாத வண்டிமாட்டின் கால்குழம்பின் வேதனையொத்தது.

நூலின் பெயர்: நவீன தமிழ்ச் சிறுகதைகள்

தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி

பதிப்பகம்: சாகித்திய அகாதெமி

செ.விஜயராணி, இராசபாளையம்

Pin It