நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடான நூலகம் - அறிவுலக நுழைவாயில் என்கின்ற இப்புத்தகம் எதிர்காலத்தில் அந்நிறுவனத்தின் அரிய பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்படும் என்பதில் மாற்றுக்கருத்து ஏற்படாது. ஏனெனில் ஒரு நூலகம் தொடர்பான தற்கால தலைமுறைகளின் அறிதலும் புரிதலும் மகிழத்தக்க வகையில் இல்லை என்ற தமிழகச் சோகச் சூழல் நிலவி வருகின்ற நிலையில், இப்புத்தகம் அத்தகையோருக்கான அருங்கையேடாக விளங்கும் என்பதால்.

muthuchezhiyan book356 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் சர்வதேச அளவிலான நூலகங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, மாறி வந்துகொண்டிருக்கின்ற தொழில்நுட்பம் என இத்துறை தொடர்பான அறிவுத் தேக்க நிலையைத் தடையின்றிக் கலைக்கின்றது, புது ரத்தம் பாய்ச்சுகிறது.

“ஆசிரியரைப் பற்றி” என்ற தலைப்போடு நூல் துவங்குகிறது. பேராசிரியர் முதுமுனைவர் கி.முத்துச்செழியன் Ph.D.,FNABS,FZSI,FPBS,FIEF(Canada) அவர்கள் இந்த நூலை வார்த்திருக்கிறார். அவரைப் பற்றிய அறிமுகத்திலேயே நூலின் செறிவும் செழு மையும் கண்முன்னும் மனதிற்குள்ளும் புலப்படத் தொடங்கி விடுகிறது. மனிதர் எத்தனை துறைகளில் அரும்பணியாற்றியிருக்கிறார், அதில் அழுத்தம் திருத்தமாகத் தடம் பதித்திருக்கிறார் என்பதை அறியும்போது மலைப்பின் உச்சியில் நாம். முன்னதாக “பட்டம் ஒரு தலைமுறைக் கவசம்” என்ற நூலை பேரா.கி.முத்துச்செழியன் எழுதியிருக்கிறார் என்ற தகவலும் இதில் உள்ளது. ஆனால் அவர் நூலகம் - அறிவுலக நுழைவாயில் என்ற இந்த நூலை பிரசவித்ததன் மூலமாக எதிர்காலத் தலைமுறைகளுக்கான “அறிவுக் கவசத்தை” வழங்கியிருக்கிறார் என்றே சொல்ல முடியும். நூலாசிரியரின் அறிமுக உரையானது, அடுத்தடுத்து இருக்கின்ற 25 தலைப்புகளுக்கு ஆவலோடு செல்லத் தூண்டுகின்ற வகையில் உற்சாகத்தோடு துவங்குகின்றது.

நூலகம் - ஒரு வரையறை என்ற முதல் அத்தியாயம் தொடங்கி, எட்டாவதாக இருக்கின்ற உலகின் பழைய நூலகங்கள் வரையிலான பக்கங்களில், உலக அளவிலான குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க நூலகங்களின் வரலாறு, அவைகளின் வகைகள், அமைப்புமுறை, கட்டடங்களின் வடிவமைப்பு, நூலகச் சங்கங்கள், என ஆதிமுதல் அந்தம் வரையிலான தகவல்களை, இது குறித்து வேறு எங்கும் தேடித் தெரியத் தேவையில்லை என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிந்தைய பழங்காலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள கி.பி.330களில், நூலகங்கள் அரசு சார்பு கொண்டவை, ஆண்வம்ச சார்பு கொண்டவை, மதச்சார்பு கொண்டவை, தனியார் சார்பு கொண்டவை எனப் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டு இருந்தது என்ற தகவல் இருக்கின்றது. அப்படியானால் அந்தக் காலகட்டத்திற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே “புத்தகத்தின் வீச்சினையும், அது எத்தகைய விளைவுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்” என்பதையும் அதிகார வர்க்கம் அறிந்துள்ளது என்பது நமக்குப் புரிகின்றது.

அன்வர்தா (Anawrahta) என்ற பர்மிய அரசர் நிறுவிய பிதாகா தைக் (Pitaka Taik) என்ற அரச நூலகம் குறித்து பிரமித்துப் போன இங்கிலாந்து தூதுவர் மைகேல் சைமெஸ், “தனுபே நதிக்கரையிலிருந்து சீனாவின் எல் லைப் பகுதிக்கு உட்பட்ட எந்த ஒரு நாட்டிலும் இங்குள்ளதைவிட அதிக எண்ணிக்கையில் நூல்கள் இருக்க முடியாது” என்று சிலாகித்துள்ளார். மறுமலர்ச்சிக் காலம், அறிவொளிக் கால நூலகங்கள் எனக் காலம் பிரித்து பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்ட நூலகங்களின் தன்மைகளையும், தாக்கங்களையும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். குறிப்பாக சீனாவில் கி.பி.1561 இல், மிங் வம்ச அரசராகிய பன்க்வின் என்ற அரசரால் நிறுவப்பட்ட “தியான்பி சேம்பர்” என்ற நூலகம் நம்முடைய எல்லை நாட்டில், இந்தியாவிலிருந்து புத்தம் பரவி அதன் கலாசாரம் பண்பாடு வேரூன்றிய நாடொன்றில் இருந்ததும் அது பெரும் புகழும் பெற்றது என்பதும் அதனுடைய வேர்களை அறியத் தூண்டுகின்ற தகவலாக இருக்கின்றது. நூலகச் சேவையில் முன்னோடியாகவும், அத்துறை தொடர்பான பல மாற்றங்களையும் ஏற்படுத்தியவராகக் கருதப்படும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சர் அன்டோனி பானிஜி, நூலகத்தின் பொருளாதாரம் பற்றி முதன் முதலாக “நூலகம் அமைப்போருக்கான ஆலோசனை” என்ற நூலை 1627 இல் எழுதிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கேப்ரியல் நௌதே போன்றவர்கள் குறித்த விவரங்களை அடங்கிய இப்பகுதிகளில் “நூல்களை இரவல் வழங்குவது அன்பு காட்டுவதற்கான முக்கியமானதொரு வழியாகும்” என்ற கருத்துக்களை அக்கால நூலக அமைப்பு விரும்பிகள் வலியுறுத்தி வந்தார்கள் என்பதையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். உலக, இந்திய, தமிழக அளவில் சிறந்த நூலகங்களின் பெயர்ப் பட்டியலும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறாக பல்வேறு குவியல் குவியலான தகவல் களஞ்சியங்களினூடாக பயணப்பட்டு வருகின்ற போது, ஒன்பதாம் அத்தியாயம் முதல் பதிமூன்றாம் அத்தியாயம் வரையில், இந்தியா உட்பட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற நூலக பகுப்பாய்வு முறைகளும், அத்தகைய பகுப்பாய்வுகளில் புழக்கத்தில் இருக்கின்ற தலைப்புகளும் விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீன நூலகப் பகுப்பு முறை மற்றும் காங்கிரஸ் நூலகப் பகுப்பு முறைகள் முழுவதுமாக விளக்கப்பட்டுள்ளது. பொது நூலகம் பற்றிய விரிவான பார்வையும், அதன் சாதக பாதகங்களை ஆசிரியர் ஆராய்ச்சித் தன்மையோடு விளக்கியிருக்கிறார். அவ்வாறு நிறுவப்பட்ட நூலகங்களின் சேவைத் திறன், இந்தியாவின் நூலகச் சட்டத்தை முதன்முதலாக நிறைவேற்றிய மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் பற்றிய குறிப்புகள் என நூலின் 158ஆம் பக்கம் வரை நூலகங்கள் குறித்து அறிந்திராத பற்பல வியப்பூட்டுகின்ற விவரங்கள் இடம்பெறுகின்றது.

 “ஆவண மேலாண்மை அமைப்பு முறை” என்ற நூலின் பதினான்காம் பகுதி மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், ஆவ ணங்களை சேமிப்பது, பயன்பாட்டா ளர்களுக்கு வழங்குவது, அந்த ஆவணத்திற்கான மாற்று வடிவம் ஏற்படுத்துதல், படிமப்படுத்துதல், ஒருங்கிணைத்தல், அடைவுபடுத்துதல், பாதுகாத்தல் என ஒட்டுமொத்தமான அனைத்து விவரங்களுக்கும் தேவையான வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆவண மேலாண்மை அமைப்பு முறைகள் குறித்து விளக்குவதோடு, அதற்குத் தேவைப் படுகின்ற மென்பொருட்களின் பெயர்களையும் ஆசிரியர் பட்டியலிட்டுள்ளார். ஒரு தேர்ந்த பயிற் சியைத் தருவது போன்ற அத்தியாயமாக இது விளங் குகின்றது.

நூலகங்களும் உயர்கல்வியும்

நூலாசிரியரின் மதிப்புமிக்கதும், தகுதிமிகுதி மிக்க துமான கருத்துக்களுடன் இந்தியக் கல்வி முறையில் நூலகங்களின் பங்கையும் பாங்கையும் மட்டுமன்றி இந்தியாவில் அமையப்பெற்ற பழைமையான நூல கங்கள் மற்றும் அவற்றின் ஈடு இணைற்ற கல்விப் பணிகள், மத்தியக் காலங்களில் நூலகங்கள் அடைந்த வீழ்ச்சி மற்றும் அதன் எழுச்சி எனத் தொடர்கிறது இப்பதினைந்தாம் பகுதி. நாளந்தா பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட தர்மகாஞ்சா (புனிதச் சந்தை) என்ற நூலகம், மதிலா பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட நூலகங்களின் அதிசயமிக்க, ஆச்சரியமிக்கத் தகவல்களை அடுக்கிச் செல்கிறது. “ஒரு மாணவன் கற்றுத் தேர்ந்த நூலில் ஊசி ஒன்று குத்தப்படும். அந்த ஊசி எந்தப் பக்கத்தில் கடைசியாகக் குத்தியதோ அந்தப் பக்கத்தில் உள்ள விவரங்களை அம்மாணவன் விளக்கிச் சொல்லிட வேண்டும், இவ்வாறு மாணவர்களின் ஒட்டுமொத்த அறிவுத்திறன் சோதிக்கப்பட்டது” என்ற கி.பி.15ஆம் நூற்றாண்டின் நடைமுறைத் தகவலை ஆசிரியர் பதிவு செய்கிறார். 1919 இல் இந்தியாவில் அறிமுகமான மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத் தங்கள், 1935இல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம் போன்றவை இந்தியாவின் நாலா பகுதிகளிலும் நூலகங்கள் அமைந்திட வழி வகுத்தன என்னும் செய்தி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் இந்தியாவிற்கு நடந்த நற்காரியங்களின் பட்டியல்களில் ஒன்றாகவே கருதலாம். இந்திய நூலக அறிவியலின் தந்தையாகக் கருதப்படுகின்ற டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் செயல்பாட்டையும், திறனையும் விளக்குகின்ற இப்பகுதி, இந்திய நூலகங்கள் வளர்ந்து தற்போது எண்ணியல் நூலகங்களாக மிளிர்கின்ற நிலையை அடைந்திருப்பதையும், அதனூடாக பல்வேறு பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு அவை ஆற்றிய தொண்டையும் சீரும் சிறப்பான இந்தப் பகுதியில் சொல்லியிருக்கின்ற ஆசிரியர், முத்தாய்ப்பான தன்னுடைய இந்த அத்தியாயத்தின் முடிவுரையில், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து நூலகங்கள் அடைந்த வளர்ச்சிக்குத் தேசியம் என்ற கூறே முக்கியமானதாக இருந்திருக்கிறது என்ற தன்னுடைய அரசியல் கருத்தைப் பதிவு செய்து முடித்திருக்கிறார்.

இந்தியக் கல்வி முறை, பல்கலைக்கழகக் கல்வியில் நூலகங்களின் பங்கு, உயர்கல்வியில் ஆய்வு நூலகங்களின் கல்விசார் பங்கு மற்றும் பணிகள் ஆகிய தலைப்புகளில் முறையே, 16,17,18 அத்தியாயங்கள் அமைந்துள்ளன. தலைப்புகள் சார்ந்த விவரங்கள் மற்றும் அதன் நன்மை தீமைகள் விமர்சனப் பார்வையுடன் பல உதாரணங்களோடு பகுதி முழுமைக்கும் ஆசிரியரால் விளக்கப்பட்டுள்ளது. 1999இல் பிராகில் நடைபெற்ற லிபர் ஆண்டுப் பொதுக்குழு மாநாட்டில் வாட்ஜன் என்பவர் பேசிய அப்போதைய நூலகங்களின் குறைபாடுகள் பற்றியும் அதை மாற்றி அமைப்பது பற்றியும் சொன்ன கருத்துக்களை பக்கம் 194இல் இரண்டாம் பத்தியில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

நூலகமும் எழுத்தறிவும் என்ற தலைப்பில் 19வது அத்தியாயமும் இந்தியப் பொது நூலகங்களுக்கான தேசியக் கொள்கை என்ற தலைப்பில் 20வது அத்தியாயமும் அமையப்பெற்றுள்ளது. சிறார்கள் எழுத்தறிவு மற்றும் அதில் மேம்பாடு அடைவதற்கான அரசின் திட்டங்கள் நூலகங்கள் வாயிலாக எவ்வாறு உருவாக்கலாம் என்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை விளக்கியிருக்கிறார் ஆசிரியர். குறிப்பாக இங்கிலாந்து அரசு புக்ஸ்டார்ட் (Book start) என்ற திட்டத்தைத் துவக்கி 9 மாதம் நிறைந்த குழந்தைக்கு நூல் வழங்கிடும் செய்தி புதுமையான ஒன்று. “தகவல்களை மனப்பாடம் செய்வது மட்டும் கல்வி அல்ல என்பதாலும் வாழ்நாள் முழுதும் தனியாகக் கற்றிட உதவுவதே உண்மையான கல்வி” எனவே, கற்பிக்கின்ற ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நூலகங்கள் வாயிலாக தகவல்களை வழங்கிடவும் அவற்றின் பயன்பாட்டையும் விளக்கிட வேண்டும், நூலகங்களின் தாக்கத்தை சிறார் பருவத்திலிருந்தே அறிந்து கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் போன்ற ஆசிரியரின் தீராத ஆவலோடும் ஆதங்கத்தோடும் ஆலோசனைகளோடும் இவ்வத்தியாயங்கள் தொடர்கின்றன.

21வது அத்தியாயத்தை 21ஆம் நூற்றாண்டுக்கான நவீன இந்தியாவின் கல்வி எழுச்சிக்கான முயற்சியாகவே வடிவமைத்துள்ளார் நூலாசிரியர். ஓரளவேனும் அடிப்படைக் கல்வி அறிவு பெற்றவரே இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். அவ்வாறு உள்வாங்கப்படும் தகவல் திரட்டுகள், அவரின் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படும். எண்ணியல் நூலகங்களுக்கான (Digital Library) தற்போதைய எதிர்காலத் தொழில்நுட்பங்கள், தேவைப்படும் மாற்றம் என அதன் அடியாழம் வரை கற்றுத்தருகின்றது இப்பகுதியில் தொடரும் பக்கங்கள். கல்வியில் ஆண்டுக்காண்டு உயராத அரசின் நிதி ஒதுக்கீடு, காகிதமில்லா சமுதாயம், நாட்டில் செயல்படுகின்ற 279 பல்கலைக்கழகங்களின் (60 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட) கீழுள்ள நூலகங்கள் அவற்றின் நிறைகுறை செயல்பாடுகள், நூலகப் பணியில் கணினி எனக் கொத்துக்கொத்தாய் விழுகின்றன தகவல்கள். எண்ணியல் நூலகங்களின் நீள்வீச்சுக் குறிக்கோள்களாக டாம்கலீல் என்பவர் கூறிய ஆலோசனைகள் பக்கம் 250இல் வைக்கப்பட்டுள்ளது.

எண்ணியல் நூலகம் தொடர்பான இந்திய அரசின் திட்டங்கள் அதற்கு பெங்களூரு உட்பட சில மாநகரங் களில் அமைந்துள்ள “உள்ளீடு உருவாக்க மையம்” (Content creation centre) எவ்வாறு உதவுகின்றன எனப் பல்வேறு பயன்மிகு தகவல்கள் பொதிந்துள்ள இப்பகுதியில், “அறிவை இலவசமாக்கும் உலகளாவிய முயற்சியில் இந்தியா முன்னோடியாக உள்ளது” என்ற தகவலும் அதற்கான விளக்கமும் வைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக நூல்களுக்கு “பன்னாட்டுத் தர நூல் எண்” ISBN (International Standard Book Number) எதற்காக வழங்கப்படுகிறது, அதன் பயன்பாடு என்ன, அது எங்கே வழங்கப்படுகிறது போன்ற விவரங்கள் முழுமையாகவும் தெளிவாக வைக்கப்பட்டிருக்கிறது.

தகவலும் நூலக வலையமைப்பும் என்ற தலைப்பில் 22வது அத்தியாயமும் பசுமை நூலகம் என்ற தலைப்பில் 23வது அத்தியாயமும் அமையப்பெற்றுள்ளது. 24வது அத்தியாயமாக ஆசிரியர் வைத்துள்ள தன்னுடைய முடிவுரையில் பல்துறை முன்னேற்றத்திற்காக அடிப் படையான கல்வி அமைப்பு முறையை பலப்படுத் துவதற்கான முதற்படியாக நூலகங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான தன்னுடைய ஐந்து ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அதோடு நூலக வல்லுனர்குழுவின் ஒன்பது பரிந்துரைகளையும் பதிவு செய்துள்ளார். இறுதி அத்தியாயமாக “பரிந்துரைகள்” பகுதியும், அடுத்ததாக இந்நூல் தயாரிப்பிற்கு உதவிய நூற்பட்டியல் ஆதாரங்களை வைத்து மகத்தான இந்த நூலை நிறைவு செய்திருக்கிறார் ஆசிரியர் முத்துச்செழியன் அவர்கள்.

நிறைவாக...

சமூகத்திலிருந்து தான் கற்றறிந்தவற்றை அந்த சமூகத்திற்காகவே கடமை உணர்வுடனும் நன்றியுணர் வுடனும் கடும் அர்ப்பணிப்போடும் பணியாற்றி இந்த நூலைச் செழுமையுடன் எதிர்கால தமிழகத் தலைமுறையினருக்குத் தந்திருக்கும் பேராசிரியர் முதுமுனைவர் கி.முத்துச்செழியன் அவர்கள் பெரும் பாராட்டுக்குரியர். மிகப்பெரிய வரலாற்றுக் கடமையைச் செய்து முடித்துள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும், ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகங்களில் இதுவு மொன்று. நூல் நெடுகிலும் நூலகம் குறித்த அரசின் செயல்பாடுகளை மெச்சியே பேசி வந்தாலும், அது இன்னும் மேம்படலாமே என்கின்ற ஆசிரியரின் ஆதங்கம் இழையோடுவதை நம்மால் உணர முடிகிறது. மனிதர் நூலகத்தை தன்னுடைய உயிர் மூச்சாகவே பாவித்திருக்கிறார் என்பதை நமக்கு உணரச் செய்வதோடு நம்மையும் அத்தகைய மன நிலைக்கு உந்தித்தள்ளுவதில் இணையில்லா வெற்றி காண்கிறார். இந்நூலின் 356 பக்கங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள இந்த 7 பக்க உரையானது கடலில் கரைந்த பெருங்காயம் என்றுதான் சொல்ல வேண்டும். நூல் தாங்கிக்கொண்டிருக்கின்ற விசயங்கள் அத்தனை அத்தனை இருக்கின்றது. வாசிக்க வாசிக்க அறிவுமணம் கமழும், மனம் விசால உறுதியடையும். ஒரு புத்தகம் எத்தகைய நேர்மறை பயன்மிகு விளைவை ஏற்படுத்தும் என்பதற்கான மற்றொரு சான்று இந்நூல்.

“ஒரு பறவை பறந்து வந்து மரத்தின் கிளையில் அமர்வது, அக்கிளையின் உறுதியை நம்பி அல்ல, தன்னுடைய சிறகை நம்பியே”. அந்த வகையில் நூலகம் - அறிவுலக நுழைவாயில் என்னும் இந்நூல் நம் ஒவ்வொருவரின் சீர்சிறப்புமிகு சிறகு என்றால் அது மிகையில்லை. எனவே அத்தகைய நம்பிக்கையை வளரிளம் தலைமுறைகளுக்குத் தந்த நம்முடைய பேராசிரியர் முதுமுனைவர் கி.முத்துச்செழியன் அவர்களுக்கு இதயக்குருதி தோய்ந்த நன்றி.

நூலகம் – அறிவுலக நுழைவாயில்

ஆசிரியர்: கி.முத்துச்செழியன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ. 995/