ஒரு வேளை உணவு உண்பதற்கு, மானங்காக்க ஆடை தயாரிப்பதற்கு, பாதுகாப்பான வீடுகளைக் கட்டுவதற்கு மனிதன் வசிப்பதற்கு ஏற்ப ஓர் இடத்தை மாற்றுவது என்பது அத்தனை எளிய காரியம் அல்ல.

alli fathima book“சித்திரச் சோலைகளே! உமை நன்கு

திருத்த இப்பாரினிலே - முன்னர்

எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ

உங்கள் வேரினிலே”

என்ற பாரதிதாசன் வரிகளில் இருக்கும் மகத்துவத்தைப் பேசுகிறது அல்லி பாத்திமா எழுதிய ‘பாண்டிச்சி’ – நாவல். காப்பிய உலகில் அமுதசுரபியை உலகுக்குக் காட்டிக் கொடுத்த ஒரு மணிமேகலையைப் போல் கதைத் தலைவியின் பெயரிலேயே நூலின் தலைப்பு அமைந்துள்ளது. ஒருவர் படித்த படிப்பு அந்த மண்ணிலிருந்து அவரை அந்நியப்படுத்தி விடக்கூடாது என்ற ஆதங்கம் கதைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

முன்பு மதுரையில் பாண்டியனுக்கும் சோழனுக்கும் போர் நடந்த போது பயந்துபோன சாதாரண மக்கள் கிழக்குத் தேசமாகத் தேனி கடந்து போடி கம்பம் மெட்டு வழி மத்திய திருவிதாங்கூர் வந்தனர். இப்பொழுது இருக்கும் இடுக்கி மாவட்டத்துக்குப் போக வழி இல்லாமல் காடாக இருந்த பெரியார் நதிக்கரை வழியாக நடந்து பல பிரிவுகளாகப் பிரிந்தனர்.

காட்டு விலங்குகளும், பாம்புகளும், விஷப் பூச்சிகளும் நிறைந்த காட்டை வெட்டித் திருத்திக் குடியேறினர். அதனால் அப்பகுதி ‘வெட்டுக்குடி’ என்று பெயர் பெற்றது. அங்கே விவசாயமும் செய்தனர். அந்த விளைச்சல் நிலத்தைச் சிலர் வெற்றிலை, புகையிலை, சாராயம் கொடுத்துக் கைப்பற்றினர். இதனால் காட்டைத் திருத்திய மக்கள் காட்டுக்குள்ளேயே வாழக் கற்றுக் கொண்டனர் என்று காட்டில் வாழும் மக்களைப் பற்றிக் கூறி அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் தன்மையை நாவலில் காண முடிகிறது.

தமிழ்ச் சமுதாயம் தாய்வழிச் சமூகமாக இருந்தது என்பதற்கு இந்தப் புதினத்திலும் உதாரணங்களைச் சொல்ல முடிகிறது. சாதி, மதம், இனம், மொழி என்று சொல்லிக் காதலர்களைப் பிரித்துவிடும் இந்த நாளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிடித்தவர்களை மட்டுமே சேர்த்து வைக்கும் உயர்ந்த பண்பாட்டைக் கதை பேசுகிறது. திருமணத்திற்கு முன்பு புகுந்த வீட்டு மனிதர்களுடன் பழகும் போது ஒருவேளை புகுந்த வீட்டார் பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றால் திருமணத்தை மறுக்கும் உரிமை பெண்ணுக்கே உண்டு என்ற கருத்தைப் பதிவு செய்யும் போது தமிழ்ச் சமுதாயம் தாய்வழிச் சமூகமாக இருந்தது என்பதை யூகிக்க முடிகிறது.

அடர்ந்த காட்டில் வளர்ந்த பெரிய மரத்தின் வேர்கள் அசுர வேகத்தில் வளர்ந்து செல்வனின் கழுத்தை இறுக்குவதாக மிகுந்த திகிலோடு தொடங்குகிறது கதை. கதாநாயகனுக்கு என்ன ஆபத்து வந்து விடுமோ என்று இதயம் படபடக்க நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அது வெறும் கனவு என்று நம்மை அமைதிப் படுத்துகிறார் எழுத்தாளர். ஒரு பத்திரிகையாளனான செல்வன் பழங்குடிமக்கள் பற்றிய கட்டுரை எழுத வேண்டிக் காட்டுப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்ற பணி அவனிடம் ஒப்படைக்கும் போது மீண்டும் தான் கண்ட கனவை நினைத்துக் கொள்கிறான். படிக்கும் வாசகர்களும் அவனைப் போலவே குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்.

கனவில் வந்த பெரிய மரம் பல அடி உயரத்தில் மனித உருவில் பிரம்மாண்டமாக நிற்கிறார். அவரை ‘பாஞ்சான்’ என்று அறிமுகப்படுத்தும் போது செல்வன் தடுமாறுகிறான். பாஞ்சான் தான் காதலிக்கும் பாண்டிச்சியின் தாய்மாமன் என்பதும் அவன் யாருக்கும் பயப்படமாட்டான் என்பதும் பெரிய விச்சக்காரன் (மந்திரவாதி) என்பதும் அறிந்து அதிர்ச்சி அடைகிறான். எரியும் நெருப்பு போல காணப்படும் அவனிடம் எல்லோரும் பேசுவதற்கும் அஞ்சுகின்றனர் என்று கதை நகர்கிறது. செல்வன் வந்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடித்து மீண்டும் ஊர் போய்ச் சேர்வானா என்பதுதான் கதை.

ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால் சில அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். அவை இல்லாமல் போகும் பட்சத்தில் அந்தச் சமுதாயம் சீரழிவைச் சந்திப்பதைத் தடுப்பதற்கில்லை. சுகாதாரக் குறைவு, வறுமை, போதை, அதிகாரிகளின் தொல்லை, அறியாமை, உட்பூசல், மூடநம்பிக்கைகள் ஆகியவை இயற்கையோடு வாழும் மக்களை எவ்வளவு பெரிய துன்பத்திற்கு அழைத்துச் செல்கிறது என்பதை உணர்ந்த எழுத்தாளர் அல்லி பாத்திமா அதிலிருந்து மக்களை மீட்கும் ஒரு மீட்பராகக் கதைத் தலைவியைப் படைத்துக் காட்டியுள்ளார்.

அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு விஷயமாக காட்டிக் கொடுக்கும் மக்களைச் சொல்லி விடலாம். வரலாற்றின் பல வெற்றிகளும் துரோகத்தால் சாத்தியப்பட்டவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படித்தான் இந்தப் பொன்வளக் காட்டிலும் மக்களை மதி மயங்கச் செய்ய கள்ளும், கஞ்சாவும் அந்தப் பகுதியில் தடையில்லாமல் கிடைக்கின்றன. இதற்குக் கனவில் பயங்கரமான உருவமாகத் தோன்றிய பாஞ்சானும் அவன் மகனும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

வாசகர்களை வியப்பில் ஆழ்த்தும் செய்தி இது. கோவில் போன்று தெரியும் இடத்தில் உள்ளே சென்று பார்த்தால் அங்கு சிலைகள் எதுவும் காணப்படவில்லை. வாழை மட்டைகளைச் சதுர வடிவில் அமைத்து நிறுத்தியிருக்கின்றனர். வாழை மட்டைகளுக்கு இடையில் தெரியும் காற்றும், பொன்வளக் காட்டு நிலமும்தான் தெய்வம் என்கிறார் பாத்திமா. பழங்களும், கிழங்குகளும், பூக்களும், அருகம்புல்லும் வைத்து வழிபடுகின்றனர். என்னே அழகான இயற்கைத் தெய்வம்!

மூங்கில் மரங்கள் கீழ் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பதைப் பார்த்தவுடன் எதற்காக என்ற ஐயம் கதையைப் படிப்பவர்களுக்கு எழுகிறது. நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் மூங்கில் எந்த நேரத்திலும் பூ விடலாம் எப்பொழுது வேண்டுமானாலும் நெல் சிதறும் என்பதற்காக என்றுமே மூங்கில் கீழ் சுற்றிலும் சுத்தமாக வைத்துப் பாதுகாக்கும் மக்களை இனங்காட்டுகிறது புதினம். ஒரு புல்லைப் பறிப்பதனாலும் மண்ணிடம் மன்னிப்பு கேட்ட பிறகு பறிக்கும் வழக்கம் கொண்ட ஓர் இனக்குழுவை அடையாளம் காட்டிய எழுத்தாளருக்கு வாசகர்கள் நிச்சயம் பாராட்டுதலைச் சொல்வர்.

பாரியின் பறம்பு மலையை மூவேந்தர்கள் முற்றுகையிட்ட போது பாரியை வெல்ல முடியாது என்று புலவர் கபிலர் திட்டவட்டமாக உரைக்கிறார். காரணம் உழுது விளைவிக்காமல் தாமாக விளையும் பலாப்பழங்களும், கிழங்குகளும், மூங்கில் அரிசியும், தேனும் கிடைப்பதால் பாரியைத் தோற்கடிக்க இயலாது என்கிறார். சங்க இலக்கியங்கள் பேசுவது போல மூங்கில் அரிசியைப் படைப்பு சிறப்புப்படுத்துகிறது. முள அரிசி மனித உடலுக்கு யானையின் பலத்தைக் கொடுக்குமாம். ஒருமுறை பூத்து அரிசையை கொடுத்து விட்டால் பின் மரம் கருகிப் போகுமாம் என்ற உண்மைத் தகவலைப் பறை சாற்றுகிறது படைப்பு.

காட்டு ஈந்தை மரத்தில் பாய் பின்னினால் அவர் மரணத்துக்கு அருகில் இருக்கிறார் என்று பொருள். பாண்டிச்சியின் அப்பா மூப்பன் இறந்தபிறகு அவர் பின்னிய பாயில் அவரைச் சுருட்டி புதைக்குழிக்குள் இறக்கினர். அவர் பயன்படுத்திய ஆயுதம், ஆடை, அணிகலன் ஆகியவற்றையும் உடலோடு புதைத்தனர். பின்னர் நெல், மலர் தூவினர் என்பதான பழங்குடியினரின் பழக்க வழக்கங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது நாவல். நீலி – சின்னான் காதல், இயற்கைப் பொருட்களில் அழைப்பு மணி, மதுரைக்காரன் எங்குச் சென்றாலும் பிழைத்துக் கொள்வான், கேப்பைக் கூழை ‘கொரங்காட்டி’ என்று அழைக்கின்றனர் என்ற செய்தி, கள்ளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவனுக்குக் குடிக்க தண்ணீரும் கொடுக்கக்கூடாது என்ற தீர்ப்பு இப்படிப் பல கருத்துக்களை உள்ளடக்கிய படைப்பு இந்த நாவல். செம்மொழியும் கவின் மலையாளமும் எந்த வேற்றுமையும் பாராட்டாமல் இணைந்திருக்கும் ஒரு படைப்பு என்ற முடிவுக்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறது படைப்பு.

தொடர் மலைகள், இளங்காற்று தாலாட்டும் தூய மலர்வனம், இயற்கையான பொருட்களாலே கட்டப்பட்ட வீடு. நெருக்கமாக அடுக்கப்பட்ட மூங்கில்கள், தடிமனான மரச் சாளரங்கள், நல்ல கலை நுட்பத்துடன் மரப்பலகைகளில் ஓவியங்கள் வரைந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

கிளிகள் ஓசை, எங்கோ சலசல என வழியும் அருவியின் ஓசை தவிர வேறு சப்தம் இல்லை. வாசலில் கதவோரமாகத் தொங்க விடப்பட்ட அபூர்வமான அழைப்புமணி. அதை அசைத்ததும் அதிலிருந்து வழிந்த நாதம் வாழ்நாளில் கேட்டிராத இசை. நரம்புகளில் ஊடுருவி இதயத்தை வருடுகிறது.

இதைப் படித்ததும் அந்த இடத்திற்குப் போக வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது. முடியுமா என்று ‘பாண்டிச்சி’ தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவள்தான் இந்தப் பகுதியின் ‘தேவி நாச்சி’. அவள் அனுமதி தந்தாலே ஒழிய பொன்வளக் காட்டில் நம்மால் நுழைய முடியாது என்று எழுத்தாளர் அல்லி பாத்திமா தன் முதல் நாவலான ‘பாண்டிச்சி’ – நூலில் பல ரகசிய முடிச்சுகளைப் போட்டு வைத்திருக்கிறார்.

காதல் என்ற ஒற்றை இழையில் ஒட்டு மொத்த கதையையும் இணைத்து வைத்திருக்கிறார். அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாவலைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்!

நூல்: பாண்டிச்சி - நாவல்
ஆசிரியர்: அல்லி பாத்திமா
விலை: ரூ.150 மட்டும்
வெளியீடு: தமிழ் அலை, தேனாம்பேட்டை, சென்னை

- முனைவர் சி.ஆர். மஞ்சுளா, தமிழ்ப் பேராசிரியர், சென்னை சமூகப்பணி கல்லூரி, எழும்பூர், சென்னை

Pin It