தண் + செய் + ஊர் என்பது தஞ்சாவூராகிறது. அது குளிர்ந்த வயல் பகுதியை உடைய மருதநில ஊர்கள் அடங்கிய பகுதியாகும். அதனால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழ்கிறது. இன்று ஒடுங்கிக் குறுகிய தஞ்சாவூர் பகுதி முன்பு காவிரி கடலில் சங்கமிக்கும் கீழக்காவிரியாற்றுப் படுகைவரை விரிந்திருந்தது. அந்த ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதிகளைக் கதைக் களங்களாகக் கொண்டு நிலப்பிரபுத்துவக் கொடுமைகளையும், பண்ணையடிமைகளின் அவலத்தையும் சோலை சுந்தரபெருமாள், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தம் நாவல்களில் படம் பிடித்துள்ளனர். அவை, சோலை சுந்தரபெருமாள் எழுதிய செந்நெல், நஞ்சை மனிதர்கள், தப்பாட்டம், சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய மாவீரன் வாட்டாக்குடி இரணியன் ஆகியவையாகும். 

பண்ணை முதலாளிகள் 

தஞ்சாவூர்ப் பகுதி பண்ணை முதலாளிகள் கோவில்களுக்கும், மடங்களுக்கும் சொந்தமான நிலங்களைக் கையகப்படுத்திச் செல்வச் செழிப்பில் கொழித்தனர். வட்டிக்கும், பணம் கொடுத்து வாங்கி செல்வதைப் பெருக்கினர். கிராம குளங்களை ஏலம்விட்டு பிடித்த மீன்கள் விற்றப்பணத்தையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர். 

"இவர்களுக்கு இவ்விதாக வருஷ வருமானம் மட்டும் சுமார் 50 ஆயிரம் ரூபாயிலிருந்து பல லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. இப்படியெல்லாம் ஏழைப்பட்ட விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து தான் இந்த மிராசுதார்கள் செல்வம் கொழித்தார்கள். அறுசுவை பதார்த்தங்களை உண்டு கொழித்தார்கள்... அரண்மனை போன்ற பளிங்கு மாளிகையில் வாழ்கிறார்கள். சுருங்கச் சொன்னால் இந்த ஜில்லாவின் பொருளாதார வாழ்க்கை இவர்களால் இரும்புப் பிடிக்குள் அகப்பட்டு மூச்சடைத்துக்கிடக்கிறது. இவர்கள் இடம் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ஜில்லா அதிகாரிகள் இருக்கவே இருக்கிறார்கள்" (அக்னிப்புத்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்)

என்ற கூற்றுப்படி நாவல்களில் வரும் பண்ணை முதலாளிகள் போக்கும், அவர்களுக்கு அரசு அதிகாரிகள் துணை நிற்பதும் காணப்படுகிறது. 

பண்ணை அடிமைகள் 

ஆரம்பக் காலத் தமிழகத்தில் அடிமை முறை இல்லை. எனினும் சங்ககால மன்னர்கள் தங்களிடம் தோற்ற மன்னர்களின் அரண்மனையிலுள்ளவர்களைச் சிறைப்பிடித்து வந்து தங்களுக்கு அடிமைத் தொழில் புரிய வைத்தனர். பெரிய புராணத்தில் நந்தனார் என்ற புலையர் பண்ணை அடிமையாக இருந்ததால் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டிருந்த நிலைமையைக் காண முடிகிறது. புலையர்கள் தாழ்த்தப்பட்டவர்களாயினும் அவர்களை விற்கவும், வாங்கவும் யாருக்கும் உரிமை இல்லை. 

ஆங்கிலேயரின் வருகைக்குப்பின் ஒரு பெண்ணைக் குழந்தைகளுடன் விலைக்கு வாங்கும் கொத்தடிமை முறை நடைமுறையிலிருந்து வந்தது. புலையர்களாகிய ஆதிதிராவிட இன மக்களே கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். அவர்கள் நாள் முழுவதும் வேலை செய்தால் அரை மரக்கால் நெல்தான் கூலியாகக் கொடுக்கப்படும். அதன்பிறகு கூலி உயர்வுப் போராட்டங்கள் நடைபெற்றதனால் ஒரு பண்ணை அடிமைக் குடும்பத்திற்கு ஆண்டு வருமானம் ரூ.160 முதல் 170 வரை கிடைத்தது. 

மாடுகளுக்குப் பதில் வண்டிகளை இழுக்க பண்ணை அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். நல்ல உடை உடுத்தவும், நல்ல உணவு உண்ணவும் அவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது. பழைய கஞ்சியும், நீராகாரமும் அவர்களுக்கு கிடைத்த உணவாகும். பழைய கஞ்சியை மரக்காலிலும், தொட்டுக்கொள்ளும் கறியைக் கொட்டாங்கச்சியிலும் கொடுத்து மாட்டுக் கொட்டிலில் உண்ணச் செய்கின்றனர். "பறையனுக்குப் பொறந்துட்டா உழைக்கவும், பறிக்கவும் தான் உரிமை ருசியா திங்க உங்க நாக்கத் தட்டிக்கிட்டு நிக்க உரிமை ஏது" (தப்பட்டாம் சேலைசுந்தரபெருமாள்) என்ற முனியாண்டிச்சாமானின் கூற்று விரும்பிய உணவை உண்ணவும் உரிமையற்ற நிலையை உணர்த்துகிறது.

பண்ணை அடிமையாகிய ஒடுக்கப்பட்ட தலித்துக்கள் வாழும் பகுதி சேரி எனப்படுகிறது. அது ஊரை விட்டு துண்டிக்கப்பட்டு தனியே அமைந்திருக்கிறது. அங்கு குடிசைகள் போட்டுக் கொண்டு அவர்கள் வாழ்கின்றனர். 

"சேரிக்குள்ள எரியவிட்ட குண்டு பல்பு கூட ஒரு வாராமா எரியக்காணும். தெருவும் குண்டும் குழியுமா திட்டுத்திட்டா சகதி வேற. குறுகலான சந்துக்கு ரெண்டு பக்கமும் குடிசைகள் முன்ன பின்ன தள்ளி கோணக்க மாணக்கன்னு இருக்கும். குடிசைகள் அதுவும் அப்பைக்கு அப்ப இருக்கும் கையிருப்புக்கு ஏத்தாப்போல நீட்டிக்கிறதும் குறுக்கிக்கிறதும் உண்டு" (தப்பட்டாம்) 

இந்த குடிசை வாழ்வு அவர்களுக்கு அளிக்கப்ப்டடிருந்த வாழ்க்கைத் தரத்தைப் படம் பிடித்து காட்டுகிறது. 

அடிமைகள் சிறு தவறுகள் செய்தாலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் மிகக் கொடுமையானதாகும். சாத்தூர் மிளகாயை அரைத்து உடல் துவாரங்களின் வழியே புகுத்தி களிக்கம் போடுதல், உப்பைத் தரையில் கொட்டி முட்டி போட வைத்தல், கீழே நெருப்பு வைத்து தலைகீழாகக் கட்டி விடுதல், மலத்தையும் சாணியையும் கரைத்துக் குடிக்கச் செய்தல், தாயையும், மகனையும், தந்தையையும் மகளையும் முறைகேடாக வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொள்ளச் செய்தல், திருக்கை வாலாலும் சாட்டையாலும் அடித்தல் என்பன போன்ற கொடிய சித்ரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். மேலும், பெண்கள் பண்ணையார்களின் காமப்பசிக்கு விருந்தாக்கப்பட்ட அவலமும் அரங்கேற்றப்பட்டது. அவர்களுக்கு ஒத்துழைக்காதப் பெண்களை பொய்க்குற்றம் சுமத்தி துன்புறுத்தினர். 

"சாணிப்பாலும், சவுக்கடிப்பட்டதையும் தலைக்கீழாகக் கட்டி தொங்கப்போட்டு கீழே நெருப்புச் சட்டி வச்சி கண்ணுக்கு மிளவாய அள்ளிப்போடுகிறது. அதோடவா கண்ணுக்கு லெட்சணமா பொண்டு புள்ளைத் தெரிஞ்கிட்டாப்போதும் எந்த நேரத்திலேயும் பண்ணை மாட்டுக் கொட்டிலுக்குத் தண்ணி ஊத்தணுமின்னும் சாணி அள்ளிக் கூட்டணுமின்னும் கூப்பாடு வரும். அப்பெல்லாம் அந்தப் புளைங்கப் பண்ணைக்குப்போய் சதைப் பிண்டகக்கிட்ட நஞ்சிப்போயி வர்றதப்பாக்கும்போதெல்லாம் அடுத்த சென்மதிலாச்சும் இந்த சனங்க பண்ணை வீட்டு நாயாவது வந்து பொறக்கணுன்னு வேண்டிக்குவான்." (செந்நெல்)

பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறையில் பண்ணை வீட்டு நாயாகவாவது பிறக்க வேண்டிக் கொள்ளும்நிலை அவர்களின் கையலாகாத்தனத்திற்குச் சிறந்த சான்றாகிறது. 

கீழான வாழ்க்கை நிலையிருந்து ஒருவேளையாவது நல்ல உணவாக உண்ண வேண்டி சிறிதளவு கூலியை உயர்த்தித் தரும்படி போராட்டங்களை நடத்தினர். அதற்கு கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாய சங்கமும துணை நின்றன. 

"பொழுது விடிவதற்கு முன்னால் எழுந்து பொழுது குந்தும் வரை உங்கள் பண்ணையில் மாடாக உழைத்து மண்வெட்டியாய்த் தேய்கிறானே கால்வயிற்றுக் கஞ்சிக்கே கஷ்டப்படும் அவனைப் பணக்காரனாக்கு என்றா கேட்டோம்; பசி இல்லாமல் வாழக் கொஞ்சம் கூலியை உயர்த்திக் கொடு என்றுதானே கேட்டோம். அது தப்பா?" (மாவீரன் வாட்டாக்குடி இரணியன், சுபாஷ்சந்திரபோஸ்)

என்று கூலி உயர்வு கேட்பதற்கான நியாயத்தை இரணியன் எடுத்துக் கூறுவது பாட்டாளிகளின் பட்டினி வாழ்வை அம்பலப்படுத்துகிறது. அவர்களது கூலி உயர்வைச் சில பண்ணை முதலளிகள் அங்கீகரித்தாலும், நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் அங்கத்தினர்கள் அதனை மறுத்தனர். 

1938 மே மாதத்தில் நாகை வட்டம் கீவளூரில் டி.எஸ்.இராமச்சந்திரன் முயற்சியில் மாநாடு நடந்துள்ளது. அதில் "விவசாயிகளே ஒன்று சேருங்கள்" என்ற பிரசுரத்தை வெளியிட்டார். அது விவசாயிகள் சங்கத்தின் அவசியம் பற்றியும், கோரிக்கைகள் பற்றியும் தேசிய இயக்கம் வெற்றி பெற விவசாயிகள் அமைப்பு ரீதியாக அணி திரள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. 

அதன் முகப்பகுதியில் அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட செங்கொடி பொறிக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டே ஆகஸ்ட் 14ல் மணலூர் மணியம்மை இல்லத்தில் நாகை தாலுகா கிசான் கமிட்டி அமைக்கப்பட்டது. 

"விவசாயிகளையும், ஜனநாயக சக்திகளையும் திரட்ட வேண்டிய சர்வதேசக் கடமையை கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றிட தமிழ் மாநிலக் கமிட்டி 1942 டிசம்பர் 23ல் உற்பத்தியைப் பெருக்க கிசான் சபையை அமைக்க அறைகூவல் விடுத்தது. இப்பின்னணியில் மிகக் கடுமையான சுரண்டலுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாகி வந்த தென்பரை விவசாயிகளை ஒன்று திரட்டி, 1943 ஜனவரியில் முதன் முதலில் கிசான் சபாவில் சேர்க்கப்பட்டு கிராமகமிட்டி அமைக்கப்படுகிறது. இக்கமிட்டியின் காரியதரிசி வீராச்சாமி." (அக்னிபுத்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்)

கூலி விவசாயிகள் எழுச்சி பெறக் காரணமாக அமைந்த கிசான் சபைகள் தென்பறையிலும், ஆம்பலாப்பட்டிலும், ராதாநரசிம்மபுரத்திலும் அமைக்கப்பட்டு, கூலி உயர்வுக்கு வழிகோலியதை மாவீரன் வாட்டாக்குடி இரணியன், செந்நெல் இரண்டும் செப்புகின்றன. 

1944 மே 3, 4 தேதிகளில் விவசாயிகள் சங்க முதல் மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது. அதில் கூலி நிர்ணயம் பற்றி ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன. நெல் உற்பத்தியாளர் சங்கத் தீர்மானப்படி கலகத்துக்கு ஐந்து படி நெல்லைக் கூலியாகக் கொடுக்க வேண்டுமென்று நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் ஜில்லா கமிட்டித் தீர்மானப்படி கலகத்துக்கு ஆறுபடி கூலிவாங்காமல் யாரும் அறுப்பில் கைவைக்கக் கூடாதென்று கூறப்பட்டது. இசெய்திகளைச் செந்நெல் கூறுகிறது. 

பாட்டாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய மனித உரிமைகளை மீட்க கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தும், விவசாயச் கங்கங்கள் அமைத்தும் பலபோராளிகள் போராடினர். பண்ணைகளை அச்சுறுத்தி ஒடுக்கினர். மணலூர் மணியம்மா, மணலி கந்தசாமி, சீனிவாசராவ், ராமச்சந்திரன், வீராச்சாமி, களப்பால் குப்பு, அமிர்தலிங்கம், ராமானுஜம், வெங்கடேசன், வாட்டாக்குடி இரணியன், சாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் போன்ற தோழர்களில் பலர் தங்கள் உயிரையும் தந்து பாட்டாளி மக்களுக்காகப் பாடுபட்டனர். 

"கூலிக்காரப் பசங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி பக்கத் தொணையா நிக்குது, ஒண்ணும் தெரியாம மாக்கானுக்களாகக் கெடந்த பயல்களுக்கு ராப்பள்ளிக் கூடம் வச்சி பேசவும் கொடி தூக்கவும் கத்துக் கொடுக்கிறானுங்க." (செந்நெல்) என்று கம்யூனிஸ்ட் கட்சியினரின் செயல்பாடுகளைப் பற்றிய பண்ணை முதலாளிகள் கூற்று வெளிப்படுத்துகிறது. அக்கட்சியைச் செங்கொடி இயக்கம் என்று நாவல்கள் குறிப்பிடுகின்றன.

பண்ணை அடிமைகளின் நிலை உயரல் 

பண்ணை அடிமைகள் தங்களுக்கு மறுக்கப்பட்டிருந்த கல்வியைப் பெறுவதில் ஈடுபட்டனர். கூலி உயர்த்தவில்லையெனில் வயலில் இறங்கி வேலை செய்ய மறுத்தனர். கம்யூனிஸ்ட் ஆட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். நெல்லைக் கூலியாகப் பெறுவதிலிருந்து மாறி பணத்தைக் கூலியாகப் பெற்றனர். வேலை பார்க்கும் நேரத்தை வரையறுத்துக் கொண்டனர். தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெறவும், பண்ணைகளை எதிர்த்துப்பேசவும் துணிவைப் பெற்றனர். பண்ணையாளர்கள் அவர்களைத் துன்புறுத்திய போதும், கொன்ற போதும், மானபங்கப்பபடுத்திய போதும், கீழவெண்மணியில் தலித் மக்களின் குடிசைகளை நெருப்பு வைத்து அவர்களைத் தீக்கிரையாக்கிய போதும் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வெற்றியைப் பெற்றனர். 

மனிதனை மனிதன் பிடுங்கித்தின்னும் கொடிய அவலத்தையும், பாட்டாளிகள் தங்கள் மண்ணிலேயே வாழ உரிமையின்றி அந்நியப்படுத்தப்பட்ட கொடுமையையும், ஒருவேளை உணவுக்காக ஒருநாள் முழுவதும் அல்லாடும் துன்பத்தையும்,அவர்களின் உழைப்பை அட்டையாக உறிஞ்சி வாழும் பண்ணை முதலாளிகளின் ஏமாற்றுப் போக்கையும், அதனை அம்பலப்படுத்தும் இயக்கங்களையும் பற்றி நாவல்கள் பறைசாற்றுவதை மேற்கண்ட கட்டுரை வழியாக உணர முடிகிறது. 

- சு.வடிவுக்கரசி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, ஏனாதி இராசப்பா கல்லூரி, பட்டுக்கோட்டை

Pin It