ஐரோப்பியர் வருகை, அச்சியந்திர அறிமுகம், ஆங்கிலக் கல்வி வாய்ப்பு முதலான அகப்புறச் சூழல்களே தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோன்ற வாய்ப்பளித்தன. தமிழில் உருவான உரைநடை இலக்கிய வகைகளில் சிறுகதை என்பது கடைசி வரவு. தமிழில் நாவல்கள் தோன்றி ஐம்பதாண்டுகள் கழித்தே தமிழ்ச் சிறுகதைகள் உருவாயின. உரைநடை இலக்கியங்களில் சிறுகதைதான் கடைசிக் குழந்தை என்பதால் கடைக்குட்டியின் மீது எல்லோருக்குமே ஒரு தனி ஈர்ப்பு இருப்பது இயல்புதானே.

pollachi abi short storiesதமிழில் சிறுகதைகள் பிறந்து இன்னும் ஒரு நூற்றாண்டைக் கூடக் கடக்கவில்லை.1926 இல் வ.வே.சு.ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதையிலிருந்துதான் தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு தொடங்குகிறது. முதல் ஐம்பதாண்டு களிலேயே தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகள் எல்லாம் எழுதப்பட்டு விட்டன என்ற நம்பிக்கை எனக்குண்டு. இரண்டாம் ஐம்பதாண்டுகளில் தமிழ்ச் சிறுகதைகள் அந்தப் பழம்பெருமையைக் காப்பாற்றித் தக்கவைத்துக் கொள்ளவே பெரும்பாடு படவேண்டியுள்ளது.

இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். கவிதைகளை நேசிப்பது வாசிப்பது என்பதைவிட ஒருபிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதைகளை நேசிக்கிறேன், வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மெளினியை, ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர்களையும் நான் வாசிக்கிறேன். செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதைகளில் மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு? தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி, நாடித் துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து, கூட்டுக்கு வந்ததும் ஆறஅமர வயிற்றிலேயே சிலபல வேதிமாற்றங்களைச் செய்து அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே, அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும். வாழ்க்கை அவர்களின் படைப்பில், படைப்பாற்றலில் வேதிமாற்ற மடைந்து அழியாத கலையாகிறது! இலக்கியமாகிறது.

சிறுகதை என்பது சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதைசொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை, கதைகள் வேறு இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதாபாத்திரங் களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ அல்லது இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்ற ஆற்றின் ஓருகரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்றுநீரில் சிலகணங்கள் முக்கி எடுத்து விடுகிறான். முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்சநேரம் பிடிக்கிறது. உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்துமோதிய ஆற்றுநீரின் வேகம், குளிர்ச்சி, வாசம், சுவை இவை களெல்லாம் நம்நினைவில் மீண்டும் மீண்டும் அலைஅலையாய் வந்து மோதி நம்மைப் பரவசப் படுத்துகின்றன. ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப்போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது, நமக்கு அதைப்பற்றிக் கவலை யுமில்லை. நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப் பெருக்கைத்தான் நமக்குத் தெரியும். நம்உறவு அதனோடுதான். அதுதந்த அதிர்ச்சி, சிலிர்ப்பு, மகிழ்ச்சி, பரவசம் இவைகள்தாம் நமக்கு முக்கியம். சிறுகதைகளும் அப்படித்தான். நண்பர் பொள்ளாச்சி அபியின் சிறுகதைகளும் சற்றேறக்குறைய அதைத்தான் செய்கின்றன.

பொள்ளாச்சி அபியின் “எங்கேயும் எப்பொழுதும்” சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினேழு சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலான சிறுகதைகள், அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே சிறுகதை வடிவம் பெற்றிருக்கின்றன என்று ஊகிக்க முடிகிறது. எழுத்தாளர் அபியின் சிறுகதைகளுக்கான படைப்புலகம் மிக விரிந்தது. அவரது கதைகளின் மைய அச்சு உயிர் இரக்கம். அபியின் உயிர் இரக்கச் சிந்தனை மனிதநேயத்திற்கும் மேலானது. வள்ளலாரின் ஜீவகாருண்யச் சிந்தனையை ஒத்தது. இவரின் சிறுகதைகள் மனிதர்கள் மீதான கரிசனத்தோடு மட்டும் நிறைவடைந்து விடவில்லை. சிட்டுக்குருவிகள், யானை, நாய், புளியமரம் என்று உலகின் அனைத்து உயிர்களின் வதை மற்றும் வாதைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றது. உயிர் இரக்கம் என்ற மைய அச்சினைச் சுற்றியே அவரின் கதைகள் இயங்குகின்றன.

எழுத்தாளர் அபியின் சிறுகதைப் படைப்பாக்க உத்திகளில் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது அவரின் நடைநலமும் கதைசொல்லும் பாங்கும். நிகழ்வுகளை வருணிக்கும் தருணங்களிலும் மனவுணர்வுகளை எழுத்தில் வடிக்கும் செய்நேர்த்தியிலும் அபி நல்ல தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதனை அவரின் சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக “அவள் அப்படித்தான்” சிறுகதையின் காமாட்சி, மகனால் நிராதரவாக விடப்பட்ட சூழலில் தமது அறுபது வயதிலும் ஆட்டிறைச்சிக் கடை வைத்துப் பிழைத்துவருபவள். கதைப்போக்கில் காமாட்சி, ஆட்டினை அறுத்து விற்பனைக்கு இறைச்சியினை தயார் செய்யும் நிகழ்வினை எழுத்தாளர் அபி எப்படி எழுத்தில் வடித்துள்ளார் என்று பாருங்கள்.

ஆட்டின் தலைப்புறம் வந்துநின்ற காமாட்சி, கிழக்கு நோக்கி நின்று, கையில் கத்தியுடன் கைகுவித்து, ஏதோ முணுமுணுத்தாள். பின்னர் குத்துக்காலிட்டு அமர்ந்தவள், ஆட்டின் தலையை இடதுகையால் அமுக்கிப் பிடித்துக் கொண்டு, அதன் குரல்வளையின் அடிப்புறத்தில் கத்தியை வைத்ததுதான் தெரியும். வலியால் துடித்த ஆட்டின் கடைசிநேர அலறல். “க்ளக்..” என்ற சப்தத்துடன் முடிந்தது. ஆத்தாவின் செயலில், கொஞ்சம்கூட இரக்கமோ, தயக்கமோ, கைநடுக்கமோ இல்லை. காரியத்திலேயே கண்ணாக இருந்தாள்.

ரத்தம் கொப்பளித்து தெறித்த நான்கு விநாடிகளுக்குள், தலையை தனியே அறுத்து எடுத்த காமாட்சி, அதனை அருகிலிருந்த கல்மேடையில் வைத்துவிட்டு, துள்ளிக் கொண்டிருந்த ஆட்டின் உடலுக்குக் கைலாகு கொடுத்தபடியே.. உம்..தூக்குடா..” எனச்சொல்ல, அதற்காகவே காத்திருந்த கோபாலும், சடக்கென்று தூக்கி, தொங்கிக் கொண்டிருந்த கொக்கியில் தலைகீழாக மாட்டினார்கள். தொங்க விடப்பட்ட ஆடு ஊசலாடாதவாறு, காமாட்சி பிடித்துக் கொள்ள, அதன் கழுத்திலிருந்து ஒழுகும் இரத்தத்தைப் பிடிக்க வாகாக, ஒருவாளியை எடுத்து வைத்தான்.

ரத்தம் முழுதாக வடிந்திருந்தது. தொங்க விடப்பட்ட ஆட்டின்முன் வந்துநின்ற காமாட்சி, அதன் கழுத்தில் கத்தியை வைத்து, மெதுவாய் நெஞ்சு, வயிறு, கால்கள்.. எனகத்தியை இறக்கிக் கொண்டே வந்தாள். ரத்தமும், கொழுப்பும் கசியக்கசிய, எங்கேயும் சிறுபிசிறு கூடஇல்லாமல், தோலை முழுதாய் உரித்தெடுத்ததில், அவளது செறிவான அனுபவம் தெரிந்தது.

கதையின் ஊடாக நிகழும் நிகழ்வுகளை அப்படியே மனக்கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தக்கூடிய வகையில் எழுத்தாளர் வருணிக்கும் மேற்கண்ட பகுதி அவரின் நடைநலத்திற்குத் தக்கதோர் சான்றாகும். அபியின் பெரும்பாலான சிறுகதைகள் இவ்வகை நடைநலத்தோடு சிறக்கின்றன என்பது இத்தொகுதியின் தனிச்சிறப்பாகும்.

இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற சிறுகதையின் கதைத் தலைவன் சண்முகம் இலண்டனில் நடைபெற்ற இசைத் திருவிழாவில் தமது குழுவினர் வாசித்த பறையிசை நிகழ்ச்சியின் பதிவினைத் தாம் பயணம் செய்யும் டாக்சியில் இசைக்கச் செய்கிறான். பறையிசையின் இசைப் பயணத்தை எழுத்தாளர் அபி விவரிக்கும் சிறுகதையின் பகுதி உண்மையில் மிகப் பரவசமான சொற்கோர்வைகளைக் கொண்ட பகுதியாகும்.

நேரம் செல்லச் செல்ல, பறையின் தாள இடைவெளி சுருங்கிக் கொண்டேபோய், இரட்டைத் தாளம், முத்தாளம் எனவேகம் அதிகரிக்க, அதிகரிக்க, பறை இப்போது அதிரத் துவங்கியது. டண்டணக்கு.. டண்டணுக்கு. ட்ரங்.ட்ரங்... டண்டணுக்கு ட்ரங்ட்ரங்.., பறையின் அதிவேகத் துடிப்பு, பாய்ந்து செல்லும் குதிரையாக, நிலமதிர வேகமெடுத்து நடக்கும் யானையின் ஆக்ரோஷமாக, சமவெளியில் பாய்ந்து கொண்டிருந்த காட்டாறு, சொரேலெனப் பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்வதாக.. பறை, தனது தாளகதியில் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது.

நீர்வீழ்ச்சியாய்க் கொட்டிக் கொண்டிருந்த பறையோசையின் வேகம், சட்டென்று ஒரு அணைக்குள் அடைபட்டதுபோல அமைதியான ஒருநொடியில், ஒருவயலினும், கிளாரிநெட்டும் ஒன்றாய் தமது ஒலியை எடுத்தவுடன் உச்சத்தில் ஒலிக்கத் துவங்க, அதேவேகத்துடன் இணைந்து சில பறைகளும் பின்னணியில் ஒலிக்க, இப்போது மேலும் சில இசைக்கருவிகள் அந்தக் கோர்ப்பில் கலந்து கொண்டன. ஒவ்வொரு கருவியும் அதனதன் அளவில் ஒலித்த அந்த இசையின் வெளிப்பாட்டில் இப்போது வேறொரு பரிமாணம் தெரிந்தது.

இந்தியாவின் பாணியில் துவங்கித் தொடர்ந்த இசையில், பிரிட்டிஷ் பாணி, அமெரிக்க பாணி, ஆப்பிரிக்க, ரஷ்ய, சீன, ஜப்பான் பாணிகளெனத். தொடர்ந்து, மீண்டும் இந்திய பாணியிலான இசையிலும் தாளகதியிலும் முடிவடைய, சர்வதேச இசை வடிவங்கள் அத்தனைக்கும் ஈடுகொடுத்த பறையும், ஆறாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் மெதுவே தரையிறங்கி நிற்பதுபோல ஒலித்து ஓய்ந்து நிற்க,

இசையோடு சஞ்சரிக்கும் மனவுணர்வுகளை எழுத்தில் வடிக்கும் எழுத்தாளர் அபியின் இச்செய்நேர்த்தி நம்மை வியப்பிலாழ்த்துகிறது. பருப்பொருட் களாலான காட்சிகளை வருணிப்பதில் எழுத்தாளர்கள் வெற்றி பெறுவதென்பது எளிது. ஆனால் இசையனுபவம் போன்ற நுண்ணுணர்வுகளை எழுத்தில் வடிப்பது அத்தனை எளிமையான செயலன்று. எழுத்தாளர் அபிக்கு இத்திறன் இயல்பாகவே வாய்த்திருப்பது பாராட்டுதற்குரியது.

அபியின் கதைசொல்லும் திறன் இத்தொகுப்பில் பல இடங்களில் உச்சத்தைத் தொட்டு நிற்கின்றது. குறிப்பாக, யானை ஒரு பாத்திரமாக வந்து நம்மை நோக்கி நியாயம் கேட்கும் “நீயே சொல்லு சார்!” என்ற கதையையும் புளியமரம் தன் சோகக் கதையினை வாசகர்களாகிய நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் “இதுதான் விதியா” என்ற கதையையும் நாம் சான்றாகக் குறிப்பிடமுடியும். கதையின் போக்கில் இரண்டு கதைகளுமே எதிர்பாராத ஒரு முடிப்பில் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன. மனிதர்கள் கதை சொல்வது போலவே எழுதிச் செல்லும் ஆசிரியர் கதை முடியப்போகும் கடைசி நிமிடத்தில் கதை சொன்னது யானை என்றும் புளியமரம் என்றும் முடிக்கிறபோது கதைகள் நம்மைத் திடுக்கிடச் செய்வதோடு மட்டுமல்லாமல் கதையின் அடர்த்தியும் கூடி பிரச்சனைகளின் வீரியத்தையும் விரிவுபடுத்தி நிற்கின்றன. குறிப்பாக, “இதுதான் விதியா” என்ற கதையில் ஓர் ஊமைப்பெண் கதை சொல்லிக் கொண்டு வருகிறாள் என்று கருதியிருக்கும் வாசகன்,

அவர்கள் இன்னும் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவன் தன்வலது தோளில் தொங்க விட்டிருந்த கோடாரியின், விளிம்பை இடதுகை விரல்களால் பரீட்சித்துக் கொண்டே வருவதும் தெரிந்தது. அறைவது என்றால், முதலில் இவனைத்தான் அறைய வேண்டும். எனக்கு மனதுக்குள் வன்மம் கிளர்ந்தது. அதனை அவனும் உணர்ந்தானோ என்னவோ.., கோடாரியைத் தோளிலிருந்து வாகாய் கைகளில் பற்றிக் கொண்டான். அருகே.. அருகே.. இன்னும் நெருங்கி அருகே.., எனது கையெட்டும் தூரத்தில் வந்துவிட்டான்..

கண்ணிமைக்கும் நேரத்தில்.., “அம்மா..” அவன் முந்திக் கொண்டு எனது கால்பகுதியில் வெட்டியதில்.. நான்தான் அலறினேன். வலியால்
உயிரைப் பிடுங்கும் எனது மரணஓலம் மட்டும் காற்றின் வழியே பரவி மற்றவர் காதில் விழுமென்றால், ஊரே அங்கு திரண்டிருக்கும். ஆனால் அதுதான் எப்போதும் நடக்காதே..!

அதற்குப்பின், அவர்கள் மளமளவென்று என்மீதுஏறி, ஆங்காங்கே கயிறுகளால் பிணைத்து என்னைத் துண்டு துண்டாக அறுக்கத் துவங்கினார்கள். முப்பதாண்டுக் காலத்தின் எனது நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் துவங்கியது.!

என்ற வரிகளைப் படிக்கும்போது அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து போவது நிச்சயம். ‘கண்ணிமைக்கும் நேரத்தில் அவ் ஊமைப்பெண்ணின் கால்பகுதியைக் கோடாரியால் வெட்டினான்’ என்ற பகுதியை வாசிக்கும் வரையிலும் கதைசொல்வது புளியமரம்தான் என்பது தெரியாத வாசகனின் மனநிலை எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தால் படைப்பின் சிறப்பு புரியும்.

எழுத்தாளர் பொள்ளாச்சி அபியின் சிறுகதைகள் வெறுமனே கதை சொல்லலோடு முழுமை பெறுவதில்லை. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் முழுமை என்பது அதன் அரசியல் பார்வையோடு தொடர்புடையது. கதையின் ஊடாக வெளிப்படும் படைப்பாளியின் சமூக விமர்சனங்களும் எதிர்க்குரல்களுமே இத்தொகுதியின் தனித்த அடையாளம். அபியின் பெரும்பாலான கதைகள் எந்த அரசியலையும் தனித்த அடையாளங்களோடு உரத்த குரலில் பேசுவதில்லை. மாறாக, எல்லாக் கதைகளின் ஊடாகவும் இழையோடும் நுண்அரசியலோடு இத்தொகுப்பு இயங்குகின்றது. அந்த நுண்அரசியலே படைப்பாளியின் முற்போக்குச் சிந்தனைகளின் முகவரியாகும்.

மத அடிப்படை வாதங்களுக்கு எதிராகவும் சாதீயச் சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராகவும் அபி தமது எதிர்க்குரலைத் தொகுதி முழுவதிலும் பதிவு செய்கிறார். “புயலின் மறுபக்கம்” என்ற கதை மத அடிப்படை வாதங்களுக்கு எதிரான, மதம் கடந்த மனிதநேயத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. அதேபோல் “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற சிறுகதை, இன்னமும் இந்தியக் கிராமங்களில் நடைமுறை யிலிருக்கும் இரட்டைக் குவளை முறை என்ற அவலத்தையும் “கரை கடந்த நதி” என்ற சிறுகதை இந்து மதத்தின் உயிர்நாடியாக மதவாதிகள் கொண்டாடிவரும் வருணாசிரம தர்ம அநீதியையும் வெட்ட வெளிச்சமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

இத்தொகுப்பில் உள்ள “சுத்தம்” என்ற தலைப்பிலான சிறுகதை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இக்கதை இந்தியாவைச் சுத்தமாக்குவோம் என்ற மத்தியஅரசு முழக்கத்தின் உண்மையை யதார்த்தங்களோடு இணைத்துச் சித்தரிக்கிறது. கதையின் போக்கில் தபாலாபீசின் அழுக்கைப் பற்றிப் பேசும் எழுத்தாளர்,

ரெக்கார்டு ரூம், ஸ்டாப் ரூம், கழிப்பறைகள் என எல்லா வற்றிலும், அழுக்கு.. அழுக்கு.. லஞ்சம், ஊழலைப்போல இண்டு இடுக்கு எல்லா இடத்திலேயும் அழுக்கு.. கால்படும் இடத்தில் அழுக்கு., கண்படும் இடத்திலும் அழுக்கு.. எல்லா இடத்திலேயும் அழுக்கு. அலுவலகம் துவங்கப்பட்ட திலிருந்து இதுவரை துடைக்கப்படாத அழுக்கு. வாரிசு அரசியல் போல வந்து கொண்டேயிருந்த அழுக்கு..,

என்று போகிற போக்கில் ‘அழுக்கு. வாரிசு அரசியல்போல வந்து கொண்டேயிருந்த அழுக்கு..’ என்று தமது அரசியல் சாட்டையைச் சுழட்டிக் கொண்டே போகிறார். கதையின் முடிவில் தூய்மை தேசத்தைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர். அலுவலகம் சுத்தமாயிருப்பதைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் நேற்று அலுவலகத்தைச் சுத்தம் செய்த வேலையாள் இன்றைய வயிற்றுப் பாட்டிற்கு ஏதாவது வேலை கிடைக்குமா? என்று ஒட்டிய வயிற்றுடன் காத்துக் கொண்டிருக் கிறான் என்பதனை,

இன்றைக்கும் ஏதாவது நமக்கு வேலையிருக்குமா என்ற ஆவலில் சுற்றுச்சுவருக்கு அந்தப்புறமாக நின்று, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சுதந்திரம். இன்றைக்கும் அவரது வயிறு ஒட்டிப் போய்த்தான் இருந்தது.

என்று முடிக்கிறார் ஆசிரியர். அந்த வேளையாளின் பெயர் சுதந்திரம். சுத்தத்தைப் பற்றிச் சத்தமாகப் பேசிக்கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவில் இன்னமும் ஏழ்மையும் வறுமையும் ஒழிக்கப்படவில்லை என்ற யதார்த்தத்தை படைப்பாளி சொல்லும் நேர்த்தி பாராட்டத்தக்கது.

      அடுத்து இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள “நமக்கும் தெரிந்த முகங்கள்” என்ற சிறுகதை தனித்து அடையாளம் காணத்தக்க கதைகளில் ஒன்றாகும். இக்கதை இந்திய ஜனநாயகத்தின் கோர முகங்களில் ஒன்றாக விளங்கும் முதலாளித்துவ முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வங்கிகளில் சில ஆயிரங்களைக் கடனாக வாங்கிக் கட்ட முடியாமல் திண்டாடும் அடித்தட்டு உழைக்கும் மக்களை ஆள்வைத்து மிரட்டி உருட்டிக் கொடுமைப்படுத்தும் வங்கிகள் பல்லாயிரம் கோடிகளைக் கடனாக வாங்கி ஏப்பம்விடும் பெருமுதலாளிகளிடம் கைகட்டிக் கூழைக் கும்பிடு போட்டுப் பல்இளிக்கும் அவலத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. நமக்கும் தெரிந்த முகங்கள் என்ற கதைத் தலைப்பே இக்கதையின் உண்மைக் கதாபாத்திரங்களை நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

இக்கதையின் முதன்மைப் பாத்திரமாகிய வங்கி மேலாளர் சபேசன், வாங்கிய கடனை ஒழுங்காக அடைக்காத கூலித் தொழிலாளியை ஆள்வைத்துத் தேடிக் கொண்டுவந்து மிரட்டிய அதே கோப முகத்தோடு தொழிலதிபரை எதிர்கொள்ளக் கூடாதே என்று எண்ணத்தில்,

சபேசன், அடுத்த நொடியே.. டாய்லெட்டை நோக்கி ஓடினார். அங்கிருந்த கண்ணாடியில், தன்னிடம், கோபத்தின் சாயல் ஏதேனும் இன்னும் தெரிகிறதா..?’ என்று தனது முகத்தைப் பார்த்துச் சிலவிநாடிகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். கைக்குட்டையை எடுத்து மெதுவாக முகத்தில் ஒற்றியபடி, 'ஹூம்.. நல்லவேளை. அவர் பயந்ததுபோலஅப்படி யொன்றும் சாயல் தெரியவில்லைஎன்பதில் நிம்மதி அடைந்தார். டாய்லெட்டி லிருந்து வெளியேறி தனது அறையை நோக்கி வேகமாக வந்தவருக்கு, திடீரென நினைவில் பொறிதட்டியது. ‘அப்போது கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தபோது, கோபத்தின் சாயல் தெரியவில்லை. ஆனால்ஏதோவொரு பிச்சைக்காரன் சாயல் தெரிந்ததோ.? ஊஹும்.. . இப்போது அதனை யெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க நேரமில்லைஇராமகிருஷ்ணன் காத்திருப்பார்

என்று கதையாசிரியர் விவரிக்கும் பகுதியில் இடம்பெற்றுள்ள நையாண்டியை ரசிக்காமல் அப்பகுதியை நம்மால் கடக்கமுடியாது. கோபத்தின் சாயல் தெரியக்கூடாது என்று கண்ணாடியில் சர்வ ஜாக்கிரதையாகத் தம்மைச் சோதித்துக் கொண்ட சபேசனின் முகத்தில் பிச்சைக்காரனின் சாயல் வெளிப்பட்டதாக ஆசிரியர் எழுதும் பகுதி இத்தொகுப்பின் மிக முக்கியமான பகுதி என்பதில் ஐயமில்லை.

      இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எழுத்தாளர் அபி வளர்ந்துவரும் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் என்பதோடு தமிழின் தலைசிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராக வளர்வார் என்பதற்கான அடையாளங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள எங்கேயும் எப்பொழுதும் என்ற இச்சிறுகதைத் தொகுதி வளர்தமிழின் இன்றியமையாததோர் புதுவரவு என்பதில் துளியும் சந்தேகமில்லை. தொடர்ந்து பல நல்ல படைப்புகளைப் படைப்பதோடு சமூகத்திற்கும் ஆக்கபூர்வமான வகையில் இப்படைப்பாளி பணியாற்றிட வேண்டுமென நான் விழைகின்றேன். சமூகம் சரியான புரிதல்களோடு முற்போக்குச் சிந்தனைகளைப் படைப்பின் வழி அளிக்க விரும்பும் பொள்ளாச்சி அபியின் படைப்பாக்கப் பணி வாழ்க! வளர்க!!

- பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ, தமிழ்த்துறைத் தலைவர், தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி-8

Pin It