‘இங்கேயும் ஒரு ஆரண்ய காண்டம்’ நூலாசிரியர் ஆட்டனத்தி என்னும் தண்டபாணி அவர்கள் வனத்துறையில் வனசரகராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். தன்னுடைய வனம் சார்ந்த அனுபவங்கள், காடுகளின் வகைகள், வனவிலங்குகள், சுற்றுச்சுழல் பாதுகாப்பு போன்ற பலதரப்பட்ட விவரங்களையும் இந்த நூலில் பேசியுள்ளார். தென்னிந்திய வனங்கள், அவற்றில் வளரும் மரவகைகள் மற்றும் புல் வகைகள், பறவை இனங்கள், விலங்கினங்கள், ஊர்வன என்று அனைத்தையும் நம் கவனத்தில் கொண்டுவருகிறது இந்நூல். இது ‘பேசும் புதியசக்தி’ இதழில் தொடராய் வெளிவந்து நியூ செஞ்சுரி புக் ஹவுசின் வெளியீடாக வந்திருக்கிறது.

வனத்துறையினரின் பணி : 

aattanathi bookஇயற்கை வளங்களை மனிதன் அழிப்பதலிலிருந்து தடுக்கும் வேலையை வனத்துறையினர் செவ்வனே செய்து வருவதை இதில் சுட்டியிருக்கிறார் ஆசிரியர். தமிழகத்தில் இருக்கும் மலைகள், காடுகள் இவற்றில் இருக்கும் மரங்கள் மற்றும் பல்லுயிரினங்களின் புள்ளிவிவரக் கணக்கை எடுப்பது, விறகுக்காகவும் ஏற்றுமதிக்காகவும் மரம் வெட்டும் செயலைத் தடுப்பது, விலங்குகளை அவற்றின் தோலுக்காகவும் மாமிசத்துக்காகவும் வேட்டையாடுவதைத் தடுப்பது என்ற பணிகளை தான் பணியாற்றிய காலகட்டத்தில், செயல்பட்ட விதம் குறித்தும் அதன் இடர்பாடுகள் குறித்தும் பேசுகிறார்.

காடுகளில் தேக்கு, சந்தனம், ஈட்டி, மூங்கில் மரங்களை விளைவிப்பது, அவற்றை நாசக்காரர்கள் அழிக்காமல் காப்பாற்றுவது, அவற்றின் எண்ணிக்கையை எப்படி எண்ணுவது. எப்படி இந்திய வரைபடத்தில் காடுகளை Dense, medium, scattered என்று பாகுபடுத்துவது என்பதை விளக்கியுள்ளார்.

வனங்கள் எங்கும் முளைக்கும் லண்டானா செடிகள், வனங்களில் மிருகங்களின் உணவுக்கான தாவரங்களை முளைக்கவிடாமல் செய்வதால், விலங்குகள், மக்கள் விளைவிக்கும் விளைச்சல் நிலங்களை நோக்கி நகரும் சாத்தியங்கள் உண்டாகிறது. அதனால் லண்டானா என்னும் புல்லுருவிகளை அழிக்கும் முயற்சியும் வனத்துறைக்கானதே என்பதை சுட்டுகிறார். அதுபோலவே மனித குலத்துக்கு அழிவை கொடுக்கும் கஞ்சா போன்ற போதைக்கான செடிகளை விளைவிக்கும் முயற்சிகளை முறியடித்து அப்படி பயிரிடப்பட்டதை அழிக்கும் வேலையும் அதில் வனத்துறையினருக்கு இருக்கும் அபாயங்களையும் சொல்கிறார். வனத்துறையினர் அணுகமுடியாத செங்குத்தான மலைகளின் மீது பயிரடப்படுகின்றன கஞ்சா பயிர்கள். மலையேறும் பயிற்சிகள், அதற்கான ஹன்டர் காலணிகள், நாட்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் நாசக்காரர்களை எதிர்க்க மஸ்கட் 410 வகை துப்பாக்கிகளும் இதற்காகவே வனதுறையினருக்குக் கொடுக்கப்படுகின்றன.

வியத்தகு தரவுகள் : 

இந்த நூலானது, வனம் சார்ந்த, நாம் அறிந்திராத பலவித தரவுகளை நம் முன் வைக்கிறது. சந்தன மரக்கட்டைகளில் சிறிய வரிகள் இருப்பதால் சிறுசிறு சிற்பங்கள் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதை சொல்கிறது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் இருப்பதை அறிவோம். களக்காடு வனங்களில் செங்குறிச்சி மரங்கள் இருப்பதாகவும் அவை முழுமையும் சிவப்பு நிறத்தில் இருப்பதும், ரயில்வே துறையினருக்கு ஸ்லீப்பர் படுக்கைகள் செய்ய இந்த மரங்கள் பயன்படுத்தப்பட்டதையும் சொல்கிறது. செங்குறிச்சி தோட்டத்தை 1910 – 1917 ஆங்கிலேயர்கள்தான் முதன்முதலில் பயிரிட்டு வளர்த்திருக்கிறார்கள் என்னும் கூடுதல் தகவலும் இருக்கிறது.

இதனிடையில் ஆங்கிலேயர்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு விவரம் என்னவென்றால், தொடக்க காலங்களில், 16, 17ஆம் நூற்றாண்டுகளில் நம் இந்திய மன்னர்களும் இந்தியாவுக்கு வந்த போர்சுகீசியர், ஆங்கிலேயர்களும் நம் வனங்களில் இருந்து தேக்கு, மூங்கில், சந்தனம் போன்ற மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்துள்ளனர், வேட்டையாடி ஏராளமான விலங்கினங்களும் அழிக்கப்பட்டு வந்த நிலையில் ஆங்கிலேயரும் மருத்துவரும் இயற்கை ஆர்வலருமான கேலக்ஹார்ன், Dr. Cleghorn, அவர்கள், இந்திய காடுகளையும் அதிலிருக்கும் விலங்கினங்களையும் பாதுகாக்க வேண்டி, தாவரவியல் பூங்காக்களை (Botanical Gardens) பெங்களூரு, ஊட்டி போன்ற இடங்களில் மற்றொரு இயற்கை ஆர்வலரான திரு. பெட்டோம், Beddome, அவர்களுடன் இணைந்து உண்டாக்கினார். அதனால் தான் அவரை இன்றும், ‘Father of Indian Forest Conservancy’ என்று அழைக்கிறார்கள்.

கன்னிமாரா தேக்கு என்று சொல்லப்படும் தேக்கு மரமொன்று டாப் ஸ்லிப்பில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பதையும், மிகவும் பழமை வாய்ந்த, அதிக சுற்றளவுள்ள அந்த மரம் அரசின் ‘மகா விருஷ புருஷ்கர் விருது’ வாங்கியிருக்கிறது என்ற தகவலும் புதிதே, படிப்பவர்களுக்கு.

ஒவ்வொரு காடுகளிலும் மரவகைகள், மிருகங்கள், பறவையினங்கள் வேறுபடுவதை அவற்றின் பெயர்களோடு சுட்டுகிறார் ஆட்டனத்தி அவர்கள். முண்டந்துறையில், வெப்பாலை, எழிலைப்பாலை, தான்றிக்காய், நெல்லிக்காய், தாழை, சொரப்பாலை, மஞ்சக்கடம்பு, இருவல்லி போன்ற மரவகைகள் வளர்கின்றன.

டாப் ஸ்லிப் காடுகளில் பில்ல மருது, கருமருது, தேக்கு வெள்ளைநாகன், வெண்தேக்கு, தோதகத்தி என்னும் பேரு மரங்களும் சிறு மூங்கில் கூட்டங்களும் இருப்பதாக சொல்கிறார்.

இருவாட்சி பறவை, தீக்காக்கை, உன்னிக்கொக்கு, மீன்கொத்திப் பறவை, மரங்கொத்தி, அரசவால் ஈபிடிப்பான் போன்ற பறவைகள் இங்கு காணப்படுவதாக குறிப்பிடுகிறார்.

தேனீக்கள், புல் வகைகள், மழையின் வகைகள், பாம்பின் வகைகள் என்று நிறைய விவரங்களையும் தரவுகளையும் பேசுகிறது இந்த நூல்.  

உசிலவாடி, தளவாடி, கெட்டவாடி, தட்டவாடி, அரேப்பாளையம், புருஞ்சூர், சிக்கல்லி, கேர்மாலம், பரளியாறு என்று பல மலைகிராமங்களும் அங்கு உணவாய் மக்கள் எடுத்துக்கொள்ளும் சோளக்களி, கீரை குழம்பு, மீன் குழம்பு, வறுவல் என்று நுணுக்கமான விவரங்களையும் தருகிறார் ஆசிரியர்.

டாப் ஸ்லிப் காடுகளில் வளர்ந்திருக்கும் தேக்கு மரங்களுக்கான தொடக்கம் எங்கே என்பது இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. கியூகோ பிரான்சிஸ் ஆண்ட்ரோ என்னும் ஆங்கில அதிகாரி, அங்கிருக்கும் மக்கள், சந்தனம் போன்ற உயரிய மரங்களின் மதிப்பறியாமல் அவற்றை வெட்டி விறகு எரிக்க பயன்படுத்துவதைக் கண்டு, தேக்கு மரவிதைகளை வரவழைத்து அவற்றை இங்கே விதைத்து வளர்த்தார் என்றும், அவர் தான் நடைப்பயிற்சி செல்லும்போதும் களப்பணியில் இருக்கும்போதும், உடன் எடுத்துச்செல்லும் கைத்தடி, walking stick கொண்டு நிலத்தில் ஊன்றி எடுத்து குழி உண்டு செய்து, அதற்குள் தேக்கு விதைகளை விதைத்து வந்தார் என்னும் குறிப்பும் எழுதியிருக்கிறார். அவர் இறந்தபிறகு அவர் வாழ்ந்த அந்த கண்ணாடி மாளிகையிலேயே (Mount stuart glass house) பக்கமாய் அடக்கம் செய்ய அவர் கேட்டுக்கொண்டபடி செய்திருக்கிறார்கள்.

வனங்களில் நெருப்பு பிடிப்பதும், அதனால் அனேக மரங்கள், சில நேரங்களில் முழு காடும் அழிந்து போவதும் நாம் அறிவோம். ஆசிரியர் அது குறித்து விவரம் தருகையில் தீக்கோடுகள் (Fire lines) வெட்டப்படும்போது, காடுகளில் தீ பரவுதலைத் தடுக்க இயலும் என்று குறிப்பிடுகிறார்.

ராமேஸ்வரம் பகுதியில் இருக்கும் சிறுசிறு தீவுகள் குறித்தும் அதில் படர்ந்திருக்கும் பவளப்பாறைகள் பற்றியும் சொல்கிறார். அங்கிருக்கும் முயல் தீவில் இருக்கும் Pearl Oyster Bed என்னும் பவளப்பாறை உலக பிரசித்தமானது என்றும் குறிப்பிடுகிறார். தான் அங்கு பயிற்சியாளராய் பணியாற்றியதையும் அண்டா லஞ்ச், தக்காளி கொத்சு சாப்பிட்ட அனுபவங்களையும் நகைச்சுவையோடு குறிப்பிடுகிறார்.

வனவிலங்குகளுடனான எதிர்பாராத சந்திப்புகளையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மரங்களை எண்ணும் பணியில் இருக்கையில் யானைகள் துரத்த மழையில் ஓடி, தார் சாலை அடைந்து பேருந்து பிடித்து தப்பித்ததையும் களக்காட்டில் இரவு அலுவலை முடித்து கதவு திறந்து வெளியே வருகையில் யானையொன்று வாசலில் நிற்பதைக் கண்டு அலுவலக மேசை மீதே இரவு தூங்கியதையும் குறிப்பிடுகிறார்.

காடுகளிலும் மலைகளிலும் அலையும் வேலையாதலால், பாம்புகளுடனான சந்திப்புகள் அதிகம் என்பதையும், ராஜநாகம் ஒன்றை தவறுதலாய் மிதிக்கவிருந்து தப்பித்ததையும் சொல்கிறார். கிணற்றில் விழுந்த சிறுத்தையைக் காப்பாற்றி வனத்தில் விட்டதையும், சிறுத்தை என்பது அசுத்தமான இரை உண்ணும் பழக்கம் கொண்டது (Dirty Eater) அது தன் இரையை அதன் முடியுடன் சாப்பிடும் என்றும் புலி சுத்தமான பிராணி (Clean Eater) என்பதையும் குறிப்பிடுகிறார்.

சுற்றுச்சசூழல் : 

இந்த புத்தகம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பற்றியும் பேசுகிறது. முதுமலை, டாப் ஸ்லிப், முண்டந்துறை சரணாலயம் போன்ற வனப்பாதுகாப்பு இடங்களில் இருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் நெகிழி பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற குப்பைகளைக் கொட்டி வைக்கின்றனர். மலை கிராமங்களில், வனம் என்று குறிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கென்று விறகுக்கான மரம் வளர்க்க பொது இடங்கள், புறம்போக்கு நிலங்கள், வீட்டைச் சுற்றி தோட்டங்கள், உமி அடுப்பு பயன்பாடு என்றெல்லாம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அரசால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகளோ வனத்தின் சுற்றுச்சூழலை அசுத்தம் செய்வதை மட்டும் தடுக்க வழியில்லை என்று வருத்தம் தொனிக்கச் சொல்கிறார் ஆசிரியர்.

சுற்றுச்சுழல் குறித்த பதிவை ஆழப்படுத்திய ரவீந்திரன் என்னும் வனத்துறை அதிகாரி எழுதிய ‘Green Inspirational Experiences in Forest Services’ என்னும் புத்தகத்தில் உள்ளவற்றை இங்கு நாம் சுட்டவேண்டியுள்ளது.

வனப்பாதுகாப்பு சட்டம் 1980 வருவதற்கு முன் கிட்டத்தட்ட 71000 ஹெக்டர் பரப்பளவுள்ள வறண்ட இலை காடுகளையும் புட்புதர்களையும் அழித்து, யூக்கலிப்டஸ் மற்றும் முந்திரி போன்ற மரவகைகளை சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பயிரிட்டது அரசு. தைல மரங்கள் நிலத்தடி நீரை அடியோடு உறிஞ்சும் வகையைச் சார்ந்தவை என்பதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. அதேபோல, கன்யாகுமரி மாவட்டத்தில், பசுமை மாறா காடுகளை அழித்து, ரப்பர் மரங்கள் 4200 ஹெக்டேரில் நடப்பட்டன. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 4500 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை பயிரினங்கள் உண்டாக்கப்பட்டன. மலைபிரதேசங்களில் அவை நிலச்சரிவுக்கான காரணமாய் அமைகின்றன. இந்திய காடுகளை அழித்தல் கூடாது என்னும் வனப்பாதுகாப்பு சட்டம் 1980 வந்தபிறகுதான் காடுகளை அழித்தல் ( clear felling of trees) கைவிடப்பட்டது.

நம் நாட்டின் தட்பவெப்பம் சார்ந்த மரங்களும் காடுகளும் நம் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலுக்கும் அதை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதரங்களுக்கும் அவசியம் என்பதை ரவீந்திரன் அவர்களின் புத்தகம் சுட்டுகிறது.

வனம் சார்ந்த வாழ்க்கை கடினங்கள் : 

ஆட்டனத்தி அவர்களின் ‘இங்கேயும் ஒரு ஆரண்யகாண்டம்’ நூலில், எத்தனைகெத்தனை வியத்தகு விவரங்களை எழுதியிருக்கிறாரோ, பணியின் நிமித்தமாய் உள்ள கடினங்களையும் எழுத தயங்கவில்லை இவர். காடுகளில் சேகரிக்கும் புல்லினங்களை பிரிப்பதில் இருக்கும் கடினம், சந்தனமர கடத்தல்காரர்களைப் பிடிக்கச் செல்லும்போது, அவர்களின் வருகைக்காக அந்த மலை கிராமங்களின் ஓரமாய் அமைதியாக காத்திருக்க வேண்டியிருக்கையில், அங்கிருக்கும் காய்ந்த மனித மலம், அதன் நாற்றம் அதையெல்லாம் சகிக்க வேண்டிய கட்டாயம் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார்.

கடினமான மலையேற்றங்கள் குறித்தும், செங்குத்தான பாறைகளில் விழுந்துவிடாமல் நடக்கவேண்டிய சாதுர்யம் பற்றியும் விரிவாக சொல்கிறார். நாம் பார்க்கும் மலைபிரதேசங்கள் வேறு, சாதாரண அடர்வில்லா வனங்கள் கொண்ட மலைகள் வேறு. மலைகள் வெப்பத்தை வெளிவிடும் (radiating heat) தன்மை கொண்டவையாதலால், மலை மீது நடக்க நடக்க, போட்டிருக்கும் காக்கி உடுப்புக்குள் வியர்வையும் கசகசப்பும் தாங்கமாட்டாமல் இருக்கும் சிரமங்களையும் குறிப்பிடுகிறார்.

அவசியமான நேசிப்பும வாசிப்பும் :

ஒரு மனிதனின் இயற்கை சார்ந்த வாழ்க்கையின் அனுபவ குறிப்புகள் எழுதப்படுமேயானால், அது அடுத்து வரும் தலைமுறையினருக்கு இயற்கையைப் புரிந்துக்கொள்ளவும் அதை அழிக்காமல் பாதுக்காக்கவும் கற்றுக்கொடுக்கும்.

டில்லி ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் வாக்கர் (C.E. Walker) ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் : ‘ One can retire from one job or another, but one can only retire from life, when one is dead or dummy’ ‘இறப்பிற்கு பின்பே மனித வாழ்க்கையில் இருந்து விடுபட முடியும்’ என்று குறிப்பிடுகிறார். வாழும் வாழ்க்கையின் பதிவுகள் அனுபவச்சுவடுகளாய் காலத்தால் பதிக்கப்படும். ஆட்டனத்தி அவர்களின் இந்த நூலும் அவரின் வனத்துறை வாழ்வை உலகுக்கு எடுத்துரைப்பதோடு நாமும் இயற்கையும் இணைந்து வாழும் வாழ்வே சிறந்தது என்பதையும் காட்டுகிறது. மரங்களையும் விலங்குகளையும் நேசிக்க வேண்டிய சூழலை இப்புத்தகத்தின் மூலம் காட்டிய ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

- அகிலா

Pin It