தோழர் இரா. முருகவேள் அவர்களுக்கு செம்புலம் மூன்றாவது நாவல். செம்புலம் நாவலின் கதைக்களம் இதற்கு முன்பான இரு நாவல்களிலிருந்தும் சற்று வித்தியாசப்பட்டு அதே நேரத்தில் அவருக்கே உரிய சமூக அக்கறையோடு எழுதப்பட்டிருக்கிறது.

ira murugavel novel sempulamதமிழ் மொழியில் பல சுவாரசியமான கதைக்களம் கொண்ட திரில்லர் வகையான துப்பறியும் நாவல்கள் ஆங்கிலம் வழியாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சொல்ல வேண்டுமானால் சிட்னி செல்டான் (Sidney seldon) மற்றும் தோழர் முருகவேளுக்கே மிகவும் பிடித்தமான டான் பிரவுன் (Dawn Brown). அதே நேரம் நேரடியான ஆங்கிலத்தில் கொண்டாடப்படுகிற எழுத்தாளர்களான பிரெட்ரிக் போர்ஷ்ய்த் (Fredrick Forsyth), இர்விங் வாலஸ் (Irving Wallace) போன்றோரும் உள்ளனர். தமிழில் சொல்லவேண்டுமானால் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவைச் சொல்லலாம். இவர்களின் எழுத்துக்கள் சிறந்த வசிப்பனுபவத்தினை தரக்கூடிய த்ரில்லர் வகையினைச் சேர்ந்தவைகள். அந்த வகையில் நின்று சமூக அரசியலை முன் வைக்கிறார் தோழர்.

ரா.கி.ரங்கராஜன் அவர்களின் மொழிபெயர்ப்பில் தமிழில் தொடராக வெளிவந்து பின்பு நூலாக கொண்டு வரப்பட்ட ஹென்றி சாரியாரின் ‘பட்டாம்பூச்சி’ பல ஆண்டுகளுக்கு முன்பு அப்படியொரு புல்லரிக்கும் வாசிப்பனுபவத்தினைத் தந்து நூலோடு பிடித்து வைத்திருந்தது. அப்படியொரு அனுபவம் தோழரின் இந்த நாவலை வாசிக்கும்போது நமக்கு அமைகின்றது.

நாவலின் முதல் பக்கத்திலேயே இந்த நாவல் நம்மை கையைப்பிடித்து அழைத்துச் செல்கின்றது. எந்த நிலையிலும் நாம் நாவலிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட மாட்டோம்.

கொலையுண்ட ஓர் இளைஞனின் சடலத்தில் இருந்து துவங்கி இளம் பெண் ஒருத்தி தன் காதலுக்காக காத்திருத்தலில் முடிவடைகிறது செம்புலம். இதற்கிடையே கொங்கு மண்டலத்தின் சமகால சமூக அரசியல் பொருளாதார மாற்றத்தினை நம்முன் அச்சு அசலாக வைக்கிறார் தோழர் இரா. முருகவேள்.

காவல்துறையினரின் வழக்கமான துப்பறியும் படலம் முதல்பகுதியாக வருகிறது. இந்த நடைமுறைகள் காவல்துறையினரோடு புழக்கத்தில் இருக்கும் நபருக்கு அல்லது காவலராக உள்ள ஒருவரால் மட்டுமே இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்ய இயலும்.

குறிப்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் அதன் நடைமுறையில் எவ்வளவு சிக்கலானதாக இருக்கின்றது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிரானதாக எப்படி அது பயன்படுத்தப்படுகிறது, அதன் தாக்கம் எப்படி திருப்பி அவர்களையே மீண்டும் பாதிப்புக்குத் தள்ளுகிறது என்பதனை பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தின் வழியே ஊடாடுகிறார்.

கொங்கு பகுதியில் மில் தொழில்களில் நடைபெறும் கொத்தடிமை முறைகள் குறித்தும், பெண் தொழிலாளர்கள் எவ்வாறு பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது குறித்தும் நாவல் பேசுகின்றது.

கொங்கு பகுதியில் இடைநிலை நிலவுடைமை சாதியினரிடேயே நவீன முதலாளித்துவ சமுகம் கோருகின்ற மாற்றம் எப்படியாக அவர்களை சாதியரீதியாக அணிதிரட்டுகின்றது என்பதனை ஜெகதீஷ் என்ற பாத்திரம் வழியாகவே நமக்குக் காட்டுகிறார். மனித உரிமை தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு குறித்தும் நாவல் பேசுகிறது.

தலித் இளைஞன் கொல்லப்படுவதில் துவங்கி, மில் தொழிலார்களின் நிலை, விவசாயத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம், நிலவுடைமை சாதிய சமுகத்தில் அதன் தாக்கம், தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு என தோழர் விரிவாகப் பேசுகிறார்.

நாவலானது, மொத்தத்தில் சமூக அரசியல் பொருளாதாளர மாற்றத்தினை அதன் மட்டத்தில் மிகவும் சிறப்பாகப் பேசுகின்றது. அதன் கதாபாத்திரங்களின் வழியே அது பேசுகிறது.

நாவலானது வாசிப்பினூடே நம்முள்ளே சில கேள்விகளை விதைத்துவிட்டுச் செல்கின்றது. அதனை இங்கு பட்டியலிடலாம். முதலாவதாக, தலித் சமூகத்தின் விடுதலையில் தலித் இயக்கங்களின் பங்கு குறித்து... அந்த இளைஞன் சமூக மாற்றத்திற்கான பயிற்சிக்கு சென்று வந்தாகச் சொல்கிறார். பயிற்சி அளித்தவர்கள் யார் எனச் சொல்லியிருக்கலாம். தொண்டு நிறுவனங்கள் தலித் இயக்கங்களின் ஊடாக நின்று எவ்வாறாக செயல்படுகிறது? நடைமுறையில் வன்கொடுமை சட்டத்தினை பயன்படுத்துதற்கு, சில மனித உரிமை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவைகள் எப்படியாக இந்த சாதிய பிரச்சினைகளை கூர்படுத்துகின்றன என்பதனை விவரித்துப் பேசியிருக்கலாம். இப்படியாக தோழர் நாவலில் சமகாலப் பிரச்சினைகளில் அதன் மையப்புள்ளியில் நின்று கொண்டு அதன் அனைத்து போக்குகளையும் அவருக்கே உரிய நுண்ணிய அரசியலை முன் வைக்கின்றார்.

தோழருக்கு வாழ்த்துகளும்! அன்பும்!

செம்புலம்

இரா. முருகவேள்

பொன்னுலகம் பதிப்பகம்

விலை ரூ. 250/-

- சரவணன் வீரையா, ஆசிரியர் குழு, தாமரை இலக்கிய இதழ்

Pin It