15-3-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தினமணியில் ‘தமிழ்மணி’ பக்கத்தில் வழக்கம்போல் கலாரசிகன் (ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன்) எழுதி இருக்கும் வரிகள் வெளிவந்திருக்கின்றன.

தொல்லியல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிப் பணிநிறைவு பெற்ற திரு. கி. சிறிதரன் எழுதி வெளிவந்திருக்கும் நூல் ‘வழிகாட்டும் கல்வெட்டுகள்’ என்பதாகும். கலாரசிகன் அந்நூலுக்கு ஆறு பத்திகள் செலவிட்டிருக்கிறார்.

ஆறாம் பத்தியில் மட்டும்தான் நூல் பற்றிப் பொத்தாம் பொதுவாகச் சில வரிகள் உதிர்த்திருக்கிறார், முதல் அய்ந்து பத்திகளில் இறை மறுப்பாளர். சமய மறுப்பாளர் பற்றியே சாடியிருக்கிறார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் என்று பலரும் கூறுவர், இவர் வாழைப்பழத்தில் கன்னக் கோலையே ஏற்றியிருக்கிறார். இவர் கூற்றை ஒவ் வொரு சிறு பகுதியாக இங்கே எடுத்துக்காட்டி அவற்றுக்கு விடைகூற விழைகிறேன்.

“தமிழ், தமிழன், தமிழினம் என்று ஒருபுறம் பேசிக்கொண்டு. இன்னொருபுறத்தில் இறை மறுப்பு சமய மறுப்பு என்கிற நிலைப்பாட்டைக் கைக்கொள்வது போன்ற பகுத்தறிவின்மை வேறு எதுவும் இருக்க முடியாது” என்று இவர் முன்னுரை எழுதுகிறார், இது அந்நூலுக்கு முன்னுரை போலவா தெரிகிறது; பூணூலுக்கு முன்னுரை போல் அன்றோ தெரிகிறது.

பகுத்தறிவாளரைப் பகுத்தறிவின்மையர் எனக் கலாரசிகன் கூறிக்கொள்வதில் மனநிறைவு கொள்கிறார் போலும்.

இன்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன்பு தோன்றிய பகுத்தறிவாளர் புத்தரைப் பற்றி அவர் அறிந்திருப்பார். புத்தர் கூறிய பொன்மொழிகளில் கடவுள் பற்றிய கருத்தைக் காணமுடியவில்லை, “நீயே உனக்குத்தலைவன். உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலை வராகக் கூடும்? ஒருவர் தன்னைத்தானே அடக்கி ஒழுகக் கற்றுக்கொள்வாரானால் அவர் பெறுதற்கரிய தலைவரைப் பெற்றவர் ஆவார். அழுக்குகளில் எல்லாம் அறியாமை என்னும் அழுக்கு மிகக் கொடியது.

இது பெரிய குற்றம். இவ்வுலகத்தில் தாயை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. தந்தையை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. துறவிகளை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. பேரறிஞராகிய வாலறிவரை (ஞானிகளை) வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. அய்ம்பூதங்களின் சேர்க்கையால் உண்டான பொருள்கள் அழிந்துவிடும்” என்றெல்லாம் புத்தர் பொன்மொழிகள் புகன்றுள்ளார். இன்று உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையினர் புத்தரைப் போற்றிப் பின்பற்றுகின்றனர்.

19ஆம் நூற்றாண்டில் அயோத்திதாசர் முன்னெடுத்த பவுத்தக் கருத்தியல் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான பாதை கட்டமைக்கப்பட்டது. பிற்கா லத்தில் அம்பேத்கரின் பவுத்தச் சமயத் தழுவல் பவுத்த சமயத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்தியது.

இருபதாம் நூற்றாண்டில் குமுகாயச் சீர்திருத்தச் சிற்பி-பகுத்தறிவுப் பேராசிரியர் பெரியாரும் புத்தரைப் பின்பற்றச் சொன்னார்.

இவர்கள் இறைமறுப்பாளர்களாகவே இருக்கட்டும். இறைப் பற்றாளர்களும் பகுத்தறிவாளர்களாகவே இருந் திருக்கிறார்கள். சிவப்பற்றுக்கொண்ட சித்தர்கள் பகுத் தறிவைப் புகட்டி இருக்கிறார்கள். நடமாடும் மனிதர்க்கு ஒன்று ஈந்தால் அது படமாடும் கோவிலுக்குச்சென்று சேரும் என்று திருமூலர் கூறுகிறார். இதையே அறிஞர் அண்ணா. ‘ஏழையின் சிரிப்பில் இறைவன் காண்போம்’ என்றார்.

சிவ வாக்கியர் புரட்சியான கருத்துக்களைக் கூறிச் சென்றுள்ளார். “வேதம் ஓதுவோர் திருவடி ஞானம் பெற்றதுண்டோ? கோயில் எது? குளம் எது? கண்ட இடமெல்லாம் கும்பித்திரியும் மூடர்களே! கோயில் உங்கள் மனத்துக்குள் இருக்கிறது. அது அழிவதுமில்லை. அந்தக்குளம் வற்றுவதும் இல்லை. இறந்தவர்கள் பிறப்பதில்லை. உள்ளத்தின் அழுக்கை உதறாவிடில் உங்களது மவுனமும் ஞானமும் யோகமும் எதற்கு உதவும்? நீங்கள் காட்டில் சென்று தவம் இயற்றினாலும் உள்ளத்தின் அழுக்குப் போகுமா?

நட்ட கல்லைத் தெய்வம் என்று

நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து முணமுணென்று

சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ?

நாதன் உள்ளிருக்கையில்

சுட்டசட்டி சட்டுவம்

கறிச்சுவை அறியுமோ?”

என்றெல்லாம் சிவ வாக்கியர் அறிவுக்கு ஏற்ற புரட்சிக் கருத்துகளைக் கூறியுள்ளார். பெரியார் தமக்கே உரிய அதிரடி முறையில் சொல்லியுள்ளதைப் பாருங்கள். “பெண்களே! கற்சிலையில் கடவுள் காட்சி கண்டீர்களா? கைத்தடியால் அடித்துப் பாருங்கள். அதனால் அவர் நொந்து அழுகிறாரா? அல்லது சினந்து எழுந்து வந்து உங்கள் முன் நிற்கிறாரா? ஒன்றும் நிகழாது. அது கற்சிலை என்று உணருங்கள்” என்று பெண்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

பெரியாரின் பகுத்தறிவுப் படைவீட்டில் மறவராக விளங்கிய பாவேந்தர் பாரதிதாசன். தமிழ், தமிழன், தமிழினம் என்று முழங்கியதில் தவறென்ன உள்ளது? ‘தமிழியக்கம்’ என்ற தமிழ்க்கொள்கை முழக்கமுரசு நூலாகப் படைத்து இறை மறுப்பாளர்க்கும் தமிழ், உயிர் என்று காட்டினார். நாட்டில் உள்ள துறைகள் தோறும் தமிழ் பொங்கிப் பெருக வேண்டும் என்று உணர்வு ஊட்டினார். ‘கோயிலார்’ என்ற தலைப்பில் அவர் பாடியுள்ளதைக் கேளுங்கள்.

“மடிகட்டிக் கோயிலிலே மேலுடையை இடுப்பினிலே வரிந்து கட்டிப்

பொடிகட்டி இல்லாது பூசியிரு கைகட்டிப் 

பார்ப்பா னுக்குப்

படிகட்டித் தமிழரெனப் படிக்கட்டின் கீழ்நின்று

தமிழ் மானத்தை

வடிகட்டி அவன் வடசொல் மண்ணாங்கட் டிக்குவைப்பீர்

‘மந்த்ரம்’ என்றே”

என்ற பாவேந்தரின் பாடலில் தமிழ், தமிழன், தமிழினம் என்ற நெஞ்சத்துடிப்பு தெரியவில்லையா?

மேலும் பாவேந்தர் கோயிலிலும் ‘தமிழ்’ ஒலிக்க வேண்டும் என்று விழைகிறார்; தமிழுக்குத் தலைமை இடம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதனால்தான்

“சொற்கோவின் நற்போற்றித் திருஅகவல்

செந்தமிழில் இருக்கும் போது

கற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த தெவ்வாறு?

சகத்ர நாமம்?

தெற்கோதும் தேவாரம் திருவாய்நன் மொழியான

தேனிருக்கச்

செக்காடும் இரைச்சலென வேத பாராயணமேன்

திருக்கோயில்பால்”

என்று வினாக்கள் தொடுக்கிறார்.

காளியை. கண்ணனை. பராசக்தியை வழிபடும் பாரதியார்கூட,

“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள் - பல்

லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி

மயங்கும் மதியிலிகாள்! - எத

னூடும் நின்றோங்கும் அறிவொன்றே

தெய்வமென்றோதி யறியீரோ?”

என்று தன் உள்ளுணர்வில் பட்ட அறிவொளியைத் தெய்வமென்று பாடுகிறார். தனியொருவனுக்கு உண விலை எனில் இச்சகத்தினை அழித்திடுவோம் என்று வெகுண்டு பாடும் பாரதியார், “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்று கனிந்து அறிவுப் புரட்சி செய்கிறார்.

அடுத்து, கலாரசிகன், சமய இலக்கியங்கள் இல்லாமல் தமிழ் இல்லை என்று கூறுகிறார். சங்க இலக்கியங்கள் எனப் பெருமையாகக் கூறப்படும் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சமய இலக்கியங்களா? அவற்றில் தமிழ், தமிழினத்தின் பண்பாடு, நாகரிகம் மலர்ந்து மணங்கமழவில்லையா?

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த, புலனழுக்கற்ற அந்தணாளன் ஆகிய கபிலர், குறிஞ்சித் திணை ஒழுக்கமாகிய தமிழ்க் காதலைக் ‘குறிஞ்சிப் பாட்டு’ என்றுதானே பாடிக்காட்டினார்.

தொல்காப்பியர்கூட அகத்திணை இயலில், முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்றை முறை சிறந்தனவே என்கிறார். முதற்பொருளில் நிலமும் பொழுதும் என்ற இரண்டின் தன்மை கூறப் படுகிறது. கருப்பொருள் பட்டியலில் ‘தெய்வம்’ ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

திருமுருகாற்றுப்படை - முருகனின் அறுபடை வீடுகள் பற்றி அழகிய தமிழில் நக்கீரர் பாடியுள்ளார். எட்டுத் தொகையில் ஒன்றான பரிபாடலில் 22 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருமால், செவ்வேள், வையை ஆறு பற்றிச் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன. பாட்டு எழுதியவர் ஒரு புலவர். அப்பாட்டுக்கு இசை அமைத்தவர் மற்றொரு வல்லுநர். தமிழும் தமிழி சையும் கொஞ்சிப் பண்பாடுகின்றன.

சமய இலக்கியங்கள் இல்லாமல் தமிழ் இல்லை என்பது ஒரு மயக்கக் கூற்று. அவ்வாறே சமய இலக் கியங்கள் மட்டுமே தமிழாகிவிடாது என்பதும் மெய்க் கூற்று. தமிழ் நாகரிகத்தின் கட்டடக் கலைக்குச் சான் றாகக் கோயில்கள் விளங்குகின்றன என்று கலாரசிகன் கூறுகிறார். அதை யாரும் மறுக்க மாட்டார்கள். அதற்கு முன்னதாகக் “கோ இல்” என்பது அரசன் வாழும் இல் லத்தைக் குறித்தது என்கிறது ஆய்வுக் கூற்று. அரசன் இல்லம் (அரண்மனை) பற்றி நக்கீரர் நெடுநல்வாடை யில் அழகுற அமைத்துக் காட்டியுள்ளார். மனைவகுத்த முறை, மதில், வாயில், நிலை, கதவு, அரண்மனை முற்றம், கட்டுக்கள், கருவறை ஆகிய கோ இல்லத்தின் அமைப்பு முறையை நிரல்பட நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார்.

கல்லணை கூட எத்தனையோ நூற்றாண்டுகளாகத் தமிழனின் கட்டுமான அறிவாற்றலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. கோயில் கட்டடக்கலை மட்டும் தமிழனின் முழு வாழ்வுக்கலை ஆகிவிடமுடியாது. நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், மேடாக (மலையாக) இருந்தாலும் பள்ளத்தாக்காக இருந்தாலும், அங்கே வாழ்கின்ற ஆடவர் நல்லவராக இருப்பின் அது நல்ல உறைவிடமாகத் திகழும்.

கோயில் நகரமாகவே இருந்தாலும், அங்கே வாழும் மக்கள், நல்ல மன முடையவர்களாக இல்லையெனில் அக்கோயில்களால் என்ன பயன் உண்டாகும்? ஆறுகாலப் பூசையிலும் ஒருவன் கடவுளையே நினைத்து நெஞ்சுருகிக் கொண்டிருந்தால் அவன் வாழ்க்கையில் முன்னேறிவிடுவானா? அவன் வாழ்க்கையை, உழைப்பாலும், முயற்சியாலும், உண்மையாலும் தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

ஊழ்வினை, பரிகாரம், கிரகப் பலன் என் றெல்லாம் மனிதனை அச்சுறுத்தி வைப்பதற்கா கோயில் கள், சமயங்கள் வேண்டும்? பெரியார் இவற்றை எல்லாம் பகுத்தறிந்து மனிதனாக வாழ்க என்று கூறினால் அவரைச் சாடுவதற்கு நெஞ்சம் துணிகிறதா?

“இந்து சமயப் புறக்கணிப்பு என்பது ஒரு வகையில் தமிழனின் அடையாள அழிப்பு என்றுதான் கூற வேண்டும்” எனக் கலாரசிகன் அலைமோதுகிறார். தமிழனின் அடையாளம் இந்து சமயமா? இன்று கீழடி யின் அகழ்வாராய்ச்சி தமிழனின் நகர நாகரிக வாழ்க்கை அடையாளத்தைக் கி.மு.வுக்கே இட்டுச் சென்று காட்டு கிறதை எல்லோரும் அறிவார்கள்.

கலாரசிகன் ‘வழிகாட்டும் கல்வெட்டுகள்’ நூலைப் பக்தர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, பகுத்தறிவு வாதி பேசும், தமிழை நேசிக்கும் இறை மறுப்பாளர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து முடிவுரை எழுதி இருக்கிறார். கலாரசிகனுக்குப் பகுத்தறி வாளர் - தன் மதிப்புக்காரர் - இறை மறுப்பாளர் மீது ஏனிந்த எரிவுப் பாய்ச்சல் என்று எனக்கு விளங்க வில்லை. வழிகாட்டும் கல்வெட்டுகள் என்னும் நூலின் சிறப்புகளைக் கோடிட்டுக் காட்டுவதை விட்டுவிட்டு, இறை மறுப்பாளரை முக்காடு போடாமலே வெளிப்படை யாகவே ‘வேக்காடு’ காட்டி நோக்காட்டு அனுப்பியிருப்பது கலாரசிகனின் - கலைச்சுவைஞனின் எழுத்து அறமா?

அவருக்குப் பெரியார் மொழியிலேயே விடைகூறி என் கட்டுரையை முடிக்கிறேன், “நமது தோழர் சி.கே. சுப்பிரமணிய முதலியார், பி.ஏ. அவர்கள் அரைகுறை சாத்திரஞானம் கூடாது” என்னும் கட்டுரை மூலம் சுய மரியாதைக்காரர்களை தாக்க நினைத்து எழுதியவற்றை ஆராயும் தோறும் அவர் விடயத்தில் ‘மணற்சோற்றில் கல்லாராய்வது’ போன்ற பாமர விடயங்கnள் காணப்படுமாயின் இவரது ஆங்கில பி.ஏ. பட்டத்துக்கும், தமிழ்ப் புலமைக்கும் சமயப் பற்றுக்கும், சாத்திர ஞானத்துக்கும் என்ன மதிப்பேற்படும் என்பது நமக்கு விளங்க வில்லை.

இனிமேலாவது நமது இயக்கத்தவர்களை நமது முதலியாரவர்கள் தோழமை கொண்டு அவர்களிடமிருக்கும் உயர்ந்த தன்மைகளாகிற தன்னலங் கருதாமை, பிறர் உழைப்பில் வாழாமை மக்கள் நலத் துக்காகவே உழைத்தல் முதலியவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

பேராசிரியர் இரா.சோதிவாணன்

Pin It