ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கவிதைமொழி வாசகனைத் துரத்தி துரத்தி கிறங்கடிக்கும் வல்லமை வாய்ந்தது. நல்ல அரும்புகளைத் தேர்ந்தெடுத்து தொடுக்கும் சரத்தினைப் போன்ற சாயலைப் பெற்றது.  ஏழுவால் நட்சத்திரம், மல்லிகைக் கிழமைகள், நிழலன்றி ஏதுமற்றவன் முதலிய முந்தைய கவிதை நூல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சாயலில், மொழிவீச்சில் யாருடைய சாயலும் இல்லாதபடி பார்த்துக்கொண்ட தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. சம்மனசுக்காடு (2016).

sammanasukaaduஉள்ளாடை பற்றிய கவிதை, கவிதையைக் கடந்து எல்லாவற்றின் அடையாளம் சார் இருத்தலையும் சுழற்றி அடிப்பதாக அமைந்திருக்கிறது. பெயர்கள் அல்லது பெயரென நம்பிக்கொண்டிருக்கும் அடையாளங்கள் அனைத்தும் பொருத்தமற்றுப் போன உலகில், இனி எதுதான் பொருத்தமானதாக இருக்கமுடியும்? என்னும் கேள்வியை போகிற போக்கில் எழுப்பிவிடும் நுட்பம் அலாதியானது. 

உள்ளாடைகள் எனப்படுவதும்

உடம்புக்கு மேலேதான்

உடுத்தப்படுகின்றன

மென்று

விழுங்கப்படுவதில்லை யாராலும்

உலகில் எதுவும் பயனற்றதும் இல்லை. வெற்றிடமும் இல்லை. எல்லாமும் பயன்படும். எல்லா இடத்திலும் எதாவதொன்று இருக்கும் என்னும் சமணத் தத்துவச் சாயலை,

கவிழ்த்து வைக்குமுன்

இந்தக் கோப்பையில் தேனீர் இருந்தது

அப்போது அதனருகில் நாமிருந்தோம்

இப்போது அதைச்சுற்றி சில சிற்றெறும்புகள்

நம் சாயலில் இருக்கின்றன.

என்னும் கவிதையில் பார்க்க முடிகிறது. இதில் உள்ள நயமும், உணர்ந்ததை உணர்த்தும் விதமும் புதுவித ரசானுபவம்.

விருதுக்காக காத்திருப்பவர்களுக்கும் விருது பெற்றவர்களுக்குமான கவிதையாக அமைந்தது Mr.J.F.K.. இது மனிதனின் சிற்றாசை, எதார்த்தத்தை எப்படியெல்லாம் கடக்க வைக்கிறது என்பதையும் இருப்பை நிறுவிக் கொள்வதற்காக அவனை எப்படியெல்லாம் இயங்க வைக்கிறது என்பதை உணர்த்துகிறது. அதிகாரத்தை புகழும் யாவருக்கும் அங்கீகாரம் காலுக்குக் கீழே என்னும் கருத்தியல் பழையது என்றாலும் சொல்லியிருக்கும் விதம் நடப்பியல் சார்ந்து ரசிக்க வைக்கிறது.

கலைஞன் கலைக்கு வெளியே இருப்பது இல்லை. கலைக்குள்ளேயேதான் அவனது வாழ்வு இருக்கும். அதைத்தான் கலைஞனும் விரும்புவான் என்பதை,

சிலந்தி வலை ஓவியம் பார்த்து

மூக்கில் விரல் வைத்து சிலாகித்தவர்கள்

ஓவியனைத் தேடினார்கள் பாராட்ட

சிலந்திவலை ஓவியத்தில் அவன்

பூச்சியாகி சிக்கிக்கொண்டது தெரியாமல்.

என்னும் வரிகள் நேர்த்தியாக உணர்த்திவிடுகின்றன. ஆசிரியர் மரணம் குறித்து பேசியாகிவிட்ட நவீனச் சூழலில், இக்கவிதையில் கலைஞனின் நிலைப்பாடு குறித்த சித்திரம் வேறொரு கோணத்தில் மெய்யாகித் தவழ்கிறது.

கிராமங்களின் வளர்ச்சியின்மையை, அரசின் கண்டுகொள்ளாத் தனத்தை விவரிப்பதாகவும் பார்க்கக் கூடிய

எங்கள் ஊருக்கு

முதல் முதலாக பேருந்து வந்த போது

அது கிராமமாக இருந்தது

எங்கள் ஊருக்கு

முதல் முதலாக ரயில் வந்த போது

கிராமம் கிராமமாகவே இருந்தது

எங்கள் ஊருக்கு

முதல் முதலாக கப்பல் வந்த போதும்

அது கிராமமாகவே இருந்தது

எங்கள் ஊருக்கு

முதல் முதலாக விமானம் வந்தது

அப்போதும் அது கிராமமாகவே இருந்தது

ஏனெனில் எல்லாமே

திருவிழா நாட்களில்

பொம்மை வியாபாரிகளால் கொண்டுவரப்பட்டது

என்னும் கவிதை அதிகாரத்தின் அறிவிப்புகள் வழியாக வருகின்றவை கிராமத்தினரின் மெய்ப்பயன்பாட்டிற்கானதாக எதுவும் இல்லை என்பதாகவும் விரிவடைகிறது.

இருப்பை இழந்தவனை அவனது எதிர்காலமே உணவாக்கிக் கொள்ளும் என்பதாக அமைந்துள்ள

தங்கமீன்களை

அடகு வைத்து

தண்ணியடித்து

மட்டையானவனின்

கனவில்

வட்டமிடுகின்றன

வண்ண வண்ண பூனைகள்!

இக்கவிதையில் பூனையை எதிர்காலமாக்கியிருக்கும் உத்தி கவிதைக்கான அடர்த்தியை தந்துவிட்டிருக்கிறது.

வாழ்தலின் ஆசை எல்லாருக்குள்ளும் எக்கச்சக்கமாய் இருக்கிறது. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. இயலாதவர்களும் கூட தம்மை மாய்த்துக்கொள்வதில்லை. வாழ்தலின் ரகசியமே அதில்தான் அடங்கிக் கிடக்கிறது என்பதான தொனியில் அமைந்திருக்கும்,

நடைபாதையில்

கெஞ்சி கெஞ்சி அலுத்துப்போகும் வேளைகளில்

வாழ்வதா? சாவதா என

முடிவெடுக்கும் பொருட்டு

தினமும்

பூவா? தலையா?

போட்டுப் பார்க்கிறான்

குருட்டுப் பிச்சைக்காரன்.

என்னும் இக்கவிதை, கண்ணில்லாதவனும் தன் வாழ்க்கைக்கு முன்னால் விரியும் பாதை மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வேரை, வாசகனைக் கண்டடைய வைத்திருக்கும் விதம் அற்புதமானது. இப்படி மொழிச்சார் அழகியலும் மொழிக்குப் பின் விரியும் உலகமும் வசித்தலின் தருணத்தை உன்னதமாக்கும் தொகுப்பாக அமைந்திருக்கிறது சம்மனசுக்காடு.

- ஞா.குருசாமி

Pin It