ram pand 350சுப்ரபாரதிமணியன் படைப்புகள் பற்றிய ஒரு பன்னாட்டு கருத்தரங்கம் திருநெல்வேலி மணோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் முதல் தேதியில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கின் தொடக்கத்தில் சுப்ரபாரதி மணியனின் படைப்புக்கலை என்ற நூலை இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் பிரசாந்தன் வெளியிட டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை உமா தேவி பெற்றுக் கொண்டார்

இலங்கை பிரசாந்தன் பேசுகையில் சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்களை இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்ற  "ஸ்தலங்கள்" என்ற கதை மூலம் நான் அறிந்து கொண்டேன். பிறகு அவரின் படைப்புகளை வாசிப்பதை துவங்கியிருக்கிறேன். அவருடைய கவிதை தொகுப்புகளில் இடம் பெறும் அனுபவங்கள் வித்தியாசமானவை அவ்வகையில் பங்கன் தரை பாதாளம் குறித்த அவரின் கவிதை என்னை மிகவும் பாதித்து இருக்கிறது. நான் சுமார் 18ஆண்டுகள் அவ்வப்போது பங்கரில் வாழ்ந்து இருக்கிறேன்.

இலங்கையின் போர்ச் சூழல் காரணமாக விமானங்களிலிருந்து செல் அடிக்கிற போது தரையில் இருக்கிற பாதாள அறைதான் பாதுகாப்பாக இருக்கும். அப்படி பாதுகாப்பாக இருக்கிறதிற்காக பாதாள அறைக்குள் சென்ற அனுபவம் எனக்கு உண்டு அப்படி ஒரு அனுபவத்தை ஒரு கவிதையில் சுப்ரபாரதிமணியன் பதிவு செய்கிறார். அந்த பாதாள அறையில் கடவுளும் சாத்தானும் சக மனிதனும் சந்தித்துக்கொண்ட சந்திப்பு பற்றி எல்லாம் சொல் கிறார், என்னைப் பொறுத்த அளவில் நான் பாதாள அறையில் கடவுளைச் சந்திக்கவில்லை. சாத்தான்களை மட்டும் சந்தித்திருக்கிறேன். அப்படி ஒரு அனுபவத்தை உள்வாங்கிக்கொண்டு எழுதியிருப் பதில் சுப்ரபாரதிமணியன் மிக நுணுக்கமாக செயல்பட்டிருக்கிறார்.

அதேபோல நான் முன்னர் குறிப்பிட்ட அந்த ஸ்தலங்கள் சிறுகதையில் ஒரு பிரம்மச்சாரியின் மேன்சன் வாழ்க்கை நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்கிறார். இடம் பெயர்கிற  அனுபவம்... நகரம் ஒரு இளைஞனை துரத்திக் கொண்டிருக்கும் அவன்... அந்த நகரத்திற்குள் இருந்து சிதைவுற்று வெளியே செல்ல ஆசைப்படுகிற அனுபவம்... சமையலின் வாசனை, ருசி... இதெல்லாம் மிகவும் நுணுக்கமாக அந்தச் சிறுகதையில் சொல்லப் பட்டு இருக்கிறது. அந்த கதையைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் இலங்கையின் மகாகவி என்ற கவிஞரின் (சேரனின் தந்தை) ஒரு கவிதைதான் எனக்கு ஞாபகத்தில் வரும். நுணுக்கமான பார்வையும் சம காலத் தன்மையும் சுப்ரபாரதிமணியனின் படைப்பு களில் அடையாளங்களாக சொல்லலாம்

பேராசிரியை உமா தேவி டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர் சுப்ரபாரதிமணியனின் படைப்புக்கலை நூலைப் பெற்றுக் கொண்டு பேசினார்:  சுப்ரபாரதிமணியன் படைப்புகளில் பின் நவீனத்துவக் கூறுகள் நிரம்ப உள்ளன அவரின் கவிதை, கதைகளை ஆய்வு செய்யும்போது இந்த பின்நவீனத்துவக்கூறுகள் சிறப்பாக செயல்படுவதை கண்டேன்- அதை அவர் இயல்பாக கொண்டிருக் கிறார். மையம் தவிர்த்த விஷயம் முதல் மனிதர்கள் சிதறுண்ட உலகம், தொடர்ச்சியின்மை ஆகியவை பல கதைகளில் வெளிப்பட்டு நவீனத்துவத்தின் சரியான கூறுகளை காட்டுகின்றன. அதே சமயம் அவரின் படைப்புகளை குறிப்பாக சிறுகதைகளை நவீனத்துவ அம்சங்களைக் கொண்டு சாதாரணமாக ஆய்வு செய்யலாம். ஆனால் பின்நவீனத்துவ ஆய்வு முறையில் அவை சரியான கட்டுமானத்தில் வந்துள்ளன என்பதும் அவர் சமகால தத்துவார்த்த விஷயங்களில் மட்டுமல்லாமல் வடிவங்களிலும் அக்கறை கொண்டு இருப்பது தெரிகிறது

பின்னர் நடைபெற்ற கருத்தரங்க அமர்வுகளில் புதுவைப் பல்கலைக்கழகம் இணைப்பேராசிரியர் மு. கருணாநிதி, முனைவர் யார் சுசந்திரா, மேலூர் கலைக் கல்லூரி முனைவர் கணேஸ்வரி, கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஹிந்தி பேராசிரியர் முனைவர் இரா. ரமேஷ் குமார் ஆகியோரின் தலைமைகளில் நடைபெற்ற அமர்வு களில் பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன

அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் பல்வேறு தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டார்கள். திருநெல்வேலி மணோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக  தமிழியற்புலத் தலைவர், பேராசிரியர் ராமசாமி பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் என்று பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாய் எழுதிக்கொண்டிருப்பவர். தமிழனின் பல்வேறு அடையாளங்களை வெளிப்படுத்துகிற அவர் தமிழில் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். கல்விப்புலம் அவரின் படைப்புகளை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டு இருக்கிறது. எப்படி

அதை கல்விப்புலம் எதிர்கொண்டிருக்கிறது என்பதனுடைய அத்தாட்சியாய் சுப்ரபாரதிமணியனின் படைப்புக்கலை என்ற தலைப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் வெளிக்காட்டின. கல்விப்புலத்தில் ஒரு எழுத்தாளனின் பிரதிகளுக்கான எதிர்வினையாக, எதிர்மறையாக அவை இருந்தன. எழுத்தாளர்களின் அனுபவத் தரவுகளின் தொகுதியாக அவரின் படைப்புகள் அப்பிக் கொண்டு இருக்கிறது. நெடுநல் வாடை படைப்பு மதுரையைப் பற்றி பேசுவது போல திருப்பூர் நகரத்தின் பாதிப்புகளை அவரின் படைப்புகளில் காணலாம். அவர் எந்த அடையாளத்தை நோக்கி எந்த தேடலை நோக்கி சென்று கொண்டிருக் கிறார். அவர் அந்தப் படைப்புகளில் அலைந்து கொண்டிருக்கிறாரா, உள்ளிருந்து கொண்டிருக்கிறாரா என்பதை அந்த படைப்புகள் எல்லாம் சொல்கின்றன. அந்தப் படைப்புகள் குறித்து நானும் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஆய்வு மாணவர் களுக்கும் ஆய்வு செய்ய சிபாரிசு  செய்திருக்கிறேன்.

சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் தேடலும் அலைதலும்  கொண்ட ஒரு மனிதனின் அனுபவங் களாக விரிந்திருக்கின்றன. கி. ராஜநாராயணன் அவர்களை படைப்பு ரீதியாக அணுகினால் அவர் கரிசல் பூமியில் முன்பு இருந்தவர். படைப்பில் இப் போது இருந்து கொண்டிருப்பவர். வண்ணநிலவன் 50 ஆண்டுகளாக திருநெல்வேலியில் இருந்தவர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியில் வாழ்ந்தவர். இப்போதும் அதே திருநெல்வேலி அனுபவங்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர். ஜோ டி குரூஸ் நெய்தல் நிலத்தின் வாழ்க்கை அனுபவங் களில் வாழ்ந்தவர். இன்னும் வாழ்ந்து கொண்டிருப் பவர். ஆனால் சுப்ரபாரதிமணியனின் அனுபவங்களை, படைப்புகளை கவனிக்கிற போது அவர் எங்கே வாழ்கிறார் என்பது தெரியும். அவர் ஒரு காலத்தில் வாழ்ந்த ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்கள் ஆகட்டும், அதன்பின் வாழ்கிற திருப்பூர் நகரம் ஆகட்டும். இடையே அவர் பயணப்படுகிறார்.

பல ஊர்கள் ஆகட்டும் அந்த ஊர்களின் வாழ்க்கையை அந்த மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களை சுப்ரபாரதிமணியன் தன் படைப்புகளில் கொண்டு வந்துவிடுகிறார். அதுபோல் தான் திருப்பூர் நகரத்தின் சாயம் அப்பிய நகர மனிதர்களை அவர் காட்டியிருக் கிறார். கிராமங்களில் இருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்த பெண்களின் வாழ்க்கை எல்லாம் சொல்கிறார். உதிரி மனிதர்கள் சாதாரண தொழிலாளி,  சாதாரண தொழிலாளிகள், விளிம்பு நிலை மக்களைப் பற்றி அதிகம் எழுதி இருக்கிறார். இந்த மனிதர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் சுப்ரபாரதிமணியன் அலைகிறார். ஏன் இந்த மனிதர்கள் அலைகிறார்கள்? வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்கள் அவர்களை அலைய வைக்கிறது அவர் களுடன் சுப்ரபாரதிமணியன் அலைந்து கொண்டிருக் கிறார். ஒரு படைப்பாளியின் அடையாளமாக அவர் அனுபவம்  சார்ந்த படைப்பாளியாக தென்படுகிறார். அந்த வரிசையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக் கிறார். பேசிக்கொண்டிருக்காமல் வாழ்க்கையினூடே அலைந்து கொண்டிருக்கிறார்.

மனித அனுபவமாகவும் அதை பதிவு செய்வதாகவும் அவர் இருக்கிறார். டெல்லியில் இருந்த ஆதவனின் படைப்புகள் டெல்லி வாழ்க்கையோடு முடிந்து விட்டிருக்கிறது. பல சமயங்களில் தி.ஜானகிராமனின் படைப்புகள் அனுபவங்கள் தில்லியில் இன்று பெற்றிருக்கின்றன. நீல பத்மநாபன் அனுபவங்கள் திருவனந்தபுரத்தில் தொடங்கியிருக்கின்றன. அசோகமித்திரனின் எழுத்துக்கள் ஹைதராபாத்தில் பலவிதங்களில் இருக்கிறது. ஆனால் சுப்ரபாரதிமணியன் தான் வசிக்கிற வாழ்கிற ஊர்களில் இருக்கிற சக மனிதர் களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து அந்த அக்கறையுடன் வாழ்க்கையில் அதனை விரிவாக படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார் என்பது ஒரு முக்கியமான அம்சமாகும்.

புதுச்சேரி மானுடவியல் துறை புதுவைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் முனைவர் செல்லப் பெருமாள் இவ்வாறு பேசினார்:

சமூகவியல் நோயியல் நோக்கு என்பது மானுட வியல் பண்பாட்டுக்கு அடித்தளமாக இருக்கிறது.  சமூக நோயியலில் சமூக சீர்கேடுகளை பார்க்கும் நுணுக்கமான பார்வை சுப்ரபாரதிமணியனின் படைப்புகளில் இருக்கிறது. நவீன வாழ்க்கை ஒரு சாதாரண மனிதனை எப்படி சீரழிக்கிறது அல்லது நவீன வாழ்க்கை மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பதைப் பற்றி தீவிரமாக அவர் படைப்பு களில் ஆய்வு செய்கிறார். இன்றைக்கு நமக்கு முன்னால் இருக்கிற கேள்வி பொருளாதார முன்னேற்றம்,  சுற்றுச்சூழல் பிரச்சனையா என்பது முக்கியமாக இருக்கிறது. அந்த விவாதங்களை தமிழில் துவக்கி வைத்த படைப்புகள் சுப்ரபாரதிமணியன் உடையவை. அவரின் படைப்புகளில் குடும்ப வாழ்க்கை,  சேவல் கட்டு அம்சங்கள் தவிர மற்றவை அனைத்தும் இந்த சமூக நோயியல் நோக்கு கொண்டவை. குடும்ப கதைகள் மற்றும் சேவல்கட்டு கதைகளில் பண்பாட்டு ஏற்றத்தாழ்வை காட்டுகிறார்.

ஜாதி கட்டுமானம் இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதையும் கிராம சூழலில் அந்த ஜாதி கட்டுமானம் தரும் கட்டுப் பாட்டையும் விளக்குகிறார். இவை ஒரு வகையில் பண்பாட்டுத் தளம் சார்ந்த பிரச்சினைகளாக இருக்கின்றன. இவை தவிர மற்ற எல்லாமே சமூக நோயியல் சார்ந்த கூறுகள் தான். இடப்பெயர்ச்சி எந்த வகையான மனிதர்களை சிதைத்து வழிகாட்டிக் கொண்டு இருக்கிறது என்பதை அவர் பல்வேறு படைப்புகளில் காட்டுகிறார். அது இந்தியாவிற்குள் ஆனாலும் இந்தியாவிற்கு வெளியே ஆனாலும்... வட இந்தியா ஆனாலும்... திருப்பூர் ஆனாலும் ஹைதராபாத் செகந்திராபாத் ஆனாலும்... மலேசிய ஆனாலும் என்று பல்வேறு தளங்களில் அவற்றை காட்டுகிறார். நவீன வாழ்க்கை தனிமனிதனுக்கு

தரும் சிரமங்கள் நவநாகரீகம் தந்திருக்கிற வளர்ச்சிப் போக்கும் அடையாளம் சிதைத்த போக்கும் இவற்றி னூடே தனிமனிதனின் வாழ்வுப் போராட்டமும் அவரின் படைப்புகளில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன. சித்தாந்த பின்புலம் இருந்தாலும் அதன் வாடை எங்கும் இல்லை. அதற்கான விஷயங்கள் வலிந்து  தெரிவதில்லை. அதிகார பீடங்களில் ஆட்சியாளர் களும் சமூகத்தில் பின்புலமாய் இருந்து கொண்டு கட்டமைக்கிற விஷயங்களைப் பற்றி இவரின் படைப்பை படங்கள் பேசுகின்றன இது தமிழில் மிக முக்கியமான கோணமாகவும் இருக்கிறது

விழாவில் நிறைவு விழாப் பேருரை ஆற்றினார் ஓவியர் சந்துரு அவர்கள். அவர் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்:

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் பல மனிதர் களைக் கொண்டிருக்கிறான். அந்த மனம் பிளவுண்ட மனம் அவனை துரத்துகிறது. காட்டுக்குள்ளும் செல்லும்படி துரத்துகிறது. அங்கு சென்றபின் பல சமயங்களில் ஏற்படும் பசி அவனை ஊரை நோக்கி விரட்டுகிறது பாதுகாப்பான சுவையை அவன் எண்ணுகிறான் அந்த சுவையால் காதல் பெருகும். பொழுது நீடிக்கும். காலம் கழியும். ஓவியம் வரைவதும், எழுதுவதும் கழுதை மேய்ப்பதும் ஒன்றுதான். அந்தந்த விஷயங்களில் இருக்கும் ஈடுபாடும் தான் முக்கியம். தொழில்முறை படைப்பாளிகள் வாழ்க்கையை வியாபாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். ஆனால் படைப்பிலக்கிய வாதிகள் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து ஓவியம் போல் பதிவு செய்கிறார்கள்.

பூவின் அமைதிக்குள் இருக்கும் நிதானம் முக்கியமானது. அது தரும் வாசம் முக்கியமானது. அது காட்டும் சிவப்பு பச்சை என பல வர்ணங்கள் முக்கியமானவை. அவன் சக மனிதர்களுடன் கொள்ளும் உறவு முக்கியமானது. அவற்றுள் அவனின் உறவும் தேடலை நோக்கிய பயணமும் முக்கியமானது. அதிலும் இயற்கையை நோக்கிய பயணம் மானுட புதுமை. இங்கு நாம் பங்கு போட்டுக் கொள்கிறோம். வாழ்வதே கலை. அது ஏகாந்தமாக இருப்பது கலைத் தேடலாகும். சந்தோசமாக வைத்து இருப்பது கலை.

கலை சிந்திக்கவும் செய்யும். சமாதி பழக்கமல்ல சர்வ பழக்கம் என்று வலியுறுத்தவும் செய்கிறது. அன்பை ஆத்மாவைப் பற்றி பேசிவிட்டு காசு கேட்காதே... ஞானமாய் வாழ் என்று வலியுறுத்துகிறது. சுப்ரபாரதி மணியன் இவற்றை வலியுறுத்துகிறார். அவரின் முதல் தொகுப்பான நான்கு பேரும் 15 கதைகளும் தொகுப்பில் நான் ஓவியங்கள் வரைந்து இருக்கிறேன். அவரின் கனவு இதழில் ஆரம்ப காலத்தில் ஓவியங்கள் வரைந்து இருக்கிறேன் அவற்றில் என் ஓவியங்கள் அட்டைப் படங்களாக வந்திருக்கின்றன. அவர் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருகிறார். இயற்கையை தேடிய பயணம் அவை.

இந்த விழாவில் திருநெல்வேலி மணோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி சங்கரன்கோயில் கல்லூரியின் முதல்வர் முனைவர் குமரகுருபரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முனைவர் ஞான ஸ்டீபன் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்க அறிமுக உரையை கருத்தரங்க உரிமை ஒருங்கிணைப்பாளரும் மணோன்மணியம் பல்கலை கழக உறுப்புக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ராம பாண்டி நிகழ்த்தினார். ஆய்வு மாணவர்களும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்களும் கலந்து கொண்டு தங்கள் கட்டுரைகளை வாசித்தனர்.

இந்த கருத்தரங்கின் முக்கிய அம்சங்களாக சுப்ரபாரதிமணியன் படைப்புகள் பற்றிய விவாதங் களும் நாட்டுப்புறவியல் சார்ந்த பல்வேறு பேராசிரி யர்கள் நவீன இலக்கியத்தை அணுகியதும்,  கல்லூரி மாணவ மாணவிகள் படைப்புகளை எதிர்கொள்ளும் விதம் பற்றி தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதும் முக்கியமான அம்சங்களாக கொள்ளலாம்.

படைப்புக்கலை  கருத்தரங்க விழாவில் சுப்ரபாரதிமணியன் ஏற்புரை நிகழ்த்தினார்:

பின்நவீனத்துவத்தின் தாக்கம் தமிழில் தொண்ணூறுகளில் அதிகம் இருந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப்பின் சோசலிசத்தின்  பலவீனத்திற்குப் பின் பின்நவீனத்துவம் உலக அளவில் அதிக தாக்கத்தை செய்தது. அந்த வகையில் பின் நவீனத் துவத்தின் கட்டுடைத்தலும் மையம் இல்லாததும் உதிரி மனிதர்களின் வாழ்க்கையும் என் படைப்பு களில் சாயத்திரை நாவல் முதல் கொண்டு வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் அதன் தாக்கத்தை செய்தது. திருப்பூர் நகரம் இன்றைக்கு பத்து லட்சத்திற்கும் மேலான மக்கள் வாழக்கூடிய நகரம். அந்த நகரத்தில் ஜனத்தொகையில் பாதிக்கு மேல் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்களின் பிரச்சனைகளும் வாழ்வியலும் என்னை தொடர்ந்து பாதிக்க வைத்து படைப்புகளை வெளிப்படுத்தச் செய்கிறது. உலக மயமாக்கல் ஆனாலும் சரி உள்ளூர் வணிகம், ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆனாலும் சரி கார்ப்பரேட்டுகளின் சமூக பொறுப்புணர்வு ஆனாலும் சரி எல்லாமே நேரடி விளைவுகளை கொடுக்கிற வியாபார நகரமாக திருப்பூர் இருக்கிறது.

அந்த வகையில் அந்த நகரத்தின் மக்களின் வாழ்வியலை பதிவு செய்வது முக்கிய கடமையாக இருக்கிறது. அப்படித்தான் சாயத்திரை முதற்கொண்டு என் நாவல்கள் மக்களின் வாழ் வியலைப் பதிவு செய்கிற வெளிப்பாட்டு சாதனங் களாக  இருக்கின்றன. இந்த கருத்தரங்கில் சாயத்திரை நாவல் குறித்து அதிக அளவில் பேசப்பட்டது. கோமணம் போன்ற நாவல்களில் இருக்கும் நாத்திக பார்வையை மீறி ஒரு ஆன்மீக தளமும் வழக்கமான தென்படும் பொருள் இருப்பதை சிலர் சுட்டிக் காட்டினார்கள்.

நீர்த்துளி போன்ற நாவல்கள் சுற்றுச்சூழல் சார்ந்தது மட்டுமல்லாமல் இன்றைக்கு பாலியல் சார்ந்த விஷயங்களிலும் ஒற்றைப் பெற்றோர் முறையிலும் திருப்பூர் நகரத்தின் பாதிப்புகளை குறிப்பாக பெண்களின் வாழ்வியலை சொல்லும் படைப்புகளாக இருக்கின்றன. அந்த வகையில் மக்களுடன் இணைந்து அவருடைய வாழ்க்கையை கூர்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத் திருக்கிறது. நான் இடதுசாரிதான் இடதுசாரி அழகியலை  படைப்புகளில் கொண்டுவர முயன்றிருக் கிறேன். வறட்டுத்தனம் தவிர்த்த அழகியல் தன்மைக்கே முயன்றிருக்கிறேன். சமூகத்துடன்,  சமூகவியல் மனிதர் களுடன் அன்பும் பகிர்வும் தான் இந்த படைப்புகளின் ஆதாரமாக இருக்கிறது.