புதிய கோணத்தில் விளக்குகிறார் த.விஜயலட்சுமி. அவரது ‘தமிழ் இலக்கியக் கோட்பாடு’ என்னும் நூல், மரபிலக்கியங்களை உள்வாங்கிக் கொள்வதற்கான கைவிளக்காகத் திகழ்கிறது.
கூற்று, கேட்போர், களன், காலம், முன்னம், நோக்கு, மாட்டு, எச்சம், பொருள், மரபு, பயன், மெய்ப்பாடு, அங்கதம், உள்ளுறை, திணை என்னும் இலக்கியக் கருவிகளை ஆய்ந்து விளக்குகிறது இந்நூல். இவ்விலக்கியக் கருவிகளின் துணைகொண்டு தமிழ் இலக்கியப் பரப்பின் முழுமையையும் உள்வாங்கிக் கொள்ளலாம் என்கிறார் நூலாசிரியர் த.விஜயலட்சுமி. புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதையை எடுத்துக்கொண்டு மேற்குறித்த இலக்கியக் கருவிகளை விளக்கிச் செல்கிறார்.
தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கணங்கள், தமிழ் இலக்கியங்களின் வடிவம் குறித்து விளக்குவன என்ற பொதுப்புரிதலைக் கட்டுடைத்து, அவை தமிழின் மனவெளி சார்ந்த பொருள் - உள்ளடக்கம்- குறித்து உரையாடுவன என்ற புதிய புரிதலுக்கு நகர்த்துகிறார் இந்நூலாசிரியர்.
தமிழ்க் கவிதையியல் என்பது வெறும் செய்யுள் கட்டுமானம் குறித்தது மட்டுமல்ல; மாறாக, அதன் பொருண்மை சார்ந்த தனித்துவத்தையும் குறிக்கிறது. தமிழர் வாழ்வியல் பதிவு குறித்த இலக்கியத் திரட்சியே பொருள் இலக்கணம். தமிழ்க் கவிதையியல் என்னும் பொருளிலக்கணத்துக்குத் தந்தை தொல்காப்பியரல்லர்; தனக்கு முந்தைய இலக்கணிகளின் வழிநின்று அவற்றை வகுத்தும் தொகுத்தும் புதுக்கியும் சொல்லப் புகுந்தவரே அவர். ‘என்ப, மொழிப, என்மனார் புலவர்’ என்று பல இடங்களில் தொல்காப்பியரே, முன்னோடிகளைச் சுட்டிக்காட்டி நன்றியுரைக்கிறார். எனவே பொருளிலக்கணம் என்பது நீண்ட நெடிய தமிழ்மரபின் அனுபவத் திரட்சி என்பது புலனாகிறது.
பொருளிலக்கணம் என்னும் தமிழ்க் கவிதையியல் குறித்துத் தமிழ் இலக்கணிகள் வழங்கியுள்ள சட்டகங்கள் தனித்துவம் மிக்கவை. இலக்கியக் கட்டுமானத்திற்குத் தமிழ் வாழ்க்கை சார்ந்த பொருண்மையினை அளிப்பவை. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற அடிப்படைகள், காலம், இடம், சூழல், வாழ்வியல் அம்சங்களை விளக்குபவை. திணைக்களமும் அதன் துறை வகைமைகளும் தமிழ்க்கவிதையியலை அகம், புறம் என்ற நிலைக்களத்தில் அழகுற நிறுத்துபவை.
இவ்வாறு தொல்காப்பியர் குறிப்பிடும் செய்யுளுறுப்புகள் 34. அவற்றுள் பதினைந்து உறுப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு விளக்கப் புகுகிறார் ‘தமிழ் இலக்கியக் கோட்பாடு’ நூலாசிரியர் த.விஜயலட்சுமி. மேற்குறித்த செய்யுளுறுப்புகளை விளக்கிச் சென்றிருக்கும் உரையாசிரியர்களின் முதன்மையாளர்கள் அனைவரது கருத்துக்களையும் தொகுத்துரைக்கிறார். இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், வெள்ளைவாரணர், மு.ராமலிங்கனார், ச.வே.சுப்பிரமணியம், ச.பாலசுந்தரம், தமிழண்ணல், செ.வை.சண்முகம் உள்ளிட்ட உரையாசிரியர்களின் கருத்துக்களை விளக்கிச் சொல்வதோடு, உரையாசிரியர்களுக்கிடையே குறிப்பிட்ட பொருண்மை குறித்து ஏற்படும் கருத்து மாறுபாடுகளையும் குறிப்பிட்டு அடையாளப்படுத்துகிறார் நூலாசிரியர். இந்த உரையாசிரியர்கள் தரும் விளக்க வெளிச்சத்தில் குறிப்பிட்ட செய்யுளுறுப்பை உள்வாங்கிக் கொண்டு, அது தற்காலப் படைப்பாகிய புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதையில் எவ்வாறு பயின்று வந்துள்ளது என்றும் பொருத்திக்காட்டி விளக்குகிறார்.
தமிழ் இலக்கியக் கோட்பாடு - என்ற கல்விப்புலம் சார்ந்த தலைப்பில் இந்நூல் அமைந்திடினும், கல்விப்புலத்திற்கு வெளியே நின்று தமிழ் இலக்கியப் பரப்பை உற்றுநோக்கும் வாசகனுக்கும் திறனாய்வாளனுக்கும் ஆராய்ச்சியாளனுக்கும் இந்நூல் பெரிதும் வழிகாட்டுகிறது.
மேலைக் கோட்பாடுகள், தமிழ் இலக்கியப் பரப்பின் மேல் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியிருக்கின்றன என்பது உண்மைதான். மார்க்சியம், பிராய்டியம், அமைப்பியல், பின்னை அமைப்பியல், நவீனத்துவம், பின்னை நவீனத்துவம், இருத்தலியல் உள்ளிட்ட நவீனக் கோட்பாடுகளால் தமிழ் இலக்கியங்கள் அளக்கப்பட்டிருக்கின்றன. மரபார்ந்த திறனாய்வுக்கான எல்லைகளைத் தாண்டி, அவை புதிய நோக்குகளையும் உருவாக்கியிருக்கின்றன. ஆனால், த.விஜயலட்சுமியின் ‘தமிழ் இலக்கியக் கோட்பாடு’ என்னும் இந்நூலோ, தொல்காப்பியரைக் கொண்டு நவீன இலக்கியங்களை அளந்து பார்க்கலாமே என்று புதிய சாளரத்தைத் திறக்கிறது.
உலகப் பொதுவான இலக்கியக் கோட்பாட்டுக்கான அம்சங்கள் தமிழ்க் கவிதையியலில் இருப்பதால், அதைக் கொண்டு பல்வேறு மொழிகளில், பல்வேறு காலகட்டங்களில் உருவான இலக்கியப் பனுவல்களை அணுகிப் பார்க்கலாமே என்று முன்னுரைக்கிறார் த.விஜயலட்சுமி.
திணை இணக்கம், திணைப் பிணக்கம், திணை விரிவாக்கம் என்னும் நிலைகளில் திணைக் கோட்பாட்டை விரிவுபடுத்தி, உலக இலக்கியங்கள் அனைத்திற்கும் பொருந்தும் ஒரு இலக்கியக் கோட்பாடாக விரிவடையச் செய்யலாமென்றும் அதற்கான ஆற்றல் திணைக் கோட்பாட்டில் உள்ளது என்றும் அடையாளப்படுத்திய மலையாளப் பேராசிரியர் கே.ஐயப்ப பணிக்கரை முன்மொழிந்து தனது ஆய்வைச் செய்துள்ளார் நூலாசிரியர்.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், பேராசிரியர் சிவ.சுப்பிரமணியம், தமிழவன், அ.ராமசாமி, தி.கு.ரவிச்சந்திரன், க.ஜவகர் ஆகியோர் திணைக்கோட்பாட்டு அடிப்படையில் புரிந்துள்ள ஆய்வுகளை உரமாக்கிக் கொண்டு தனது ஆய்வின் போக்கைத் தீர்மானித்துக் கொண்டுள்ளார் த.விஜயலட்சுமி. அந்த அடிப்படையில் அவர் புதிய நோக்கில் இந்நூலைப் படைத்தளித்துள்ளார்.
‘முடிவன்று தொடக்கம்’ என்று தன்னுடைய இறுதிப் பகுதிக்குத் தலைப்பிட்டிருக்கிறார் த.விஜயலட்சுமி. திணைக்கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டு, தமிழ் இலக்கியப் பரப்பை நோக்கும் மரபு இடையறுந்து போயிருப்பதைக் குறித்துக் கவலையோடு பதிவு செய்யும் அவர், அதனை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிடுகிறார்.
‘இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த, இன்று விட்டுப் போன தமிழ்ச்சிந்தனை மரபைத் தற்காலத் தமிழ் அறிவுசார் சமூகத்திற்கு மீண்டும் கட்டமைப்பதாக, தொடர் உருவாக்கமாக, இக்கோட்பாடு அமைகின்றது. தொடர்ந்து இக்கோட்பாட்டடிப்படையில் ஆய்வு மேற்கொள்வதன் வழியாக இக்கோட்பாட்டை ஒரு செறிவான நிலைக்கு மேம்படுத்த இயலும். அவ்வாறு செறிவடைந்த தமிழ் இலக்கியக் கோட்பாட்டை ஆங்கிலமொழி வழியாக உலக இலக்கியங்களுக்குப் பயன்படும் ஒரு சிறந்த இலக்கியக் கோட்பாடை உலகிற்கு அளித்தல் என்பது தமிழர்களாகிய நமது கடமையும் பெருமையுமாகும்’ (ப.108) என்று அவர் குறிப்பிடுகிறார்.
கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலப் பேராசிரியராகப் பணியாற்றும் த.விஜயலட்சுமியின் இம்முயற்சியை இளம் தமிழியல் ஆய்வாளர்கள் தொடர வேண்டும். அவ்வாறு தொடர்வதன் மூலம்தான் இக்கோட்பாட்டை விரிவாக்கவும் செழுமைப்படுத்தவும் இயலும். கவிஞர் சிற்பி குறிப்பிடுவதைப் போல, ஏற்கனவே தொடங்கித் தொடங்கி இடைநின்றுபோன இக்கோட்பாட்டு உருவாக்க முயற்சியில், த.விஜயலட்சுமியின் இந்நூல் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. தமிழின் திறனாய்வு எல்லைகளை விரிவாக்குவதற்கான குறிப்புகளை முன்மொழியும் த.விஜயலட்சுமியின் ‘தமிழ் இலக்கியக் கோட்பாடு’ என்னும் இந்நூல் கவனம் பெற வேண்டிய படைப்பு.
தமிழ் இலக்கியக் கோட்பாடு
த.விஜயலட்சுமி
பூவரசி வெளியீடு
2, இரண்டாவது தளம், ஒன்றாவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம்,
சென்னை - 600 093 பேசி: 9600131346 முதற்பதிப்பு : பிப்ரவரி, 2019
விலை: ரூ.150/-