தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்திலிருந்து வெறுத்து ஒதுக்குவது மரண தண்டனையை விட கொடியது என்றார் டாக்டர் அம்பேத்கர். ஆனால் அவருக்கு முன்பும், அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்பும் இந்திய சமூகச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களால் அவிழ்த்து விடப்பட்ட தீண்டாமை கொடுமைகள் ஆயிரம்.. ஆயிரம். மதுரை மாவட்டம் மேலவளவு என்ற ஊரில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.முருகேசனையும் அவரின் உறவினர்களையும் ஆதிக்க வெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாக வெட்டிக் கொன்றார்கள். உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உத்தப்புரத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, வீ.கரிசல்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாமரைக்குளம் கிராமத்தில் சாதி வெறியர்களின் காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது . தாமரைக்குளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இருபது குடும்பங்களே உள்ளனர். ஆனால் ஆதிக்க சமூகத்தினரோ ஐநூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

டிசம்பர் 26 2010. தமிழர் இறையாண்மை மாநாடு திரு தொல். திருமாவளன் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மூலம் கிடைத்த தமிழர் இறையாண்மை மாநாடு சுவரொட்டியை தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளின் சுவர்களில் ஒட்டினார்கள். மற்ற சமூகத்தினர்களின் வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ ஓட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இதைப் பொறுக்காத ஆதிக்க சமூகத்தினர் சுவரொட்டியின் மீது மாட்டு சாணத்தைக் கொண்டு அடித்து மேலும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகப் பேசி அடிக்க முற்பட்டனர்.

ஆதிக்க சமூகத்தினரின் வெறிச்செயலுக்கு பயந்து தாழ்த்தப்பட்ட மக்கள் அ.முக்குளம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர். இதில் அ.முக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அல்லிராஜன், தாமரைக்குளம் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவரை காவல் நிலையத்துக்கு அழைத்துப் பேசும்பொழுது, "ஒரு தாழ்ந்த சாதிப்பய எனக்கு நிகராக நாற்காலியில் அமர்ந்து இருக்கான், இங்கே நான் இருப்பதா?" எனக் கூறி காவல் நிலயத்தை விட்டு வெளியேறிவிட்டார். பின்பு சார்பு ஆய்வாளர் திரு.அல்லிராஜன் இரு சமூகத்தினரையும் அழைத்து சமாதனம் செய்து அனுப்பிவைத்தார். இந்த நிகழ்வு நடந்து சுமார் இருபது நாட்கள் கடந்த நிலையில் ஆதிக்க சமூகத்தினர் மிகப்பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதை அறியாத தாழ்த்தப்பட்ட மக்கள், வழக்கம் போல் அவரவர் சொந்த வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். 

30.01.2011 ஞாயிறு இரவு சுமார் 7.30 மணித்தியாலத்தில் ஆதிக்க சமூகத்தினர் தாங்கள் திட்டமிட்டபடி நாற்பது ஐம்பது நபர்கள் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் அவர்களின் வீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல் வீடுகளுக்கு தீ வைத்து விட்டு ஆடு, கோழி, நெல் மூட்டை, நகை, ஆகியவற்றை அபகரித்து சென்றுவிட்டனர். இதில் ஆறு நபர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள். நாற்பது ஐம்பது நபர்கள் சேர்ந்து வெறும் ஆறு நபர்களைத்தான் தாக்கினார்களா என்ற கேள்வி எழலாம். ஞாயிறு இரவு அனைவரும் வீட்டில் இருப்பார்கள் அவர்களை அடித்து நொறுக்கிவிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். அதிர்ஷ்டவசமாக வேலைக்குச் சென்ற நபர்கள் வார இறுதி நாளான ஞாயிறு அன்று வீட்டுக்கு வர இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதற்குள் ஆதிக்க சமூகத்தினர் தங்களின் அழித்தொழிப்பு வேலையை நிறைவேற்றி இருந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அவசர வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கும் ஆதிதிராவிட மக்களுக்கு சரியான மருத்துவம் செய்யப்படவில்லை. ஆதிக்க சமூகத்தின் அதிகார பலத்தால் அரசு மருத்துவமனை ஊழியர்கள், ஒரு ஊசி மட்டும் போட்டுவிட்டு, வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர். அடிபட்டவனுக்கத்தானே தெரியும் வலியும் வேதனையும்? இருந்தும் என்ன பயன்? அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்குள் இருந்து ஒன்றும் செய்யமுடியவில்லை.

காவல்நிலைய புகார்ப் பதிவு

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, அ.முக்குளம் காவல் நிலையத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30.01. 2011 அன்று நடு இரவு புகார் பதிவு செய்யப்பட்டது. ஆதிக்க சமூகத்தினர் நாற்பது நபர்களின் பேரில் புகார் கொடுக்கப்பட்டது. இன்று (03.02.2011) வரை ஆறு நபர்களை மட்டுமே கைது செய்துள்ளனர். DSP திரு.ஞானசேகரன் மற்றும் அருப்புக்கோட்டை RDO இருவரிடமும் ஏன் மற்ற குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்று கேட்டதற்கு, குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடைத்தை நீங்கள் காட்டுங்கள் அவர்களைக் கைது செய்கிறோம் என்று சொல்லி, ஆதிக்க சமூகத்தினரிடம் யார் யார் வழக்கை நடத்துகிறார்கள் என்று அடையாளப்படுத்தி அவர்களை அழித்தொழிப்பு செய்துவிட்டால், வழக்கை முன்னெடுத்துச் செல்ல யாரும் வரமாட்டார்கள் என்று திட்டமிட்டு காவல் துறையும் ஆதிக்க சமூகத்தினருக்கு ஆதரவாக இயங்கி கொண்டிருக்கிறது.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்று, இந்த நிலை பல ஆண்டுகாலமாக நடந்துகொண்டு இருக்கிறது. இன்னும் செருப்பு போட்டு நடக்கக்கூடாது, இரட்டைக் குவளை முறையில் தேநீர் அருந்தவேண்டும் சரி சமமாய் உட்காரக்கூடாது , தோட்டி வேலை செய்யவேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிக்க சமூகத்தினர் அடிமையாகவே வைத்திருக்கின்றனர். எதிர்த்துப் பேசினாலோ, சொல்லும் வேலையை செய்ய மறுத்தாலோ தாழ்த்தப்பட்ட மக்கள் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள். இவ்வாறான எண்ணற்ற வன்கொடுமைகள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

Pin It