கீற்றில் தேட...

துளி துளி வெளிச்சங்களால் அவ்விரவு மினுங்கிக் கொண்டிருந்தது.

சரிவான பாதை ஓரத்தில் அந்தக் கார் சிறுக சிறுக தொப்பலாக நனைந்து கொண்டிருக்க...... இரவின் சப்தங்களை மழை மறைத்துக் கொண்டிருந்தது. மழையின் விரல்கள் தடிப்பதும், சிறுப்பதும்... அவ்வப்போது இடிக்கு முன்பு வரும் மின்னல் வெளிச்சங்களில் மழை சிலிர்ப்பதும் தொடந்து கொண்டிருந்தது. ஊரின் ஒதுக்குப்புறமான காடுகளின் வளைவுகளின் மேட்டில் கார் தன் கண்களை கொஞ்சமாக திறந்து வைத்துக் கொண்டிருந்தது. சதுர பூதத்தைப் போல அந்தக் கார், கனவுகளின் கூடாரமாக அமர்ந்திருந்தது.

கீழே சல சலத்து ஓடும் ஆற்றின் வெப்பச் சூட்டோடு புல்வெளிகளின் மறைவில் இருந்து துளிகளின் சுடுதல்களிலிருந்து தப்பித்தவன் போல......மர்மன் ஓடி வந்தான்.

வந்தவன்.....வந்த வேகத்தில்.... காருக்குள் ஏறி பின் இருக்கையில் தன்னை குறுக்கிக் கொண்டான். உள்ளே வந்ததும் குளிரின் பார்வை நடுங்க.... உடலின் சூடு தோல் மேவியது. மழை வலுக்கத் துவங்கியிருந்தது. ஆற்றின் வட திசையில் இருந்து புல்லட்டும் பீட்டரும் ஓடி வந்து காரினுள் ஏறினார்கள்.

புல்லட் டிரைவர் சீட்டிலும்..... பீட்டர் காரில் பின்னால் மர்மன் பக்கமும் அமர்ந்தார்கள்.

"மர்மா..... மழை பயங்கரமா வரும் போல...! கிளம்புவோம்.." என்ற பீட்டர் மீண்டும் மதுப் போத்தலை எடுத்து ஆளுக்கொரு காகிதக் கோப்பையில் பெக்கிற்கு மேல் சற்று அதிகமாகவே ஊற்றினான்.

ஊற்ற ஊற்றவே...... "பெரியசாமிய, எங்க காணொம்.....?" என்று கேட்டுக் கொண்டே சரக்கை வேக வேகமாய் குடிக்க...... கார் நிற்கும் திசையில் இருந்து மேல் நோக்கி இருந்த மரத்தின் பின்னாலிருந்து காதில் அலைபேசியுடன் ஓடி வந்து காருக்குள் ஏறினான் பெரியசாமி.

மூவரின் கண்களும் ஒரு சேர அவனைப் பார்க்க..... "ஆபிஸ் கால் டா" என்று பொதுவாக சொல்லி விட்டு அவனின் சரக்கை வாங்கி கவிழ்த்தான். ஏற்கனவே நால்வரும் சேர்ந்து ஒன்றரை முழு போத்தலை காலி செய்திருந்தார்கள். இப்போது, அடுத்த அரை போத்தலின் கணக்கின் ஆரம்பம். புல்லட் இரண்டு தவணையில் ஒரு கோப்பையை காலி செய்து விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

பீட்டர்....."அரசன்........... எங்க?" என்று கேட்கவே.. மூவரின் பார்வையும் மழைக்குள் செல்ல.... மழைக்குள் இருந்து வேகமாய் வந்து புல்லட் பக்கம் நின்றான் அரசன்.

"அரசா போலான்டா.... டைம் ஆச்சு....!" என்றான் மர்மன்.

"இருண்ணே... டூ மினிட்ஸ்..." என்றவன் புல்லட்டிடம் கார் டிக்கியை ஓப்பன் பண்ணச் சொன்னான். கூட மழை அதிரும் சிரிப்பு. பீர் சிரிப்பு அது.

அடுத்த கணம் பீரோடு பின்னால் மர்மனுக்கு பக்கத்தில் அமர்ந்தான் அரசன். அவன் ஒரு பீர் குடிகாரன். இது 6 வது பீர்.

*
மழை பெரிதாக, வண்டியை ஊருக்குள் திருப்பினான் புல்லட்.

காருக்குள்.. பலத்த நிசப்தம். போதை தலையாட்டும்....மெல்லிய கோட்டில்....."தேவன் கோவில்......... தீபம் ஒன்று" - இசைஞானி பெண்ணாய் மாறி இசைத்துக் கொண்டிருந்தார். மென் சாரல் கார் கண்ணாடிகளில் ரேகை விட்டுக் கொண்டிருந்தது.

விடிந்தால் நண்பன் 'ஆலன் போ' வுக்கு திருமணம். அதற்கான ட்ரீட்தான் இந்தக் குடியும்....இந்தப் பாட்டும். கார் 'சிலுவைபுரம்' நோக்கி போய்க் கொண்டிருந்தது. பேச்சு அரசியல் பக்கம் திரும்பியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி கிளம்பியது. மர்மனும் பெரியசாமியும் வழக்கம் போல.. விவாதத்தில் மதுவை ஆவியாக்கினார்கள்.

"இல்லடா... நீ நினைக்கற மாதிரி அரசியல் இல்ல. இது மிக மோசமான விஷம் கொண்ட நாய்க்கடி. அதை ஜாக்கிரதையாகத்தான் கையாள வேண்டும்...."

"இங்க அரசியல்ன்னு ஒன்னு இருக்கா என்ன.... அவ்வளவும் பித்தலாட்டம்.... இது சாக்கடைடா..."

"சாக்கடை சாக்கடைனு சொல்லிட்டே இருந்தா போதுமா... உன் வீட்டுக்கு முன்னால இருக்கற வீதியைத் தோண்டிப் போட்டு எவ்ளோ மாசம் ஆச்சு.. இதுவரை நீ ஏதாவது பண்ணிருக்கியா...?"

"நான் ஏன்டா பண்ணனும்... புரட்சி பேசற நீ ஏதாவது பண்ணு....!"

"நான் முடிஞ்ச அளவு பண்ணிட்டு தான் இருக்கேன்... உன்ன மாதிரி ஆளுங்களோட சப்போர்ட்தான் கிடைக்க மாட்டேங்குது...."

"ஆமா.. நீ பெரிய கம்யூனிஸ்ட்ட்டுனு பெருமை பட்டுக்காத.... கம்யூனிசமே கூட அடக்குமுறை அரசியல்தான்டா..."

"வலது சாரி அரசியல் மட்டும் அடக்கு முறை பண்றது இல்லையா... என்ன...?"

"சே குவேரா இன்னைக்கு இருந்திருந்தா வால ஒட்ட நறுக்கிருப்பாங்க...நியாபகம் வெச்சுக்கோ "

"வேண்டா நண்பா... சே பத்தி பேசாத.... அந்த மனுஷன் கடவுளுக்கும் மேல.... இனி ஒரு வார்த்தை பேசின அப்பறம் நல்லா இருக்காது..."

"டேய் அவனைப் பத்தி பேசினா ரோஷம் பொத்துகிட்டு வருதுல்ல.... நீ மட்டும் ஜீசஸ் பத்தி பேசற...!"

"டேய் ஜீசஸ் பத்தி தப்பா ஏதும் சொல்லலையே... அவரும் ஒரு சோசியல் ரீ- பாமர் ன்னு தான் சொல்றேன்.... முதல்ல மரியாதையா பேச கத்துக்கோ...!"

பேச்சு இன்னும் வேறு விதமாகப் போனது... தனிமனிதத் தாக்குதலாக மாறியது.

மர்மனுக்கு உள்ளே ஏதோ செய்தது. "இல்லையே.. இவன் இப்டி பேசற ஆள் இல்லையே... என்னாச்சு... ஏதோ வம்பிழுக்க பேசறது போல இருக்குதே..." புல்லட்டைப் பார்த்தான்.

புல்லட் "எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை"யே என்பது போல...கண்களை எட்டி எட்டி மழைக்கு மறைந்த சாலையை சிமிட்டி சிமிட்டி துடித்துக் கொண்டே காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.

பேச்சு வலுத்தது. வார்த்தை தடித்தது.

"டேய் நான் யார்னு தெரியுமா.... பச்சை பெல்ட்டுடா... அடிச்சேன்னு வையு.....செத்துடுவ...."

'செத்துடுவ' யை அழுத்தி எச்சில் தெறிக்க சொன்னான் பெரியசாமி. ஏதோ சாமி வந்தது போல. திக்கென்று ஆகி விட்டது மர்மனுக்கு. "பேய் பிடிச்சிருக்குமோ" மனதுக்குள் சிறு வயது பேய் மரத்தைக் கடந்து வந்தது நினைவுக்கு வந்தது.

"இல்லை. பெரியசாமி எதற்கோ திட்டம் போடுகிறான். அவன் நார்மலாக இல்லை...." மர்மனின் மனதுக்குள் உடைந்த கண்ணாடி சில்லுகளை எல்லாம் பொறுக்கிக் கொண்டு ஆற்றங்கரையோரம் ஒளிந்திருக்கும் சூட்சும நினைவு வந்தது. அது தீரா நதி என முன்பொரு காலத்தில் இருந்ததை காரணமே இல்லாத காரணத்தோடு போதையின் நெற்றியை வைப்பரால் துடைத்து விட்டு ஒற்றை விரல் கொண்டு சொரிந்து கொண்டே யோசித்தான். அதற்குள் சிலுவைபுரம் வந்து விட எல்லாரும் வண்டியை விட்டு இறங்கினார்கள். ஒவ்வொருவரும் தள்ளாடும் கால்களோடு ஆளுக்கு இரண்டு கால்கள் சேர்த்து வாங்கி இருந்தார்கள்.

"இவ்ளோ மோசமான சிந்தனை இருக்கற உன்கூட நான் இருக்க மாட்டேன்... நான் கிளம்பறேன்...... இனி ஒரு நிமிஷம் கூட உன் கூட தங்க மாட்டேன்..." பெரியசாமி திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருந்தான். அவன் மூளை மட்டும் ஏதோ பொறியில் மாட்டிக் கொண்டிருப்பது போல இருந்தது.

"டேய் நான் யார் தெரியுமா... டேய் நான் யார் தெரியுமா...?" இதே வசனத்தை 50 முறைக்கு மேல் நுரை தள்ளுவன் போல மென்று கொண்டிருந்தான் பெரியசாமி. "டேய் நான் ஜீனியஸ் டா.... டேய் நான் ஜீனியஸ் டா..." என்ற இடைச்செருகல் வேற.

அரசன் வேகமாக வந்து ஓங்கி பளாரென ஓர் அறை விட்டான். கப் சிப்பென ஆனது எல்லோரின் பார்வையும்.

"நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்... பெரிய புடுங்கி மாதிரி பேசிட்டு இருக்கான். யார்னா இவன்... லூசுப்பயல எங்கிருந்து புடிச்சிட்டு வந்தீங்க....." என்று கத்தி பெரியசாமியைப் பார்த்து.... "எந்த ஜீனியஸ்டா தன்னை ஜீனியஸ்னு சொல்லுவான்....படிச்ச முட்டாளா இருக்க...." என்று பல்லை கடித்துக் கொண்டு பேசியபடியே மீண்டும் அடுத்த பீருக்கு சென்றான் அரசன். உடன் புல்லட் பீட்டர் கூட்டணி. வண்டி நின்ற புல்வெளி மேற்பரப்பில் சில இளசுகளும் கல்யாண ட்ரீட்டில் குடித்துக் கொண்டிருந்தார்கள். கணம் ஒன்றில் திரும்பி...... பிறகு சுதாரித்துக் கொண்டு குடியைத் தொடர்ந்தார்கள். விக்கித்து நின்ற பெரியசாமிக்கு விடாது கருப்பு மாதிரி மீண்டும் முனங்கத் தோன்றியது. நொடியில் உப்பி விட்ட கன்னம் பெல்ட்ட்டாய் மின்னியது.

கன்னத்தை தடவிக் கொண்டு நின்றிருந்த பெரியசாமி, மர்மனைப் பார்த்து......" எனக்கு இது தேவைதான்... டேய் நான் பச்சை பெல்ட்டுடா.. அடிச்சேன்னு வை" என்று கன்னம் தாண்டி காற்று கடித்து முனங்கினான்.

முதுகில் சளீரென இன்னொன்று விழுந்தது. கையை உதறிக் கொண்டு, மர்மனைப் பார்த்து....."ண்ணா...இவன் நிஜமாலுமே பச்சை பெல்ட்டுதான்... முதுகு கல்லு மாதிரி தான் வெச்சிருக்கான்" என்று சொல்லி சிரித்தான் அரசன். புல்லட்டும் கூட சேர்ந்து கொண்டு....."ஏன் பெரியசாமிண்ணா.....இந்த பச்சை பெல்ட்ட இடுப்பில கட்டுவியா இல்ல ******** கட்டுவியா...!?" என்று மியூட்டே இல்லாமல் கேட்டு விட்டு சத்தம் போட்டு சிரித்தான்.

"இனி இங்கிருந்தா........என்னை மாதிரி கேவலமானவன் யாரும் இருக்க மாட்டாங்க" என்று சூனியம் பிடித்தவன் போல தானாகவே பேசிக் கொண்டு வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த பெரியசாமி அவன் பேக்கை எடுத்துக் கொண்டு வேகமாய் வெறி கொண்ட பச்சை பெல்ட்டாய் கிளம்பினான்.

"பெரியசாமிண்ணா எங்கே போகிறீர்கள்.....? இங்கே இந்த நேரத்திற்கு பேருந்தெல்லாம் இல்லை...! இப்படியே நடந்து போனீர்கள் என்றால் சிறுத்தைக்கு உங்க மண்டையைக் குடுக்கலாம்....கரடிக்கு உங்கள்.........." என்று செந்தமிழில் ஏதோ சொல்லி முடிப்பதற்குள், அவன் வாய் பொத்தி சாய்த்து விட்டு ஓடிச் சென்று.........."பெரிய......... சா...........மீ........ ...." என்று கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தான் மர்மன்.

தலை தவழ.....அழுகை உளற... நா பிறழ இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு மாறி மாறி அழுதார்கள்.

"மானங்கெட்டவனுங்கடா ரெண்டுபேரும்" என்ற பீட்டர் கடைசி ரவுண்டை மூக்கில் ஊற்றிக் கொண்டிருந்தான்.

எல்லாரும் தூங்கி விட்டார்கள்.

"பெரியசாமி இப்டி சண்டை போடற ஆள் இல்லையே.... விவாதம் பண்ணுவான்... ஆனா... இப்டி விவரம் கெட்டு பேசமாட்டானே..." யோசித்த மர்மனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் பார்த்துட்டான் போல.... அதான் திட்டம் போட்ருக்கான்... அவனுக்கு இங்கிருந்து இப்போ கிளம்பனும்.... அதுக்குத்தான் இந்த ஓவர் ஆக்டிங். பிணம் போல படுத்துக் கொண்டே யோசித்தான் மர்மன்.

"நான் யாரு... டேய்.... நீயெல்லாம் எப்பவாதுதான் நடிப்ப... நான் எப்பவுமே நடிக்கற ஆளுடா..." மர்மன் மனதுக்குள் பேசினான். மனதோடு பேசினான்.

மெல்ல திரும்பி பெரியசாமியைப் பார்த்தான். குடி வென்று விட்டிருந்தது. நன்றாகவே எழுப்பினான். கொஞ்சம் தண்ணீரை எடுத்து முகத்தில் சொத்தென்று அடித்தான்.

"பக்க பக்க பக்கா பக்கா.... ப்ருவ்வ்வ்ப்..... பரா பரவிபிபிபிபிபி..... கோர்ர்ருஉஉஉஉ......." அவன் குறட்டை எப்படி இருக்கும் என்று இவனுக்கு நன்றாகத் தெரியும். இனி காலை 5 மணி இல்லமால் பெரியசாமி எழ மாட்டான். எல்லா திட்டமும் குடித்தே முடித்து விட்டான். பீட்டர் குடித்தால் பிணம் தான். இப்போ புதைத்தால் கூட சத்தமே இருக்காது. புல்லட் தொடை நடுங்கி. இரவில் தனியாக வெளியே வரவே மாட்டான். சிறுத்தை பயம். அரசன் பேருக்கு தான்.... சலம்பல் கேஸ். அவ்ளோ புத்தியெல்லாம் இல்லை.

வீட்டின் பின்புறம் மாநிற யானையைப் போல மெல்ல நடந்து மஞ்சள் பைக்கை நகர்த்தி, தள்ளிக் கொண்டே ஐந்து நிமிடம் காட்டுக்குள் நடந்தான் மர்மன். பௌர்ணமி வெளிச்சம்.... பகல் கனவை விதைத்துக் கொண்டிருந்தது. மழை முன்பு போல இல்லை. காரணம் அறிந்து தூறிக் கொண்டிருந்தது. தூரிகைக்குள் மஞ்சள் பைக் புகுந்தது போல மெல்ல மெல்ல காட்டின் வரைபடம் நகர்ந்து கொண்டிருந்தது.

*

சாவியே இல்லாத அந்த பைக்கை புல்லட்டுக்கு மர்மன்தான் முன்பொரு காலத்தில் கொடுத்திருந்தான். இன்னமும் சாவி இல்லாமல்தான் ஸ்டார்ட் ஆகிக் கொண்டிருக்கிறது அந்த மஞ்சள் வாகனம். பௌர்ணமியை கோடிட்டு இழுத்துக் கொண்டே நகர்ந்தது அந்த பைக். காட்டுக்குள் அதிரும் சப்தங்களில்... யாரோ அவனை விரட்டுவது போலவே இருந்தது. திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஓடினான். இல்லை இல்லை ஓட்டினான். குளிரும்.. இரவும்... நிறமற்று காற்று கிழிக்கும் பனியின் உருவத்தில் அவனும் பைக்கும் சிறு சிறுத்தையின் உறுமலோடு சென்று கொண்டிருந்தனர்.

எல்லாம் சரியாக அமைந்து விட்டால்... இரண்டு மாதமாக கிடப்பில் போட்டிருக்கும்...... குறும்படத்தை எடுத்து விடலாம். இன்றிலிருந்து சரியாக 3 வருடங்களில் ரஜினியை வைத்து ஒரு படம் செய்து விடலாம். கமல் நடிப்பாரா என்று தெரியவில்லை. ரஜினி அரசியல் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் அவர் நடித்தால் எப்படியும் படம் ஹிட் அடித்து விடும். அதை நோக்கித்தான் இந்த தோட்டா இப்போது பாய்ந்து கொண்டிருக்கிறது.

பனி மாதிரிதான் இருந்தது. மோதி விழுந்த பிறகுதான் பாறை என்று தெரிந்தது. எழுந்து...பைக்கை நிமிர்த்தி வைத்து விட்டு பனி விலக்கிப் பார்த்தால்...திக்கென்று கண்களில் ஏதோ அசைந்தது. ஆற்றங்கரை பாறையில் மெல்லிய ஆடையில் பௌர்ணமி மினுமினுங்க சாம்பல் நிறத்தில் ஒரு பெண் தலை விரித்து அமர்ந்திருந்தாள். நீர் மோகினியைப் போல சாயல் இருந்தது.

பௌர்ணமி வெளிச்சம் அவள் மீது பட்டுத் தெறிக்க, ஆற்று முகத்தில் அவளுருவம் மெல்ல அசைந்து கொண்டே வெற்றிடம் களைத்துக் கொண்டிருந்தது. இடை சுருங்கி மார் பிதுங்கி...கழுத்து நீண்டவளின் தலை, ஒட்டகத்தைப் போல அங்கும் இங்கும் காற்றை கவ்விக் கொண்டே இருந்தது.

திக்கென்று நடுங்கிய உடலோடு தேயிலை மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்ட மர்மன்..... கண்களால் சிமிட்டிடவும் பயந்தான்.

"என்ன நடக்குது. யார் இது.... நிஜமாலுமே பெண்ணா.... இங்கு என்ன செய்கிறாள்...." ஒன்றும் விளங்காத யோசனை.... கொஞ்ச நஞ்சம் இருந்த போதையை மொத்தமாக இறக்கி விட்டது. இதயத் துடிப்பை மூளை உணர்ந்தது. கை கால்கள் அசைய மறுத்தன.

சிற்பம் அசைவதைப் போல அத்தனை பயங்கரமா இருந்தது, பயமாகவும் இருந்தது. சட்டென திரும்பிய அவ்வுருவத்தின் வாய்க்குள்ளிருந்து காட்டேரி பற்கள் சர்ரென இறங்கின. கால்களின் வழியே நிலநடுக்கத்தை உணர்ந்தான் மர்மன். முதன் முறையாக ஒரு காட்டேரியை இத்தனை அருகில்... "அயோ.... சொன்னால் யாராவது நம்புவார்களா..... குறும்படம் பிறகு எப்போதாவது எடுத்துக் கொள்ளலாம். உயிர் போனால் என்ன செய்வது...?"

மழை சற்று வழுக்கத் தொடங்கியது.

"நிஜமாலுமே பேய் தானா...? பின்ன இந்த நேரத்துக்கு இங்கே எப்படி ஒரு பெண் இருப்பாள்..." ஆடை விலகும் போதெல்லாம் ஆசையும் வந்தது. ஆவென திறந்த அவள் வாயில் முளைத்திருந்த தாறுமாறான பற்கள்......மூடியற்ற கண்களை கொண்டவன் போல.. நறநறவென பின்னால் திரும்பிப் பார்க்காமல் பைக்கை தள்ளிக் கொண்டு ஓட வைத்தது.

இம்முறை பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. பைக் காலில் எல்லாம் விழுந்து கெஞ்சிப் பார்த்தும் பயனில்லை. அவன் நடந்தே சென்றாலும் விடிவதற்குள் வீடு சென்று சேர்ந்து விடுவான். அதற்குள்.... அவன் இங்கு வந்த கதையைச் சொல்லி விடுகிறேன்.

கதை 1.

காருக்குள் அமர்ந்து முதல் ரவுண்டை முடித்தார்கள். மிக்ஸர் சகிதம் அடுத்த ரவுண்டை முடிக்க... சில்லி சிக்கன் சிவப்பின் வாசனையோடு அடுத்த ரவுண்ட்.... வெளியே மழைச்சாரல் பூ போல பொழிந்து கொண்டிருந்தது... அல்லது பூவே மழையாக உதிர்ந்து கொண்டிருந்தது.

"மயில் தோகை அழைத்தால் மழை மேகம் நெருங்கும்
மடல் வாடை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்....."

இசை ஏனோ இம்சித்தது.

புல்லட்டுக்கு வயிறு சரி இல்லை என்று கீழே ஆத்தங்கரைக்குச் செல்ல பீட்டரையும் அழைத்துக் கொண்டது... சந்தேகத்துக்கு இடம் அளிக்காத ஒன்றுதான். அரசனுக்கு அலைபேசி அழைக்க.. அவன் ஒரு பக்கம் சென்றிருந்தான். பெரியசாமி ஏற்கனவே ஆபிஸ் கால் என முதலில் காரை விட்டு வெளியே சென்றவன் அவன்தான்.

"காட்டுக்குள்ள இப்டி அவனவன் போய்ட்டா என்ன பண்ண...!?" இருந்த மிடறுக்குள் இன்னும் கொஞ்சம் சரக்கை கவிழ்ந்து படக்கென அடித்து விட்டு......."டேய்.. புடுங்கிகளா.. குளுருதுடா.... எங்க போய் தொலைஞ்சீங்க.....?" என்று புலம்பிக் கொண்டே கீழே ஆறு நகரும் இடத்திற்கு புதர் தாண்டி மரங்கள் கடந்து எல்லாமே 20 அடிக்குள் தான்... முன்னோக்கி நடந்து தள்ளாடிய மர்மனின் கண்களுக்கு பௌர்ணமியில் டூ ஷாட்டாய் காட்சியும்...... உற்றுக் கேட்ட காதுகளுக்கு ஆற்றின் சலசலப்பைத் தாண்டி கிசுகிசுப்பும் தெரிந்தது,கேட்டது.

"என்ன பண்ண... குடிகார.......****** ங்க... கூடயே இருக்கானுங்க... என்னதான் பண்ண..."

"ஒன்னும் பயப்படத் தேவை இல்ல பீட்டர்.... இது வழக்கமா நான் சரக்கு வைக்கற இடம்தான்...." என்று பாறையின் அடியே இருந்த பொந்துக்குள்ளிருந்து சரக்கை (இது குடிக்கும் சரக்கில்லை) எடுத்துக் காட்டினான் புல்லட்.

"ஓகே.... இந்தா 2 லட்சம்.... இதுக்கு மேலயும் பனியனுக்குள்ள வைக்க முடியாது... இந்த அரசு நாய் மேல மேல வுளுகறான்..." என்று பனியனுக்குள் இருந்து இரண்டு பணக் கட்டுகள் அடங்கிய பாலிதீன் கவரை எடுத்து புல்லட்டிடம் கொடுத்தான் பீட்டர்.

காசை வாங்கி அதே பொந்துக்குள் வைத்தான் புல்லட்.

'ஏன்...!' என்பது போல பார்த்த பீட்டரிடம்.... "இல்ல... எனக்கு போதை கொஞ்சம் அதிகமாவே இருக்கு.... எங்கையாவது மிஸ் பண்ணிட்டேனா கஷ்டம். உனக்கும் போதை தான். சோ, நாளைக்கு கல்யாணம் முடிச்சிட்டு வந்து எடுத்துக்கலாம். இந்த பரதேசிகளும் போய்டுவானுங்க... இவனுங்க இப்டி வந்து சலம்பல் பண்ணுவானுங்கனு நான் நினைக்கல பீட்டர்........" நெற்றி தடவிக் கொண்டே, " சரி அவுங்க வந்த்றப் போறானுங்க.... கிளம்பு" என்று ஜாடை செய்தபடியே சரக்கையும் காசையும் உள்ளே பாறை இடுக்கில் அழுந்த பத்திரமாக வைத்து விட்டு மேலே கிளம்பினார்கள். இந்தக் காட்சியை ஒன்று விடாமல் பார்த்து விட்ட மர்மன்.... அவர்கள் வருவதற்கு முன் ஓடிச் சென்று காருக்குள் முன்பிருந்து போலவே அமர்ந்து விட்டான். மனதுக்குள் காசு மழை அடித்து நொறுக்க ஆரம்பித்திருந்தது. திக் திக் என்று இருந்தாலும் உள்ளே மூளையின் அடியே கரும்புச் சாறு கசிவதை உணர்ந்தான்.

கதை 1 முடிந்து விட்டது.

வீட்டுக்குள் மெல்ல மெல்லென பூனையைப் போல நகர்ந்து வியர்த்து மனம் நொந்து வந்த மர்மன் ஏமாற்றத்துடன் படுத்தான். அழுகலாம் போல இருந்தது. 'வாய்க்கு எட்டியது வயிற்றுக்கு எட்டவில்லையே' என்று ஆழ்மனம் புலம்பியது. பக்கத்து பெட்டில் குறட்டை தொடர்ந்து கொண்டிருந்தது. எட்டி பளாரென பெரியசாமி கன்னத்தில் ஓர் அறை விட்டு விட்டு பட்டென கண்ணை மூடி திரும்பிக் கொண்டான். அவன் ஒரு கணம் குறட்டையை நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.

அப்படி இப்படி என்று விடிந்தும் விட்டது.

நேற்றிரவு நடந்த குட்டிக் கதை ஒன்று.... இப்போது...சொன்னால் தேவலாம் போல..!

கதை 1 (எ)

தண்ணீர் தாகம் தொண்டையைப் பிடுங்க......கால்கள் இருக்கும் பக்கம் தலையைக் கொண்டு துழாவி எழுந்த அரசனின் கையில் தட்டுப்பட்டது பாட்டில். திறந்ததும் மடமடவென பாதி பாட்டிலை காலி செய்த பிறகுதான்... 'ஒவ்வே' என கண்கள் திறந்து பார்த்தான்.

"அட கருமமே..." அது சரக்கு பாட்டில். ஏற்கனவே போதை தலை கால் தெரியவில்லை. அவனுக்கு எல்லாமே மறந்து விட்டது போல ஓர் எண்ணம். எழுந்து நின்று பார்த்தான். படுத்திருப்பது போலவே தான் உணர்ந்தான். நடந்து பார்த்தான். யாரோ வீட்டை அசைப்பது போல இருந்தது. யானை ஒன்று கதவை முட்டிக் கொண்டு நிற்பதாக விரிந்த கற்பனையைக் கடாசி விட்டு வேகமாய் சென்று புல்லட் படுக்கைக்குப் பக்கம் திறந்திருந்த சில்வர் பானைக்குள் சிறுநீர் கழித்தான். சொர்ரென்று வந்த சத்தம் தானாக புன்னகைக்க வைத்தது.

பின் திரும்பி அங்கும் இங்கும் நடந்தான். நடக்க நடக்கவே நடு வீட்டில் சடாரென கீழே விழுந்து ஒரு கையை தலைக்குக் கொடுத்து விட்டு காலாட்டியபடியே 'ஒரு பொன்ம்மானை நான் காண தகதிமிதோம்...."என்று பாடினான். குறட்டை நின்று மீண்டும் தொடர்ந்தது. புல்லட் புரண்டு படுத்தான். பீட்டர் புரளக் கூட இல்லை.

தானாகவே உருண்டு சென்று பெரியசாமி மண்டையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்து விட்டு சிரிப்பு தாங்காமல் கதவைத் திறந்து கொண்டு கொய்யா மரத்தின் பக்கம் சிறுநீர் கழிக்க நின்றான். சிறுநீர் வரவே இல்லை.

"அடக் கருமமே.....! வர்ற மாதிரி இருந்துச்சே....?" என்று பக்கத்தில் நகர்ந்து கொண்டிருந்த காட்டுப் பன்னியைப் பார்த்து தூவென துப்பி விட்டு திரும்பியவன் வீட்டை மறந்து விட்டு, அந்த லைன் வீட்டில் பக்கத்து வீட்டுக் கதவை திறக்க முற்பட்டான்.

"அதுக்குள்ளே எவன்டா பூட்னவன்....! பொறம்போக்குகளா........" புலம்ப புலம்பவே வீடு திறக்கப் பட்டது.

"காலைலதான் வருவேன்னு நினைச்சேன்........ சிநேகிதன் கல்யாணம் இல்ல...... கூட இருந்து எல்லா வேலையும் செய்யனும் இல்ல.... உன்ன தான் எவனும் மதிக்க மாட்டேங்கிறாங்க இல்ல... அப்புறம் என்ன மயித்துக்குப் போற....துப்பு கெட்ட மனுசன்யா நீ .... ஓசில குடிக்க கிடைச்சா மூணு நாள் கூட வீட்டுக்கு வராம இருப்ப, இல்ல..." என்று பேசிக் கொண்டே சென்ற அந்த பெண் பின்னால் திரும்பாமலே நடந்து போய் படுத்துக் கொண்டாள்.

கண்கள் விரித்து நின்று, திரும்பி கதவைத் தாழிட்டு விட்டு...."பெரியசாமி ஏன் பொண்ணு மாதிரி பேசறான்" என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டே அரசனும் அவள் பின்னால் சென்று கட்டிலில் இடம் இருந்த இடத்தில் படுத்துக் கொண்டான். இப்போது குளிருக்கு கொஞ்சம் இதமாக இருந்தது பெட்.

*

"அட மனுசா.... எந்திரி. கல்யாணத்துக்கு போகணும்ல...." அந்த பெண் பேசிக் கொண்டே தண்ணீர் பிடிப்பதும்....... சமைய‌லறைக்குள் நடப்பதுமாக இருந்தாள்.

கண்கள் சிவக்க, தலை கிண்ணென்று வலிக்க, போர்வையை விலக்கி விட்டு படுத்தபடியே கண்களால் வீட்டைச் சுற்றிப் பார்த்தான் அரசன். எழுந்து, எழுந்தவாக்கிலேயே சற்று நேரம் அமர்ந்தான். வாந்தி வருவது போல இருந்தது. எழுந்து தள்ளாடியபடியே மெல்ல கதவு தாண்டி வாசலுக்கு வந்தவன் கண்ணில் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பீட்டர் புல்லட் பட.... அவர்கள் இவனை பயத்தோடு, ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

"பாத்ரூம்ல இருப்பான்னு பார்த்தா இந்த வீட்ல இருந்து வர்றான்...? என்னடா நடக்குது.....?" புல்லட் முனங்கினான்.

அரசன் கொய்யா மரத்துப் பக்கம் சென்று வாந்தி எடுத்தான். பிறகு.....இருவரையும் பொதுவாக பார்த்தபடி, " அட குளிச்சிட்டு கிளம்பலாமப்பா" என்றபடியே இம்முறை சரியான வீட்டுக்குள் நுழைந்தான்.

புல்லட் கண்கள் விரிய....... மெல்ல எழுந்து பக்கத்து வீட்டையே எட்டி எட்டி பார்த்தான்.

பீட்டர் பக்கத்தில் இருந்த கோப்பையை எடுத்து மடமடவென குடித்தான். "தலைவலி புல்லட். கட்டிங் போட்டா தான் சரி ஆகும்...." என்று சொல்லிக் கொண்டே எழுந்து வீட்டுக்குள் சென்றான்.

புல்லட்க்கு தலை சுற்றுவது போல இருந்தது. பக்கத்து வீட்டைப் பார்த்துக் கொண்டே அவனும் வீட்டுக்குள் சென்றான். பக்கத்துக்கு வீட்டு அக்கா ஏதோ பேசிக் கொண்டே இருப்பது தூரத்தில் மசமசவென கேட்டது.

மெயின் கதை தொடர்கிறது.

"எத்தனை குடித்திருந்தாலும் நேற்று நடந்த அவமானத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இருமுறை வாந்தி எடுத்தும் அது நடக்கவில்லை; ஆக, நான் கிளம்புகிறேன் . இனி உங்கள் சவகாசமே எனக்கு வேண்டாம். இப்படிக்கு, பச்சை பெல்ட் பெரியசாமி."

பொதுவாக கடிதத்தைக் காட்டினான் மர்மன்.

அதே நேரம் அந்த அதிகாலை பனிக்குள் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு தேயிலை சரசரப்பில் பனி நீர் சொட்டுதலுக்கு இடையே காட்டுப் பன்னியைப் போல நடந்து, ஓடி அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்தான் பெரியசாமி.

"இந்த இடம் தானா...? பணம் வைத்த பாறை இருக்கும் இடம் இது தானா? "

கதை 2.

ஆம்... ஆபிஸ் கால் பேசிக் கொண்டு நடந்த பெரியசாமி... கீழே ஆற்றங்கரைக்குள் அனிச்சையாக நுழைந்து விட...... அங்கே புல்லட்டும் பீட்டரும் பேசுவதை பாறைக்குப் பின்னிருந்து பார்த்து விட்டான். அதைத் தொடர்ந்து அவனின் பச்சை பெல்ட் தீட்டிய திட்டம்தான் அந்த வாக்குவாதமும்..... விடாப்பிடி சண்டையும். அதைத் தொட்டு வெளியே கிளம்பி விடலாம் என்பது தத்ரூபமான திட்டம். ஆனால் விதி மாறி கன்னத்திலும் முதுகிலும் அறை வாங்கி, பின் நண்பன் அழுது புலம்ப, தானும் அழுது புலம்பி பாழாய்ப் போன போதை தலைக்கேறி குப்புற விழுந்து தூங்கி விட்டு விடிந்தும் விடியாமலும் லட்டர் எழுதி வைத்து விட்டு இங்கே வந்து அந்த சரக்கையும் பணத்தையும் தேடிக் கொண்டிருக்கிறான்.

* நேற்று இரவு அவர்கள் இருந்த பாறையின் திசைக்கு எதிர்திசையில் சுமார் 4 கி. மீட்டர் தூரத்தில்தான் இப்போது பெரியசாமி தேடிக் கொண்டிருக்கிறான் என்பது கொசுறு செய்தி.

கதை 3.

கல்யாணம் முடிந்த மதியம் புல்லட்டும் பீட்டரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ஆற்றங்கரையோரம் பாறையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். விதி வலியது. அவர்களை பாறைக்குப் பின்னாலிருந்து அந்த நீர் மோகினி பார்த்துக் கொண்டிருந்தது.

கதை 4.

புல்லட்டின் ஒன்று விட்ட காதலிதான் இந்த மோகினி ரேத்தா.

சரக்கு கை மாறுவது, பணம் கிடைப்பது பற்றியும்...... அது எங்கு மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது என்பது பற்றியும் வாட்ஸப்பில் அவளிடம் அன்றிரவே பகிர அவளின் உடனடி தகிடுதித்தம்தான் அவளின் அவ்விரவு வருகை. எவனோ ஒருவன் பைக்கில் வருவதைப் பார்த்தவள் அவ்விரவிலும் அது புல்லட் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மோகினியாக மாறி பயமுறுத்தினாள். அவள் நினைத்தது போலவே வந்த மர்மன் பயந்து ஓடி விட......... அதன் பிறகு பாறைக்குள் கை விட்டு பணம் தேடி நண்டுக் கடி வாங்கியதுதான் மிச்சம்.

மெயின் கதை தொடர்கிறது

அன்று மதியம் புல்லட் டாட்டா காட்ட....தனியாகக் காரில் கோவை நோக்கி பயணம் தொடங்கினான் மர்மன்.

திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது.

"ஆனால் 2 லட்சத்தை இப்படிக் கோட்டை விட்டு விட்டோமே... இப்போதாவது போகலாம் என்று யோசித்தால் சத்தியமாக இடம் தெரியவேயில்லை...." மனம் தானாக உழன்றது. குறும்படம் ஆசை ஆசையாய் அவனை ஹாரன் அடித்து ஒதுக்கியது.

"ஹலோ கார் ஒதுங்கிப் போ.... தள்ளி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்..." என்றவன் குடித்திருப்பான் போல... தள்ளாடியபடியே பாதி சாலைக்குள் வந்து வந்து நடந்து கொண்டிருந்தான். "கவுர்மெண்டே சாராயக் கடைய நடத்தினா குடிக்காம என்ன செய்வாங்களாம்..." அவனாகவே முனங்கிக் கொண்டான்.

'அட்டகட்டி'யில் பசித்து விட... வண்டியை 'எவரெஸ்ட்' புரோட்டா கடையில் நிறுத்தினான் மர்மன். மனதுக்குள் வளைவுகள் நிரம்பி இருந்தன. மெல்ல தூறிக் கொண்டே இருந்த மழையை வழக்கம் போல ரசிக்க முடியவில்லை. "கைக்கு எட்டியது காருக்கு எட்டவில்லையே..." என்று யோசித்துக் கொண்டே அந்த புரோட்டா போடுபவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் கை அவன் மூளையை விட வேகமாய் இயங்கிக் கொண்டிருந்தது.

பேச்சு கொடுத்தான்.

"இல்ல சார்.. நான் காலேஜ்ல படிக்கிறேன்.. இது பார்ட் டைம்தான். ரெண்டு மணி நேரத்துல 50 புரோட்டா போட்ருவேன். கொஞ்சம் அழுத்தினேன்னா இன்னொரு 4 புரோட்டா சேர்த்து போடுவேன். அந்த நாலு எனக்கு......." என்று சொல்லி சிரித்து விட்டு வேலையை இன்னும் வேகமாய்த் தொடர்ந்தான்.

"என்ன சார் செய்ய... வாழ்க்கை அவளோ சிக்கலா இருக்கு... ஒரு டிகிரிய வாங்கறதுக்குள்ள நான் புரோட்டா மாஸ்டராவே ஆகிடுவேன் போல..." அவன் எல்லாவற்றுக்கும் சிரித்தான்.

ஏனோ குடிக்க வேண்டும் போல தோன்றியது மர்மனுக்கு.

சரக்கெடுக்க கார் டிக்கியைத் திறந்தான் .

கதை 5

வழக்கம் போல மறந்து விட்டு ஆற்றுக்கு அந்தப் பக்கம் காரைத் தேடிக் கொண்டிருந்த அரசன் கண்ணில், காதில் புல்லட்டும் பீட்டரும் பேசியது, திட்டம் தீட்டியது எல்லாமே விழுந்தது. காத்திருந்த கொக்கைப் போல அவர்கள் காரை நோக்கி நகர்ந்ததும் வேகமாய் நுழைந்து குனிந்து சரக்கு கவரையும், பணக்கவரையும் எடுத்துக் கொண்டு எல்லாருக்கும் கடைசியாக காரை நோக்கி ஓடி காருக்கு கீழே கும்மிருட்டில் போட்டு விட்டுதான் புல்லட்டிடம் சரக்கை எடுக்க வேண்டும், டிக்கையைத் திற என்று கூறினான்.

திறந்தது சீசே.

இரண்டு கவரையும் லாவகமாக இருட்டோடு இருட்டாக கீழிருந்து எடுத்து அப்படியே டிக்கிக்குள் நொடி நேரத்தில் தூக்கி எறிந்து விட்டு காருக்குள் புயலென நுழைந்தான் அரசன்.

காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்பது திட்டம். காலையில் தான் மறந்து விட்டானே..! என்ன செய்ய அவன் பழக்கம்......அவனை இப்போது கூட பொள்ளாச்சி வருவதாக நினைத்துக் கொண்டு சாலக்குடி சாலையில் போக வைத்திருக்கிறது.

மெயின் கதை தொடர்கிறது

மழை அடித்து நொறுக்க ஆரம்பித்திருந்தது. மனதுக்குள் நனைந்து கொண்டே மழைக்குள் ஒரு கிறுக்கனைப் போல சிரித்தான் மர்மன்.

டிக்கியில்.. சரக்கு கவரும்... அந்த 2 லட்சம் பாலிதீன் கவரும்.

புரோட்டா போடுபவன் 50000- த்தை எண்ணிக் கொண்டிருந்தான். அதே சமயம் மர்மன் சென்ற பாதையைப் பார்த்து சல்யூட் அடித்தான்.

*

எல்லாரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். குறும்படம் நன்றாக வந்திருப்பதாக சொல்லி பாராட்டினார்கள்.

குறும்படத்துக்கு டைட்டில்

"அந்த ராத்திரிக்கு சாட்சி உண்டு"

- கவிஜி