வெறும் கையால் முழம் போடாமல்...

சீனாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 14 விழுக்காட்டினர் 60 வயதைத் தாண்டிவிட்டார்கள். 2040 ஆம் ஆண்டில் இது உச்சத்தைத் தொட்டுவிடும் என்கிறார்கள் சீன மக்கள் தொகை ஆய்வு வல்லுநர்கள். அப்போது 33 விழுக்காடு சீனர்கள் அறுபது வயதைத் தாண்டியவர்களாக இருக்கப்போகிறார்கள். இருந்தால் என்ன.. அப்போது பார்த்துக் கொள்ளலாம்.. என்று சீனா விட்டுவிடவில்லை. அதன் சாதக, பாதகங்களைப் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

முதலில் அவர்கள் யோசித்தது, தொழில் வளர்ச்சியில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதுதான். அடுத்து வரும் நாற்பது ஆண்டுகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை இருக்காது என்று வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். அந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் தொகையும் நிலையான தன்மைக்கு வந்துவிடும். அதனால் தொழில் வளர்ச்சி எப்போதும் போலவே இருக்கும். 2016 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் சில ஏற்ற இறக்கம் காணப்படலாம். ஆனால் 2050 ஆம் ஆண்டில் 2020ல் இருந்த நிலைமை திரும்பிவிடும். இந்தக்காரணத்தால் அதில் எந்தத் தொய்வும் ஏற்படாது என்பது அவர்கள் கணிப்பு. 

குடும்பக்கட்டுப்பாட்டு முறையை சிறிது தளர்த்திக் கொள்ளலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் தொழிலாளர் பற்றாக்குறையை மனதில் வைத்துக் கொண்டு இந்த ஆலோசனை கூறப்பட்டால், இப்போதைக்கு இந்த ஆலோசனை தேவையில்லை என்கிறார்கள். சமூக ரீதியாக வேறு சில காரணங்கள் இருந்தால் ஒரு குடும்பம், ஒரு குழந்தை என்பதைத் தளர்த்துவது பற்றி யோசிக்கலாம் என்பதுதான் இந்த ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இரண்டாவதாக, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அவர்களுக்கு மருத்துவ வசதிகளைத் தர முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள். சீன அரசைப் பொறுத்தவரை, அதற்கான வேலைகளை இப்போதே துவங்கி விட்டார்கள். ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் வயதானவர்களின் எண்ணிக்கை எந்த விகிதத்தில் உயரும், அதற்கேற்றாற்போல் எந்த விகிதத்தில் மருத்துவ வசதிகளின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து சென்று கொண்டிருக்கிறார்கள். குறித்த காலத்திற்கு முன்பே இலக்கை அடைந்து வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அளவில்தான் பகாசுரம்..!

போனா வராது... பொழுது போனா கிடைக்காது... வாங்க... வாங்க... என்று வடிவேலு பாணியில் ஜப்பானின் டொயோட்டா கார்களை விற்றனர். அதுவும் நெருக்கடியின்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் மண்ணைக் கவ்வியதால் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரப்போகிறோம் என்ற எண்ணத்தில் ஓட்டைக் கார்களை உலகம் முழுவதும் விற்கத் துணிந்துவிட்டார்கள் டொயோட்டா நிறுவனத்தினர்.

ஆனால் உலகின் பல இடங்களில் திடீர், திடீரென்று விபத்துகள் ஏற்பட்டன. பார்த்தால், உற்பத்தியில்தான் கோளாறு. ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு கோடி வாகனங்களை சந்தைகளிலிருந்து டொயோட்டா நிறுவனம் திரும்ப எடுத்துக் கொண்டுள்ளது. இந்த சிக்கல் ஏற்பட்ட காலத்தில் விற்கப்பட்ட கார்களையும் திரும்ப எடுத்துக் கொள்கிறோம் என்று அறிவிப்பு கொடுத்தார்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

டொயோட்டா நிறுவனம் 1937 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் துவக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போரும் துவங்கியதால் ராணுவ வாகனங்களையும் தயாரித்தது. 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் தரையிலும், தண்ணீரிலும் பயணிக்கக்கூடிய 198 வாகனங்களை டொயோட்டா நிறுவனம் தயாரித்துத் தந்தது. இதனால் கொழுத்த லாபம் கிடைத்தது. கொரியப் போர் நடந்தபோதும் கொள்ளை லாபம் சம்பாதித்தது இந்த நிறுவனம்.

பெரும் அழிவு என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உலகக்போரில்கூட லாபத்தை மட்டுமே கண்ட ஜப்பானிய டொயோட்டா நிறுவனம் தற்போது சிக்கலில் உள்ளது. லாபம் மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டு இயங்கியதுதான் தற்போதைய நெருக்கடிக்கும் காரணமாக இருந்துள்ளது. உற்பத்திச் செலவைக் குறைக்கிறோம் என்ற பேரில் செய்த பல்வேறு வேலைகளின் பலன்தான் கோளாறாகிப்போன வாகனங்கள் சந்தையில் இறக்கப்பட்டதாகும். பகாசுர நிறுவனம் என்பது வெறும் அளவில்தான், தரத்தில் அல்ல என்பது அம்பலமாகியுள்ளது.

வெந்த புண்ணில் பாய்ந்த எரிமலைக்குழம்பு

கடந்த ஆண்டில்தான் ஒட்டுமொத்த நாடே திவாலானது என்று ஐஸ்லாந்து பற்றி அறிவித்தார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்தே அந்த நாடு இன்னும் மீளாத நிலையில் அந்நாட்டின் தெற்குப்பகுதியில் ஒரு பெரிய எரிமலை நெருப்பபைக் கக்கி நாட்டையே கதிகலங்க வைத்துள்ளது.

உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் செய்வதறியாமல் விமான நிலையங்களில் சிக்கிக் கொண்டனர். நூற்றுக்கணக்கான விமானங்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்ததே அதற்குக்காரணம். எரிமலையிலிருந்து கிளம்பிய சாம்பல் விமானப்பாதையையே மறைத்துவிட்டது. அந்த அளவிற்கு எரிமலையிலிருந்து சாம்பல் வெளியேறியது.

ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுக்கும் இந்த சாம்பல் பரவியது. ஐஸ்லாந்து நாட்டின் பாதிப்பகுதி சாம்பல் மயமாக இருக்கிறது. இந்த சாம்பலால் சுகாதாரக்கேடு எதுவும் இருக்குமா என்று மருத்துவ ஆய்வாளர்கள் தோண்டித் துருவி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் பாதிப்பெதுவும் இருக்காது என்பது ஆரம்பகட்ட சோதனைகளில் தெரிகிறது.

பாதிப்புகள் எவ்வளவு இருக்கும் என்ற ஆய்வுகள் ஒருபக்கம். இன்னும் கொதித்துக் கொண்டிருக்கும் அக்கம்பக்க எரிமலைகள் ஏதாவது “குபுக்...” என்று குழம்பைக் கொட்டி விடுமா என்ற அச்சத்தின் பிடியில் வல்லுநர்கள் இருக்கிறார்கள். மொத்தத்தில் பொருளாதாரக் காயம் ஆறுமுன்பாக, இயற்கை குத்திக் குதறி எடுத்துவிட்டது.

Pin It