இந்திய-சீன எல்லைப் பிரச்சனை, அவ்வப்போது தலையெடுப்பதும், அதுவாக தீர்ந்ததைப் போன்ற நிலை உருவாவதும் தொடர் கதையாகி விட்டது. யார் மீது தவறு இருக்கிறது? என்ற கேள்விக்கு ஒரு நாடு என பதில் சொல்வது நியாயமற்றது. ஏனென்றால் எல்லைக்கோட்டை வகுத்தது, இரு நாட்டைச் சார்ந்தவர்களும் அல்ல மக்மோகன் என்ற இங்கிலாந்து தேசத்தவர் வகுத்த எல்லைக்கோடு. 1947க்கு முன் இந்தியாவும், சீனாவும் இன்றைய அரசியல் சுதந்திரத்தை எட்டியிருக்காத சூழலில், இங்கிலாந்து அரசின் காலனியாதிக்கத்தின் (1914)கீழ் இருந்த இந்தியாவுக்கான எல்லையை வகுத்த போது, மக்மோகன் பொறுப்பாக்கப்பட்டார்.

இன்றைய இந்திய.  சீன உறவு, 1962இல் உருவான யுத்தத்தை உருவாக்கிய. மோதல் சூழலை நோக்கி தள்ளப்படுகிறது. இதில் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் இருப்பதன் காரணமாக, சதி வேலைகள் இல்லாமல், இத்தகைய பிரச்சாரம் நடைபெறுமா? என்ற கேள்வியையும் முன்வைக்கத் தூண்டுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, செப் 15அன்று, “சீனப் படை தாக்கியதால், நிர்மாலயா பானர்ஜி, பிரபின் கலிதா ஆகிய இரண்டு இந்தியப் படை வீரர்கள் இறந்து விட்டார்கள்” என்று செய்தி வெளியிட்டது. தமிழகப் பத்திரிகைகள் இந்தியா - சீனா போர் மூளுமா? என யூகிக்கத் துவங்கி, பெருத்த பட்டி மன்றத்தை நடத்தி, வழக்கம் போல் புஸ்வானம் ஆகிவிட்டது. காரணம் இந்திய அரசு ஆகும். பிரதமர் மன்மோகன் சிங், ஊடகங்களின் செய்தி பொய் என மறுத்ததுடன், இது போன்ற உணர்ச்சிகரமான பிரச்சனைகளில் ஊடகம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், என்றும் தவறான செய்திகள் தொடரும் பட்சத்தில் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

திபெத்-தலாய்லாமா-அரசியல்:

பிரதமரின் மறுப்பிற்கு பின்னரும், மேற்படிச் செய்திகள் வேறு வடிவில் தொடர்ந்தது. 23வது ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டி சென்னை மாநகரில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் கொரியாவும், சீனாவும் மோதிக் கொண்டது. அன்றைய போட்டியைக் கான சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் சீன மாணவர்களும், தலாய்லாமா ஆதரவாளர்களும் வந்துள்ளனர். தலாய்லாமா ஆதரவாளர்கள் தொடர்ந்து சீன எதிர்ப்பு முழக்கத்தை முன்வைத்த போது, மோதல் ஏற்பட இருந்ததாகவும் அதைத் தொடர்ந்து, தலாய்லாமா ஆதரவாளர்களை கட்டாயப் படுத்தி பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டதாகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் 2009,செப்25 அன்று செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தலாய்லாமா, இந்தியாவின், அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குள் உள்ள தவாங் புத்த மடத்திற்கு வருகை தந்ததை, இந்திய ஊடகங்கள் ,சீன எதிர்ப்பிற்குப் பயன்படுத்திக் கொண்டன. தலாய்லாமாவின் தவாங் விஜயத்தை எதிர்த்த சீன அரசு, தவாங் சீனாவின் பகுதி என தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியது. சீனாவின் சர்ச்சைக்குரிய கருத்தை இந்திய கம்யூனிஸ்டுகள் ஆட்சேபித்த போதும், இந்திய ஊடகங்கள் சீன எதிர்ப்பு பிரச்சாரத்தை கம்யூனிச எதிர்ப்புடன் முடிச்சுப் போடுவது வேடிக்கையே தவிர வேறில்லை.

புத்த மத வரலாற்றில் புகழ் பெற்ற ‘தவாங்’ திபெத்தின் ஒரு பகுதி என தலாய்லாமாவும் பேசியதுண்டு. திபெத்தின் தலைவர் என மதிக்கப்படுகிற தலாய்லாமா பதவியை, தவாங்கை சேர்ந்த ஒருவரும் கடந்த காலத்தில் அனுபவித்து இருக்கிறார். இந்த வரலாற்றைத் தெரியாத மக்மோகன், கோடு கிழிக்கிற போது தவாங் ஐ இந்திய எல்லைக்குள் வைத்து விட்டார். இதை இரு நாட்டவரும் அன்றைக்கு அறிந்தோ, அறியாமலோ ஏற்றுக் கொண்டனர். இப்போது இதில் சீனா உரிமை கொண்டாட முடியாது என்றாலும், தவாங் என்ற இடத்தில் அமைந்துள்ள புத்த மடத்தில் வழிபாடு செய்ய இந்தியா ஆட்சேபிக்கக் கூடாது என்பது தான் சரியாக இருக்க முடியும். ஆனால் இன்றைய 14வது தலாய்லாமா, தவாங்கிற்கு விஜயம் செய்து சீனாவை ஆத்திரமூட்ட முயற்சிப்பதை இந்திய ஊடகங்கள் போற்றுவது ஆபத்தானது.

1959ஆம் ஆண்டில் மக்கள் சீனம் திபெத் பகுதியில் நிலச்சீர்த்திருத்தத்தை அமலாக்க நடவடிக்கை எடுத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலகம் செய்தவர், இன்றைய 14வது தலாய்லாமா அப்போது அவருக்கு வயது 23 கலவரம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற சூழலில் இந்தியாவிற்குள் அடைக்கலம் புகுந்தவர். அன்றைய நேரு தலைமையிலான இந்திய அரசு “சீனாவிற்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை இந்திய மண்ணில் மேற்கொள்ளக் கூடாது” என்ற நிபந்தனையின் அடிப்படையில், அடைக்கலம் கொடுத்தது. காலப் போக்கில், இமாச்சலப் பிரதேசம், தர்மசாலாவில் தங்கியுள்ள தலாய்லாமா, வெளியிலிருந்து செயல்படும் திபெத் அரசு என தர்மசாலாவைப் பிரகடனம் செய்துள்ளார். இன்றளவும் சீன எதிர்ப்பு அரசியல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். சென்னை கால்பந்து மைதானத்தில் சீன எதிர்ப்பு, சீனாவில் 2008 ஒலிம்பிக் நடைபெற்ற போது எதிர்ப்பு தெரிவித்து டில்லி உள்ளிட்ட நகரங்களில் நடந்த போராட்டம் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை தடுக்க முயற்சி போன்ற அனைத்தும், சீன எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான உதாரணங்களே இதில் ஊடகங்களும், இந்திய அறிவு ஜீவிகளில் சிலரும் இணைவது நேரு காலத்திய நிபந்தனையை காலில் போட்டு மிதிப்பதற்கு சமமானது.

சீன ராணுவம் - இந்திய ராணுவம் ஒப்பீடு:

சீனாவிற்குள், இந்திய எதிர்ப்பு மனோபாவத்தை உருவாக்குவதும், இந்தியாவிற்குள் சீன எதிர்ப்பு மனோநிலையை வளர்ப்பதும் திட்டமிட்டு நடைபெறுவதை அறிய முடிகிறது. என எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி பத்திரிகையில், அல்கா ஆச்சார்யா என்ற கடடுரையாளர் குறிப்பிடுகிறார். செப்15 பீப்பிள்ஸ் டெய்லி என்ற சீனப் பத்திரிக்கை “சீனா மீதான அச்சம் என்கிற கருத்தில், சீனாவிற்கும், சீன மக்களுக்கும் எதிரான கருத்துக்கள் இந்திய ஊடகங்கள் மூலம் பரப்பப் படுகிறது. இது கடலளவுக்கு வலிமையாக இந்திய மக்கள் மனதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், இந்தியாவில் டைம்ஸ் ஆஃப் இந்தியா 2009, செப் 28இல் பெயர் குறிப்பிடப்படாத ஓய்வு பெற்ற சீன மக்கள் விடுதலைப் படையைச் சார்ந்த அதிகாரிகள் இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். என்று செய்தி வெளியிட்டது. அஸ்ஸாமில் உள்ள ஐக்கிய விடுதலைப் படை, (உல்ஃபா) போன்ற தீவிரவாத அமைப்புகள் சீன பாதுகாப்புப் படையுடன் நெருக்கமாக உள்ளன, என்று தி ஆசியன் ஏஜ் என்ற ஊடகம் 27,செப் 2009 இல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய விமானப் படையின் உயர் அதிகாரி பி.வி. நாயக், “சீன விமானப் படையின் பலத்தில், மூன்றில் ஒரு பகுதி மட்டுமே, இந்திய விமானப் படையிடம் உள்ளது.’’ என ஆதங்கப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா 24,செப் 2009இல் செய்தி வெளியிட்டு உள்ளது. கப்பற்படையின் உயர் அதிகாரி சுரேஷ் மேத்தா இந்திய ராணுவத்திற்கு “சீனா அடிப்படையில் சவாலுக்குரியது, திறன், பலம், என எடுத்துக் கொண்டாலும் சீனப் படை இந்தியாவை விட வலுவானது’’ என அச்சம் தெரிவித்த செய்தி 11, ஆகஸ்ட் 2009இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்கிறது.

மேற்படி பத்திரிகைச் செய்திகள் மேலோட்டமாகப் பார்த்தால், “சீனா, இந்தியாவிற்கு எதிரானது, இந்தியப் பிரிவினை வாதிகளை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் இந்திய ராணுவம், சீனாவின் ராணுவ பலத்தை விட பின் தங்கிருப்பது சரியல்ல,’’ என்ற கருத்தை வெளிப்படுத்தும். உண்மை அதுவல்ல 1962இல் இந்தியா - சீனா போருக்குப்பின் இந்தியாவும், சீனாவும் தங்கள் நட்புறவை வளர்த்துக் கொண்டுள்ளன. 1998இல் வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு, அமெரிக்க அதிபராக இருந்த பில்கிளின்டனுடனான உரையாடலில், அமெரிக்காவின் நட்பு வட்டத்தை, நெருக்கமாக்கிக் கொள்வதற்காக, சீன எதிர்ப்பு கருத்தை உருவாக்கியது. படிப்படியாக அணு ஆயுத சோதனைக்காக சீனா குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியது. தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சனைகளில் ராஜபக்சே அரசுக்கு, சீனா உதவுவதாகவும், இந்திய மண்ணில் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதம் தந்து வளர்ப்பதாகவும் செய்திகள் பரப்பப்படுகிறது. 2008ஆம் ஆண்டு இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டினைத் தொடர்ந்து சீன எதிர்ப்பு பிரச்சாரம் வலுப்படுத்தப்படுவதை உணரலாம்.

அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஹிலாரி கிளின்டன் ஜூன், 2009இல் இந்தியாவிற்கு வந்து, பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டதைத் தொடர்ந்துதான் இந்திய ராணுவத்தின் வலிமைக் குறைவு சீன ராணுவத்தின் வலிமை அதிகம் என்ற கருத்து வலுப்படுகிறது. இதன் நோக்கம், இந்திய - அமெரிக்க ராணுவத் தளவாட வியாபாரிகளிடம், பல லட்சம் கோடி பெறுமானமுள்ள தளவாடங்களை பேரம் பேச வேண்டும் என்பதே ஆகும். போபர்ஸ் துவங்கி, 1998 கார்கிலில் பயன்படுத்தப்பட்ட தளவாடங்கள், சவப்பெட்டி அனைத்திலும் ஊழல் மலிந்து கிடப்பது வெளிச்சத்திற்கு வந்து விட்ட உண்மை. எனவே, அமெரிக்க வர்த்தகர்களிடம் ராணுவ தளவாடம் விலை பேசும் போது எழுகிற ஐயப்பாட்டை, விலக்கவே, “சீனா குறித்த அச்சம்,’’ என்கிற நச்சு விதை திட்டமிட்டு விதைக்கப்படுகிறது.

மறுபுறம் உலகில் ஒரு துருவ உலகமாக மாறி, அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்ந்த சூழலில், இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல நாடுகள் தங்களுக்குள் நட்பு வளையத்தை, மேம்படுத்தி வருகின்றன. ஷாங்காய் கூட்டு நாடுகள் (7 நாடுகள்) ஏசியான் கூட்டு நாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள், பொலிவாரிய நட்பு நாடுகள், (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா). இதுவே தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து பிரிக்ஸ் என மாற்றிக் கொண்ட வளர்ச்சி, ஆகியவை அமெரிக்காவிற்கு நிர்பந்தம் தருபவையாக, வர்த்தக செல்வாக்கை வளர்த்துக் கொள்பவையாக மாறியுள்ளன. இது எல்லா வகையிலும் அமெரிக்காவை இழப்பிற்கு தள்ளிவிடும், எதிர் துருவ வளர்ச்சி என்பதை பலரும் ஒப்புக் கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் உலகின் மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினைக் கொண்டுள்ள சீனாவும், இந்தியாவும் நெருக்கமாகாமல், பகை நாடுகளாக சித்தரிக்கப்படுவது, அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவும், என்பது மேற்படி 5 மாதங்களில் வெளியாகும் ஊடகச் செய்திகளில் ஒளிந்திருக்கும் உண்மை. 

- எஸ்.கண்ணன்

Pin It