old man 425பொழுது
வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது
மனசுக்குள் ஒரு புழுக்கம்.
எது வீண்..?
எது பயன்...

நாட்காட்டியில் தினத்தாள்
கிழிக்கப்படுகையில்
வங்கிக் கணக்கில் ஏறியதா.. ?
எழுதப்பட்டு ஒரு தினசரியில்
வெளியானக் கட்டுரையா..?
ஒரு அழகிய நீர் வீழ்ச்சியின்
ரசனை தரும் சுகமா..?
காலாற காலைப் பனியில்
நடை பயின்ற மனமகிழ்வா..?

வாயோடு நர்த்தனித்து
செவியில் துளைத்திடும்
தேனிசையா..?
கடந்து போன இளமைப் பயணத்தின்
கனவுச் சாலைக்
கண்ணசைப்பா..?

சின்னச் சிறகுகள் காற்றில் விசிறி
காம்பவுண்ட் சுவரில் வந்தமரும்
மைனாக்கள் சோற்றுப்பருக்கைகளை
கொத்திக் கொண்டிருக்கும் அற்புதமா.?

பயனெது வீணெது
பரபரக்கும் அவசரமா.?
விழி மூடி மெளனிக்கும்
கனவுலகா..?

ஒரு குற்ற உணர்ச்சியில்
மனதின் ஆழம் வலிக்கிறது.?
காலத்தை வீணாக்கி விட்ட வலி.
எந்த ஒரு சிகரத்தையும்
தொட முடியாது போன
துயரம்.

நகர்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கை மணித்துளிகள்
சினந்து கொண்டிருக்கும்
சக உறவுகளோடு
சங்கமிக்க முடியாத
மனக் கவசங்களுடன்
ஒரு மாலைச் சூரியன் மறைகிறது.

என்றும் போல்
இருட்டுவதும் விடியலுமாய்
நாட்கள் நகர
நரையிட்டுப் போன தலையில்
வாழ்க்கை வரலாற்றுச் சின்னமாய்
எதிர்காலமற்றுப்போன
வெள்ளை முடிகள்.

- தமிழகன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.