தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப் பிரச்சினை என்று மக்கள் போராட்டங்கள் பல இடங்களில் நடக்கின்றன. திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவி ஒருவரின் மரணம் தொடர்பாக சக மாணவிகள் மூன்று நாட்களாகத் தொடர் போராட்டங்கள் நடத்தினர். தமிழ்நாட்டின் முதல்வர் இதுவரை வாய்திறந்து பேசவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க மறுபுறம் தற்போதைய த.வெ.க. ஆட்சி நிலைக்குமா என்ற விவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

மாற்றமா?

லஞ்சம், குடும்ப ஆட்சி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை என்கிற நான்கு குறைபாடுகள் முந்தைய ஆட்சிமீது முன் வைக்கப்பட்டன. சமூக வலைத்தளங்கள் மூலம் காணொளிகள் வெளியிடப்பட்டன. இளைஞர் சமுதாயத்திடம் புதிய மாற்றம், இது இளைஞர்களின் ஆட்சி என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றது. நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் இதனை அரசியலாக மாற்றினர். மாற்றம் வேண்டும் என்ற கருத்தைப் பரப்பினர். ஏன் தவெகவுக்கு வாக்களித்தீர்கள் என்ற கேள்விக்கு முந்தைய ஆட்சி நன்றாகத் தான் உள்ளது. ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக வாக்களித்தாக பலர் தெரிவித்தனர். இளைஞர்களால் கொண்டு வரப்பட்ட புரட்சி என்று பரவலாக இந்தியாவுக்கு வெளியே உள்ள தமிழர்கள் கருதுவதையும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிய முடிகிறது.

சிறுபான்மை அரசு:

த.வெ.க. தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்றது. கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் இரண்டு இடங்களில் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றதால், ஒரு தொகுதியை (திருச்சி கிழக்கு) இராஜினாமா செய்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற த.வெ.க. வேட்பாளருக்கு சட்டமன்றத்தில் வாக்களிக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஒருவர் சபாநாயகராக இருக்கிறார். இந்நிலையில் த.வெ.க.வின் கைவசம் இருப்பது 105 இடங்கள் மட்டுமே. ஆட்சி அமைக்க குறைந்தபட்சமாக 118 இடங்கள் தேவை. காங்கிரஸ் 5, விடுதலை சிறுத்தைகள் 2, சிபிஐ 2, சிபிஎம். 2, முஸ்லீம்லீக் 2 என்று பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் மிக சரியாக 118 இடங்கள் மட்டுமே த.வெ.க.விடம் உள்ளன. ஒரு இடம்கூட கூடுதலாக இல்லை. ஏதேனும் ஒரு எம்.எல்.ஏ. வாக்களிக்க இயலாமல் போனால் த.வெ.க. ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடிய சூழ்நிலை உள்ளது.

திராவிட இயக்கத்தின் எதிர்காலம்:

செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துத் தேர்தலில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 1967-க்குப் பின்னர் திராவிட இயக்கம் அல்லாத ஆட்சி ஏற்பட்டுள்ளது. இது திராவிட இயக்கத்தின் வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் ஒரு தனித்துவமானதாகத் தமிழ்நாடு இருந்து வருகிறது. இந்தி எதிர்ப்பு, சமூகநீதி, பார்ப்பன எதிர்ப்பு, மாநில உரிமைகள் போன்றவை தமிழ்நாட்டின் தனித்துவங்களாக உள்ளன. இந்தத் தனித்துவங்கள்தான் வட இந்திய அரசியல்வாதிகள் வெறுப்படைகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் ‘நீட்” எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. பாஜக ஆட்சியில் புதியக் கல்விக் கொள்கை, தொழிலாளர் சட்டத் தொகுப்பு, குடியுரிமைச் சட்டம் போன்றன கொண்டு வரப்பட்டன. இவற்றை எதிர்க்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருந்து வந்தது. மதச்சார்பின்மைக்கு அடையாளமாகத் தமிழ்நாடு திகழ்கின்றது. இவற்றுக்கெல்லாம் அடிப்படை திராவிட இயக்கமே. திராவிட இயக்கங்களின் வீழ்ச்சி தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளங்களை வீழ்த்திவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

திமுகவையே அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் குறிவைத்து எதிர்த்தன. நான்குமுனைப் போட்டியில் மூன்று தரப்புமே திமுகவை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்தன. ஆனால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனேயே த.வெ.க. ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைக்கவோ, ஆட்சி நடத்தவோ திமுக எந்த இடையூறும் செய்யாது நல்ல எதிர்க் கட்சியாக செயல்படுவோம் என்று திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

திமுக கூட்டணிக் கட்சிகள் அமைச்சர் பதவி பெற்றுள்ளனர். இடதுசாரிக் கட்சிகள் அமைச்சர் பதவியை மறுத்து விட்டன. குதிரைபேரம் (எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது) நடைபெற்றுள்ளன என்று த.வெ.க. மீது கடுமையானக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் வாக்குறுதிகள்:

தற்போது முதலமைச்சராக உள்ள சி. ஜோசப் விஜய், தேர்தல் பரப்புரையின்போது பல வாக்குறுதிகளை வாரி வழங்கினார். குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூ. 2500, அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப்பயணம், தாய்மாமன் சீராகத் தங்கச் செயின், தங்க மோதிரம், விவசாயிகளுக்கு முழுக்கடன் தள்ளுபடி என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கினார். இதில் 500 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவசம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக அரசு வழங்கிய ரூ. 1000ஃ- மட்டுமே பெண்களுக்கு மே மாதம் கொடுக்கப்பட்டுள்ளது. 2500 ரூபாய் வழங்குவார் விஜய் என்று பெண்கள் காத்திருக்கின்றனர். சில இடங்களில் இதற்கானப் போராட்டங்களும் நடந்துள்ளன. விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டபோதும், அது போதியதல்ல என்று விவசாயிகள் போராடி வருகின்றனர்.

மக்கள் அதிருப்தி:

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும் பெருகிவரும் குற்றச் செயல்களாலும் மக்கள் த.வெ.க. அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளார்கள். ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெறுகின்றன. பலர் தங்கள் அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், த.வெ.க. கட்சியினர் முதலியோரின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

திராவிட இயக்கம்:

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் 1916-ல் தொடங்கிய நீதிக்கட்சியின் தொடர்ச்சியான திமுக 1967-ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் முதன் முறையாக ஆட்சி அமைத்தது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் பிறகு திமுக பிளவுபட்டு அ.இ.அ.தி.மு.க. உருவானது. 1967 முதல் 2026 வரை திமுக மற்றும் அஇஅதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளே ஆட்சிபுரிந்தன. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. இந்தித் திணிப்பு தடுக்கப்பட்டது. மாநில உரிமைகளுக்கு உறுதியாகக் குரல் கொடுக்கப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்கப்பட்டது.

திமுக ஆட்சி:

திருமதி. இந்திராகாந்தி அம்மையார் 1975ம் ஆண்டு கொண்டுவந்த அவசர நிலையில் சிறையிலடைக்கப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்தவர் திரு. மு.க. ஸ்டாலின். இத்தகைய மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 2021-2026 கால அரசு தமிழ்நாட்டை மிக உயர்ந்த வளர்ச்சி நிலைக்குக் கொண்டு சென்றுள்ளதை ஒன்றிய அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகின்றன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒன்றிய அரசையும் பிற மாநிலங்களையும் ஒப்பிடும்போது மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது.

இந்தியாவில் வேலைபார்க்கின்ற பெண்களில் தமிழ்நாடு (42மூ). அதிகப்படியான பெண்கள் வேலை பார்க்கின்ற மாநிலமாகவும், 67மூ பெண்கள் பட்டப்படிப்பு பெறும் மாநிலமாகவும் ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி பெற்றது. மற்ற மாநிலங்களின் நிலை இதைவிட மிகவும் கீழான நிலையில் உள்ளது.

ரீல்ஸ் புரட்சி:

இத்தகைய வளர்ச்சி இருந்த போதும் ஆங்காங்கு நடந்த சில சம்பவங்களை வைத்து தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், திமுக தீய சக்தி என்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு ‘ரூட்” என்கிற நிறுவனத்திற்குப் பெருந்தொகை பணம் கொடுத்து, இலட்சக்கணக்கான வீடியோக்கள் மூலம் நடிகர் ஜோசப் விஜய்க்கு ஆதரவான பிரச்சாரம் நடைபெற்றது. குழந்தைகளைப் பயன்படுத்தி பெரியவர்களை வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டது. இதன்மூலம் த.வெ.க. 108 இடங்களைப் பெற்றது.

அரசியல் குழப்பங்கள்:

பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் திரு, வேலுமணி தலைமையில் தனி அணியாகப் பிரிந்து த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் கட்சித்தாவல் தடைச்சட்டப்படி இது குற்றச் செயல் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழக்கு தொடுத்ததால் வேலுமணி தலைமையிலான அதிமுக அணியினருக்கு அமைச்சர் பதவி இதுவரை கொடுக்கப்படவில்லை. வேலுமணி அணியில் உள்ள மூன்று எம்.எல்.ஏ.க்கள் பதவியை விட்டு விலகி, த.வெ.க.வில் சேர்ந்துள்ளனர். இது குதிரை பேரம் என்ற கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம்:

பிரபல லாட்டரி அதிபரும் பெரும் கோடீஸ்வரருமான லாட்டரி மார்ட்டின் குடும்பம்தான் த.வெ.க. மற்றும் அதிமுக ஆகிய இரு கூட்டணிகளுக்கும் பெருமளவில் பணம் கொடுத்தது. இந்த இரு கூட்டணிகளிலும் இப்போது செல்வாக்கு செலுத்துகிறது. லாட்டரி மார்ட்டின் மருமகன் திரு. ஆதவ் அர்ஜூனாதான் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெரும்பான்மை மிகக் குறைவாக உள்ள த.வெ.க. அரசு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதற்குப் பின்னர் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடும் என்ற ஊடகங்களில் கருத்துக்கள் வெளிவந்தன. பின்னர் அவை பொய்யாகிப் போகின. தற்போது த.வெ.க. அரசுக்கு முன் பெரும் சவால்கள் உள்ளன. திரு. விஜய் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதே வேளை ஒன்றிய பாஜக அரசின் திட்டங்களைச் செயல்படுத்துமாறு கொடுக்கப்படும் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையும் மூன்றுமொழிக் கொள்கையும் தமிழ்நாட்டில் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. இவற்றை அமுல்படுத்துமாறு ஒன்றிய பாஜக அரசால் கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு கடந்த திமுக அரசு பணியவில்லை.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பல நூறு ஆண்டு பழைமை வாய்ந்த மசூதிக்கு அருகில் உள்ள தூணில் விளக்கேற்ற வேண்டும் என்ற இந்துத்துவ வாதிகளின் கேரிக்கையை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், அதனைத் தடுத்து நிறுத்தினார் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள். இந்த ஆண்டு இப்பிரச்சினை மீண்டும் எழும்போது இதனை முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இவைக் குறித்து த.வெ.க. அரசின் நிலை என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. கர்நாடக அரசு காவிரியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு உள்ள நிலையில் காங்கிரசுடன் கூட்டணி அரசு நடத்தும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் இதனைத் தடுத்து நிறுத்துவாரா என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இவ்வாறு பல பிரச்சினைகளை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். மிகவும் ஆற்றல்மிக்க திமுகவை எதிர்க் கட்சியாக எதிர்கொள்வது மிகவும் சாதாரண விஷயம் அல்ல.

நிறைவாக:

ஒரு நிலையற்ற அரசு, பதட்டமான சமூகச் சூழல், தமிழகத்தில் நிலவுகிறது. ஆரசியல் கூட்டணிகள் கடுமையான மாற்றங்களை எதிர் நோக்கியுள்ளன. திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் த.வெ.க.விடம் சென்றுவிட்டன. அஇஅதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவின் குறிப்பாக ஒன்றிய அமைச்சர் திரு. அமித்ஷாவின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

திமுகவின் அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றம் வரலாம். ஆஇதிமுகவுடனும் பாஜகவுடனும் நெருக்கம் ஏற்படலாம் என்று பேசப்படுகிறது. எதிர்வரும் 2029-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் நிலை முக்கியமானதாக இருக்கும். காங்கிரஸ், திமுகவை விட்டுப் போய்விட்ட நிலையில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரக்கூடும் என்றே பரவலான கருத்து உள்ளது. தமிழ்நாட்டில் த.வெ.க. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக் கூட்டணி (இன்னும் பல சிறிய கட்சிகள் வரலாம்) ஏற்படலாம். இந்த இரண்டு கூட்டணிகளுக்கிடையில் போட்டி ஏற்படலாம். திமுகவை கடுமையாக எதிர்க்கும் பாமக, த.வெ.க. கூட்டணிக்குள் விசிக இருப்பதால் போக முடியாது. பாமகவின் நிலைப்பாடும் கேள்விக்குறியாக உள்ளது.

தமிழ்நாடு நல்ல வளர்ச்சி பெற்ற மாநிலம், கல்வி, தொழில்துறை, மருத்துவம், விவசாயம், பெண்கள் முன்னேற்றம், சமூக நலத்திட்டங்கள் என்று அனைத்துத் துறைகளிலும் ஐ.நா.வின் நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் முழுமையாக எட்டியுள்ள மாநிலம். இந்த வளர்ச்சி தொடருமா? கீழே சென்றுவிடுமா? இந்தியாவின் முதல் மாநிலம் என்று நிலையைத் தக்க வைக்குமா? என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். வளர்ச்சி அரசியலில் இருந்து கவர்ச்சி அரசியலுக்குள் சென்றுவிட்ட தமிழ்நாட்டின் நிலை என்னவாகுமோ? என்ற கவலையே சமூக அக்கறைமிக்கவர்களின் இதய ஓட்டமாக இருக்கிறது.

- வழக்குரைஞர் தமிழகன்