
ஒரு பூ காம்பிலிருந்து
உதிர்வது போல
விடைபெற நினைத்தவர்களை
வெண்புறாவின் கழுத்தை
சட்டென்று திருகி
எடுத்துவிடும் இரக்கமற்ற விரல்கள்
இரத்தம் கொப்புளிக்க கொப்புளிக்க
இந்தப் பிரிவு
நாம் ரோஜா விதைகளை
விண்ணிலே தூவுவோம்
நட்சத்திரங்களில் ஒன்றாகவாவது
அவர்கள் பிறப்பெடுக்கலாமில்லையா?
நம்மைச் சுமந்தவர்களை
ஒரு சுவாசமாக மாற்றி
வைத்துக் கொள்வதினால் தான்
இன்னும் இதயம்
துடித்துக் கொண்டிருக்கிறதா?
விடைபெறும் நாட்களில்
எந்தப் பெயர் தெரியாத பறவை வந்து
வழிகாட்டப் போகிறதோ நமக்கு
உள்ளே தேக்கி வைத்திருக்கும் சுவாசங்களை
எந்தப் பறவையின் சிறகிலேற்றி
அனுப்பப் போகிறோமோ அப்போது?
ஒரு நதியில் நாம் இருமுறை
மூழ்க முடியாதென்றாலும்
இதே நதி இன்னொருமுறை
இதே இடத்தில்
இதுபோலவே
ஓடக்கூடும் என்ற
நம்பிக்கையில் தானே
நதி முழுவதும் நினைவுகளை
தூவிவிட்டுச் செல்கிறோம்?
- தங்கேஸ்