சேலம் மாநகராட்சியின் குடிநீர் வழங்கல், 'சூயஸ்' (SUEZ) என்ற பிரான்ஸ் நாட்டுப் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் 09.07.2026 அன்று கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, கோயம்புத்தூர் மாநகராட்சியில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய அஇஅதிமுக அரசின் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான ஆட்சியில் இதே நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சூயஸ் நிறுவனம்
இந்த சூயஸ் நிறுவனம் 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு பிரான்ஸ் நாட்டு நிறுவனமாகும். பிரான்சில் 85 சதவீத நீர் வணிகத்தை இந்த நிறுவனமே செய்து வருகிறது. உலக அளவில் 70 நாடுகளில் தனது நீர்ச் சந்தையைக் கொண்டுள்ளது. இந்கிறுவனத்தில் 44,000 ஊழியர்கள் நிரந்தரமாகப் பணியாற்றி வருகிறார்கள். 2022-இல் 7.2 பில்லியன் யூரோக்களுக்கு வணிகம் செய்துள்ள இந்நிறுவனம், வரும் 2027-இல் அதனை 9 பில்லியன் யூரோக்களாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. சூயஸ் நிறுவனமும், விவெண்டி (Vivendi) நிறுவனமும் மட்டுமே உலகின் 70 சதவீத நீர்ச் சந்தையைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
தண்ணீரை வணிகமாக்குதல்
உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் 'GATT' எனப்படும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை தண்ணீரை ஓர் இயற்கை வளமாகக் கருதாமல், விற்பனைப் பண்டமாக மட்டுமே கருத வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இதன் விளைவாகத் தண்ணீரை மக்கள் பணம் கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இன்று பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உலக நாடுகள் சிக்கியிருப்பதால், இது போன்ற வணிகங்களுக்கு ஆதரவான சட்டங்களையும் திட்டங்களையும் அரசுகள் உருவாக்குகின்றன. இந்த அடிப்படையிலேயே இந்திய அரசும் தனது தண்ணீர்க் கொள்கையை உருவாக்கியுள்ளது.
ஜல் சக்தி அமைச்சகம்
இந்திய ஒன்றிய அரசு, ஜல் சக்தி அமைச்சகத்தின் மூலம் நாடெங்கும் 'ஜல் ஜீவன் மிஷன்' என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் ஆகும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்குவதன் மூலம், குடிநீர் மீட்டர் பொருத்திப் பயன்படுத்தப்படும் நீருக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் நடைமுறைக்கு வரும்.
தமிழ்நாட்டில் கார்ப்பரேட் ஆதிக்கம்
பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களின் கைப்பாவைகளாகச் செயல்படும் அரசுகளும் கிராமப்புறப் பொருளாதாரத்தை, குறிப்பாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை அழித்துவிட்டு, மக்களை நகரங்களை நோக்கி இடம்பெயரச் செய்கின்றன. மக்களைப் பெருமளவில் நகரங்களில் குவித்தால்தான் தங்களின் கார்ப்பரேட் வியாபாரத்தைச் செய்ய முடியும் என்பதே அவர்களின் கணக்கு.
பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத்தை இப்போது இந்திய மாநிலங்கள் மட்டுமின்றிப் பிற நாடுகளும் வேகமாக நடைமுறைப்படுத்துவதும் இதன் அடிப்படையில்தான். ஏனெனில், பெண்கள்தான் முதலாளித்துவத்தின் முதல் இலக்கு. மக்கள் இதனை ஒரு முற்போக்கான திட்டமாகக் கருதுவதால், இதற்கு எதிர்ப்புக் கிளம்பாது. ஆனால், பெண்களின் உழைப்பை மலிவாகச் சுரண்டுவதும், அவர்களைத் நுகர்வோராக மாற்றுவதுமே கார்ப்பரேட்டுகளின் உண்மையான இலக்கு. பெண்களை முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணையச் செய்து போராட வைப்பதே உண்மையான பெண் விடுதலை ஆகும்.
தமிழ்நாட்டில் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களிலும் குடிநீர் விநியோகத்தைத் தனியாரிடம் ஒப்படைக்குமாறு ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாநில அரசுகள் இதனை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், உலக வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகளிடம் கடன் வாங்கும்போது இதுபோன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் திருப்பூரில்தான் குடிநீர் வழங்கல் முதன்முதலில் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. அடுத்ததாகக் கோவை, இப்போது சேலம். தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீரையும் இனி இந்த நிறுவனங்களிடமிருந்துதான் பணம் கொடுத்து வாங்க வேண்டும். எதிர்காலத்தில் விவசாயத்திற்குத் தேவையான நீரையும் கூட பணம் கொடுத்து வாங்கும் அவல நிலை உருவாகும்.
பொய்மானை நம்பும் மக்கள்
தங்களது சொந்தப் பொருளாதார வாழ்வாதாரங்களிலிருந்து மக்களை விரட்டியடிப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுமே அடிப்படையாக உள்ளன. அனைத்தையும் வணிகமாக்கும் முதலாளித்துவச் சக்திகள், இதற்கேற்ற கல்வி முறைகளை உருவாக்கித் தங்களுக்குத் தேவையான திறனாளிகளை (Labour force) உற்பத்தி செய்கின்றன.
பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரத்திற்குப் போதிய வழியின்றி நகரங்களை நாடி ஓடுகின்றனர். இத்தகைய மக்களுக்குப் பல்வேறு இலவசங்களை அரசுகள் வழங்குவதன் மூலம் அவர்களின் போராட்டக் குணம் மழுங்கடிக்கப்படுகிறது. நூறு நாள் வேலைத் திட்டம் போன்ற சலுகைகள் அவர்களின் சுயமுயற்சியை முடக்குகின்றன. இவ்வாறு மக்களைப் போராடும் சக்தியற்றவர்களாக ஒருபுறம் மாற்றிவிட்டு, பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களும், உள்நாட்டு அம்பானி, அதானி போன்றோரும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் வாரிச்சுருட்டிக் கொள்ள அரசுகள் துணைபோகின்றன.
தனியார்மயத்திற்கு எதிராக அணிதிரள்வோம்!
இயற்கை வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதைத் தடுக்க மக்கள் வீதிக்கு வந்து அணிதிரள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இன்று இதற்கான வலுவான அரசியல் தலைமை தமிழ்நாட்டில் இல்லை. தங்களை இடதுசாரிகள் என்று கூறிக்கொள்வோர், சில சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களுக்காக முதலாளித்துவக் கட்சிகளுக்குச் சாமரம் வீசும் நிலையிலேயே உள்ளனர்.
புதிய எழுச்சியுடன் மக்கள், குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் அணிதிரண்டு, கார்ப்பரேட் பண முதலைகளை விரட்டியடிக்க ஓரணியில் நின்று போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!
- வழக்கறிஞர் தமிழகன், மாநில அமைப்பாளர், நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு