கீற்றில் தேட...

கூடாமையின் அந்நியங்கள்

இழுத்து வந்து
நிறுத்தி இருக்கும்
இந்த நடுநிசி
போதாமையின்
கழிவிரக்கத்தால் தகிக்கிறது.
சுத்திகரிப்படாத
என் சுவாசத்தில்
திணற வைக்கிறது
உட்புகும் சொற்கள்.
இத் தருணங்கள் யாவையும்
துடைத்துக் கொண்டே
இருந்தாலும்
படியெடுக்கும் பாதகச் சொற்களை
ஏதும் செய்ய முடியவில்லை
இயலாமையில்.
தூக்கத்தை
ஓய்வாகக் கொண்டவர்கள்
நாளை மன்னிக்கவும்
இன்றென்னை
எதிர்கொள்ளும்பொழுது
என்னை ஏதுவாக்குவீர்கள்
என்பதில்தான் இருக்கிறது
நாளைய என் உறக்கம்.

***

நகர்தலின் மட்டுப்படாமை

வெகு சிலருக்கு மட்டும்
தெரிந்திருக்கும் நீச்சலின்
குணப்படாமையில்
சிலது கரையேறுகிறது
சிலது கரை தட்டுகிறது.
சிலது அடித்துச்செல்கிறது.
சமீபித்துவிடாத சமுத்திரத்தின்
இடைவிடாத இந்த நீந்தலில்
எத்தனைப் பேருக்கு
தட்டுப்பட்டது தண்ணீர்.
சூழ்ந்திருக்கும் வெறுமையில்.

***

நித்தியத்திற்கான நேச வாடல்

ஈரப்பட்டுக் கிடக்கும்
சம வெளியில் காணும்
பச்சை வண்ணக் குளிர்மை
பாவிய பார்வையால்
தளிர்த்தது.
நம்பிக்கைகள் பொய்த்துப்போன
வறண்ட நாளில்
வேர் முடிச்சுகளில்
இருக்கிறது சேகரித்த சிரிப்புகள்.
அற்பக் கணங்களில்
தள்ளாடுகிறது காதல்
மூர்ச்சையாகிவிடும்
தருணம் பார்த்து.
வீழ்வதும் மீள்வதான
வாழ்வில்
எப்பொழுது
நிரந்தரத்தைக்
கையளிக்கப் போகிறாய்
யாவும் சுகப்பட.

- ரவி அல்லது