கீற்றில் தேட...

திக்குத்தெரியாத
இரவு முழுதும்
முழுதாய்
வழிகாட்ட
ஒளி காட்ட
உன் மூக்குத்தி
ஒன்றே போதும் அன்பே...

***

உனக்கு மூக்குக்கு
மேல் கோபம் வருமென்றார்கள்.
எனக்கு உன் மூக்குக்கு
மேல் காதல் தானே
வருகிறது!

***

எனக்கும் முன்பாக
உன் மூக்கோடு
எப்படி உரசலாம்
அந்த மூக்குத்தி!?

***

மூக்குத்தி அணிவிக்க
முயன்றவனுக்கு
மட்டுமே தெரியும்
இந்தியாவில்
UPSCஐ விடவும்
கடினமான இன்னொரு
தேர்வு உள்ளதென்ற
விசயம்..

***

உன் கையால்
மூக்குப்பிடிக்க
சாப்பிட முடிகிறது.
உன் மூக்கைச் சாப்பிட
மட்டும்
அந்த மூக்குத்தி
கொஞ்சமாய்
இடையூறு செய்கிறது.
மற்றபடி
ஐ லவ்
மூக்குத்திங்க!!

***

வெட்க ஜாமத்தில்
வெட்க ஜாலத்தில்
வெட்கப்போரில்
கவசகுண்டலம்
மூக்குத்தி!
அது மட்டும் தான்
கடைசிவரை உடல் நீங்காமல்..

***

உன் மூக்குத்தியின் அழகில்
பகலில்
தலைகால்
புரிவதில்லை.
இரவில்
தலைகால் தெரிவதும்
அதே மூக்குத்தியால் தான்...

***

உன் மொத்த அழகையும்
பறந்துவிடாமல்
உன் மூக்கோடு
stapler செய்துவிடுகிறது
உந்தன் மூக்குத்தி..

***

அதென்னவோ
மூக்குத்தி
அணியாத இன்னொரு
மூக்கின் மீதுதான்
கூடுதல் ஆசை!
என் கவிதை போலவே
எளிமையாய்
அடக்க ஒடுக்கமாய்
ஈர்க்கின்றது..

***

அய்ம்பத்தைந்து
கிலோ அழகுக்கு
மில்லிகிராம்
மூக்குத்தியே
பிரதானம்.

- அ.சீனிவாசன்