அஃதொரு தொடரோட்டமென்றாலும்
நின்றபாடில்லை.
பின்தொடர்வில்
சில சகாயங்கள் இருந்தன.
இனிக்கும் எல்லாத் தருணங்களிலும்
கசப்பை கொடுத்தே விடுகிறது.
பிடரி பிடித்தேறி
அடக்கிடாத வேகத்தில்
மூச்சு முட்டி
கண்ணயர்ந்தாலும்
வண்ணத்தில் வசீகரித்து விடுகிறது.
நாயாக வாலாட்டி வர
எடுத்த கயிறு
காலில் பின்னி
பயணத்தைத் தடுத்து விடுகிறது.
இதன்
சங்காத்தமே வேண்டாமென
முதுகு திரும்பினாலும்
சொறியுமாவல்
மிகைக்க விடுகிறது.
நிவாரண கசாயங்கள்
யாவிலும்
எஞ்சிய மிடறு
ஏமாற்றாக கசக்கிறது.
விட்டொழித்து
வானமெய்ய வழிகளற்று
அதனிடம் வாங்கிய
வார்த்தைகளைத்தான்
கவிதையென
உங்களை நம்பச் சொல்கிறேன்.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.