நாசியுனுள் நுழைந்து
விழிப்பு தட்டிய
சாம்பல் வாடை
அம்மாவை நினைவூட்டியது
சித்தமடக்கி.
பிரசன்ன அடையாளம்
யாதெனக் கொள்ள முடியவில்லை
ஊஞ்சலாடும் மனம்
உறவுகளைத் தூரமாக்கிக் கொண்டதால்.
சிக்கலான கேள்விகளுடன்
உறங்கியதால்
சிவன் வருவதற்கான
சாத்தியமில்லை
சிண்டு முடிந்துவிடுவேனென்று
அவர் தயங்குவதால்.
அடுக்கடுக்கான
அடுக்கு மாடி வீடுகளில்
அடுப்பெரிய வாய்ப்பில்லை
குழாய்களில்
குடிசை வீடுகளிலும்
வாயு கொட்டுவதால்.
விரல் தோய்த்து
பல் விளக்குமாசையில்
திருநீர்ப் பூச்சோடு
சிரித்த முகம்
அம்மாவின் எத்தனையாவது
வயதென ஆராய மனமில்லை
அதில்
அய்யாவை இழந்த
அடையாளம் இருந்ததால்.
மூந்துபோன விறகடுப்பின்
கதகதப்பான
சாம்பல் வாய்க்கும் நாளில்
அம்மாவின் வாடை இருக்க வேண்டும்.
அதுவரை இந்தப் பற்கள்
இருக்க வேண்டும்
காம்பு கடித்து
உறிஞ்சிக் குடித்த
முலைப் பாலின்
சுவையை ருசிப்பதற்கும்
முகர்வதற்கும்.
நறுமணப் பொய்களின்
அன்றாடத்தில் இப்பொழுது
எதனுள் பிடித்து வைப்பது
இந்த சாம்பல் வாடையை
ஆசைகள் மெய்ப்படுவதற்கு.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.