நீ தரும் முத்தத்தை
வேடிக்கை பார்க்கவே
காலம் சற்று நின்று புறப்பட
உத்தேசித்துள்ளது
படபடக்கும் சோடி வெண்புறாக்கள்
திறந்திருக்கும் வாசல் வழியே
அனுமதியின்றி நுழைகின்றன
தென்கிழக்கு உச்சி நட்சத்திரம்
ஒரு முறை இரகசியமாய்
கண்சிமிட்டி விட்டு அமர்ந்திருக்கிறது
பால்யத்தின் குளிர்ந்த நதி
விரல்களைப் பிடித்து
உள்ளே இழுத்துப் போடுகிறது
பொன்னிற மீனொன்று
உன் மீதும் என்மீதும்
துள்ளி விழுந்தபடி
சன்னல் வழியே குதித்து
காணாமல் போகிறது
இப்போது நெளியும் நம் விரல்கள்
மீன்களாகித் திளைக்க
காலம் ஒரு முறை
நதியாக ஒத்திகை பார்க்கிறது
- தங்கேஸ்