அந்த குளத்தில் எறிந்த கல்
உறங்கி பல நாட்கள் ஆகின்றன
ஆனால் தவளை
இன்னும் உறங்கவில்லை
புரோட்டான் அலைகளும்
நியூட்ரான் அலைகளும்
அதன் உடலைச் சுற்றி

ஆதியில் தொடங்கிய
முடிவற்ற விவாதம்
குழப்பமாய் இன்னும்
நீண்டு கொண்டிருக்க
நான் ஒரு எளிய கதை மூலம்
விளக்க முயன்றேன்
கிளைத்தன முயல் ஆமை கதைகள்
ஆயிரமாயிரம் ஆயிரமாயிரம்
பிறகு கதைகளில்
உருள ஆரம்பித்தது குளம்

ஒரு கவிதை மூலம்
விளக்க முயன்றேன்
கவிதைகள் யாவும்
தவளைகளுக்கு இரையாயின

கடவுளர்களைப் படைத்து உலவ விட்டேன்
கடவுளர்கள் தவளைகளின்
முதுகில் அமர்ந்து கொண்டு
அதை வாகனமாக்கி விட்டனர்

கற்கள் உறங்கும் அளவுக்கும்
அலைகளுக்கும்
தவளைகளுக்கும்
கடவுளர்களுக்கும்
குளத்திற்கும்
நிம்மதி இல்லையென்று
கண்டு கொண்ட பின் முடிவெடுத்தனர்

ஒன்று கல்லை
அப்புறப்படுத்த வேண்டும்
அல்லது கரைக்க வேண்டும்
இரண்டும் இயலாமல் போகவே
அனைவரும் கற்களாவதென்று
முடிவெடுத்தனர்

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.