நீட் மருத்துவத் தேர்வு எதிர்ப்புப் போராட்டங்கள் மேற்கிளம்பியுள்ளதை அடுத்து, தமிழகக் கல்வி முறை, உயர் கல்விப் புலங்கள் பற்றிய ஆழ்ந்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கார்ப்பரேட் மயமான நவீன அலோபதி மருத்துவம், மருத்துவக் கல்வி பற்றியும் நமது சொத்த மருத்துவக் கொள்கை, மருத்துவக் கல்வி உருவாக்கம் பற்றியும் மெல்லியதான குரலேனும் விவாதங்களில் எழுகின்றது. இச்சிந்தனைப் போக்கிற்கு வலுவூட்டும் வகையில்தான், யாழ்ப்பாணத்தில் உள்ள லங்கா சித்த ஆயுள்வேதக் கல்லூரி பவளவிழா (1925-2000) மலரில் உள்ள இந்தக் கட்டுரையை மீள்வெளியீடு செய்கின்றோம். இக்கட்டுரை நவீன மருத்துவம் பற்றிய உலகளாவிய சமூகவியல் சிந்தனைகளை அறிமுகம் செய்துவைக்கின்றது.

I

நிகழ்கால மருத்துவத் துறையானது பல விமர்சன முரண்நிலைகளை சமூகங்களிடை விளைவித்துள்ளமையைக் காண்கின்றோம்.  குறிப்பாக சிக்கலான தொழில்நுட்ப பாவனை, அதிகளவிலான மருந்து உற்பத்திகள், தொழில்சார் நிபுணத்துவ அறிவு எனும் குவிமையங்களிடையே இம்முரண்நிலைகளின் பிரச்சினை நிலைமைகள் அவதானிக்கப்படுகின்றன.  சுகநலம், மருத்துவ கவனிப்பு சார்ந்த இப்பிரச்சினை நிலைகள் எங்களை தனித்தனியே தொடுகின்ற விவகாரங்கள் என்பதனால் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை.  எங்கள் காலத்து அரசியல், பொருளாதார, சமூக, அறநியமங்கள் சார் விவகாரங்கள் ஆகவும் அவை முதன்மை பெறக் காணலாம்.  இந்த வகையில் தான் மருத்துவம் பற்றிய, சமூகவியலின் ஆர்வமும் ஈடுபாடும் இன்று அதிகரித்திடக் காணலாம்.  ஒருகாலத்து சேவைத் துறையாகக் கருதப்பட்ட மருத்துவம் இன்று நிறுவனங்களில் ஒன்றாக சமூக வியலாளர்களால் கருதப்படுவதும் கற்கப்படுவதும் மேற்கண்ட பின்னணியில் தான்.

சமூகவியலாளர்களின் மருத்துவத்துறை சார் ஈடுபாடு என்பது மருத்துவ நிபுணர்கள், மற்றும் மருத்துவ கவனிப்பினை வழங்கும் ஏனையோருக்கும் அப்பாற்பட்டதாக அமைகின்றது.  நலம் பற்றிய உடற்தொழிலியல் சார் வரைவிலக்கண மட்டுப் பாட்டினை கடந்து சமூக பண்பாட்டு நோக்கிலான விரிந்த பொருளினை தருவதாக, தேடுவதாகவே சமூகவியல் ஆர்வத்தினைக் காணலாம்.  நலம் என்பது நோயற்ற நிலை என்ற மருத்துவ வரை விலக்கணம் கடந்து உடலும் உள்ளமும் சமூக நலனும் இசைந்த நிறை வாழ்வாகவே கொள்ளப் படுகின்றது.

நோய்வாய்ப்பட்ட தனியனைக் கவனிப்பது மருத்துவ கவனிப்பாக, நோய் நிலைமையே வராத நலவாழ்வுக்கான கவனிப்பாக சமூக பண்பாட்டியல் அணுகுமுறை அமைதலின் அடிப்படை இதன் வழி புலனாகின்றது.  இயற்கையோடு இசைந்த வாழ்வு, நல்ல சுகாதார பழக்க வழக்கங்கள், போஷாக்கான உணவு, பொது சுகாதார மேம்பாட்டுக்கான சமூக சூழமைவு எனும் எங்கள் மரபுவழி மருத்துவ நியமங் களாகவே சமூகப் பண்பாட்டியல் தரிசனங்கள் அமைந்துள்ளமை ஈண்டு தெளிவாகின்றது.  பின் தங்கிய நாடுகள் என முன்னர் விவரிக்கப்பட்டு தற்பொழுது கொஞ்சம் நாகரிகமாக “வளர்ந்து வரும் நாடுகள்” (Developing countries) என அழைக்கப் படுகின்றன.  எங்கள் பண்பாட்டு புலன்களுக்கு மேலை அறிவும், தொழில்நுட்பமும் பயனான பல நலன்களைத் தந்தமையை யாரும் மறுப்பதற் கில்லை, எனினம் நவீன மயமாக்கம் என்பதே மேலை மயமாக்கம் தான் என்றவாறு “எங்களிடம் எதுவுமே இல்லை” என எங்கள் பண்பாட்டு வரலாற்றை, மேன்மைகளை புறந்தள்ளும் அவலம் செழுமையானதொன்றல்ல.  எங்கள் பண்பாடுகள் கண்ட கலைகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் பற்றிய எங்கள் மனோபாவத்தில் பாரிய மாறுதல் அவசியமாகின்றது.  அறியாமலேயே பாரம்பரிய மருத்துவ அறிவுக்கனிகளை புறந்தள்ளும் இன்றைய நிலைக்கு எதிரான விழிப்பூட்டல் இன்றியமையாத தாகின்றது.

ஒருபுறம் எங்கள் பாரம்பரிய மருத்துவத் துறை களின் நலன்களை, மேன்மைகளைத் தெரிதல், தெளிதல் என்பது நடக்கின்றபோது, இன்று எம் எல்லோரதும் கவர்ச்சி மையமாகியுள்ள மேலை மருத்துவ உலகம் பற்றிய அதே உலக சர்ச்சைகளும் எங்கள் கவனத்தைப் பெறவேண்டும்.

அளவுக்கதிகமான மருந்தேற்றம் ( Over medicalization) என்ற பதம் இன்று மேலை பண்பாடு களிடை மிகவும் பிரபலமானது.  மிகவும் வல்லமை பெற்றதொரு சக்தியாக எழுந்துள்ள மருத்துவத் தொழிலும், அது சார்ந்த உற்பத்தித் தொழில் களும் மருத்துவம் தொடர்பான அர்த்தத்தினையே இன்று பெருமளவுக்கு மாற்றியுள்ளமையைக் காண்கின்றோம்.  அமெரிக்க மருத்துவத்தின் சமூக உருமாற்றம் தொடர்பான போல் ஸ்ரேயரின் விருதுகள் பல பெற்ற கூhந ளுடிஉயைட The Social Transformation & American medicine (1982) எனும் நூல் வெளிப் படுத்தும் பல உண்மைகள், எங்கள் புலன்கள் இன்று எதிர் கொள்ளும் நிலைமைகளுக்கு கட்டிய மாக அமைவன.  உயர் வருமானம், கட்டணங்கள் வேண்டியவாறு தீர்மானித்தல் போன்ற சந்தை நிர்ணயங்களால் மருத்துவத்துறையானது அதன் சமூக, பண்பாட்டுணர்வு நிலையினின்றும் விடு பட்டு பொருளீட்டும் தொழிலாகும் அவலம் இந்நூலில் விரிவாகவே விளக்கப்படும்.

மேற்கண்ட நிலைமைகளினடியாக மேலும் ஒரு உச்சநிலை விமர்சனமாக, “மருத்துவ விஸ்தரிப்பு, மனித நலத்துக்கு ஆபத்தாகியுள்ளது” எனும் இவான் இலீச் (Ivan Illich) இன் கருத்தாக்கத்தினைச் சந்திக்கின்றோம்.  பழிவாங்கும் தேவதையாகவே இன்றைய மருத்துவ உலகைச் சாடுவார் இலீச்.

இவான் இலீச்சின் மேற்கண்ட கருத்தாக்கம் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட கூற்றாக விமர்சிக்கப் படலாம்.  நோய்த்தடுப்பு, நோய்கண்டுபிடிப்பு, நோய் நீக்கம் தொடர்பான அறிவியல் வளர்ச்சி நிலைகளை அப்படியே புறந்தள்ளுதல் முடியாது.  அதேவேளையில் இலீச்சின் கடுமையான விமர் சனத்திற்குப் பின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் சமூக சமமின்மை பற்றிய அவர் உணர்வுகளையும் நாம் புரிந்திடுதல் இன்றியமையாதது.  பல்வேறு விதமான சமூக சமமின்மைகள், முற்சாய்வு நிலைகள், பாரபட்சங்கள், சுயநலம் என நீளும் முதலாளித்துவ சமூக அமைப்பிடை, பலவித நோய்களுக்கே குறித்த சமூக அமைப்பு காரண

மாகிவிடுதல் வெளிப்படையானது.  இந்த சமூக அமைப்பை உறுதி செய்வதாகவும், அதற்கு துணை போவதாகவும் மருத்துவ அமைப்பும் காணப் படுவதே இங்கு இன்றைய மருத்துவத்துறை விமர்சிக்கப்படுதலின் அடிப்படையாகும்.  இலாபம் ஒன்றே இலட்சியமாக, நவீன மருத்துவம் சாதாரண மனிதனுக்கு எட்டாக்கனியாகிப் போனமை இன்றைய சமூக - முரண்பாட்டியல் பகுப்பாய்வு களில் (Social - conflict analysis) மிகத்தெளிவாகவே விளக்கப்படுவதனையும் இங்கு கருத்திற் கொள்ளலாம்.

மேற்கண்ட விமர்சனங்களினடியாக, மருத்துவ நிலையாக்கத்திலிருந்து விடுபடல்டி (demedicalization) எனும் செயன்முறை இன்று முதன்மை பெறக் காணலாம்.  நோய் நிலையிலிருந்து நலம், சிகிச்சையி லிருந்து தடுப்பு மருத்துவம் எனும் திசையில் மேலை மருத்துவ உலகின் நோக்கிலும் போக்கிலும் புதிய மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.

நலமான சமூக வாழ்வு, நோய்களே காணாத சுகவாழ்வு, எனும் இந்தக் கருத்தாக்கங்கள் மீளவும் இயற்கையோடு இசைந்த, பெருமளவு பணத்தை வேண்டிநிற்காத, எதிரான விளைவுகள் ஏது மில்லாத எங்கள் பண்பாட்டு மரபுகள் கண்ட மரபுவழி மருத்துவ வாழ்வுக்கு எங்களை அழைத்து நிற்பதாக உணரமுடியும்.

இந்த அழைப்புக்கான எங்கள் செவிசாய்ப்பு எவ்வாறுள்ளது? மரபுவழி மருத்துவ முறைமை களை மேலை அலோபதி மருத்துவ முறையுடன் ஒப்பிட்டு தாழ நோக்கும் எமது மனோபாவம் பற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்டமையே இங்கு மீள மீட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது.

II

ஆயுள்வேதம், சித்த மருத்துவம், யுனானி, ஹோமியோபதி, சீனமருத்துவம் என மரபு வழியாகப் பேணப்படும் மருத்துவ பாரம்பரியங்கள் பலவற்றைக் காணமுடிகிறது.  இவை ஒவ்வொன்றும் தோன்றிய தேசச் சூழல், கருத்தியலின் அடியாக சிறப்பான பண்புகளைக் கொண்டுள்ளன.  இவ்வாறான சுதேச மரபுகள் தான் தென்மையான மருத்துவ வாழ்வின் தொடக்கப் புள்ளிகள்.

எடுத்துக்காட்டாக சித்த மருத்துவத்தினை எடுத்துக் கொண்டால் உலக மருத்துவ மரபுகளில் மிகத் தொன்மையான வைத்திய மரபுகளில் ஒன்றாக புகழ் பெறக் காண்கின்றோம்.  அகத்தியர், அகப்பேய்ச்சித்தர், அமல முனி, அருணாசலகுரு, அழுகணிச் சித்தர், இடைக்காட்டுச்சித்தர், திரு மூலர் என நீளும் ஒரு சித்தர் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை தமிழ்நாடு முதல் ஈழநாடு வரை காணமுடிகிறது.  இவர்களே இந்த வைத்திய மரபின் மூலவர்கள்.

காப்பு, நீக்கம், நிறைப்பு எனும் பிரதான இலக்குகள் கொண்டதாக அமைந்தது சித்த மருத்துவம்.  இம்மூன்றில் முதன்மையாய், முதலில் அமைந்தது.  உடலிலே நோய் ஏதும் வாராது காத்தலாகும்.  அடுத்து வரும் நீக்கம் என்பது நோயைப் பகுத்தாய்ந்து தீர்ப்பதனைக் குறிக்கிறது.  நிறைப்பு என்பது குறைந்த சத்துக்களை நிரப்பி உடலை வலுவாக்குதலைக் குறிக்கிறது.  இயற்கை யாக ஏற்படும் நரை, திரை மூப்பினைப் போக்கும் காய கல்பம் சித்தமருத்துவம் எமக்களித்த அரு மருந்து.

இன்றைய மருத்துவ வரைவிலக்கணம் அவாவி நிற்கும் நல்வாழ்வின் முழுமையை அன்றே தன்னகத்து கொண்டிருந்தது, சித்த மருத்துவம்.  உடல் உரத்துக்கு காய கல்பம் போல, அகத்தூய்மைக்கும் அகநிறைவுக்கும் யோகமும் ஞானமும் இன்றியமை யாதனவாக உணர்த்தப்பட்டது.  சித்தவைத்தியத் திலே, மூலிகை மருந்தைவிட யோகாசனம் சிறந்த நோய் நீக்கும் நிவாரணியாகக் கொள்ளப்படுவது இந்த அடிப்படையில் தான்.  உடல் - மனம் - மூச்சு மூன்றும் இசையும் யோகாசனம், நோய்க்கு மருந்தாக மட்டுமன்றி நோயே நெருங்கா நல வாழ்வின் ஆதாரமாகின்றமையை இன்றைய உலகம் உணர ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  அதிலும் கீழைப் பண்பாடுகளை விட மேலைப் பண்பாட்டு சூழலில் யோகாசனம் பற்றிய விழிப் புணர்வு அதிகரித்துள்ளமை எங்கள் கண்களையும் திறக்க வைக்க வேண்டும்.

சித்த மருத்துவம் போலவே ஆயுள் நலத் துக்கான உறுதியைத் தரும் பாரம்பரிய வைத்திய முறையாக ஆயுர்வேதம் சிறப்பு பெறக் காணலாம்.  ஆத்ரேயர், தன்வந்திரி போன்றோர் இவ்வைத்திய மரபின் மூலவர்களாகக் கருதப்படுகின்றனர்.  ஆயுர்வேதமானது, வாதம், பித்தம், கபம் எனும் மூன்று நிலைகளினூடாக மனித நலனை ஆராய் கின்றது.  மனித உடலில் இம்மூன்றும் உரிய அளவில் உள்ள போது நோயேதும் அணுகு வதில்லை.  உடலில் இவற்றினை உரியவாறு பேணு வதற்கான உணவு பழக்கவழக்கங்களை, வாழ்க்கை முறைகளை மிகத்தெளிவாகவே இம்மரபுவழி வைத்தியம் முன்வைக்கிறது.  ஆயுர் வேத மருந்துகள், பெரும்பாலும் மூலிகைகளை மையமாக கொண்டு அமைகின்றன.  இந்த மூலிகைகளை மரபுவழி பண்பாடு கண்டுகொண்ட அனுபவங்கள், மிகவும் ஆர்வத்திற்குரியன.  நவீன மருத்துவம் கொண் டிருக்கும் பாரிய ஆய்வுக்கூட வசதிகள், கருவி கரணங்கள் ஏதுமின்றியே அனுபவ ஞானமாகக் காணப்பட்ட மருந்துகள் இன்றும் அருமருந்தாகவே பயன்படுவன.  விஷம் நீக்கும் மூலிகையான “சிறியாள் நங்கையின்” கதையை நீங்கள் அறிந் திருக்கக்கூடும்.  இரவு வேளை புற்றிருந்து வெளிப் பட்ட நாகத்தின் மீது.  கீரியொன்று தாக்குதல் நடத்துகின்றது.  பதிலுக்கு நாகமும் படமெடுத்து பாய்ந்து கீரியை காயப்படுத்துகின்றது.  பாம்பின் விஷத்தினின்றும் விடுபட கீரி, புல்வெளிப் பரப்பில் ஆங்காங்கே பரந்துள்ள மூலிகைகளை வாயினால் மென்றும் அவற்றின் மீது புரண்டும் கொள்கிறது.  விஷம் தணிந்து தப்பித்துக்கொண்ட கீரியினை அவதானித்த மனிதன் விஷப்பாம்புக் கடியினின்றும் விடுபட சிறியாள்நங்கையை பயன்படுத்த ஆரம்பிக் கின்றான்.

மரபுவழி மருத்துவத்தின் இந்த நுண் அவ தானங்களை சரியான கண்டு கொள்ளல்களை வியக்கும் நவீன மருத்துவ உலகம், தனது மருந்துகள் பலவற்றை மரபுவழி மூலிகைகளினின்றும் உருவாக்கி வருகின்ற சங்கதி எம்மவரில் பலரும் அறியாதது.  தீராத பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்துகளை தேடும் நவீன மருத்துவம், அதற்கான புதையலாக இன்று மரபுவழி மருத்துவ செல்வங்களை ஆராய்ந்து வரும் இன்றைய காலத்து சுதேச பண்பாட்டினர் மீளவும் தத்தம் மரபு வழி மருத்துவ மரபுகளின் மேன்மைகளை உணர்ந்து கொள்வர் என எதிர் பார்க்க முடியும்.

இயற்கை வைத்தியத்தினை நோக்கி செல்ல வேண்டும் எனும் இன்றைய பொன்மொழிகளைக் கேட்டு, இன்னமும் இயல்பான கிராமத்து வாழ்வி லுள்ள முதியவர்கள் நகைக்கக்கூடும்.  எத்தனை ஆயிரம் ஆண்டுகள், தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழும் சுகவாழ்வு பற்றி, புதிய கண்டு பிடிப்பு போல இப்பொழுது என்ன ஆலோசனை என அவர்கள் கேட்பதில் நியாயமுண்டு.

மரபுவழி இயற்கை மருத்துவ முறைகளில் மருந்துகளுக்கோ, மூலிகைகளுக்கோ முக்கியத் துவம் இல்லை.  உடலின் பிராண சக்திதான் அனைத்திற்கும் ஆதாரம்.  நோயினால் உடல் நலிந்துவிட்டது எனும் மருத்துவ நோய்க்கு பதில், இங்கு உடல் நலிந்ததால் நோய் வந்துவிட்டது என்ற தெளிந்த கருத்தியலை காணமுடிகிறது.  ஜீவசக்தி உயிராற்றல் இல்லாது போகும்போதே மரணம் நிகழ்கின்றது.  அது குறையும் போதே பலவிதமாய் அறிகுறிகளும், நோய் நிலைகளும் வெளிப்படுகின்றன.

உண்ணும் உணவு அளவாக, வேண்டப்படும் உயிர்ச்சத்துக்களைக் கொண்டதாக அமைய வேண்டும்.  இந்த உணவு செமிபாடடைந்து வேண்டியன ரத்தத்தில் கலக்கின்றன.  அல்லா தவை கழிவுகளாகின்றன.  மலம், சிறுநீர், வியர்வை, கோழையென அமையும் கழிவுகள், உடலைவிட்ட கலாத நிலைதான் நோய் நிலை.  இவை எங்கெங்கு தங்கி நிற்கின்றனவோ அங்கெல்லாம் அந்தந்த உறுப்புகள் வலுவிழந்து நோய் உற்பத்தி ஸ்தானங் களாகி விடுகின்றன.

“காலையில் வேண்டியளவு நீர் அருந்துங்கள் யப்பானிய நீர்ச்சிகிச்சை விளம்பரம் ஒன்று அறிவுறுத்துகின்றது”.  என, சிலபேர்கள் காலையில் தண்ணீர் குடிக்கத் தொடங்கியதைக் காண முடிகிறது.  இந்த நீர் சிகிச்சை யப்பானிய இயற்கை வைத்திய மரபின் வழியது.  இதே இயற்கை வைத்தியமும் நீர்ச்சிகிச்சையும் எங்கள் பாட்டி வைத்தியமாக, மரபுவழி வைத்தியமாக எங்கள் பண்பாட்டு புலத்தும் நிலவிய விடயம் தான்.  இன்று யப்பானிய கண்டுபிடிப்பாகவேனும் எம்மவர்களை தொற்றிக் கொண்டால் நல்லது தான்.  சூரிய ஒளி சிகிச்சை, விரதமிருந்தல், அமைதி வணக்கம் என உடலும் உள்ளமும் சாந்தியும், உறுதியும் பெறும் வழிமுறைகளை மீளவும் நாம் கைக் கொள்ளும் போது, நோயற்ற வாழ்வு என்பது குறைவற்ற செல்வமாக எம்வசமாகுமல்லவா?

III

இயற்கை வைத்தியமாக, மரபுவழி பண் பாட்டின் சுகநல சித்தாந்தங்களாக காலாகாலமாக உணரப்பட்டு வந்த விடயங்களை, நவ அறிவியலாக எங்களுக்கு இன்று வாய்த்துள்ள மருத்துவ சமூக வியல் சிந்தனைகளாக நாங்கள் பார்க்க வேண்டி யுள்ளதும் ஒரு சுவாரஸ்யமான நிலைமைதான்.  உண்மையில் மருத்துவ சமூகவியல், மருத்துவ மானுடவியல் அறிவும், ஆய்வுகளும் மேலை உலகில் இவான் இலீச்சினால், பழிவாங்கும் தேவதையாக பழிக்கப்படும் மருத்துவ உலகினுக்காக பரிகாரங் களாக அமைகின்றமை நம்பிக்கை தருவது.  எங்கள் புலங்களிலும் இந்தத் திசையிலான ஆய்வுகளும் அறிவுத் தேடல்களும் நிகழ்த்தப்படுவது, காலத்தின் தேவையாகவும் கடமையாகவும் உணர்த்தப்படு கின்றது.  சுயம், சுயப்பண்பாட்டு உணர்வுகளால் பேணுதல், மீள வாழவைத்தல் என்பதனை உயிர் மூச்சாகக் கொண்ட எங்கள் பண்பாட்டு புலத்து, இத்தகு முயற்சிகள் மிகமிக இன்றியமையாதவை.

இன்றைய உலகமயமாக்க அலைகளிடை அலையும் துரும்பாகாமல் திடகாத்திரமாய் எங்கள் சுயப்பண்பாடுகள் தழைத்திட, எங்களைப் பற்றிய, எங்கள் கலை அறிவியல்கள் பற்றிய விழிப்பு உச்சநிலையில் வேண்டப்படுகின்றது.  இங்குகூட ஒரு சுவாரஸ்யமான முரணை முரண் நிலையை எடுத்துக்காட்டாக சுட்டி இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம்.

வர்த்தக நலனை முதன்மைப்படுத்தும் உலக மயமாக்க வர்த்தக செயற்பாடுகளிடை எங்களது அருமருந்தான வேம்பு, நீம்சார்ந்த உற்பத்திகளுக்கு உரிமம் எங்களுக்குத்தான் என்று “வல்லரசு” முத்திரை குத்தப்பட்ட சம்பவம் உணர்த்தும் செய்தியைப் புரிந்து கொண்டிருக்கிறோமா? எங்களையே எங்களுக்கு விற்கும் இதுபோன்ற அவலங்களை முடிக்கவும், சுதேசிய மருத்துவ மரபுகள் பற்றிய விழிப்புணர்வும் அதுசார்ந்த செயலும் அவசியமில்லையா?

மரபுவழி மருத்துவத் துறையினர், பண்பாட்டி யலாளர்கள், மருத்துவ மானிடவியலாளர்கள், சமூகவியலாளர்கள், ஏனைய மருத்துவத்துறை ஆய்வாளர்கள், சமூகப்பணியாளர், சமுதாய மேம் பாட்டு ஆர்வலர்கள் என அமையும்.  அத்தனை பேரும் இசைந்து மேற்கொள்ள வேண்டிய எதிர்காலப் பணிகள் பல உள்ளன.  இந்தவகையில் இக்கட்டுரை ஒரு தொடக்கப் புள்ளிதான்.

உசாத்துணைகள்

1) Illich, Ivan - Medical Nemesis: The Explanation of Health, London, 1975. 

2) Waitkin, Howard. D & NBarbar: The Exploitation of Illness in Capitalist Society. Indianapolis, 1974.

Pin It