பெட்ரோலியப் பொருட்களின் விலை இந்தியச் சந்தையில் உயர்ந்து காணப்படுவதுடன் தொடர்ந்து உயர்ந்தும் வருகிறது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை முன்பு இருந்ததை விடக் குறைவாக இருந்தாலும் இங்கு அதீத விலைக்கு விற்கப்படுவதற்குக் காரணம் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் மிக அதிக அளவில் அவற்றின் மீது விதிக்கும் பல்வேறு வரிகளே. ரூ.21.50 அடக்க மாகும் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது வரி விதித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.70-80 வரை விலையை வசூலித்து அரசுகள் ஒரு மாபெரும் வரிக் கொள்ளையில் ஈடுபடுகின்றன என நாம் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தோம். பல ஊடகங்களும், ஊடக விவாதங்களும் இதனை எடுத்துக்கூறின.
வலைத்தளங்களிலும் ஆளும் பா.ஜ.க. அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த விமர்சனங்களை எதிர்கொள்ளப் பா.ஜ.க.வினரும் அதன் ஆதரவாளர்களும் பல தந்திர வேலை களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அப்படி ஈடுபடாவிட்டால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். அந்தத் தந்திரங்களில் ஒன்று என்னவென்றால் தாங்கள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கும் கலால் வரியில் ஏறத்தாழ 42 விழுக்காடு மாநில அரசுகளுக்குப் பிரித்தளிப்பதாக ஒரு பச்சைப் பொய்யை அவிழ்த்து விடுகின்றனர். அவர்களின் வாதம் எப்படி தந்திரமானது என்பதைக் காண்போம்.
முதலாவதாக, கலால் வரியில் 42 விழுக்காடு மாநில அரசுகளுக்கு பிரித்தளிக்கப்படுகிறது என்பது ஒன்றிய அரசின் கருணைக் கொடை அல்ல. மாறாக அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அளிக்கப் பட்டுள்ள மாநில உரிமை. எந்த விகிதத்தில் பிரித்தளிப்பது என்பதும் ஒன்றிய அரசின் முடிவல்ல. அரசியல் அமைப்புச் சட்டத்தின் விரிவு 270ன் படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும் நிதிக் குழுவின் பரிந்துரைப்படி கலால் வரி பிரித்தளிக் கப்படுகிறது. அது மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்தின் பங்கு (இந்த 42ரூ பங்கில்) எவ்வளவு என்பதையும் நிதிக் குழு வரையறுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, தமிழகம் கலால் வரியின் பிரித்தளிக்கப் படும் பங்கிலிருந்து 4.023 விழுக்காடு மட்டுமே ஒன்றியத் தொகுப்பிலிருந்து பெற முடியும்.
2017-18ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ரூ.1,00,000 கோடி கலால் வரியாக வசூலித்தால் தமிழகம் ரூ.4,023 கோடி மட்டுமே அதன் பங்காகப் பெற முடியும். தமிழகத்தில் வசூலிக்கப்படும் கலால் வரியிலிருந்து 42 விழுக் காட்டைத் தன் பங்காகப் பெற முடியாது. வசூலிக்கப்படும் அனைத்து வரியும் ஒன்றிய அரசிடம் சென்று சேர்ந்தபின் தன் பங்கை எடுத்துக் கொண்டு மீதமுள்ள 42 விழுக்காட்டுப் பங்கில் தமிழகத்தின் பங்கு வழங்கப் படும்.
அப்படியானால் 42 விழுக்காடு நிதிக்குழு பரிந்துரைத்த வண்ணம் மாநிலங்கள் பெறும்போது, ஒன்றிய அரசைக் குறை கூறுவதன் நோக்கம் என்ன? ஒன்றிய அரசு வசூலிக்கும் அனைத்துக் கலால் வரியும் பகிரப்படும் பங்காக இருப்பதில்லை. வசூலிக்கப்படும் வரியில் பகிரப்படும் பங்கு (Divisible Pool) என்ற பகுதியும், பகிரப்படாத பகுதியும் (Indivisible Pool) இருக்கும்.
ஒன்றிய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது வசூலிக்கும் கலால் வரி ரூ.21.48. இதில் 42 விழுக்காடு பகிரப்படும் பங்கு என்ற தோற்றத்தைப் பக்தர்கள் பொது வெளியில் பரப்பி வருகிறார்கள். இது ஒரு பச்சைப் பொய். எப்படி?
ஒன்றிய அரசு வசூலிக்கும் கலால் வரியான ரூ.21.48ல் மூன்று வரிகள் அடங்கியுள்ளன.
1. அடிப்படை CENVAT வரி : ரூ.8.48
2. கூடுதல் கலால் வரி : ரூ.6.00
3. சிறப்புக் கூடுதல் கலால் வரி : ரூ.7.00
இதில் இரண்டாவது பகுதியான கூடுதல் கலால் வரியாக வசூலிக்கப் படும் ரூ.6.00 ROAD CESS என்று வசூலிக்கப்படுகிறது. இது 1998ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட நிதிச்சட்டம், 2ன் படி வசூலிக்கப்படுகிறது. இந்தச் சட்டம் மிகத் தெளிவாகக் கூறுவது என்ன வென்றால், இந்தக் கூடுதல் வரி மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப் படாது என்பதாகும்.
இதே போல் மூன்றாவது வரியான சிறப்புக் கூடுதல் கலால் வரி ரூ.7.00 என்பது நிதிச் சட்டம் 2002ன் படி வசூலிக்கப்படுகிறது. இதுவும் மாநிலங் களுடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது. ஆக, ஒன்றிய அரசு வசூலிக்கும் ரூ.21.48 கலால் வரியில் ரூ.8.48 மட்டுமே மாநிலங்களுடன் பகிரப்படும். அதாவது ரூ.8.48ல் 42 விழுக்காடான ரூ.3.56 மட்டுமே மாநில பகிர்வுத் தொகையாகும். மீதமுள்ள ரூ.17.92ஐ ஒன்றிய அரசே வைத்துக் கொள்ளும். அதாவது ஒன்றிய அரசு வசூலிக்கும் கலால் வரியில் 83.45 விழுக்காட்டை அதுவே வைத்துக் கொள்கிறது. மீதமுள்ள 16 விழுக் காட்டைத் தான் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கிறது. உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, பா.ஜ.க.வும் அதன் ஆதரவாளர்களும் வசூலாகும் கலால் வருவாயில் 42 விழுக்காட்டை மாநிலங்களுக்குச் செல்வதாகக் கூறிவருவது பச்சைப் பொய் அல்லாமல் வேறு என்ன?
இதன் வாயிலாக, ஒன்றிய அரசு வசூலிக்கும் அடிப்படை கலால் வரியான ரூ.2,40,000 கோடியில் ரூ.99,477 கோடியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்த பின் அது வைத்துக் கொள்வது ரூ.1,40,523 கோடி. இதுவல்லாது பகிர்ந்தளிக்காத தொகையாக அது வைத்துக் கொள்ளும் இதர கலால் வரி வருமானங்கள் (பெட்ரோல்) ரூ.1,02,550 கோடிகள். ஆக, ஒன்றிய அரசு தன் பங்காக மட்டும் ரூ.2,43,000 கோடியை வைத்துக் கொண்டு, மாநிலங்களுக்கு ரூ.99,477 கோடியை மட்டும் பகிர்கிறது. ஆனால் ஏறத்தாழச் சரி பாதியைக் கொடுப்பது போன்ற தோற்றத்தைப் பரப்பி வருகிறது.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாநிலங்கள் தங்கள் பங்கை விட்டுக் கொடுக்கத் தயாரா எனக் கேட்பது என்ன விசித்திரம்! அதைவிட விசித்திரம் பெட்ரோலிய அமைச்சர் பெட்ரோலியத்தை ஜி.எஸ்.டி. வரித் திட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பினுள் அதனைக் கொண்டு வந்தால் ஒன்றிய அரசு எவ்வளவு வரி வருவாயை இழக்கும் என்பது தெரிந் திருந்தாலும், பழியை மாநில அரசுகள் மீது சுமத்தி தாங்கள் தப்பிக்க எத்தனிப்பது மட்டுமே அதன் குறிக்கோள். இதைத்தான் இந்தப் புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன.
இத்தகைய பரப்புரைகளை அலசி ஆராயாமல் அமைச்சர்கள் கூறுவதை அப்படியே கிளிப்பிள்ளை போல் திரும்பக் கூறும் ஊடகங்களை என்னவென்று சொல்வது?