இந்த அடுக்குமாடிகளின்
கட்டிடக் கூட்டம்
முன்பொரு பிறவியில்
பெருத்தக் காடாக
வியாபித்துக் கிடந்தது.
அதில் நாங்கள்
மான்களானோம்
மரங்களானோம்
குட்டிக் குட்டி முயல்களானோம்
ஆனால் மனிதனாகவில்லை.
அப்போதெல்லாம் இங்கே
வேட்டைக்காரர்கள் பிறப்பெடுக்கவேயில்லை.
மனித உற்பத்திக்கு
உறுதிபட எதிர்ப்பலைகள்
அனுப்பி வைத்தோம்.
ஆதாமும் ஏவாளும்
அப்போது இல்லை.
பாவப் பரிவர்த்தனைகள்
தடைசெய்யப்பட்டதாயிருந்தது.
புல் போர்த்திய பெருவெளிகள்
எங்களின் மேய்ப்பு நிலங்கள்.
வனாந்திரம் முழுதும்
எங்களின் வசிப்பிடம்.
வெக்கையும் வாடையும்
விருப்பமான வதைபாடுகளாயிருந்தன.
பகலில் சூரியனும்
இரவில் சந்திரனும்
மாற்றுக் காவலாயிருந்தன.
எங்களுக்கென ஒரு
கடந்தகாலம் இருந்தது.
எங்களுக்கென ஒரு
நிகழ்காலம் இருந்தது.
எங்களுக்கென ஒரு
முடிவு காலமும் இருந்தது.
இப்போது நாங்கள்
துரோகிக்கிறோம்
களவாடுகிறோம்
ஏய்க்கிறோம்
ஏமாறுகிறோம்
அனைத்திலும் அதிகமாய்
நாங்கள் மனிதர்களாகிவிட்டோம்.

- பூவன்னா சந்திரசேகர்