உனக்கு
என்ன தான் வேண்டுமென
ஒருமுறையாவது
உங்களுக்குள் கேட்டதுண்டா?

உள்ளுறங்கும்
மனதை கொஞ்சம்
தட்டியெழுப்பி, அதன்
தலைகோதி
கேட்டுப் பாருங்கள்!
குமைந்த
நெஞ்சம் சற்றே
குழைந்து போகக்கூடும்!

நேர்த்தியாய்
உடையணிந்து
கண்ணாடி முன் நின்று
சிகை நீவி
அருமை என
தன் தோள் தட்டித்தான்
பாருங்கள்!
உம்முகத்தில்
கர்வம்
கம்பீரமாய் வந்தமரக்கூடும்!

யாருமற்ற வேளையில்
குதூகலமாய் சற்றே
குதிங்காலுயர்த்தி
நளினமாய்
நடனமாடி..
இமை விரித்து
'அழகழகு'
என்று சொல்லித்தான்
பாருங்கள்!
படபடவென அடிக்கும்
பட்டாம்பூச்சியின் பரவசம்
முகம் முழுவதும்
ததும்பி நிற்கும்!

ப்ரியமான
மனிதருக்கென
காத்திருக்கும்
பிரத்யோகமான
தருணமொன்றில்
காற்றோடு பேசிப்
பாருங்கள்!
காத்திருக்கும் நேரத்து
அவஸ்த்தை காணாமல்
ப்ரியத்தின் பேரோசை
கேட்டுக் கொண்டே இருக்கும்!

உனக்கு
என்ன தான் வேண்டுமென
ஒருமுறை கேட்போம்.
தன்னைத் தான்
தேற்றாவிடின்
பிறர் தேற்றி
என்ன பலன்?

- இசைமலர்

Pin It