கலைஞனாய் இருப்பது
சாபம் என்கிறார் அப்பா
பசித்த வயிறோடு சொல்கிறேன்
கலைஞனாய் இருப்பது கருணை

      *
குடை இருந்தும்
நனைய பிடிக்கிறது
குடை காளானுக்கு

      *
மிகச் சரியாக எட்டிக் குதித்தும்
கிணற்றுத் தவளை
ஆக முடியவில்லை
      *
மதிய பசி
மணிக்கூண்டில்
வயிறிசைக்கிறது
      *
என்ன வேண்டுமாம்
சும்மா கூவிக் கொண்டேயிருக்கும் குயிலுக்கு
சும்மா கூவ வேண்டுமாம்
      *
பூனை மழை இது
ஜன்னல் உருட்டுகிறது
      *
மிச்சப் பகலை டயர் வண்டியில்
உருட்டி செல்கிறான்
பாலை சிறுவன்
      *
'கடை முன்னால் வண்டி நிறுத்தாதே'
கத்தியவன் கடையில்
இனிப்பிருந்து என்ன பயன்

      *
வெயிலை கடல் என்கிறேன்
தூரத்து கப்பலில்
ஐஸ்காரன் வருகிறான்

      *
எல்லாமே இங்கிருப்பது தான்
இங்கிருப்பது தான்
எங்கிருக்கிறதோ

- கவிஜி