இதிகாசங்களின் நாயகர்களான
ராமனும் அனுமனும்
வேடம் கலைந்து
பசியோடு
மேம்பாலத்தின் கீழ் உறங்குகிறார்கள்
மீண்டும் வேடமேற்று
தெருவில் நடக்க முடியாத உத்தரவு.

பூம்பூம் மாடு ஒன்று உறுமி சப்தமற்று
உறங்குகிறது தெருக்களைப் பார்த்தவாறே.

தட்டில் சில்லறை சப்தங்கள் இல்லாமல்
முதியவரின் உயிர் ஒன்று
பிரிந்து விட்டது.

தெருநாய்கள் ஊளையிடும்
சுதந்திரம் பெருத்த அச்சத்தை
கிழித்து நீள்கிறது இரவுகளாய்
இதுவரை கேட்டறியாத சப்தங்களாய்
ஊரடங்கை மதிக்காத குரல்களின்
நீளத்தில் ஒலிக்கிறது
அது பசியின் குரலாகக் கூட இருக்கலாம்.

நிம்மதிப் பெருமூச்சென
சாலை பாய் விரித்து காத்திருக்கிறது
சாலைவாசிகளுக்கு
அந்த விரிந்த சாலையில்
படுக்க முடியவில்லை இன்று.

அனைவரும் பசியாற அயாரது இன்றும்
உழைக்கிறான் உழவன்
அவனை மறந்து நகர்கிறது
எப்பொழுதும் காலங்கள்.

இன்றைய அசாதாரண காலம்போன்று
மீண்டும் ஒரு காலம் விவசாயத்தினை
உணர்த்தியே தீரும்.

பேருந்துகள் இல்லாத சாலையின் ஓரம்
அழகான நெற்பயிர்கள்
பயணிகளைக் காணாமல் துவண்டு
நின்றது.

ஊரெங்கும் மரண ஓலங்கள்
புத்தன் கண்விழித்தான்
மீண்டும் கண்மூடி தனிமையில்
அமர்ந்தான்
இந்த மனிதர்களைப் புரிந்துகொள்ள.

மயில் தோகையுடன் ஒருவர்
சாம்பிராணி புகையிட்டு
அமர்ந்திருக்கிறார் தனிமையில்
மீண்டும் அனைத்தும்
திறக்கப்படுமென.

புகைந்து கொண்டே இருக்கிறது
ஒருவர் இட்ட நெருப்பு உலகமெங்கும்.

- ப.தனஞ்ஜெயன்

Pin It