விழி ததும்புகிற நீரை
யாரேனும்
சற்று துடைத்திடவே
விரைந்திடுங்கள்
என்று
வாய்விட்டு கதறத்
தோன்றுகிறது.

மனவெளிக்குள்
எரிகிற
வெந்தீயை
உணர்ந்தவரில்லை
ஒருவரும்...

அகத்தின்
அடியாழத்தை
அசைத்தப் படி
இருக்கிறது ஏதோவொன்று...

இதுவரை
ஒருவரும் எனக்குள்
கண்டதில்லை
நிறைந்திருக்கும்
வாழ்வின் மீதான ஆசைகளை...

நதியுரசும்
கூழாங்கற்கள்
வாசித்ததில்லை
நதியின் மீதான
புகார் பட்டியலை..

காய்த்துப்
போன கனவுகளுக்கோ
காலத்தின் மீதுள்ள
பெருங்காதலுக்கும்
பஞ்சமில்லை...

புரிந்து கொள்ளப்படாத
எனது அன்பின்
ஊற்றுக்கண்
உன் அவசரத்தால்
தூர்ந்து போவதில்லை..

என்றேனும்
ஒரு வேளை
என் நினைவுகளின்
வாதை எனதிருப்பை
காட்டுமெனில்

உறையும்
நினைவுகளோடு
உனக்காய்
உலகின் ஒரு மூலையில்
காத்திருப்பதை
உறுதி செய்து வா!
உன் புறக்கணிப்பு
தாளாது
விழியாவுறக்கம் கொள்வதற்கு முன்..

நினைத்துப் பார்
நீ
கையளித்துச் சென்றதோ
வெறுமை...
அதுவே
இக்கணத்தின் பேருண்மை!

- இசைமலர்

Pin It