தெய்வங்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்கள் எல்லாம்
பக்தர்களின் கைகளுக்கு மாறிவிட்டது.
குங்குமத்திற்குப் பதிலாக குருதிச் சிவப்பும்
சூலாயுதத்திற்குப் பதிலாக ஆண்குறிகளும்
வன்புணர்வுக்குத் தயாராகி விட்டன.
கலவரத்திற்கு உறுதுணையாக
காவல் துறையும்
உண்மைகளை மறைப்பதற்கு
ஊடகங்களும்
ஒத்துழைப்பு நல்கிவிட்டன.
வன்முறைக்கு எதிராக அறிக்கை
வெளியிட்டுக் கொண்டே
அதே வேகத்தில்
அடியாட்களையும்
அனுப்பி வைத்தார்கள்
ஆட்சியாளர்கள்.
தகப்பனை இழந்த பிள்ளைகளின் ஓலமும்
கணவனை இழந்த மனைவிகளின் கதறலும்
தப்பிச் செல்ல இயலாத முதியோர்களின் அழுகுரலும்
இந்தியத் திருநாட்டின்
புதிய தேசிய கீதமாக ஒலிக்கிறது.
பாரத மாதாவின்
யோனியைப் பிளக்கிறது
கரசேவகர்களின் கடப்பாரைகள்.
வேதங்களும் வெடிகுண்டுகளும்
சேர்த்துச் செய்த
வெறுப்பு அரசியலால்
தீபாராதனை தட்டில் கூட தீப்பந்தங்கள் எரிகிறது.
அமைதி திரும்பிட ஆட்சியாளர்களுக்கு
விருப்பம் இல்லை.
துவேஷ நெருப்பில்
மனித மாமிசம் சாப்பிடுகிறார்கள்
அதிகார வேட்டையாடும்
அகோரிகள்
- அமீர் அப்பாஸ்