ஏங்க..
முன் பதிவு செய்யுங்க
எங்க ஊர் வழியா போற பேருந்தா பாருங்க
படுக்கை வசதி வேண்டாம்...தூங்கிடுவேன்
குளிரூட்டி பேருந்து வேணாம்..உடம்புக்கு ஆகாது
அவளின் கட்டளைகள் எல்லாம்
என் எண்ணத்திற்கு எதிராய்..
ஊர் வழியா போறது
ஊர சுத்திக்கிட்டு போகுமே..
படுக்கை வசதியெனில் அயர்ச்சியில்லா போவாளே..
குளிரூட்டி பேருந்தெனில்
நான் இல்லா நேரத்தில்
வியர்வை அவளை தொந்தரவு செய்யாதே..
அவளின் பயணம்
களைப்பு எனக்கு
பக்கத்தில் நானிருப்பதாய்
குட்டி குட்டி கதை சொல்லி
'உம்' கொட்டவில்லை
என
குறுஞ்செய்தி அனுப்புவாள்
இந்நேரம் பேருந்து
தாம்பரம் தாண்டியிருக்குமா..
திண்டிவனம் தொட்டிருக்குமா..
படுக்கையில் படுத்தபடியே
அவளின் நினைவுகளுடன்
நானும் பயணத்தில்..
- மு.ச.சதீஷ்குமார்