இறுகத் தழுவும் நிலையதனில்
சர்ப்பமென சயனிக்கிறோம்!
நிசப்தம் பின்னப்பட்ட உதடுகள்
இடையறாது பேசுகின்றன
நேசத்தின் வேர்தனை!
உயிர்பிரியும் இறுதித் தருண மூச்சென
இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன
நம் நெருக்கங்கள்!
பருவங்கள் வெவ்வேறு
யுகம் தாண்டி சுகிக்கின்றது!
நிரம்பி வழியும்
கோப்பையின் மதுவென
தடயமற்று கரைந்திருக்கிறோம்!
தீண்டிய முத்தம்
அணுக்கம் வேண்டி
வியாபித்துக் காத்திருக்கிறது!
பாதரச ஆவியாகி
நேசத்தின் வெளியெங்கும்
நிறைந்திருக்கிறோம்!
அத்தனையும் நிஜமாகவும் இருக்கலாம்
பிரித்தறிய முடியா கனவாகவும் இருக்கலாம்!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It