எதேச்சையாய் எடுத்த
என் புகைப்படத்தைப் பார்த்து
அம்மா சொல்கிறாள்
அவளம்மாவின் கண்களையும் சுபாவத்தையும் ஒத்திருப்பதாய்...

அவளின் நான்கு அண்ணன்களுடன்
ஒளிந்து தான் விளையாடியிருக்கிறாளாம் ...

முதலாமவனின்
கைவிரல்களின் அளவையும்
மூன்றாமவனின்
குழிக்கன்னங்களையும்
அப்பா போன்றே சற்று சுருளான முடியும் வைத்திருக்கிறேனாம்

தொட்டு தொட்டு சொல்லிக்கொண்டிருந்த
அவளின் உதடுகள் ஒரு நிமிடத்தில் விம்மிப் பிரிந்து
ஒருவாறு சமாளித்து பின்
தோற்றுப்போனது

நடுங்கும் இரு பெரிய கைகளுக்குள்
பசி சொல்லத் தெரியாத
மூன்று வயதில்...
அவளப்பாவோடு நடந்த பணயப்பயணத்தை
அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் என் அம்மா சொன்ன
குறிகளுக்குள் எப்போதும் என்னை குறித்துக்கொள்கிறேன்...

ஒருவராவது அவளை அகதி
என்றழைத்திருக்கக் கூடும்...
கப்பலோடு நான் தயாராகவே
இருக்கிறேன்
எப்போது நினைத்தாலும் கரையை
கடக்க முடியாதல்லவா...

- இந்து

Pin It