அதோ தூரத்தில் தெரிகிற கடலின்
அலைகள் கழுவித் துடைக்கிறது
குருதிக் கறைபடிந்த துயரத்தின் சுவடுகளை...

காலத்தின் சாட்சியாய் அடர்ந்த
மணற்பரப்பில் வெள்ளைக் கூடாரமிட்டு
மருண்டு சிதறிக் கிடக்கிறது மனிதம்......

விடுதலை தேடித் படர்ந்த ஒளியின் நிழலில்
இருளைத் திரித்து அரவமற்ற மரங்களின்
மேலிறங்கிச் சருகாய் உதிர்கிறது வாழ்க்கை.....

சன்னமாய்த் துவங்கி வேகமெடுக்கிற மழையின்
துளிகளில் மரணத்தின் வாசனை கலந்து வருவதாக
யாரோ எழுதிய ஈழக்கவிதையின் வரிகளை நான்
வெறித்துப் படிக்கையில் வந்தெனை அடைகிறது.....

இலக்கின்றி விழுந்த வெடிகளின் வேதனையில்
இன்னும் முனகி அழுகிற ஒரு குழந்தையின் குரல்....

நிர்வாணத்தின் வலியைச் சுமந்தபடி சுட்டு
வீழ்த்தப்படுகிற சக மனிதனை இணையத்தில்
பார்த்து இடிந்து விழுகிறது எனக்கான இலக்கியங்கள்...

- கை.அறிவழகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It