(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி-8)
‘ரா’ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனிப்போருக்கு பிரேமதாசா கொலையில், இந்திய உளவு நிறுவனத்தின் சதி இருப்பதை புரிந்து கொள்ள முடியும். ‘ரா’ உளவு நிறுவனத்தின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஆய்வாளர் எஸ்.எச். அலி, ‘Inside Raw’ (‘ரா’வின் உள்ளே...) என்ற நூலை எழுதி 1981இல் வெளியிட்டார். ‘ரா’ தனது உளவு நிறுவனத்தில் ஆட்களை இணைத்துக் கொள்ள பின்பற்றும் வழிமுறைகளை அதில் விளக்குகிறார். அதில், “அந்தந்த நாடுகளில் ‘ரா’ நிறுவனம் தங்களின் நோக்கத்தை நிறைவேற்ற உள்ளூரிலேயே ஆட்களைப் பிடித்து விடும். சாணக்கியன் தந்த வழிமுறைகளைப் பின்பற்றி, மனிதர்களின் பலவீனங்களான ‘மது, மங்கை, பணம்’ என்ற ஆசைகளைக் காட்டியும் தங்கள் திட்டத்தை செய்து முடித்து விடுவார்கள். சில நேரங்களில் மிரட்டலிலும் இறங்குவார்கள். பிரிவினைப் பற்று, இனப்பற்று, பிராந்தியப் பற்று போன்ற உணர்வுகளையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்” - என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே ‘மது-மங்கை’ பலவீனங்கள்தான் பிரேமதாசா கொலையிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது. “தென் கிழக்கு ஆசியாவில், இந்தியா பின்பற்றும் கொள்கைகளை (அதாவது ராஜீவ் காந்தியை தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கதாநாயகனாக்கும் கொள்கை) நான் கடுமையாக எதிர்ப்பதால், ‘ரா’ உளவு நிறுவனம், என்னைக் கொல்ல சதி செய்கிறது” என்று, பிரேமதாசா கூறி வந்திருக்கிறார். இது தொடர்பாக மற்றொரு முக்கிய செய்தியை சுட்டிக்காட்ட வேண்டும்.
பிரேமதாசா குண்டுவெடித்துக் கொல்லப்பட்டவுடன், கொழும்பு நகராட்சி அதிகாரத்தின் கீழ் செயல்பட்ட தீயணைப்புத் துறை உடனே அந்த இடத்துக்கு விரைந்து சம்பவம் நடந்த இடத்தில் கை ரேகை, ரத்தம் போன்ற தடயங்களை தண்ணீரைப் பீற்றி அழித்து முற்றிலுமாக அகற்றி விட்டது. இதனால் கொலைக்கான தடயங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. கொழும்பு ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிடாமல் தடுக்கப்பட்டன; தீயணைப்புப் படையை அனுப்பும் உத்தரவை பிறப்பித்தது யார்? தடயங்களை அழிக்கச் சொன்னது யார்?
இந்தக் கேள்விக்கான விடைகள் மர்மமாகவே உள்ளன. பிரேமதாசாவின் கொலையில் அடங்கியுள்ள இத்தனை மர்மங்களையும் மூடி மறைத்து விட்டு, “விடுதலைப் புலிகள் பிரேமதாசாவை கச்சிதமாக கொலை செய்தார்கள்” என்றும், குண்டு வெடித்து இறந்தவரே விடுதலைப் புலிகளின் உளவாளி என்று நிரூபித்து விட்டான் என்றும் எழுதுவதும், நியாயம் தானா?
பிரேமதாசா படுகொலையைப்போல் புளோட் இயக்கத் தலைவர் முகுந்தன் கொலைப் பழியையும், ராஜீவ் சர்மா விடுதலைப் புலிகள் மீதே போடுகிறார். அதற்கான ஆதாரம் - சான்று எதையுமே முன் வைக்க அவர் தயாராக இல்லை.
புளோட் இயக்கத்தின் தலைவர் முகுந்தன் பின்னணி என்ன? ‘ரா’வுக்கும் அவருக்கும் உள்ள உறவு என்ன?
தென் கிழக்கு ஆசியாவில் காஷ்மீர், சிக்கிம், நேபாளம், பூட்டான் நாடுகள் இந்திய ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலையில், மாலத் தீவு மட்டும் வரவில்லை. மாலத் தீவிலே தொடர்ந்து அதிபராக இருந்த அப்துல் ஹ்யூம், பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருந்தார். அவரை பணிய வைக்க ‘ரா’ உளவு நிறுவனம் ஒரு கவிழ்ப்பு வேலையை நடத்த திட்டமிட்டது. அதற்கு முகுந்தனிடம் ‘ரா’ நிறுவனம் பேரம் பேசியது. இது 1987 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது விடுதலைப் புலிகளுக்கும், புளோட் இயக்கத்துக்குமிடையே மோதல்கள் நடந்த காலகட்டம். மாலத் தீவில் தாக்குதல் ஒன்றை நடத்த, புளோட் முகுந்தனிடம் பெரும் தொகையும், ஆயுதங்களும் ‘உளவு’ நிறுவனம் வழங்கியது. 1987 ஆம் ஆண்டு ஆக.22 ஆம் தேதி, இந்திய ராணுவத்தின் விசேட விமானத்தில் ‘ரா’ அதிகாரிகள் வவுனியா வந்து, உமாமகேசுவரனை சென்னைக்கு அழைத்து வந்து பேரம் பேசினர். மாலத் தீவில் அதிபருக்கு எதிராக தாக்குதல் திட்டத்தை வகுத்துக் கொடுத்து விட்டு, தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், பிறகு இந்தியாவே தனது படைகளை அனுப்பி, தாக்குதல் நடத்திய புளோட் இயக்கத்தினரை கைது செய்து, மாலத் தீவு அதிபருக்கு உதவியது போல் நாடகம் நடத்தி, மாலத் தீவு அதிபரை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
உளவுத் துறை விரித்த வலையில் வீழ்ந்தார் முகுந்தன். (குறிப்பு: மாலத்தீவு ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி விரிவான செய்திகளை நான் எழுதிய ‘ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி’ நூலில் படிக்கலாம்) பிறகு, கொழும்பு நகரில் முகுந்தன் கொல்லப்பட்டார்.
இந்தியா சதி செய்த ரகசியங்கள், முகுந்தன் வழியாக வெளியே தெரிந்து விடாமல் தடுக்க வேண்டிய அவசியம், உளவுத் துறைக்கு இருந்தது. 1989 ஜூலையில் உமாமகேசுவரன் கொழும்பில் ரயில் நிலையத்தில் சுடப்பட்டு, பிணமாகக் கிடந்தார். அப்போது புளோட் அமைப்பு இரண்டாகப் பிரிந்து நின்று, தங்களுக்குள் சகோதர யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தன. முகுந்தனின் எதிரணி குழுவைச் சார்ந்தவர்களையே - முகுந்தனை “அமைதியாக்குவதற்கு” உளவு நிறுவனம் பயன்படுத்தியது. கொழும்பு ஊடகங்கள் முகுந்தனின் போட்டிக் குழுவைச் சார்ந்தவர்களே இதை செய்திருக்கக்கூடும் என்று எழுதின.
முகுந்தன் கொலைக்குக் காரணமானவர்கள் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. புலிகளுக்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் எழுதிய ‘முறிந்த பனை’ நூலும், முகுந்தன் கொலையை புலிகள் மீது போடவில்லை. ‘முகுந்தன் கொல்லப்பட்டார்’ என்ற ஒற்றை வரியோடு முடித்துக் கொண்டுவிட்டனர். ஆனால், ராஜீவ் சர்மா, எந்த ஆதாரமுமின்றி புலிகள் மீதே பழி போட்டு விடுகிறார். 1988-90 காலகட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்வுகளுக்கு விடுதலைப் புலிகளை மட்டுமே குற்றவாளியாக்கி இந்திய உளவுத் துறையின் ‘பிரச்சாரகர்களாக’ நூல்களை எழுதிய ராஜீவ் சர்மாவும், நாராயணசாமியும் ‘ரா’ உளவு நிறுவனம் அக்கால கட்டத்தில் நடத்திய திரைமறைவு சதிகளை திட்டமிட்டே மறைக்கிறார்கள்.
நாங்கள் கேட்கிறோம்; இந்த காலகட்டத்தில் -
• விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பை உயர்த்திப் பிடித்து, அதை வடகிழக்கு மாகாணத்தில் தங்களின் ‘எடுபிடி’ ஆட்சியாக உட்கார வைத்தது யார்?
• 1990 இல் சிறுவர்களைக் கொண்டு ‘தமிழ் தேசிய ராணுவம்’ என்ற அமைப்பை உருவாக்கி,அதற்கு இந்திய ராணுவ முகாம்களில் பயிற்சி தந்து ஆயுதங்களையும் வழங்கியது யார்?
மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘முறிந்த பனை’ நூலிலிருந்தே எடுத்துக் காட்டுகிறோம்:
“1989 ஜூன் மாதத்தில் - இந்தியா கட்டாய ஆள் சேர்ப்பு மூலம் இளம் பையன்களைக் கொண்டு (சிறுவர்கள்) தமிழ் தேசிய ராணுவத்தை உருவாக்கியது. இவர்கள் போர் புரிய விருப்பமில்லாதவர்கள் என்பதோடு, சண்டையிடுவதற்கான தார்மீகக் காரணங்களையும் நம்புவதற்குத் தயாராக இல்லை. இவ்வாறு மிகப் பெரும் சமூக நாசத்திற்கான தயாரிப்பிற்கு அரசாங்கம் தயாராக இருந்தது. இவர்களுக்கு இந்திய அதிகாரிகளால் பயிற்சி வழங்கப்பட்டது.” - (நூல் ‘முறிந்த பனை’ - பக்.538)
இப்படி இந்திய ராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்டு, உளவு நிறுவனத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த தமிழ் தேசிய ராணுவம் தான் அம்பாறையில் 40 முஸ்லீம்களைக் கொன்று குவித்தது. ‘முறிந்த பனை’ நூல் இதை உறுதி செய்கிறது.
“1989 அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் அம்பாறையில் ஒரு கூட்டத்தில் இருந்த தமிழர்களை தமிழ் தேசிய இராணுவப் படையினர் அங்கிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டு, அங்கிருந்த 40 முஸ்லீம் மக்களை அங்கேயே கொன்று குவித்தனர். தமிழ் ராணுவப் படையின் சில உறுப்பினர்கள் சரணடைய முயற்சி செய்தபோது, சக ஆட்களாலேயே, அவர்கள் சுடப்பட்டனர்.” - (‘முறிந்த பனை’ நூல். பக்.539)
- இப்படி இந்திய உளவு நிறுவனம் நடத்திய சதிராட்டங்களை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள்?
• விடுதலைப்புலிகளுக்கு எதிராக மாத்தையாவை உருவாக்கி, பிரபாகரனையே தீர்த்துக் கட்ட சதி செய்தது யார்?
• ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன், பொட்டு அம்மான் பெயரை மட்டும் குற்றப் பத்திரிகையில் சேர்த்துவிட்டு, இயக்கத்தில் இரண்டாம் இடத்திலிருந்த மாத்தையா பெயரை மட்டும் சேர்க்காமல் விட்டது யார்?
- மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை திரைமறைவில் அரங்கேற்றிய உளவு நிறுவனம் பற்றி, இந்த நூல்கள் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?
அடுத்தப் பிரச்னைக்கு வருவோம். விடுதலைப் புலிகள் சில அன்னிய உளவு நிறுவனங்களுக்காக ராஜீவ் கொலையை நடத்தி முடித்து, அதற்காக ஆயுத உதவிகளையும், கப்பல் வசதிகளையும் பெற்றுக் கொண்டனர் என்பதுதான் ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்’ நூலின் மய்யமான கருத்து. விடுதலைப் புலிகள் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான ‘மொசாட்’ அமைப்பிடம் பயிற்சிப் பெற்றார்கள் என்று ராஜீவ் சர்மா குற்றம் சாட்டுகிறார்.
ராஜீவ் சர்மாவின் குற்றச்சாட்டு உண்மைதானா?
- அடுத்த வாரம்