*.வெகுதூரம்
நடந்து வந்துவிட்டேன்
என் ப்ரியரக்ஷா!
உன் நினைவின்
கரம் பிடித்தபடியே!

*.இப்போதெல்லாம்
மூச்சையடைக்கச் செய்கிற
நிகழ்வைத் தாண்டி
பயணப்பட
பலப்பட்டுவிட்டதென் கால்கள்.

*.துர்நாற்றமுடைய சம்பவங்கள்
எனை பிணைத்திருக்க
கண்ணி அறுந்த கணத்தில்
காவல் மீறினேன் என் ப்ரியரக்ஷா!

*.வீடென்றும்
அலுவலென்றும்
சொந்தமென்றும்
சுழன்றடித்த சூறைக்காற்று
இலையாயிருந்த நிலைமாறி
சுதந்திரக்காற்றுத் தேடி
உன்னிடம் வருகிறேன்.

*.முள்வேலி அகப்பட்ட
நெகிழிப்பையாய்
படபடத்தே நிற்கிறேன்.

*.நொடிக்கு
பலமுறை துடித்தப்படியிருக்கும்
நெஞ்சின் துயர் துரத்து!

*.வேர்த்துப் போன
விரல்களைக் கொஞ்சம்
இறுகப் பிடித்துக்கொள்!

*.உனைக் கண்டமாத்திரத்தில்
கண்ணீர் விடும் கண்களில்
அழுத்தமாய் முத்தமிடு!

*.பிரபஞ்சத்தின் பேரதிசயமே
என உனைப் பார்த்து
உளறும் உதடுகளை
மெல்ல நீ நீவு!

*.எப்போதுமிரு
என்னோடிரு
எனக்காய் இரு

- இசைமலர்

Pin It