sexual assault victimஎங்கோ ஒரு கிணற்றில்
கருவறுத்துக் கருகிய
சருகாய் மிதக்கிறாள்
எங்கோ ஒரு
காட்டுப் புதருக்கருகே
கரிப்பிடித்த கற்போடு
பாதியெரிந்த விறகாகிறாள்
எங்கோ ஒரு குப்பைத் தொட்டியில்
மட்கும் மட்காத
குப்பைகளுக்கு நடுவே
தங்கத்தால் உயிரிறுகி
உடல் பொறுக்கக் கசங்கியிருக்கிறாள்
எங்கோ ஒரு மாநிலத்தில்
எப்பெருங்குற்றமெனினும்
ஊர் கூடிப் படமெடுக்க
கருங்கல் சாலையில் முகந்துடைத்து
பெண்மைக்கெனும் குருதி
சிவந்து வழிவதாகவே
தோன்றுகிறது
அதோடு விடுகிறதா இப்படம்
அந்தரங்கமாய்
இதுவரை கற்பனித்ததெல்லாம்
வீதிக்கு வருகிறது
குப்பைத் தொட்டியுமல்லாது
கிணறுமல்லாது
காட்டுப் புதருமல்லாது
கொளுத்திப் போடுகிறானொருவன்
மிருகவதைக்கெதிரான
யுகதர்மப் பிரதிநிதியவன்
எரிய எரியக் கிழிந்து தொங்குகிறது
யாவருக்குமான முகங்கள்
தொங்கும் முகங்களின்
அவமானம் கலையுமுன்னே
இன்னொருவன் எரிகிற நெருப்பில்
ஏதோவொன்றையூற்ற
காட்டுப் புதராகவும்
கிணற்று நீராகவும்
குப்பைத் தொட்டி நாற்றமுமாகவுமென
குபுக்கென்று பரவியெரிகின்றது
அவளின் மேலாடையுடன்
அரைக்கால் சட்டையுமாக
தணிந்து கொண்டிருக்கும் மானத்தை
வெள்ளைத் தோலுக்குள்
குரலொழிந்து கனன்றபடியே
எரிதழலாகிய ஒரு மனித உயிரை
ஏன் பார்த்தோமென வெந்து
அடங்குவதற்குள்
எங்கோ ஒரு தேசத்தில்
பெண் குழந்தையொன்றைக்
கண்ணிமைக்கும் நேரத்தில்
காப்பாற்றியிருப்பதாக
கொண்டாடப்படும் ஆணைச்
சாகசமாக
எண்ணத் தோன்றுகிறது......

- புலமி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.