ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கிறது
குட்டை ட்ரவுசர் போட்ட
அந்தப் பெண் நடுவில் ரத்தம் ஒழுக
நடுங்கிக் கொண்டே கெஞ்சுகிறாள்
கூட்டத்திலிருந்து ஒரு பெண் பாய்ந்து
அவளின் முகத்தில் சொத்தென்று குத்துகிறாள்
ஓர் ஆடவன் எகிறி வந்து அவள் வயிற்றில்
ஓங்கி முதுகு தொடும்வரை உதைக்கிறான்
கூட்டத்தில் அத்தனை பேரின் கையிலும்
அலைபேசி பளிச்சிடுகிறது
சுருண்டு விழுந்தவள் மரண பயத்தில் நாயாகி
நகர்ந்து காலில் விழுந்து பதறுகிறாள்
இன்னொருத்தி அதிமூர்க்கமாய் அவளின்
தலையைப் பற்றி தரையில் இடைவிடாமல் உரசுகிறாள்
இப்போது பத்து பதினைந்து கால்கள்
தொடர்ந்து அவளை சகதியைப் போல மிதிக்கின்றன.
அவள் கண்களில் வற்றிய
வலியோடு பதற்றத்தின் பற்றுதல் ரத்தமாய் சொட்டுகிறது
ஒருவன் பெட்ரோலை
அவள் மீது நிதானமாகத் தெளிக்கிறான்
நொடியில் பற்றிக் கொண்டு உருளுகிறாள் அவள்
சூடு கிளம்ப வேக வேகமாய் முந்திக் கொண்டு
புகைப்படம் எடுக்கிறது கூட்டம்
சுருண்டு அரண்டு புரண்டு முடியாமல் உடலை எரிய விட்டு
வேடிக்கை பார்க்கிறாள்
எங்கிருந்தோ ஓடி வந்த ஒருவன்
ஒரு போத்தல் பெட்ரோலை
குபுக்கென்று ஊற்றி விட்டு குதியாட்டம் போட்டு ஓடுகிறான்
வேகமாய் கொழுந்து விட்டு எரிகிறது
கொஞ்சம் அசையும் அந்த உடல்
கூட்டம் ஆரவாரத்தோடு வேடிக்கையைத் தொடருகிறது.
ஒருவேளை குட்டை ட்ரவுசர் போட்டதுதான் காரணமோ
என யோசிக்கும் போதே படக்கென்று
முடிந்து விடுகிறது காணொளி
அலைபேசியை மூடிவிட்டு நிமிர்ந்த போது என் உயிர் பாதி
வெந்து விட்டிருக்கிறது
மானுடம் எதுவென்று கேட்டுக் கொண்டே
மீதியும் கருகத் தொடங்குகிறது.

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.