எண்ணுவதில் பயனில்லை -
வயதை
இழப்பை
கனவுகளை
விடியும் நாளை...
இருந்தும்
நொடிக்கொரு முறை
தனிமையில்
சேகரிக்கிறேன் இவைகளை...
குவியலான
விரக்தியை
தீயிடத் துணிகிறேன்
ஆற்றாமையில்...
பழையன கழியும்
போகியில்
எரிந்து தீர்கிறது
விடுதலைக் கனவு
விடியாத திருநாளுக்காய்
ஒப்பனை செய்கிறேன்-
கண்ணீர் கரைக்கிறது
இளமை அழகை
கம்பிகளுக்கு வெளியே
காத்திருக்கும் தாய் முன்
கதறலைp புதைத்து, முறுவலை சூடி
எதிர்ப்படுகிறேன் - அவளைப் போலவே,
உறக்கம் தொண்டை
தீண்டும் வரை
பேசித் தீர்க்கிறேன்
இருளின் வெளியில்
உயிர் நெறிக்கும் வலியாய்
கழிகிறது
வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
கால் நூற்றாண்டாய்...
- இரா.பகுத்தறிவு